8 ஜனவரி, 2010

பிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு

பிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரி வித்தார்.
பிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென் மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரி யான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை க்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரி கேடியர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காத்தான்குடியில் சரத் பொன்சேகாவின் பிரசார கட்அவுட் சேதம்

மட்டக்களப்பு காத்தான்குடியில் எதிர்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கட்அவுட் நேற்றிரவு இனந்தெரியாத குழுவொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குட்வின் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த, கட் அவுட் ஜெனரல் சரத் பொன்சேகா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் சேகுதாவுத் பஷீர் மற்றும் அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் யூ.எல். எம்.முபீன் ஆகியோரின் உருவப் படங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
ஒருவார காலமாக அந்த இடத்தில் அமைந்திருந்த குறிப்பிட்ட 'கட்அவுட்' கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான வாகனமொன்றில் வந்த குழுவினராலேயே சேதமாக்கப்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் யூ. எல்.எம். முபீன் குற்றம் சுமத்துகின்றார்.
இந்நபர்களைப் பொது மக்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறும் அவர் இது தொடர்பாக தமது கட்சித் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் பொது வேட்பாளருக்கும் தன்னால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஆனால் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தக் குற்றச்சாட்டு நிராகரிகப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு., யாழ்., அநுராதபுரம், திருமலை சிறைச்சாலை தமிழ் கைதிகளும் உண்ணாவிரத போராட்டம்


கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அல்லது பிணையில் விடுதலை அல்லது பொது மன்னிப்பு ஆகிய கோரிக்கைகளை அரசாங்க்திடம் முன் வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 5 அரசியல் கைதிகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருந்த விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர தங்களது விடுதலை தொடர்பாக எவ்வித சாதகமான நிலைப்பாடும் இது வரை எட்டப்படவில்லை என குறிப்பிட்ட கைதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

திருகோணலை சிறைச்சாலையில் 56 கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள அதே வேளை யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் அனுஸ்டித்த அரசியல் கைதிகள் 25 பேரில் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மகாநாட்டில் அறிவித்துள்ளார்.
இம்மாகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபக செயலாளரான இவர் இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர முதல்வராகத் தெரிவானார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகத் தலைவரான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனிலிருந்து நாடு திரும்பி இகட்சியின் உட்பூசல் காரணமாக விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் உப தலைவராகத் தெரிவானார்.
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு இவருக்கு விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை விட்டு விலகி 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சி நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொகுதி ரீதியாக மட்டக்களப்பு தொகுதி - அமைச்சர் அமீர் அலி, பட்டிருப்புத் தொகுதி - அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன், கல்குடா தொகுதி - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்தமை தொடர்பாக இவர் அதிருப்தியடைந்திருந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்திருந்ததாகவும் பரவலாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத் தீவில் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையும் வெடிப்பொருட்களும் கண்டு பிடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் மோதுவதற்காக வெடிகுண்டுகள், கிளேமோர் கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களை வெடிக்க வைப்பதற்கான டெட்டனேற்றர்கள் மற்றும் எலக்ரோனிக் உபகரணங்கள் என்பவற்றை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலை ஒன்றினை கண்டு பிடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு மற்றும் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் நிலத்துக்கடியில் செயற்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலைகள் இராணுவத்தினர் முன்னேறி வந்ததையடுத்து, விடுதலைப் புலிகளினால் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடங்கள் பற்றி படையினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களையடுத்து கண்டு பிடிக்கப்பட்டு, பெருமளவிலான வெடிப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளேமோர் கண்ணி வெடிகளையும் சக்தி வாய்ந்த குண்டுகளையும் 30, 40 மீற்றர் தொலைவில் இருந்து வெடிக்க வைக்கத்தக்க ரிமோட் கண்ரோல் உபகரணங்களையும் அவற்றுக்கான சார்ஜர்களையும் விடுதலைப்புலிகள் இந்தத் தொழிற்சாலையில் ஏனைய வெடிப் பொருட்கள் உபகரணங்களுடன் உற்பத்தி செய்து வந்துள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...