5 அக்டோபர், 2010

பொன்சேகாவை விடுவிக்குமாறு ஜனாதிபதியைக் கோருவேன்: ரணில்

முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரும் அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு இருக்கின்றது. அதனை இன்று அல்லது நாளை செய்வேன். எனவே ஜனாதிபதி பௌத்த பீடாதிபதிகளிடம் உறுதியளித்தவாறு பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத்பொன்சேகா எம்.பி இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 30 மாதங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்..

இவரை விடுவித்துக் கொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு ஏற்பாடாகியுள்ள சமய நிகழ்வுகள் கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூகொடை நிக்கவல போதிமலு விகாரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

இங்கு அவர் மேலும் கூறுகையில், பொலன்னறுவையில் இடம்பெற்ற வடமேல் மாகாணத்தின் பௌத்த மதத் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் சிறைத் தண்டனை தொடர்பில் முறைப்படி விண்ணப்பித்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரது விடுதலை தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்..

இதேபோல் பௌத்த பீடாதிபதிகளுக்கும் உறுதியளித்துள்ளார். எனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டுக்காகவும் பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவும் சரத்பொன்சேகா எம்.பி.யை விடுதலை செய்யுமாறு நான் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோருவதற்கு தீர்மானித்திருக்கின்றேன். ஜனாதிபதியின் கூற்றின் பிரகாரம் இவ்வாறு கோருவதற்கு எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு உரிமை இருக்கின்றது. சரத்பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராவார். எனவே அவருக்காக குரல் கொடுப்பதற்கான அதிகாரமும் எனக்கு இருக்கின்றது..

முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சரத்பொன்சேகா சாதாரண குடிமகனாவார். அவ்வாறான சாதாரண குடிமகனை பொன்சேகா மீதே இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. எனவே அவரை விடுதலை செய்யுமாறு நான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றேன்..

பௌத்த பீடத்துக்கு அளித்த வாக்குறுதியின் படி அதனை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றேன். இது தொடர்பிலான எழுத்து மூல கோரிக்கையை இன்று அல்லது நாளைய தினத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தீர்மானித்திருக்கிறேன். அவரை விடுதலை செய்யும் வரையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அரச எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். எமது இந்த போராட்டத்தில் சகல மக்களும் அமைப்புக்களும் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி திருத்த சட்டமூலத்தை இம்மாதம் சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை

உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் எப்போது சமர்ப்பிப்பது மற்றும் எத்தனை நாட்கள் அது தொடர்பில் விவாதம் நடத்துவது என்பது தொடர்பில் ஏற்கனவே கட்சி தலைவர்களிடையே ஆராயப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அந்த வகையில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதி முறைமையில் உறுப்பினர்களை தெரிவு செய்யவும் ஒரு பகுதி விகிதாசார முறைமையில் உறுப்பினர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவு செய்யும் வகையிலும் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை திருத்தங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிடவில்லை என்று ஏற்கனவே அக்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அதாவது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தெளிவுபடுத்தப்படவேண்டும் எனவும் ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சிமன்ற திருத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அதற்கு மாகாண சபைகளின் அனுமதியை பெற்றுக்கொண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் செயற்பாடு சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்துகின்றது : ஐ.தே.கதற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளானது சர்வாதிகார ஆட்சியை தெளிவுப்படுத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டி காட்டியுள்ளது.

முதலாவதாக அரசியல் சீர்திருத்தத்தில் அதிகார பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியமை, முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு 30 மாதம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளமை, இன்று நள்ளிரவு முதல் மாவின் விலையை அதிகரிக்க எடுத்துள்ள தீர்மானம் போன்றவை அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தை தெளிவுப்படுத்துகின்றது என கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கயந்த, "அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். அதேவேளை, பொன்சேகா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். பயங்கரவாதத்தை வெற்றிக் கொண்டவருக்கு சிறை. நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பயங்கரவாத அமைப்போடு தொடர்புபட்டவர்களுக்கு சொகுசு வாழ்க்கை. எனவே ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளது"எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு இராணுவத்தினருக்கு நான்கு பயிற்சி நெறிகளை வழங்க இலங்கை இராணுவம் தீர்மானம்

