5 ஜூலை, 2011

கொல்லப்பட்டவர்களின் தொகையை மீளாய்வு செய்ய ஜெனீவாவை கோரவுள்ளோம்: கெவின் ரூட்

கொல்லப்பட்டவர் தொகை தொடர்பிலான ஆதாரங்கள் தொடர்பில் மீழ் ஆய்வு செய்யுமாறு ஜெனீவாவை கோரவுள்ளதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்ரும் முன் நாள் அதிபருமான கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் காணொளி அவுஸ்ரேலியாவில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்வில் கெவின் ரூட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் தங்களுக்கு தனியானதொரு மாநிலம் கோரிய தமிழர்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்த யுத்தத்தின் போது சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன்.

இருப்பினும் போர்குற்றம் குறித்த விசாரணைக்கு குறித்த காணொளி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. எனவும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

சூரியவௌ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக்கோஷ்டித் தலைவரான நெலுவ பிரியந்த கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினமிரவு நடைபெற்றுள்ளது.

சுமார் 25 கொலைச் சம்பவங்கள் உட்பட பல்வேறு கடத்தல், கப்பம் பெறல் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர் புடைய மேற்படி சந்தேக நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை கைப்பற்றுவதற்காக சூரியகந்த பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியொன்றினால் அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்து அதிரடிப்படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சூரியவௌ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவௌ பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நபரின் சடலம் தற்போது சூரியவௌ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

7 வயது சிறுவன் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை: பெற்றோர் கைது

ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவனை இரவு முழுவதும் தனியறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் வேயாங்கொடை பொலிஸாரினால் அந்த சிறுவன் மீட்கப்பட்ட சம்பவமொன்று சப்புகஸ்தென்னை, கலகெடிஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுவனை கொடுமைப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அவனது தாயாரும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேயாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனைகளை நடத்தியபோது வீட்டின் அறையொன்றில் 7 வயது சிறுவன் ஒருவன் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவனது முதுகிலும் நெஞ்சுப் பகுதியிலும் சிறு காயங்களும் ஏற்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் கர்ப்பிணித் தாயார் (சங்கீத ஆசிரியை)மற்றும் அவனது தந்தை (ஆங்கில ஆசிரியர்) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சிறுவன் வீட்டில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காகவே இவ்வாறு தண்டிக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட தந்தை சிறுவனின் உண்மையான தந்தையல்ல என்பதும் தெரியவந்திருப்பதாக வேயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகளவு உள்ளூராட்சி மன்றங்களை யாழ்ப்பாணத்தில் கைப்பற்ற முடியும்: சுசில்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் செயற்பட்டுவருகின்றனர் என்று முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிரே ம்ஜயந்த தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர்கள் குழுவினர் விஜயம் மேற்கொண்டமை மற்றும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தியமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் : யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை அங்கு விஜயம் செய்தோம்.

எமது கூட்டணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். எமக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டோம்.

இந்நிலையில் வடக்கில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் நாங்கள் பிரசார பணிகளை மேற்கொள்வோம். அதிகளவான வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சண்டே லீடரில் செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன்: கருஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் எதிரணியின் பொதுவேட்பாளரின் பிரசார பணியில் நாம் கூடுதல் கவனம்செலுத்தியிருந்தோம். அவ்வாறான நிலையில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியான சண்டே லீடர் பத்திரிகையின் தலைப்புச் செய்தியை பார்த்ததும் நான் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜயசூரிய சாட்சியமளித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற மேற்படி வழக்கில் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வழக்கில் நேற்றயைதினம் சாட்சியமளிப்பதற்காக பேராசிரியர் எஸ்லி அல்பே, ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மற்றும் சண்டேலீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ரஷ்மி விஜயவர்தன ஆகியோர் மன்றில் பிரசன்னமாய் இருந்தார்.

வழக்கு விசாரணை நேற்று முற்பகல் 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி கருஜயசூரியவின் சாட்சியத்தை முதலாவதாக நெறிப்படுத்தவிருப்பதாக தெரிவித்ததை அடுத்து ஏனைய இரண்டு சாட்சிகளும் மன்றிலிருந்து வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டனர்.

