31 மே, 2010

இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்க நமீதா மறுப்பு


இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

அதன் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அவருக்கு விழாக்குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நமீதா கூறியிருப்பதாவது:

இலங்கை திரைப்பட விழாவுக்காக சில தினங்களுக்கு முன் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். விழாவில் நடனமாடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக பெரும் தொகை தருவதாக கூறினர்.

இலங்கையில் நடைபெறும் அந்த விழா தொடர்பாக தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருக்கும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன்.

திரையுலகில் எனக்கு வாழ்வு கொடுத்தது தமிழர்கள் தான். எனது புகழுக்கு காரணமும் அவர்களே. எனவே, என்னிடம் வேறு யாரும் அறிவுரை கூறும் முன்னர், நானே அந்த விழாவில் பங்குபெற முடியாது என்று பதில் கூறிவிட்டேன்.

வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.

இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

இலங்கையில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையும் ஐநா சபையும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே இலங்கை ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ் திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் அந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

30 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடக்கிறது

.



இலங்கையில் கடந்த 1981-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ராணு வத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது.

எனவே, அங்கு 30 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டது.

எனவே, அடுத்த ஆண்டு (2011) மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வடக்கு மாகாணத்தில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகின.

இதன் மூலம் பெரும் பாலான மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது. தற்போது கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இலங்கையின் மக்கள் தொகை 2 கோடியே 10 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் சடலங்கள் மீட்பு : இன்று மீண்டும் தேடுதல்

கிளிநொச்சி கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களைத் தொடர்ந்து, மேலும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இன்று அந்தச் சுற்று வட்டத்தில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி கணேசபுரத்தில் மீளக் குடியமர்ந்த மக்கள், நேற்று முன்தினம் மலசலக் குழியைத் துப்புரவு செய்த வேளை, அதற்குள் இருந்து பொலித்தீன் பைகளில் சுற்றிய நிலையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 சடலங்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

அங்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலங்களைப் பார்வையிட்டு, மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதற்காக அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படிகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் 5 அல்லது 6 மாத காலத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் நடவடிக்கை வெளிப்படையாக அமைய வேண்டும் : ததேகூ

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் பரிணமித்துள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித்து விட்டு தீர்வுகள் முன்வைக்கப்படுமாயின் அது நியாயத் தன்மையுடையதாக அமையாது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற தன்னிச்சையான தீர்மானங்களும் அது சார்ந்த திட்ட வரைபுகளும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததன் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அது இதுவரையில் நடைபெறாதிருப்பது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"பல வருட காலமாக எதிர்நோக்கப்பட்டும் அரசாங்கங்களினால் இழுத்தடிக்கப்பட்டும் வருகின்ற தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு எனும் விடயம் ஒளிவு மறைவு கொண்டதாக அமையக் கூடாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் முன்வைக்கப்படுகின்ற நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வுகளைத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் மக்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்பாகவும் அது திகழ்கின்றது. இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகும் விடயத்தில் அரசாங்கம் முதலில் எம்மை அழைத்து எமது தரப்பு ஆலோசனைகளையும் உள்வாங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடவோ அல்லது புறக்கணித்து விடவோ அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறான புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்கள் ஆகியவையே தேசிய இனப் பிரச்சினை உருவாவதற்கும் அது இந்த அளவில் உச்சம் பெற்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன. அரசாங்கத்திற்கு இவ்விடயத்தில் கடமையும் பொறுப்பும் இருக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் பகிரங்கமாக கூறி வந்தார். இதே நிலைப்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் தெரிவித்து வந்தார்.

ஆனால் இன்று அந்த அறிவிப்புகளும் நிலைப்பாடுகளும் தடம்புரண்ட நிலையில் காணப்படுவதாகவே இருக்கின்றது.

உறுதி மொழிகளும் நிலைப்பாடுகளும் தீர்வாக அமைந்து விடப்போவதில்லை என்பதையும் அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதன் ஊடாகவே தீர்வுகளுக்கான வழி பிறக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்பது அதன் தற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டி வருகின்றன.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பெதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை. அமைச்சர்கள் கூறுவதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

அது மட்டுல்லாது தீர்வுத் திட்டம் தொடர்பிலான வரைபொன்றை அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் அதனை இந்தியாவிடம் கையளிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் தலையீடுகள், அழுத்தங்களை முழுமையாக ஆதரிக்கின்ற நாம் எமது மக்கள் தொடர்பிலான விடயங்களில் எமது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

ஆகவேதான் எம்மை புறக்கணித்துவிட்டு எட்டப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவுடைத் தன்மை கொண்டதாக அமையாது என்பதையும் ஆரம்பத்திலேயே கூறி வைக்க விரும்புகிறோம்.