வெளிநாட்டு இராணுவத்தினருக்கு இலங்கையில் நான்கு பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்தினர் தீர்;மானித்துள்ளனர். பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்தவருடம் ஜனவரி மாதம்முதல் இந்தப் பயிற்சிநெறிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொமாண்டோ பாடநெறி, விசேட பாதுகாப்பு அரண் பாடநெறி, குறிபார்த்து சுடுதல் பாடநெறி மற்றும் மாதுறுஓய பயிற்சி நிலையத்தின் பாடநெறிகள் என்பன இதன்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளில் செயல்படும் புலிகள் நெட்வொர்க் : இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் தகவல்


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 17 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், வெளிநாடுகளில் அந்த அமைப்பின், "நெட்ஒர்க்' தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது' என, இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அரசு சார்பில் மறு ஆய்வு ஆணையம் அமைக்கப்பட்டது. இலங்கையின் பிரபல பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரும், பேராசிரியருமான ரோகன் குணரத்னே, இந்த ஆணையத்தின் முன், ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை ராணுவத்தால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 17 மாதங்களாகி விட்டன. இருந்தாலும், அந்த அமைப்பின் சர்வதேச "நெட்ஒர்க்' தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த நெட்ஒர்க்கை ஒழிப்பதற்கு அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பினரின் மனநிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. புலிகள் அமைப்புக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் தொடர்ந்து நடக்கின்றன. அறக்கட்டளை என்ற பெயரில் இவர்கள் செயல்படுகின்றனர்.

புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட போரின் போது, சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்த 7,000 பேர் கொல்லப்பட்டதாக, சர்வதேச மீடியா பிரசாரம் செய்து வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, அங்குள்ள டாக்டர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடியதில், 1,400க்கும் குறைவானவர்களே இறந்தனர் என்பது தெரியவந்தது. இவ்வாறு ரோகன் குணரத்னே கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

60 பேர் கொண்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வடக்கு விஜயம்


அமெரிக்காவிலிருந்து இலங்கை வரவுள்ள 60 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக்குழு எதிர்வரும் 12ம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஐம்பது அமெரிக்கர்களையும், பத்து அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் கொண்ட உயர்மட்ட வர்த்தகத் தூதுக்குழு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளது.

கொழும்பில் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படும் அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வட பகுதியில் முதலீடுகள் செய்வது குறித்து விரிவாக ஆராயப்படுமென ஆளுநர் குறிப்பிட்டார். அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத் தின் ஏற்பாட்டிலேயே இந்த தூதுக்குழு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.

12ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்ல வுள்ள இந்த வரல்த்தகத் தூதுக்குழு அச்சுவெலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு மற்றும் தீவு பகுதி களுக்கும் வடபகுதியிலுள்ள கைத்தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

வட பகுதிக்கு செல்லவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர்மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கில் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் பல்திறு திட்டங்களையும், செயற்பாடுகளை யும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித் துள்ளன என்றும் ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

வடக்கை நோக்கி வரும் உள் நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்குத் தேவை யான ஹோட்டல்கள், தங்குமிட உணவு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பூரண ஒத்துழைப்புகள் மிகவும் அசியம் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் பங்காளியாக ரிஷாட் இருப்பது எமக்கெல்லாம் பெருமை’
“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனி இடத்தைப் பெற்றவர்” எனத் தெரிவித்துள்ள இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும “ரிஷாத் பதியுதீன் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் பதவிக்கு சமமானவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் நாகவில்லு தொழில் பயிற்சி நிலையத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“இன்றைய அரசாங்கத்தை ஆட்சியில் நிலையாக வைக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆற்றிய பணியை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஜனாதிபதி அதிகமாக நேசிப்பவர்களில் ரிஷாத் பதியுதீனும் மிக முக்கியமானவர்.

கடந்த காலங்களில் அவர் வகித்த மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண அமைச்சர் பதவி மூலம் ஆற்றிய பணிகள் வரலாறாகும், எனவே இவரைப் போன்ற தலைவர்களை எமது அரசாங்கம் கொண்டிருப்பதானது பெருமைக்குரிய விடயமாகும்.

