சிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி
முன்னணி முடிவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாககீ கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்."சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சியில் இணைந்து போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். நாம் மேலும் தமிழ் உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனினும் உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் இதுவரை நாம் அறிவிக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் தமது தீர்மானம் குறித்த கருத்தினை வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்துக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல் முழுமையாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை :பொதுநலவாய நாடுகளின் குழு
மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில்,தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை." எனத் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னரான அபிவிருத்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து அவர் அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,இவ் அபிவிருத்திகள் ஒரு பதற்ற நிலையை அதிகரித்துள்ளன.சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்பட வேண்டியது இங்கு முக்கியம்.மோதல்களின் பின்னரான தேர்தல்களையடுத்து இலங்கை அரசியல் மற்றும் சமூக விடயங்களில் இணக்கப்பாட்டினை எட்டும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் சனத் ஜயசூரிய மாத்தறையில் போட்டி
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இடதுசாரி விடுதலை முன்னணியில் சிவாஜிலிங்கம்,ஸ்ரீகந்தா போட்டி
விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி இம்முறை பொதுத் தேர்தலில் இடதுசாரி விடுதலை முன்னணி என்ற பெயரில் நாடு முழுவதும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.இம்முன்னணியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.இது தொடர்பாக சமல் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இடதுசாரி விடுதலை முன்னணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதோடு அதற்கான பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.இவர்கள் வடக்கு, கிழக்கில் போட்டியிடுவார்கள். அத்தோடு தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கவுள்ளோம்.நாம் என்றும் சிறுபான்மை இன மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளோம்.இந்தக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். மக்கள் உரிமைகளைப் பெறவேண்டும். எனவே நிச்சயம் எமக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார்.
ஐ.ம.சு.மு.வின் அணித்தலைவர்கள் சுபநேரத்தில் நேற்று கையொப்பம்;பஷில் கம்பஹ அணித்தலைவராகிறார்?
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவிருக்கின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட அணித்தலைவர்கள் நேற்று திங்கட்கிழமையிலிருந்த சுபநேரத்தில் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர்.
19 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் மற்றும் உபதலைவர்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னணிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று காலை 10.45 மணிக்கு கையொப்பமிட்டுள்ளனர்.
அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர்கள் சகலரும் வேட்பு மனுக்களில் நேற்றைய தினமே கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் அணித்தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வெளிநாடொன்றிற்கு விஜயம் செய்திருப்பதனால் கம்பஹா மாவட்ட வேட்பு மனு நேற்றைய தினம் கையொப்பமிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் யாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாட்களில் தனித்தனியாக சிரேஷ்ட அமைச்சர்களின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னணி அறிவித்துள்ளது
சரத் பொன்சேகா கைது குறித்து பௌத்த பீடங்களுக்கு விரைவில் விளக்கம் : அரசாங்கம்
இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள், விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் மல்வத்தை பீடத்தின் தேரர்கள் உள்ளிட்ட அனைத்து தேரர்களுக்கும் அரசாங்கம் விரிவான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளது. சில தினங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்றத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் எம்.பிக்களாக இருந்த அனைவருக்கும் இம்முறை வேட்பு மனு வழங்கப்படும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் புதுமுகங்கள் களமிறக்கப்படுவர். அத்துடன் எமது கூட்டமைப்பின் சார்பில் விசேட கொள்கை பிரகடனம் வெளியிடப்படமாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது :
"முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணம், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று மல்வத்து பீடத்தின் தேரர்கள் உள்ளிட்ட அனைத்து தேரர்களுக்கும் அரசாங்கம் விரிவான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளது.
அரசியல் பழிவாங்கல் அல்ல
மேலும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமையானது எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் அல்ல என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றேன். இதனை அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் பரப்ப முற்படுகின்றனர். ஆனால் தெளிவான காரணங்களுடனேயே இராணுவ சட்டத்தின் கீழ் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடமை பொறுப்புகளை மீறியுள்ளார்
சரத் பொன்சேகா இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை பேணிவந்துள்ளார். அரசாங்க மாற்றம் ஒன்றுக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்தியில் இராணுவ ஒழுக்க விதிகளை மீறியுள்ளார். தனது கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை மீறி செயற்பட்டுள்ளார்.
