13 டிசம்பர், 2009

பொரஸ்ட கிறீக் தோட்டத்தில் கொள்ளையிட முயன்ற சந்தேகநபர் பொதுமக்களிடம் பிடிபட்டார்


பொரஸ்ட கிறீக் தோட்டத்தில் நேற்று நள்ளிரவு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முற்பட்ட ஒருவரை அத்தோட்டத்து மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

3 பேரடங்கிய கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவு அத்தோட்டத்தில் நுழைந்துள்ளனர். இதனையடுத்து அத்தோட்டத்து மக்கள் சுற்றி வளைத்து கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட சமயம் இருவர் தப்பிச் சென்றுள்ள அதேவேளை ஒருவர் பிடிபட்டுள்ளார்.

இவரை அம்மக்கள் திம்புல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து பொதுமக்களிடம் பிடிபட்ட சந்தேகநபர் தலவாக்கலையைச் சேர்ந்தவர் என்றும், கடந்த ஒரு மாதத்தில் தலவாக்கலையில் இடம்பெற்ற 3 கொள்ளைச் சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.விஜயம்


நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயலத் ஜெயவர்த்தன, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து தமது முதல் விஜயத்தை நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பித்தனர். தொடர்ந்து ஆரியகுளம் நாகவிகாரையை தரிசித்த இக்குழுவினர் ஆரியகுளத்தில் உள்ள புதிய உயர் கல்லூரி மாணவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகத்தினைச் சந்தித்த இக்குழுவினர் யாழ்ப்பாணத்தின் நிலமைகள் பற்றியும், எவ்வகையான செயற்பாடுகளை செய்யவேண்டும் எனவும் கேட்டு அறிந்தனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இக்குழுவினர் அங்கு துணைவேந்தர் இல்லாததால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சி.இளங்குமரன் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களுடனான சந்திப்பினை மேற்கொண்டனர். அங்கு பல்கலைக்கழக மாணவர்களினால் விடுக்கப்பட்ட கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவும், மனோ கணேசனும் விளக்கமளித்தனர்.

முக்கியமாக தேர்தலில் அன்னப்பறவை சின்னத்திற்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கும்? என்ற கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்பட்டது. இது குறித்து மனோ கணேசன் பதிலளிக்கையில்,"யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வு என்பது கிடைக்கப் போவது இல்லை, இருந்தும் தற்போதுள்ள தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே அன்னப்பறவைக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் விசாரணைக்குட்படுத்த வேண்டியவர்களை விசாரணை செய்தும், மற்றவர்களையும் விடுவித்தல், அவர்களுக்கான புனர்வாழ்வு அழிக்கப்படுதல்,

காணமற்போனோர், மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல், உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுதல், தொழிற்சாலைகள் உருவாக்கப்படல், 2 இலட்சம் வேலை வாய்ப்புக்களை யாழ்ப்பாணத்தில் வழங்கல், கல்வித் துறையை நவீனமயப்படுத்தல் குறிப்பாக உயர் கல்விகள், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்க வைத்தல், ஏ-9 பாதையினை 24 மணிநேரப் பயன்பாட்டிற்குரியதாக்கல், மற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுதல் போன்ற தேர்தல் உறுதி மொழிகள் யாழ்ப்பாண மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் உள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கும், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கும், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திற்கும் விஜயங்களை மேற்கொண்டார். வணிகர் கழகத்தில் யாழ்ப்பாண வணிகர்களின் ஏ-9 பாதையூடான போக்குவரத்தை சுதந்திரமாக்கல், மற்றும் வணிகள்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்
மேலும் இங்கே தொடர்க...
மட்டக்களப்பு-மன்னார் பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்



மன்னாரிற்கும் இடையிலான நேரடி இ.போ.ச. பஸ் சேவை 3 வருடங்களின் பினனர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச டிப்போக்கள் இணைந்து தினசரி இவ் பஸ் சேவையை நடத்தி வந்தன.

மதவாச்சி சோதனைச் சாவடி ஊடாக போக்குவரத்து செய்வது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட இ.போ.ச. பஸ் சேவை இடைநிறுத்தப்டப்டிருந்தது.

தற்போது அக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
மையோன் முஸ்தபா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானம்


உயர் கல்வித் துறை பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான இவர் ,அக்கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்து பிரதி உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகின்றார்..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இன்று தனது மாவட்டத்திலுள்ள ஆதரவாளர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை பெறவிருக்கின்றார்..

அவரது சாய்ந்தமருது இல்லத்தில் இது தொடர்பான சந்திபொன்று நடைபெறவிருப்பதாகவும் ,இச்சந்திப்பின் போது தனது இன்றைய நிலைப்பாடு குறித்து மையோன் முஸ்தபா விளக்கமளிப்பார் என்றும் தெரியவருகின்றது..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என எடுத்துள்ள தீர்மானத்தின் பேரில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக தனது பிரதி அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்..

தனக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தன்னால் சேவையாற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்
மேலும் இங்கே தொடர்க...
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் பொட்டம்மானின் மரணத்தை இலங்கை, இந்தியாவிடம் உறுதி செய்துள்ளது

Poddu_Amman2.jpg
Saturday, 12 December 2009, ,
தமிழீழ
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானும் மரணமடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளது
இந்த உறுதிப்படுத்தல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று திரும்பிய ஜனாதிபதியின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு முடிவுறுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பிரபாகரனினதும் பொட்டு அம்மானினதும் மரணங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை இலங்கையிடம் இந்தியா கோரியிருந்தது. இந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் மற்றும் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கடந்த மே மாதத்தில் இலங்கை வந்திருந்த போது கோரியிருந்தனர்.

இதேவேளை குறித்த இருவரினதும் மரணங்களை உறுதிப்படுத்திய சான்றிதழ்கள் தமிழக பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணையை முடிவுறுத்தமுடியும் என இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் 26 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...