6 ஏப்ரல், 2011

இலங்கை தமிழர்கள் தன்மானத்தோடும் பெருமையோடும் வாழ அழுத்தம் கொடுக்கிறோம்

இலங்கையின் அரசியல் அமைப்பு விதிகளை மாற்றி தமிழர்களுக்கு எல்லா உரிமைகளையும் வழங்கி தன்மானத்தோடும் பெருமையோடும் பெருமிதத்தோடும் அவர்கள் வாழ்வதற்கு மாற்றத்தை செய்ய வேண்டுமென வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத் திடலில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தி.மு.க. கூட்டணியின் நேற்றைய தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சோனியா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

அண்டை நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களைப் பற்றிய செய்திதான் எங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. அதைவிட வேறு ஒன்றும் எங்கள் நெஞ்சத்தை தொடுவதாக சொல்ல இயலாத அளவிற்கு நாங்கள் அதிலே நெருக்கமாக இருக்கின்றோம். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் கொடுத்த உறுதிமொழிகளை எல்லாம் ஒவ்வொன்றாக செய்து கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவை மேலும் தொடரும்.

இப்பொழுது புனர்வாழ்வுக்காக பெருந்தொகையான நிதியுதவியை கொடுத்திருக்கிறோம். அதுபோல 50 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டுவதுடன் இன்னும் சிலவற்றை புனரமைப்பதற்கு முன்னேற்றமான காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம்.

இறந்துபோன மீனவர்களை பற்றி நாங்கள் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஒன்றை சொல்லுகிறோம். இந்த துப்பாக்கிச் சூடு, நமது தமிழக மீனவர்கள் மீது நடத்துகின்ற துப்பாக்கிச் சூடு இனிமேல் நடக்காது என்று சொல்லுகின்ற அளவுக்கு செயல்பட்டிருக்கிறோம்.

அதனை உங்களுக்கு தொடர்ந்து நாங்கள் செய்வோம் என்பதனையும் இலங்கைப் பிரச்சினை தீரும்வரை அதனைப்பின்பற்றி நடப்போம் என்பதனையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

1686 கோடி ரூபாவிற்கான குறை நிரப்பு சபையில் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 1686 கோடியே 24 இலட்சத்து 61ஆயிரத்து 581 ரூபாவை குறைநிரப்பு பிரேரணையின் மூலமாக ஒதுக்கியுள்ளது.

குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான விபரங்கள் நேற்று பாராளுமன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

இதில் மீண்டும் வரும் செலவினமான 270 கோடியே 28 இலட்சத்து 73 ஆயிரத்து 823 ரூபாவும் மூலதன செலவினமாக 1415கோடியே 95 இலட்சத்து 87ஆயிரத்து 758 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், திணைக்களங்கள், அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான செலவினங்களுக்கே இந்த குறைநிரப்பு ஒதுக்கீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டு டிசம்பர் 01ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான செலவினத்துக்கே இந்த குறைநிரப்பு ஒதுக்கீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சம்பளம் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் வாகனங்களுக்குச் செலுத்தவேண்டிய தீர்வைகளை செலுத்துவதற்கும் காகிதாதிகள் உள்ளிட்ட இயந்திர உபகரணங்கள் கொள்வனவுக்குமாகவே இந்த செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு இந்தியாவின் வசமாகும் அபாயம்: ஜயலத் எச்சரிக்கை

கடலில் வேலி போட்டு இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது. கடலில் வேலி போட்டு இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கஉள்நாட்டு மீனவர் பிரச்சினையில் அரசு அரசியல் இலாபம் தேடியமையால் இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு இந்தியா வசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.

மாற்று அரசாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு மீனவர் பிரச்சினையையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதுகாக்கும். இதற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

முப்பதாண்டுகளுக்கு பிறகு வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீண்டும் சோர்வடையும் நிலை உருவாகியுள்ளது.இந்தியா மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினை தற்போது உக்கிரம் அடைந்து பாரிய முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளது.