எவ்வித அரசியல் இலாபமும் எதிர்பாராது, சமூகத்தின் நலன் குறித்து அவரால் ஆற்றப்படும் சேவைக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என்றும் அமைச்சர் டலஸ் அழகப் பெரும கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கைதடி முதியோர் இல்லம் புனரமைப்புக்கு ரூபா 15 மில்லியன் ஒதுக்கீடுயாழ்ப்பாணம், கைதடி பிரதேசத்திலுள்ள (சாந்தி நிலையம்) முதியோர் இல்லத்தை புனர்நிர்மாணம் செய்ய 15 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வடமாகாண சபையின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புனர்நிர்மாண பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் மேற்பார்வையில் இயங்கிவரும் இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 140 பேர் தங்கியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரிய முறையில் செய்து கொடுக்க திட்டமிட்டுள் ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தின் கட்டடங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!


திருகோணமலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் தாழமுக்கம் உருவாகி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாக இடைப்பருவ பெயர்ச்சி மழைக்காலநிலை உருவாக்கம் தாமதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையின் ஊடாக காற்று வீசும் திசை திடீரென மாற்றமடைந்திருப்பதாகவும், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20-40 கிலோ மீட்டர்கள் வரை அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிக்குடாவில் நேற்று முன் தினம் தாழமுக்கம் உருவாகியுள்ளது.

இதனால் இலங்கை ஊடாக வீசிய காற்றின் திசை தற்போது திடீரென மாற்றமடைந்துள்ளது. தற்போது மேல் மற்றும் வடமேல் திசைகளின் ஊடாக வீசும் காற்று மணித்தியாலத்திற்கு 5-10 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 20-40 கிலோ மீட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக மேல், தென் கடற் பரப்புக்கள் கொந்தளிக்க முடியும். இக் கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியா லத்திற்கு 50-60 கிலோ மீட்டர்கள் வரை காணப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சரணடையும் புலிகளை சுடுமாறு கோட்டா உத்தரவிட்டதாக பொன்சேகா என்னிடம் கூறினார்சண்டே லீடர் ஆசிரியர் நேற்று நீதிமன்றில் தெரிவிப்பு

சரணடையும் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் வாழ்க்கை, அவரது சுயவிபரங்கள் மற்றும் அவரது தேர்தல் பிரசாரம் பற்றி கேள்வி கேட்பதே எனது நோக்கமாக இருந்தது. எனினும் எனது கடைசி கேள்வி வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியதாக இருந்தது.

அப்போது கோட்டா, பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் புலி சந்தேக நபர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய வரும்போது அவர்களை கொல்லு மாறு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் கூறினார். அதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வாறு பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவிடம் கூறிய சம்பவத்தை தலைப்புச் செய்தியாக போடுவதற்கு தீர்மானித்தேன் என்று சாட்சியமளித்த போது பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.

பிரதி சட்டமா அதிபர் ஜெனரல் வசந்த நவரட்ன பண்டாரவினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போது இவ்வழக்கின் முதலாவது சாட்சியான பிரெட்ரிகா ஜான்ஸ், தான் லசந்த விக்ரமதுங்கவின் மரணத்தையடுத்து 2009 மார்ச் 1ம் திகதி முதல் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.

தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியா, சுத்தவாளியா என்று கேட்கப்பட்ட போது சரத் பொன்சேகா தான் சுத்தவாளி என்று அவர் கூறினார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி. வீரவெவ, எம்.எஸ்.ரகூன் ஆகியோர் முன்னிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது. 1991ல் தான் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் சேவையாற்றியதாகவும் 1995 இலேயே தான் சண்டே லீடர் பத்திரிகையில் சேர்ந்ததாகவும் சாட்சி பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார். லசந்த விக்ரமதுங்கவின் அழைப்பின் பேரிலேயே தான் சண்டே லீடரில் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க சண்டே லீடர் பத்திரிகையின் முகாமைத்துவம் தீர்மானித்ததையடுத்து தான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் பேட்டி எடுத்ததாக அவர் கூறினார்.

