22 நவம்பர், 2009

நிவாரணக் கிராமங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்

எந்த நேரத்திலும் எங்கும் சென்றுவரலாம்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப் பட்டு வந்த சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று இந்த அறிவித்தலை விடுத்தார். இவ்வறித்தலின்படி நிவாரணக் கிராமத்திலுள்ள அனைவரும், நாட்டிலுள்ள எப்பகுதிக்கும் சென்றுவர முடியும். அதேநேரம், உறவினர்களையும் அவர்கள் பார்க்கவும் முடியும்.

ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதுடன் மீளக் குடியேறும் மக்களுக்கு இதுவரை வழங்கிய 25,000 ரூபா கொடுப்பனவு டிசம் பர் 15 ஆம் திகதி முதல் 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தங்க வைக்கப்பட்டி ருந்த மக்கள் முகாமைவிட்டு வெளியேற முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தன. உறவினர்கள் வந்து பார்ப்பதோ அல்லது முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்வதோ தடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவை அனைத்தும் நீக்கப்படுவதுடன் அவர்கள் சுதந்திரமாக செல்ல முடியும். இப்பகுதியி லிருந்து மக்கள் சென்றுவர பஸ் போக்கு வரத்து வசதிகளும் செய்யப்பட வுள்ளன.

மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகளின் எண் ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். மேலும் 6 மாதங்களுக்கு உலர் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

‘இடம்பெயர்ந்துள்ளவர்களுள் தற்போது சுமார் 50 வீதத்துக்கும் குறைவானவர்களே இன்னமும் நிவாரணக் கிராமங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்.

இடம்பெயர்ந்தவர்கள் என நாட்டில் ஒருவரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே எமது அரசு செயற்படுகிறது, என அங்கு உரையாற்றிய ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

வடக்கில் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல் களுக்கு அமைய பசில் ராஜபக்ஷ எம்.பி. அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பார் என நேற்று முன்தினம் அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

வவுனியா சென்ற பசில் ராஜபக்ஷ எம்.பி. வவுனியா நிவாரணக் கிராமங் களிலுள்ள மக்களை சந்தித்து உரையாடிய துடன் அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பையும் விடுத்தார்.

தற்போது வவுனியா நிவாரணக் கிராமங்களில் 1,27,495 பேரளவில் மட்டுமே உள்ளனர். இவர்களும் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக மீளக்குடியமர்த்தப்படுவதுடன் அடுத்த கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுவிடும் என ஆளுநர் ஜீ. சந்திரசிறி தெரிவித்தார். (ள – ரு – வ)

மேலும் இங்கே தொடர்க...
ஓசியானிக் கப்பலிலிருந்து வெளியேறியோர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படும் சாத்தியம்


இந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில்,இந்தோனேசியாவில் தரித்திருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78 இலங்கையர்களும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படுவர் என இந்தோனேசியா அறிவித்துள்ளது.

" எமது நாட்டு எல்லையில் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் தங்குவதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இவர்களுக்கு விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்" என ஜகார்த்தாவிலுள்ள வெளிவிவகார விடயங்களுக்கான திணைக்களத்தின் பேச்சாளர் ரேகு பைசாயா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் தரையிறங்கிய இவர்கள் தற்போது இந்தோனேசியாவின் ரியூ தீவில் உள்ள டன்ஜுன் பினாங் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை அகதி அங்கீகாரத்தை வழங்காதுபோனால், அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவர் என இந்தோனேசியா எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவின், உறுதிமொழியை நம்பி 22 அகதிகள் முதலில் கப்பலில் இருந்து இறங்கினர். இதன் பின்னரே ஏனையோரும் தரையிறங்கினர். இதேவேளை 250 அகதிகளை கொண்டுள்ள இலங்கையர்களின் மற்றும் ஒரு கப்பல் இன்னமும் இந்தோனேசியாவில் தரித்து நிற்கிறது
மேலும் இங்கே தொடர்க...
கிழக்கு மாகாண சபையின் வரவி-செலவுத் திட்டத்தை தோற்கடித்து செயற்பாடுகளை முடக்க முயற்சி

மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து, அதன் செயற்பாடுகளை முடக்குவதற்கும் முதலமைச்சரை மாற்றுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபையின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு மாகாண சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி இது வாக்கெடுப்புக்காக விடப்படும் போது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும் எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனரெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் 19 பேர் ஆளும் கட்சியில் உள்ளனர். எதிர்க்கட்சித் தரப்பில் 17 பேர் தெரிவு செய்யப்பட்டாலும் ஒருவர் தொடர்ந்தும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாததன் காரணமாக 16 பேரே உள்ளனர். இந்த நிலையில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த நால்வரின் உதவியுடன் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பது தொடர்பில் எதிர்க் கட்சித் தரப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டனர். இவ்வாறானதொரு நிலை கிழக்கு மாகாண சபைக்கு ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டாலும் கிழக்கு மாகாண சபையைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மாகாண சபை நிதியை எந்தவிதத்திலும் பயன்படுத்த முடியாத ஒரு முடங்கல் நிலையேற்படும். நிர்வாக ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஜனாதிபதியினது அல்லது மத்திய அரசின் நிதியினைக் கொண்டே அனைத்தையும் செய்ய வேண்டிய நிலைக்குள் மாகாண சபை தள்ளப்படும். கிழக்கு மாகாண சபையின் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் எதிர்காலத்தில் வேறு பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதிலும் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாமெனவும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...