இந்திய அரசியலில் மீனவர் பிரச்சினையும் கச்சதீவு விவகாரமும் பாரியளவில் சூடுபிடித்துள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் ஒன்றுமே நடக்காததைப் போல் மௌனமாக உள்ளது. மிகவும் எளிதாக இராஜதந்திர ரீதியில் தீர்த்து வைக்கக் கூடிய இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினையில் அரசாங்கத்தின் பராமுகத்தால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே உறவு முறையிலான அந்நியோன்னிய நட்பு காணப்பட்டது. கரையோர கலாசாரத்தில் இரு நாட்டு மீனவர்களும் இணைக்கப்பட்டிருந்தமையால் பேதங்கள் இன்றி சுமுகமாக உறவு பாதுகாக்கப்பட்டது.

ஆனால் தற்போது குறிப்பிட்ட சில சம்பவங்களின்போது அரசு தலையிடாததால் பாரிய முறுகல் நிலையே உருவாகியது. எனவே ஐ.தே.க. கடந்த வாரத்தில் இந்திய மீனவ அமைப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இரு நாட்டு மீனவர்களிடையே நட்புறவை ஏற்படுத்த பங்களிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹொங்கொங் குடிவரவு அதிகாரிகளுடன் இலங்கைப் பயணி மோதல்: ஆறு பேர் காயம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த பயணியொருவருடன் ஏற்பட்ட மோதலினால் ஹொங்கொங் குடிவரவு அதிகாரிகள் ஐவர் காயமடைந்தனர்.

குடிவரவு கருமபீடத்தில் பயண ஆவணமொன்று தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே அம்மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பயணியைஅமைதிப்படுத்துவதற்கு முயன்றபோது குடிவரவு அதிகாரிகள் ஐவர் காயமடைந்துள்ளனர். இதன்போது அப்பயணியும் காயமடைந்துள்ளார். இவர்கள் 6 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக 41 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஹொங்கொங் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சாயி பாபாவின் உடல் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம் 2 ஆவது சீரடி அறிவிப்பு

ஸ்ரீ சத்தியசாயி பாபா பிரசாந்தி நிலையத்தில் உள்ள சிறப்பு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 85 வயதாகிறது.

மூச்சுத்திணறல் காரணமாக மார்ச் 28 ம் திகதி அவர் அங்கு சேர்க்கப்பட்டார். அது முதல் அவருடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக சிகிச்சையை ஏற்காமல் செயலிழந்து வருகின்றன.

இப்போது செயற்கை முறையில் சுவாசிக்கிறார். சிறுநீரகங்களைச் செயற்கை முறை யில் இயக்கி வருகின்றனர். நேற்று முன் தினம் மாலை வைத்தியர்கள் அளித்த சிறப்பு அறிக்கையில், பாபாவின் உடல் நிலை கவலைக் கிடமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை வெளியி டப்பட்ட சிறப்பு மருத்துவ அறிக் கையில் அவர் தேறிவருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னுடைய ஆன்மிக உரைகளால் இலட்சக்கணக் கானோரை நல்வழிப்படுத்திய பாபா தன்னுடைய பக்தர்களைக் கொண்டு ஈடு இணையற்ற சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவற்றை மாபெரும் அளவில் அளித்து மக்களுக்கு அருளை வாரிவழங்கி வருகிறார். பாபா உடல் நலம் பெற வேண்டும். மீண்டும் வந்து தங்களுக்கு நல்லாசி வழங்கி நல்ல வழிகாட்ட வேண்டும், ஏழை எளியவர்களுக்கான சமூகப் பணிகளைத் தொடர வேண்டும் என்று அவருடைய பக்தர்கள் வீடுகள் தோறும் மனம் உருகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

இதனிடையே சாய்பாபாவை தரிசிக்க தங்களை அனுமதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகளை பாபா ஆதரவாளர்கள் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புட்டபர்த்தி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

அங்குள்ள நிலைமையை கருத்தில் கொண்டு கூடுதல் பொலிஸ் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புட்டர்பத்தியில் சாய்பாபாவின் வாரிசு யார் என்பதில் மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

அது வெறும் வதந்தி என்பது பிறகு தெரிய வந்தது. ஒரு தனியார் டி.வி சானல் திட்டமிட்டு இந்தப் பொய்த் தகவலை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாய்பாபாவுக்கு யாரும் வாரிசு கிடையாது என்று அதிகார ப்பூர்வமாக அறிவிக்கப்ப ட்டுள்ளது.