பேட்டிக்கு டிசம்பர் 9ம் திகதி சரத் பொன்சேகா நேரம் ஒதுக்கியதாகவும், ஆனால் பின்னர் டிசம்பர் 8ம் திகதி மாலை 6.30 மணிக்கு தன்னை பேட்டி எடுக்க வருமாறு கேட்டுக் கொண்டதாக சாட்சியமளித்த பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.

பேட்டியின் போது சரத் பொன்சேகாவின் பல படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேறு சந்தேக நபர்கள் எவருடனும் இன்றி சரத் பொன்சேகாவை தனியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது.

சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லதுவாஹெட்டி கேட்டுக் கொண்டதையடுத்து இவ்வாறு அவர் தனியாக அழைத்துவரப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை (06) பிற்பகல் 1.30 க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது அத்துமீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை; கிழக்கு அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் ஜனாதிபதி


சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடமளிக்க முடியாது. அத்துமீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்ற முயல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அத்தகையவர்களுக்குத் துணை போகக்கூடாது எனவும் அதிகாரிகளுக்குக் கடுமையாக உத்தரவு பிறப்பித்தார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ஏ. எல்.எம். அதாவுல்லா, பி. தயாரத்ன, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ரி. ஹஸனலி, படுர்சேகுதாவூத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராயவென குழுவொன்றை நியமிக்க விருப்பதாகவும் கூறினார். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் இது மூவின மக்கள் வாழும் மாகாணமாகும். தமிழ் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ அநீதி இழைக்கப் படமாட்டாது. சிறு சிறு பிரச்சினைகளை எவரும் இன ரீதியாகப் பார்க்கக்கூடாது.

ழக்கு மாகாணம் பல வருடங்களுக்குப் பின் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. சகல பேதங்களையும் மறந்து, அரசியல் வாதிகள் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகலரும் பூரண பங்களிப்பை வழங்குவது அவசியம்.

மொழிப் பிரச்சினைகள் பெரும்பாலான பிரதேசங்களில் நிலவுகின்றன. அதற்குத் தீர்வு காணும் வகையில் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிங் கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக தமிழ் அதிகாரியையும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மேலதிகமாக சிங்கள அதிகாரியையும் நியமிக்கத் தீர் மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதியை செலவிட்டு அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக்கொடி வழக்கு ஒத்திவைப்பு - பொன்சேக நீதிமன்றம் வந்த போது பரபரப்பு!

இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேக, தன் மீது தொடரப்பட்டிருக்கும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான மற்றுமொரு வழக்கிற்காக இன்று நீதிமன்றில் ஆஜரானார்.

இதன் போது வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், இதனை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இன உணர்வுகளை தூண்டி குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், அவர் கருத்துக்களை வெளியிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.யுத்தம் நடைபெற்ற இறுதி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய வந்த வி.புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பிரிகேடியர் சாவேந்திர சில்வாவிற்கு கட்டளையிட்டதாக சரத் பொன்சேக சண்டே லீடர் பத்திரிகைக்கு செவ்வி அளித்திருந்தார்.

இதனை உறுதி செய்யும் முகமாக, சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் லால் விக்ரமதுங்க, படப்பிடிப்பாளர் மற்றும் செய்தியாளர் ஆகியோருடன் சரத் பொன்சேகவை தாம் சந்திக்க சென்றதாக பெட்ரிக்க ஜேன்ஸ் இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், தான் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை எனவும் சரத் பொன்சேக தெரிவித்தார். இதனை தொடந்து வெள்லைக்கொடி வழக்கு மீதான விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதேவேளை இன்று முற்பகல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
சரத் பொன்சேகவின் மனைவி அனோமா பொன்சேக, ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.க உறுப்பினர்கள், சில தமிழ் அரசியல் பா.உறுப்பினர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதே, சரத் பொன்சேக தனி வாகனமொன்றில் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் தனது வெள்ளை நிற தேசிய உடையை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொன்சேக வாகனத்திலிருந்து இறங்கியது நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நிலவியது. பொன்சேகவின் வாகனத்தை சூழ்ந்த ஆதரவாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது பொன்சேகதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...