பல தகவல்களை வெளியிடுவோம்
இராணுவ சதிப்புரட்சி ஒன்றை மேற்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் ஜெனரல் பேச்சு நடத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன. திட்டங்களை தீட்டியுள்ளனர். அந்த வகையிலேயே அவர் இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மேலும் பல தகவல்களை வெளியிடுவோம். நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இராணுவ விதிகளை மீறி ஜெனரல் நடந்து கொண்டுள்ளார்.
குழம்பிய குட்டையில் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள் இன்று குழம்பிப்போயுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன குழப்பத்தில் உள்ளன. அவர்களால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது மற்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
அரசியல் குப்பையில் மற்றும் பாதாளத்தில் எதிர்க்கட்சியினர் இன்று விழுந்துவிட்டனர். எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் உள்ளனர். கடந்த தேர்தலில் அவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர். அவர்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் பாராளுமன்றத் தேர்தலில் விசேடமான வெற்றியை ஈட்டும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயார்ப்படுத்தல்களையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது.
அதன் முதற்கட்டமாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்களை கோரினோம். விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
முன்னாள் எம்.பிக்கள் அனைவருக்கும் வேட்பு மனு
அதாவது கடந்த பாராளுமன்றத்தில் சுநத்திர கட்சியின் சார்பில் எம்.பிக்களாக இருந்த அனைவருக்கும் இம்முறை வேட்பு மனு வழங்கப்படும். அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை விண்ணப்பங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
சுமார் 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. எனவே நாட்டின் 9 மாகாணங்களையும் மூன்றாகப் பிரித்து மூன்று வேட்பு மனு சபைகள் செயற்பட்டன. இவற்றில் அநீதி இழைக்கப்படுவதாக எவராவது கருதினால் மேன்முறையீடு செய்வதற்கு பிரதமர் தலைமையிலும் சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
21 ஆம் திகதி கையொப்பம் இடுவார்கள்
தற்போதைய நிலைமையில் பெரும்பாலும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனர். புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் புது முகங்கள் போட்டியிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலைஞர்கள் பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் புது முகங்களாக களமிறங்குவார்கள்.
தற்போதைய நிலையில் 17 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் இன்று (நேற்று ) வேட்பு மனுக்களில் கையொப்பம் இட்டுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுவிட்டனர். மேலும் ஏனைய மாவட்டங்களுக்கான அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி கையொப்பம் இடுவார்கள். மதவழிபாடு
மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்டங்கள் ரீதியாகவும் வேட்பு மனுக்களைஞ்கு தாக்கல் செய்வோம். அத்துடன் 27 ஆம் திகதி மாலை அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதியில் பௌத்த மத வேட்பாளர்கள் அனைவரும் மத வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஏனைய மதங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டில் ஈடுபடுவர்.
ஜனாதிபதி முன்னிலையில் உறுதி மொழி
அதேவேளை, 27 ஆம் திகதி மாலை அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி முன்னிலையில் விசேட உறுதி மொழியை வழங்கவுள்ளனர்.
அதாவது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் விதிகள் கொள்கைகள் சட்டங்களை மதித்து நடத்தல், தேர்தல் விதி முறைகளை மதித்தல் பொலிஸ் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படுதல் பேன்றன தொடர்பில் வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதி மொழி வழங்கவுள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை
சுதந்திர கட்சியின் மத்திய குழு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது கட்சியின் கொள்கைகள் தேர்தல் விதிகள் பொலிஸ் சட்டங்கள் ஆகிவற்றை மீறி நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானவர்களுக்கு தேர்தலின் பின்னர் எந்த பதவியும் வழங்கப்படமடாட்டாது.
விசேட கொள்கைப்பிடகனம் இல்லை
இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விசேடமாக கொள்கை பிரகடனங்களை முன்வைக்கப் போவதில்லை. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, பொது வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும். இலங்கையை உலகில் பலமான நாடாக கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைஞ்கு தாருங்கள்
அதேவேளை, இந்த தேர்தலில் நாங்கள் பொது மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அரசியலமைப்பில் மாற்றங்கள் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்பனவற்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதியாகும்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்றே கூறினர். ஆனால் நாங்கள் அதற்கு அருகில் வந்துவிட்டோம். எனவே பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.
தேசியப்பட்டியலை தயாரிக்கின்றோம்
பாராளுமன்ற தேர்தலுக்கான எமது தேசியப்பட்டியல் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதனை தற்போது தயாரித்து வருகின்றோம். வேட்பு மனு தாக்கல் தினத்தன்று அதனை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிப்போம்."