எமக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர திணிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் உடன்படப் போவதுமில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் இலங்கை மந்திரியிடம் அமெரிக்கா வற்புறுத்தல்


இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபஹ்சா வுக்கு எதிராக ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதிபர் ராஜபக்சேவை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும் பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி பெய்ரிஸ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலாளர் ராபர்ட் பிளாக் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இலங்கை அரசு போர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பொன்சேகாவுக்கு முறையான உரிமைகளை வழங்கியதாக தெரியவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் இலங்கை அரசு இதை மிக முக்கியமானதாக கருதி செயல்பட வேண்டும், என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதப் பயண எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவித்தல் ஒன்று
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாய் சட்டவிரோதப் பயணம் செய்வதற்கு எதிராக இலங்கை பத்திரிகைகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தல்களை வெளியிட்டு வருகின்றது.

சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பத்திரிகை அறிவித்தல்கள் அமைந்துள்ளன.

இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதை ஆஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது இந்த அறிவித்தல்களில் விளக்கப்பட்டுள்ளது.

"முறையற்ற விதத்தில் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்து உயிரைப் பணயம் வைக்க வேண்டாம், மனிதர்களைக் கடத்துபவர்களினால் தப்பான பாதையில் செல்ல வேண்டாம்." என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பயனற்ற பயணத்திற்காக பணத்தை வீணாக்க வேண்டாம்" என்றும் இந்த அறிவித்தல்களில் ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, பிற நாடொன்றில் தடுத்துவைப்பு, பிற நாடொன்றில் நிர்க்கதியாகுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பெளர்மணி-அமாவாசையில் அதிகரிக்கும் சுறா தாக்குதல்!

பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் தாக்குதலில் 5ல் ஒன்று மத்திய புளோரிடாவில் தான் நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தான் அதிகளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த நாட்களில் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் மீன்களின் இனப்பெருக்க நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் சுறாக்கள் உண்ணும் மீன்களின் நடமாட்டத்துக்கும் சுறாக்களின் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏன் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்ற என்றால், அமெரிக்காவில் அது கோடை காலம் என்பதால், அந்த மாதத்தில் கடற்கரையில் அதிக மக்கள் கூடுவதே காரணம் என்கிறது ஆய்வு.
மேலும் இங்கே தொடர்க...

மாஜி பெண் விடுதலைபுலிகளுக்கு வேலை



கொழும்பு:இலங்கையில் உள்ள பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது.இலங்கையின் பிரபல தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் "த்ரீ ஸ்டார்' பி.லிட்., கொழும்பில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது. புலிகள் அமைப்பில் இருந்த ஏராளமான பெண்கள்,

இறுதிக்கட்ட போர் முடிந்த பின், கைது செய்யப்பட்டனர். இவர்கள், சிறப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலான பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியை முடித்த 1,200 பேருக்கு தான், தற்போது வேலை அளிக்க இந்த தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. முதல்கட்டமாக, 150 பெண்கள் இன்று முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைஇல்லங்களில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்களில் ,வெளியேறாது தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்கும் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெப்படிகொல மாவத்தையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோபூர்வ இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்தல் முடிவடைந்து இருவாரங்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவரும் இதுவரை அங்கிருந்து வெளியேறவில்லை.