இதனிடையே குறுக்கிட்ட சட்டத்தரணி பிரதிவாதியின் தரப்பில் ஆஜராகியிருக்கின்ற மன்றுமொரு சாட்சியான பேராசிரியர் எஸ்லி அல்பேயை மன்றிலிருந்து வெளியேற்றவேண்டிய தேவையில்லை என்று நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறுக்கிட்ட பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியாளர் நீதிமன்றத்திற்குள் இருப்பதனை நான் கடுமையாக எதிர்ப்பதாக அவர் முதலில் தெரிவித்தபோதிலும் பின்னர் அதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்தே ஐக்கியதேசியக்கட்சியின் எம்.பியான கரு ஜயசூரியவின் சாட்சியத்தை பிரதிவாதியின் சட்டத்தரணி நெறிப்படுத்தினார்.

கேள்வி: தற்போது பாராளுமன்ற உறுப்பினர்?
பதில்: ஆம்.

கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவராகவும் பதவிவகிக்கின்றீர்கள்?
பதில்:ஆம்.

கேள்வி:சிற்சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள்?
பதில்: ஆம்.

கேள்வி: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்காக தேர்தல் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட்டிருந்தீர்கள்?
பதில்:ஆம்.

கேள்வி: என்ன தேர்தல்?
பதில்: ஜனாதிபதி தேர்தல்.

கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சி எந்தவேட்பாளரை ஆதரித்தது?
பதில்: ஐக்கியதேசியக்கட்சி சரத்பொன்சேகாவை ஆதரித்தது.

கேள்வி:வேறுகட்சிகள் ஆதரித்தனவா?
பதில்: பிரதானமாக ஐக்கியதேசியக்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளித்தன.ஏனைய சிறு சிறு கட்சிகளும் ஆதரவளித்தன.

கேள்வி: ஐக்கிய தேசியகட்சியின் தொடர்பாளராக இருந்தீர்கள்?
பதில்: முழுமையான ஒத்துழைப்பு நல்கினேன் காரியாலயமும் திறக்கப்பட்டது.

கேள்வி:ஜனாதிபதி தேர்தல் ஞாபகமா?
பதில்: ஜனவரி மாதத்தில்.

கேள்வி: தேர்தல் நடவடிக்கையை எப்போது ஆரம்பித்தீர்கள்?
பதில்: வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து.

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியான திகதி ஞாபகமா?

பதில்: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி.

கேள்வி: ஏதாவது நடவடிக்கையை மேற்கொண்டீர்களா?
பதில்: சண்டே லீடரில் அந்த செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன். சரத்பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு விளங்கப்படுத்துமாறு கோரினேன்.

கேள்வி:சரத்பொன்சேகா தெளிவுப்படுத்தினாரா?

பதில்: நான் கூறியதைபோல அந்த செய்தியில் இருக்கவில்லை . அது ஊடகவியலாளரின் கதையே தவிர என்னுடைய கதையல்லை என்றார். கரு ஜயசூரிய அவ்வாறு சாட்சியமளித்து கொண்டிருந்தவேளையில் நீதிமன்றத்தில் மின்சாரம் தடைப்பட்டது. விரைந்து செயற்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் மன்றின் கதவுகளை திறந்தபோதிலும் மின்சாரம் தடைப்படுவதை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்திய நீதிபதிகள் முற்பகல் 11.20 மணியளவில் மேற்படி வழக்கு விசாரணையை இன்று வரைக்கும் ஒத்திவைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியா தலையிடும்: பொன்சேகா


நான் கூறியதைப் போல கிழக்கில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியாவின் தலையீட்டை தடுக்கமுடியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளே கொள்ளை யிட்டுள்ளனர்.

அதேபோல எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் அவர் சொன்னார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல் அட்பார் முறையில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோதும். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டவேளையில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், நான் கூறியதை போலவே கிழக்கில் பயங்கரவாதம் தலைத்தூக்கிவிட்டது. கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளை கொள்ளையிட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மன்றை விட்டுவெளியேறுகையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அம்மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டால் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் எமது பிரச்சினையில் தலையிடும். அதற்கு இடமளிக்கமுடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...