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்
குற்றப்பதிரிகைக்கு வாக்குமூலம் தேவையில்லை பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களே போதும்
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெனரலின் வாக்குமூலமும் அதில் பதியப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் அதற்கான வாக்குமூலத்தை வழங்க ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ளார் என்று செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது குறித்து கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா தலைமையிலான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போதே அவர் வாக்குமூலம் வழங்க மறுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.
தான் தற்போது இராணுவ அதிகாரி அல்ல என்றும், சாதாரண பொதுமகனான தன்னிடம் இராணுவத்தினர் வாக்குமூலம் பெற முடியாது, அதற்கான அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை என்றும் கூறியே அவர்களிடம் வாக்குமூலம் வழங்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்தமை, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டமை மற்றும் ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள இராணுவத்தின் உயரதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலமளிக்க மறுத்த போதிலும் அவருக்க எதிரான சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வாக்குமூலம் வழங்குவதற்கு ஜெனரல் பொன்சேகா மறுதலித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இராணுவம் தீர்மானித்துள்ள அதேவேளை இராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
ஜெனரால் சரத் பொன்சேகாவின் கைதானது இராணுவ சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகும். தவிர இதுவொரு அரசியல் நடவடிக்கையல்ல. இந்நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இராணுவ சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை முழுமையடைந்ததன் பின்னரே அவரை இராணுவ நீதிமன்றத்துக்கு அழைப்பதா? இல்லையா?, இராணுவத்தின் எந்த சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இந்தத் தீர்மானத்தை எடுக்கும் முக்கிய அதிகாரியாக இராணுவ தளபதி காணப்படுவார்.
சாட்சிகளை நெறிப்படுத்துவதென்பது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சாட்சிகளைத் திரட்டி அந்த சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்துவதாகும். இந்நிலையில் ஜெனரல் பொன்சேகா வாக்குமூலம் வழங்குவதற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கினாரா? இல்லையா? எனும் கேள்விகள் இங்கு அநாவசியமானவை.
காரணம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைக்கு அவருடைய வாக்குமூலம் முக்கியப்படுவதில்லை. கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் வாக்குமூலங்களின் பிரகாரமே அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் அவர் இராணுவத்தினருக்கு வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளாரா இல்லையா என்பது குறித்து தெரியாது.
எதிர்வரும் நாட்களில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவர் வழங்குவாராவா? அப்படி அவர் வழங்கவில்லையாயின் அதற்கு சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்ட நிபுணர்கள் அறிவிப்பார்கள். எது எவ்வாறெனினும் சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையே இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வரும் சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இராணுவ சட்டத்தில் அதற்கு இடமுண்டு. இருப்பினும் அவ்வாறான சாட்சிகளிடம் அவர் இன்னமும் எவ்வித விசாரணையினையும் மேற்கொள்ளவில்லை.
பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுவிக்கவும்
ஜெனரல் சரத் பொன்சேகாவோ அல்லது ஜே.வி.பி.யோ எந்தவிதமான சதித் திட்டங்களையும் தீட்டவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். இவ்வாறான இட்டுக் கட்டப்பட்ட கதைகளை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. மேலும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகா உட்பட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க் கட்சிகளின் மீது சேறு பூசும் கலாசாரத்தை அரசாங்கம் விடுவதாக இல்லை. பொதுச் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. கட்சியினர் ஆகியோர் இந்நாட்டில் இரத்தக் களரி ஒன்றை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டங்களைத் தீட்டியதாக அரச தரப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித அடிப்படையும் கிடையாது. எனவே பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இத்தகைய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. அத்துடன் அரசாங்கம் கூறி வருகின்ற காரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. கட்சி மிகவும் தெளிவான முறையில் ஜனநாயக ரீதியாக செயற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவ்வாறு ஜனநாயக ரீதியில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட அக் கட்சி மீது அரசாங்கம் வெறுமனே குற்றம் சுமத்துகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற மறு தினமான 27ஆம் திகதி புதன்கிழமை ஜே.வி.பி. உறுப்பினர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தங்கியிருந்த சினமன் லேக்சைட் ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு எமது கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
எனவே அரசாங்கம் கூறுகின்ற பொய்யான கட்டுக் கதைகளைப் போல் அங்கு எந்தவிதமான சதித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன்.
அத்துடன் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெற்றால் அதன் பின்னர் அமையவிருக்கும் கூட்டு அரசாங்கத்தில் என்னை நீக்கிவிட்டு ஒரு அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கும் ஜெனரல் பொன்சேகாவும் ஜே.வி.பி.யும் தீர்மானித்திருந்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும பொய்க் கதையொன்றை அவிழ்த்து விட்டிருந்தார். இவ்வாறான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.