இந்த வீடுகளில் தங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.செல்லசாமி மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோர் இம்மாதம் இறுதி வரை அங்கு தங்கியிருக்க அனுமதி கோரியிருந்தனர். வேறு எவரும் அவ்வாறான கோரிக்கைகளை விடுவிக்கவில்லை எனவும் இதன் காரணமாக அரச உடமைகளை கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்து பிஸ்கல் அதிகாரத்தை பயன்படுத்தி வீடுகளை கைப்பற்றவுள்ளதாகவும் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்குச் சென்ற குடும்பஸ்தர் படுகொலை

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் 10 ஆயிரம் ரூபாவிற்காக அடித்து நேற்று மாலை படுகொலை செய்யப்;பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கிளி;நொச்சியைச் சேர்ந்த 56 வயதுடைய சோமசுந்தரம் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிளிநொச்சி திரும்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஆலடிச் சந்தியில் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டிருந்த வேளை மது அருந்துவதற்காக அப் பகுதியில் வந்த இருவரிடம் மதுபானச்சாலை எங்கே என்று கேட்டுள்ளார். மதுபானச்சாலையைக் காட்டுவதாக அழைத்துச் மேற்படி இருவரும் அவரது தலையின் பின்புறமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாவையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சடலம் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள தென்தென்திடல் பிள்ளையார் கோவில் வீதியில் மீட்கப்பட்டது.

சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காவற்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலயம் மக்கள் பிரதிநிதிகளிடம்



இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் விளக்கம்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மக்களின் குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலய நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும். அதுவரை ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாக இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபையே ஆலயத்தை நிர்வகித்து வருமென இந்துசமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் தவறான கருத்தாகுமென இந்து சமய இந்து கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு – யாழ். ஏ-9 பாதையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுறிகண்டியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானின் ஆலய நிர்வாகம் தொடர்பாக தவறான கருத்துக்கள் நிலவி வந்துள்ளன.

உண்மை நிலையை விளக்கும் பொருட்டு இந்து சமய இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவித் துள்ளதாவது கடந்த வருடம் யுத்தம் முடிவுற்ற பின்னர் ஏ-9 பாதை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து ஆரம்பமானவுடன் திருமுறிகண்டி ஆலயத்தை பொதுமக்கள் தரிசித்துச் செல்லவேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் திணைக்களத்துக்கு விடுக் கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவ்வாலயத் துக்கென குருக்கள் ஒருவரை நியமித்து முறையான பூஜைகளை நடத்தும் ஒழுங்கு களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குப் பணிப் புரை வழங்கப்பட்டது.

அதற்கமைவாகவே குருக்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு வழமையான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சூழலை முகாமை செய்து கொள்வதற்காக திணைக்களத்தின் மூலம் முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

இவ்வாலயம் தொடர்பாக திணைக் களத்தில் பேணப்படும் கோவையின் ஆதாரங்களுக்கமைய 1992ஆம் ஆண்டி லிருந்து தலைவர், செயலாளர், பொரு ளாளர் மற்றும் செயற் குழு உறுப்பி னர்கள் அடங்கிய பொதுமக்கள் நிர் வாகம் ஏற்படுத்தப்பட்டு புதிய யாப்பு விதிகள் உருவாக்கப்பட்டு அப்பிரதேச மக்களாலேயே அவ்வாலயம் நிர்வகிக் கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாகவே திணைக்களம் இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபை ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வாலயம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

சட்டபூர்வமாக இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் மிகவும் தவறான கூற்றுக்களாகும். ஆலயத்தின் திருப்பணி வேலைகளுக்கும், சுற்றுச்சூழல் வசதிகளுக்குமாகவே ஆலய வருமானம் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

இப்பிரதேசத்தில் பொதுமக்கள் குடியேற்றம் முழுமைபெறும் போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பிரதிநிதிகளிடம் இவ்வாலய நிர்வாகம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் மிகுதியான ஆலய வருமானம் இப்பிரதேச நலன்புரிப் பணிகளான ஆதரவற்ற சிறுவர் கல்வி, முதியோர் இல்லங்களின் பராமரிப்பு போன்ற வற்றுக்கு மட்டுமே முன்னுரிமை யளித்து செலவிடப்பட திட்டமிடப் பட்டுள்ளது.

இவ்வாலயம் தொடர்பான நிர்வாக ரீதியான தீர்மானங்கள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டே மேற்கொள்ளப் படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

குவைத்திலிருந்து 36 பணிப்பெண்கள் நேற்று நாடு திரும்பினர்

விசா காலாவதி காரணமாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 36 பணிப் பெண்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

நேற்று காலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் சிலர் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக பணியகத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்ற இவர்கள் பல்வேறு காரணங்களினால் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தீர்மானித்துள்ள துடன் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கியுள்ளனர். இந் நிலையில் இவர்களின் விசா காலாவதியாகியுள்ள தெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையினால் இவர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டையில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயங்கள்? இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்கள் ஆராய்வு


இலங்கையில் புதிதாக இரண்டு இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்களை ஸ்தாபிப்பது தொடர்பாக இரு நாடுகளினதும் உயர்மட்டக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்திலும் அம்பாந் தோட்டையிலுமே இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்கள் ஸ்தாபிக்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.

