1 ஜூலை, 2011

ஆமைகளின் படையெடுப்பால் நியூயோர்க் கெனடி விமான நிலையத்தில் பரபரப்பு




அமெரிக்க நியூயோர்க் நகரில் உள்ள கெனடி விமான நிலையத்தில் நேற்று காலை விமானங்கள் புறப்படத் தயாராக இருந்த நிலையில், திடீரென ஆமைகள் விமான ஓடுபாதையை நோக்கி படையெடுத்தமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

அந்நாட்டு நேரப்படி காலை 6.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்ததமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்நாட்டு துறைமுக அதிகாரசபை மற்றும் அமெரிக்க விவசாய துறை ஊழியர்கள் விரைந்து ஆமைகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர் இவற்றை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கடற்கரை பகுதியில் விடுவித்துள்ளனர்.

இதனால், விமானங்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதனை அமைச்சே தீர்மானிக்கும்: அனுர

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட வீடியோக் காட்சிகள் பொய்யானவை அது முழுமையாகவே நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா? இல்லையா? என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

சனல் 4 நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள படம் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ இன்றேல் பதிலளிப்பதற்கோ அரசாங்கம் தயாரில்லை எனினும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் ஊடாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியின் ஊடாகவும் சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளும் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா இல்லையா என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு பாதுகாப்பு தொடர்பாக இராணுவத்தினரால் உயர்மட்ட மாநாடு

மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை இடம்பெற்ற வங்கிக்கொள்ளைச் சம்பவத்தையடுத்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் உயர் மட்ட பாதுபாப்பு மாநாடு இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வங்கிகளின் முகாமையாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈரோஸ் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புணாணை இராணுவ தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே மட்டக்களப்பு 234வது படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் செனவிரத்ன மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் சுதந்திரமான தேர்தலுக்கு அரசாங்கம் வழி வகுக்கவேண்டும்: ஐ.தே.க




வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை அரசாங்கம் அங்கு ஏற்படுத்தவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் :

வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் அதிகமான உள்ளூராட்சிமன்றங்களுக்கு இம்மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வடக்கில் தேர்தல் சுதந்திரமதாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது அந்த சந்தேகத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றது.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்பதுடன் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை உருவாக்கவேண்டும். இதேவேளை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி சிறந்த முறையில் தயாராகி வருகின்றது. இவ்விடயம் குறித்து ஆராய எமது கட்சியின் சார்பில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவானது வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளையும் பிரசார பணிகளையம் ஒருங்கிணைக்கும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புதுநகர் மக்கள் வங்கியில் 37 இலட்சம் ரூபா பணமும் நகைகளும் கொள்ளை




மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலைத்தீவு புதுநகர் பிரதேச மக்கள் வங்கிக்கிளைக்குள் உட்பிரவேசித்த ஆயுததாரிகள் 37 இலட்சம் ரூபா பணத்தையும் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த துணிகரச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம் பெற் றுள்ளது. வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வங்கிக்குள் திடீரென இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் வங்கியில் கடமையிலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அறையொன்றினுள் பூட்டி வைத்து விட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியினை பறித்து உடைத்துவிட்டே இந்தக் கொள்ளையில் ஆயுததாரிகள் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் முகாமையாளர் நேற்றைய தினம் வங்கிக்கு சமூகமளித்திருக்காத நிலையில் ஏனைய மூன்று பெண் ஊழியர்கள் மாத்திரமே வங்கியில் கடமையிலிருந்துள்ளனர். இந்த நிலையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆயுததாரிகள் வந்த வேனில் வங்கியொன்றின் முத்திரை பதிக்கப்பட்டிருந்ததாகவும், ஐந்து பேர் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புதுநகர், மக்கள் வங்கிக் கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமே கடந்துள்ளது. படுவான்கரை பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே இந்த வங்கிக்கிளை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழருக்கு சுய உரிமை வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து




இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுய உரிமை வழங்கப்பட வேண்டும். இதனை இந் தியா வலியுறுத்தி வருகின்றது என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் பத்திரிகைகளின் ஆசிரியர்களை புதன்கிழமை காலை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கடந்த 14 ஆம் திகதி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சி னை யை ஜெயலலிதா நன்றாக அறிந்தவர். எனவே இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் அவர் மிக அக்கறை கொண்டு மத்திய அரசுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தலாம்




அனுமதியளிக்கப்பட்ட வங்கிகளில் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளில் சீனாவின் யுவான் நாணயத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் யுவான் நாணயத்தை பயன்படுத்துவதற்கு அனுமதியளிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீடுகளுக்கு உதவும் என மத்திய வங்கி தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் உட்பட 13 வெளிநாட்டு நாணயங்களிலும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதியளிக்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...