சதித் திட்டங்கள் என்று கூறுகின்ற அரசாங்கமே இவ்வாறான சதி முயற்சிகளை அறிமுகப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜெனரல் பொன்சேகா பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போல் அவருடன் சேர்த்து சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என்றார்
புளொட் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு தொகுதியனருக்கு இன்று புளொட் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. முருங்கன் புளொட் அலுவலகத்தில் வைத்து புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களால் இந்த சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த இந்த சைக்கிள்கள் அடம்பனில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் மிகவும் வறியவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் ஆகியோரும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரைமீதேறி எதிர்ப்பு
விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரைமீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிணை வழங்குவதில் நிலவுகின்ற தாமதம் காரணமாக சுமார் 15 சந்தேகநபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் கனத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தொகுதியினரைச் சேர்ந்தவர்கள் அல்லவென்றும், இவர்களில் போதைப்பொருளுடன் தொடர்புடைய அநேகமானோர் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடை சிறையின் இருமாடி கட்டிடத்தின் எல் மண்டபத்தின் கூரைமீது ஏறியே இந்த சந்தேகநபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்டபோதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அரசியலிலிருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த 57ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும், தனது பதவிக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை மேலும் தெரிவிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம், புளியடிச்சந்திப் பிரதேசத்தில் இன்றுபிற்பகல் 3மணியளவில் வெடிப்புச்சம்பவம்
யாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம், புளியடிச்சந்திப் பிரதேசத்தில் இன்றுபிற்பகல் 3மணியளவில் வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தோர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை இந்துக் கல்லூரிக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வீதியின் ஓரத்தில் காணப்பட்ட குண்டு போன்ற பொருளை எடுத்து பாடசாலை முடிந்து வீடுசென்று கொண்டிருந்த மாணவர்கள் விளையாடியபோதே குண்டு வெடித்துள்ளது. சம்பவத்தில் அரியாலை ஏ.வீ.வீதியைச் சேர்ந்த 09வயதான ஏ.லக்ஸ்சன் மற்றும் 10வயதான ஆர்.ராம்சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் ஆறு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்தவரென்றும் கூறப்படுகிறது. மற்றொருவர் அரியாலையைச் சேர்ந்தவர் என்றும் அவர் குண்டுவெடிப்பில் மரணமான ஆர்.ராம்சிங்கின் சகோதரர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதே கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐனாதிபதி தேர்தல் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்கு தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் ஊடகப்பேச்சாளர் அசாளத் மௌலானா தெரிவித்துள்ளார். தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்றுமாலை தமதுகட்சி இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவுக்கு முன்னர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத்தினருடன் இது தொடர்பில் பேசப்பட்டு அரசாங்கத்தின் இணக்கத்துடன் தாம் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், திருமலை, மட்டக்களப்பில் தனித்து போட்டியிடுவதாகவும், அம்பாறையில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
புத்தளம் பிரதேச செயலகப்பிரிவில் கிராம அதிகாரி காணவில்லை
புத்தளம் பிரதேச செயலகப்பிரிவில் கிராம அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவந்த கொத்தான்தீவை சேர்ந்த எம்.றாசிக் என்பவர் கடந்த வியாழக்கிழமைமுதல் காணாமல்போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவைக்கு சென்ற றாசிக், அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்றுவரை அவர் வீடு வந்து சேரவில்லையென்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறுதியாக தொலைபேசியில் உரையாடியபோது தான் தற்போது மட்டக்களப்புக்கு பிரஸ்தாப வாகனத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையைத் தரம் உயர்த்துவதற்கு ஜப்பான் உதவி
யாழ். போதனா வைத்தியசாலையைத் தரம் உயர்த்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் 25மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜப்பான், சர்வதேச முகவர் நிறுவனம் ஊடாக இந்நிதி வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கட்டடத்தொகுதி நவீன மயப்படுத்தப்பட்டு சகல வசதிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்படும். வைத்தியசாலையில் புதிதாக மூன்று மாடிக்கட்டடம் அமைக்கப்படும். அத்துடன் சத்திரசிகிச்சை விடுதி வளாகம், அவசர சிகிச்சைப்பிரிவு, பிரதான மருந்தகம் ஆகியனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன. மற்றும் பல வசதிகள் வைத்தியசாலையில் செய்யப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.