கண்டியில் தற்போது இயங்கி வரும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயத்துக்கு மேலதிகமாகவே யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இவற்றை நிறுவுவது தொடர்பாக இரு நாடுகளிடையிலும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இவ் விடயம் தொடர்பாக ஆராயப்படுமெனவும் எதிர்பார்க்கப்ப டுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

1948 தொலைபேசி ஊடாக இலவச சுகாதார ஆலோசனை


புகையிலைப் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக தொலைபேசி ஊடாக இலவச ஆலோசனை வழங்கும் சேவையொன்று இன்று 31ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கி ன்றது.

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினத்தின் நிமித்தம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற இச்சேவைக்கு நாடு சுதந்திரமடைந்த வருடமான 1948ம் ஆண்டே இலக்கமாக வழங்கப்பட்டிருப் பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

1948 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் புகையிலை பாவனை, புகைப் பிடித்தல் பழக்கவழக்கம் என்பவற்றைத் தவிர்ந்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பழக்கவழக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனைச் சேவையில் உளவள மருத்துவ நிபுணர்களும், பொதுமருத்துவ நிபுணர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற 150 பேருக்கு இன்று நிரந்தர தொழில் நியமனம்

‘தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பு


புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு இரத்மலானையிலுள்ள தங்களது ட்றை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென நேற்று முன்தினம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இது சம்பந்தமாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ. குணசேகர, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தொழில் அமைச்சர் காமினி லொக்குகே உட்பட தொழில்வாய்ப்பு பெறும் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் ஆகக் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ட்றை ஸ்டார் ஆடைத்தொழில் நிறுவனம் நாடளாவிய ரீதியில் 16 ஆடைத் தொழிற்சாலைகளை கொண்டிருப்பதுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையில் அமர்த்தி அவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்கி வருகின்றது
மேலும் இங்கே தொடர்க...

பெளத்தத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுக்கவும் சட்டம்

எதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவையின் கடந்த முறை கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெளத்தம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முன்னணி பெளத்த பிக்குகள் அடங்கிய சங்க சபையொன்றை அமைப்பது தொடர்பாகவும் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலவந்த மத மாற்றத்தை தடுத்தல் மற்றும் பெளத்தம் தொடர்பான புதிய நடைமுறைகள் பற்றி மத வட் டாரங்களிடையிலான கலந்துரை யாடல் நடத்துவது பற்றியும் பிரேரணைகள் முன்வைக்கப்பட வுள்ளன.

மேற்படி சட்டப் பிரேரணைகளுடன் கிராமப்புற விகாரைகளின் உட்கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு நிதி வழங்குதல், விகாரைகளுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் ஆகியவையும் இடம்பெறுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மருந்து தட்டுப்பாடு ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும்




கப்பல்கள், விமானம் மூலம் மருந்துகள் வருகை;ஒரே தலைமையின் கீழ் நடஇ, நடஙஇ


அரசாங்க ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு அடுத்துவரும் ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இனிமேலும் மருந்துப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வாராவாரம் கூடி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர், மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமித்த குழுவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் நிறுவனங்களுக்கிடையில் ஒழுங்கு முறையான தொடர்பாடலும், இணைப்பும் இல்லாததே மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு முக்கியமாகப் பங்களித்ததாக மருந்து பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு சுட்டிக்காட்டி இருந்தது.

இதனடிப்படையில், அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும் (ஙூஙீணீ) அரச மருந்துப் பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனமும் (ஙூஙீசீணீ) ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை துரிதமாக நீக்குவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தடிப்படையில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு பணிப்பாளர் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், திறைசேரியின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய விசேட குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்து இல ங்கைக்குக் கொண்டு வரவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் கட்டம், கட்டமாக கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் இந்திய விநி யோகஸ்தர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப் படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களுக்கு இனிமேல் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்கு தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் தற்போதைய மருந்துப் பொருள் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...