அரசுக்கு எதிரான ஊடகங்கள் என்னதான் மக்களின் மனதை மாற்ற முனைந்தாலும், பெரும்பான்மையான மக்கள் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்குவார்கள் என்பதை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கியமான கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன.
கடந்த வாரம், களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில், மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமான மக்களின் ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 28 வீதமான மக்களின் ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதை முன்னின்று நடாத்திய பேராசிரியர் கருணரத்ன கருத்துத் தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவுக்கு நகரப்புறங்களில் தான் ஓரளவு ஆதரவு இருப்பதாகவும்., கிராமப்புறங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் இன்னொரு சுயாதீனமான அமைப்பான ~நெக்ஸஸ் ரிசேர்ச் குறூப் என்ற நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பின்படி, மகிந்த ராஜபக்சவுக்கு 61.18 வீதமான ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 33.40 வீதமான ஆதரவும் மட்டுமே இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 5.42 வீதமான மக்கள் தமது ஆதரவு யாருக்கு என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை.
இந்த இரு கருத்துக் கணிப்புகளும் எந்தவித உள்நோக்கங்களும் இன்றி, சுயாதீனமாக நடாத்தப்பட்டவை என்றபடியால், மகிந்த ராஜபக்ச மீண்டும் எவ்வித சிரமமும் இன்றி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நிட்சயமாக தெரிய வருகிறது.
அதேவேளையில், பொதுமக்கள் மத்தியில் இருந்தும், அவதானிப்பின் அடிப்படையில் ஒரு கருத்துக் கணிப்பும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது இலங்கையின் சனத்தொகையில் 72 வீதமானவர்கள் சிங்கள மக்கள். மிகுதி 28 வீதத்தினரில் 12 வீதமானவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்கள். மிகுதி 16 வீதம் முஸ்லீம் மக்களும், மலையக தமிழ் மக்களும் ஆவர்.
இதில் 72 வீதமான சிங்கள மக்களில் 50 வீதத்தினர் மகிந்தவுக்கும், 22 வீதத்தினர் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்கக் கூடும். 16 வீதமான முஸ்லீம் - மலையக மக்கள், மகிந்த ராஜபக்சவுக்கு 8 வீதமாகவும் சரத் பொன்சேகாவுக்கு 8 வீதமாகவும் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 12 வீதமான வடக்கு – கிழக்கு தமிழ் மக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி, சரத் பொன்சேகாவுக்கு 8 வீதமானோர் வாக்களித்தாலும், குறைந்தது 4 வீதமான தமிழ் மக்களாவது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படிப்பார்த்தால் மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமும், சரத் பொன்சேகாவுக்கு 38 வீதமும் வாக்குகள் கிடைக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது. பொதுமக்களின் இந்தக் கணிப்பீடும், களனி பல்கலைக்கழகத்தினதும், "நெக்ஸஸ் ரிசேர்ச் குறூப்" இனதும் கணிப்பீட்டு முடிவுகளை அடியொற்றியே காணப்படுவதை அவதானிக்கலாம்.
பொதுவாக, பொதுமக்கள் மத்தியில் உள்ள நிமையை அவதானிக்கையிலும், ஆரம்பத்தில் சரத் பொன்சேகாவுக்கு இருந்த ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணங்கள், சரத் பொன்சேகாவுக்கு என கட்சி ஒன்று இல்லாமல் இருப்பதாலும், அவரை ஆதரிக்கும் இரண்டு முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியகட்சியும், ஜே.வி.பியும் எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதாலும், சரத் பொன்சேகா தற்செயலாக வெற்றி பெற்றாலும், யாருடைய சொற்படி அவர் ஆட்சி நடாத்துவது என்ற அதிகார இழுபறி ஏற்படலாம் என மக்கள் கருதுகின்றனர்.
அதுவுமல்லாமல், சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டபடி ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பாரா என்ற சந்தேகமும் ஐக்கிய தேசியகட்சியிடம் நிலவுகின்றது.
மறுபக்கத்தில், தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் கருத்தொன்று உருவாகியுள்ளதால், சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதனால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றாவது வெற்றி பெற முடியுமா என்ற அங்கலாயப்பில் சரத் பொன்சேகா இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் சரத் பொன்சேகா தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பல பொய் வாக்குறுதிகளை வழங்கிய போதும், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடாததால், கூட்டமைப்பினரிடையிலேயே மிகுந்த அதிருப்தி காணப்படுவதையும், சம்பந்தன் கோஷ்டியினர் தனிமைப்பட்டுச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
அதனால் தான் சம்பந்தர் – மாவை கோஸ்டி அவசர அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு ஓடி தமிழரசுக்கட்சி மாநாட்டைக் கூட்டி தங்களது தவறான செயல்பாட்டுக்கு அங்கீகாரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில,; தான் பதவிக்கு வந்தால் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அரச ஊழியர்கள், படையினர் என்போரை பழிவாங்கப் போவதாக, சரத் பொன்சேகா கூட்டங்களில் பகிரங்கமாகப் பேசி வருவதால், மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படுவதுடன், மகிந்த ராஜபக்ச நிச்சயம் வெல்வார் என்றபடியால், தேர்தலின் பின் சரத் பொன்சேகாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் என்ன நடக்குமோ என்ற அச்சம் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்hள் மத்தியிலும் காணப்படுகிறது.
இரு முக்கியமான கருத்துக் கணிப்புகள், மகிந்தவின் அபரிமிதமான வெற்றியை கட்டியம் கூறுகின்றன!
இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்தவரையில், மொழி வித்தியாசம் இன்றி சகல ஊடகங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமாகவே கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். எனவே வழமைபோலவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலிலும், அவை எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவே பெரும் எடுப்பில் பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஆனால் கடந்த காலங்களைப் போலவே, தேர்தல் முடிவு வெளிவரும் போது, மக்கள் பெரும்பாலான ஊடகங்களின் கருத்துகளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருப்பதைக் காணமுடியும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.