பிரசாந்தி நிலைய பொறுப்பாள ர்கள் இது பற்றி கூறுகையில், புட்டபர்த்தி சர்வதேச ஆன்மிக தலமாகத் தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவின் 2 ஆவது சீரடி என்று இது அழைக்கப்படும் என்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய கிழக்கில் நெருக்கடி தணிந்ததும் எண்ணெய் விலை குறையும்

லிபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை சுமுக நிலைக்குத் திரும்பியதும் எண்ணெய் விலை குறைவடைய ஆரம்பிக்கும். அச்சமயம் நாமும் எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தைச் செய்து விலைக்குறைப்பை மேற்கொள்வோம் என்று பெற்றோல் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிபொருட்களின் விலையேற்றம் குறித்து அமைச்சின் நிலைமையைத் தெளிவுபடுத்தி விசேட அறிக்கை விடுத்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சர்வதேச சந்தையில் கடந்த இரு மாதங்களாக எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக கடந்த 2 ஆம் திகதி முதல் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க எமக்கு நேர்ந்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் 10 ரூபா படியும், ஒரு லீற்றர் டீசல் 3 ரூபா படியும், சுப்ரி டீசல் மற்றும் சுப்ரி பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபா படியும், மண்ணெண்ணெய்க்கு லீற்றருக்கு 10 ரூபா படியும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லீற்றர் பெற்றோல் 130 ரூபா படியும் ஒரு லீற்றர் சுப்ரி பெற்றோல் 148 ரூபா படியும், ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 73 ரூபா படியும், ஒரு லீற்றர் சுப்ரி டீசல் ரூ. 83.30 சதப்படியும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 51 ரூபா படியும் விலை நிலைமை காணப்பட்டது. இதனை அதே வருடம் டிசம்பர் மாதம் ஒரு லீற்றர் பெற்றோலை 115 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் சுப்ரி பெற்றோலை 133 ரூபாவுக்கும் குறைத்தோம். என்றாலும் ஏப்ரல் மாதம் 2 ம் திகதி முதல் லீற்றர் பெற்றோல் 125 ரூபா படியும், ஒரு லீற்றர் சுப்ரி பெற்றோல் 143 ரூபா படியும், ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 76 ரூபாபடியும், ஒரு லீற்றர் சுப்ரி டீசல் ரூ. 98.30 சதப்படியும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 61 ரூபா படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உலக சந்தையில் சமையல் எரி வாயுவின் விலையும் தினமும் அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக 12.5 கிலோ கிறாம் எடையிலான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 238 ரூபா படி அதிகரித்துள்ளோம்.

என்றாலும், 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் இற்றை வரையும் நாம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களைச் செய்யவில்லை. ஆனபோதிலும் 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெற்றோல், மற்றும் டீசலுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, சுங்க வரி என்பவற்றை முழுமையாக நீக்கி விட்டோம். பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஏற்கனவே 35 ரூபா படியும் டீசல் ஒரு லீற்றருக்கு ஏற்கனவே 15 ரூபாப் படியும் சுங்க வரி அறவிடப்பட்டது.

பெற்றோலுக்கும், டீசலுக்கும் சுங்க வரி நீக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு 53 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபாப்படி கலால் வரி மாத்திரமே இப்போது அறவிடப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் பெற்றோலின் விலையை திருத்துவதற்கு முன்னர் ஒரு லீற்றருக்கு ரூ. 8.15 சதப்படி நஷ்டத்தை எதிர்கொண்டோம். அது விலை திருத்தத்திற்குப் பின்னர் ரூபா 25.38 சதமாகக் குறைவடைந்துள்ளது. அத்தோடு மண்ணெண்ணையை லீற்றர் ஒன்றுக்கு ரூபா 48.94 சதப்படி ஏற்கனவே நஷ்டத்தை எதிர்கொண்டோம். அது இப்போது ரூ. 38.94 சதமாகக் குறைவடைந்துள்ளது.

லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சுமுகமடையும் போது எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும். அப்போது எரிபொருட்களின் விலையில் நாம் மீண்டும் திருத்தம் செய்து குறைப்போம்.

எண்ணெய் விலை அதிகரிக்கும் போது அது முழு பொருளாதாரத்திலுமே தாக்கம் செலுத்தும்.

இதனை நாமறிவோம். என்றாலும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தான் ஏற்கனவே பெற்றோல் மற்றும் டீசலுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, சுங்க வரி என்பன நீக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டை மீட்டெடுத்திருக்காவிட்டால் சூடான், வட ஆபிரிக்க நாடுகளுக்கு நேர்ந்த கதியே எமக்கும் ஏற்பட்டிருக்கும்


மனிதாபிமான நடவடிக்கை மூலம் நாட்டை மீட்டெடுத் திருக்காவிட்டால் சூடான், வட ஆபிரிக்க நாடுகளுக்கு நேர்ந்த கதியே எமக்கும் ஏற்பட்டிருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வளை குடா நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள உக்கிரமான சூழ்நிலையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வளைகுடா, வட ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் நேர்ந்திருக்கும். எனினும் நாம் காலந்தாழ்த் தாது எமது நாட்டைப் பாது காத்துக்கொண்டுள்ளோம்.

நாட்டை மீட்டது மட்டுமன்றி சகல இன, மத மக்களும் வாழக்கூடிய வித த்தில் சுதந்திரமான சூழலையும் எம்மால் ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நடவடிக்கையானது வடக்கு, கிழக்கு உட்பட சகல மக்களும் சகலதையும் அனுபவிக்க வழிசெய்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘ரன்பிம’ காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடை பெற்றது. நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் 3800 பேருக்கு ‘ரன்பிம’ உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, விமல் வீரவன்ச, பிரதியமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன், முத்து சிவலிங்கம், ஜனாதிபதியின் செய லாளர் லலித்வீரதுங்க, மேல் மாகாண ஆளுநர் அலவி மெள லானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ் வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக் கையில்:-

நாட்டில் பாரிய அபிவிருத்தி யுக மொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி பற்றி நாம் கூறும் போது அம்பாந்தோட்டை துறை முகம் பற்றியும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பற்றியுமே குறிப் பிடுகின்றோம். ஆனால் இது போன்ற எத்தனையோ அபிவி ருத்தித் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நாம் வெளியிடுவதில்லை.

காணி உறுதிப்பத்திரம் வழங்குத லும் அவ்வாறுதான், எமது ஆட்சிக் காலத்தில் இது காணி உறுதிப் பத்திரம் வழங்கும் ஒன்பதாவது வைபவமாகும். இதனால் ஆயிரக் கணக்கானோர் நன்மையடைகின் றனர்.

நாம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினாலும் அக்காணிகள் பிர யோசனப்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. நாம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெ ழுப்புவதன் அடுத்த கட்டமாக குடும்ப பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்பும் வேலைத் திட்ட மொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பத்து இலட்சம் வீடு களை இலக்காகக் கொண்டு இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தத்தமது காணிகளில் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி குடும் பத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் வகையில் அவற்றைப் பயன்படு த்துதல் அவசியம். நாம் சுப்பர் மார்க்கட்டுகளில் போய் மரக்கறி வாங்குபவர்களாக இருக்கக் கூடாது. நாமே பயிர்செய்து பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

இது குடும்பப் பொருளாதாரத் துக்கு மட்டுமன்றி நாட்டின் பொரு ளாதாரத்திற்கும் செய்யக் கூடிய பங்களிப்பாகிறது. ‘திவி நெகும’ திட்டத்தின் பங்காளிகளாக சகலரும் மாற வேண்டும்.

இன்று இந்தக் காணி உறுதிப் படுத்திரம் வழங்கும் வைபவத்தில் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்தும் பெருமளவு மக்கள் அலரி மாளிகைக்கு வருகை தந்துள் ளனர். அவர்களை நான் வரவேற்று மகிழ்ச்சியடைகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச நாணய நிதியம் 6வது கொடுப்பனவையும் வழங்கியது

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு உதவும் வகையிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆறாவது மீளாய்வினை வழங்க முன்வந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஆறாவது மீளாய்வாக 218.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. இக்கடனுதவியை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட அடைவுகளை இலங்கை பூர்த்திசெய்திருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி கோஷி மதாய் தெரிவித்தார்.

ஆறாவது மீளாய்வை வழங்குவதற்கான அடைவுகளான வெளிநாட்டு சேமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து அடைவுகளையும் இலங்கை பூர்த்திசெய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் பணவீக்கம் பாரியளவில் இல்லையென்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் நிதிக் கொள்கையும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக இலங்கை அரசாங்கம் வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட செலவீனங்களுக்கு மேலதிகமான செலவீனங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் ஒதுக்கீடுகள் பலமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்தாவது மீளாய்வை அடைவதற்கு விதிக்கப்பட்ட அடைவுகளை இலங்கை சரியான முறையில் பூர்த்திசெய்யப்பட்டி ருக்கவில்லையென வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை ஒப்புதலளிக்கப்பட்டதற்கமைய இதுவரை 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தொகையாகப் பெறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு ஊடாக பயங்கரவாதமற்ற தெற்கு ஆசியா சார்க் நாடுகள் ஒன்றுபட்டால் பயங்கரவாத ஒழிப்பு சாத்தியம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர்


சார்க் நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றம், நெருக்கமான ஒத்துழைப்புக்கள் ஊடாக பயங்கரவாதம் அற்ற தெற்காசியாவை உருவாக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சார்க் பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டும், உறுதியுடனும் செயற்படுவதன் மூலம் தெற்காசியாவிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சார்க் நாடுகளின் பொலிஸ் மா அதிபர்களது மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்றது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விசேட உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

‘பொலிஸ் விவகாரங்கள் தொடர்பான ஒன்பதாவது சார்க் மாநாடு’ என்ற தொனிப் பொருளில் பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சார்க் நாடுகளைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் சரியான தகவல்களை பரிமாற்றம் செய்வதையும், நெருக்கமான உறவுகளையும் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் சார்க் பிராந்திய எல்லையில் எந்தவொரு பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதம் சார்ந்த குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடியான வழிகாட்டல், சரியான தலைமைத்துவத்தின் மூலம் இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக முடிப்பதற்கு இலங்கைக்கு முடிந்தது.

நாகரிகமான ஜனநாயகத்தை வெளியில் கொண்டுவர தூய்மையான நோக்குடனும் இறுதி முடிவை காணும் நல்லெண்ணத் துடனும் 2006 புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளை அவர்களது இருப்பை பலப்படுத்துவதற்கான சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த நோக்கத்தை கண்டுபிடித்த அரசுக்கு இராணுவ ரீதியான தீர்வைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. தற்பொழுது பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிய மக்கள் தற்பொழுது சுதந்திரமாக இருக்கின்றனர். ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். அரசியல், பேச்சு, சுதந்திரத்தை அச்சமின்றி வெளியிடக் கூடிய சூழலில் இருக்கின்றனர் என்றார். மிகவும் கடினமான விலை கொடுத்து பெறப்பட்டட இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் சுமுகமான முறையில் அனுபவிக்கின்றதொரு புதிய யுகத்திற்கு இலங்கை சென்றுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதம் அற்ற தெற்காசியாவை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு கொழும்பில் நடைபெறும் இந்த மாநாடு மிகவும் பிரயோசனமாக அமையுமென்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் பொலிஸ் மா அதிபர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...