9 டிசம்பர், 2010

மக்கள் தற்போதுதான் நிறைய துன்பங்களை அனுபவிக்கின்றனர்: சிறிதரன்

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களை விட தற்போது தான் அதிக துன்பங்களை அனுபவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால மற்றும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையற்றிய அவர்,

"கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தை விட தற்போது தான் மக்கள் அதிகளவு துன்பங்களை எதிர்கொள்கின்றனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைகள் இராணுவ ஸ்தலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்ச் சமூகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. மேலும் சனல் 4 தொலைக்காட்சியில் பல தமிழ் யுவதிகள் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதுவே ஒரு சிங்கள சமூகத்தில் நடைபெற்றிருக்குமாயின் நீங்கள் பொறுத்துக் கொண்டு இருப்பீர்களா?

தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமான வட, கிழக்கில் அரசில் தீர்வு இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மேலும் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பினரால் எதிர் கட்சிகளின் கருத்துக்கு ஆதரவு வழங்குவது இல்லை. சத்தம், கூச்சல் போட்டு சபை நடவடிக்கைகளைக் குழப்புகின்றனர். இது ஜனநாயகத்திற்குப் பொறுத்தமற்றதொரு செயலாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு ஆதரவாக மட்டக்களப்பில் பாரிய பேரணி

இங்கிலாந்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கெதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட்டில் உரைநிகழ்த்த தடுத்தமை ஆகிய வற்றை கண்டித்து மட்டக்களப்பு நகரில் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெருமளவிலான பெண்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது.

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிளைகள் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக மாறி திருமலைவீதியூடாக சென்று மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகத்திற்கு சென்று லண்டன் தூதுவரிடம் கையளிப்பதற்கான மகஜர் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்ட்டது.
மேலும் இங்கே தொடர்க...

நாளை கோட்டையில் காணாமல் போனவர்களின் விபரம் கோரி ஆர்ப்பாட்டம்



நாளை நண்பகல் 12 மணியளவில் கோட்டை ரயில் நிலையம் முன்பு காணாமல் போனவர்களைத்தேடி அலையும் குழுவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் விபரங்களை வெளியிடக்கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ் கட்சிகள் அரங்கம் சனிக்கிழமை சந்திப்பு

தமிழ்க் கட்சி அரங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இதனை அறிவித்தாகவும் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குருபரன் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் 50 இலங்கையர்கள் கைது

தாய்லாந்தில் ஐம்பது இலங்கையர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 50 பேரில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இருக்கலாம் என்றும் தாய்லாந்துப் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பெங்கொக் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தனர். இலங்கையிலிருந்து கிடைத்த தகவலொன்றையடுத்தே குறித்த பிரதேசம் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஐம்பது பேரும் சட்ட விரோதமாக தாய்லாந்தில் தங்கியிருந்துள்ளதுடன், வாடகை அறைகளில் ஒழிந்து கொண்டு வசித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவுப் பணியகத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

உடுவிலில் காணாமல் போன இரு மாணவர்கள் யாழ். நகரில் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், உடுவிலில் பகுதியில் காணாமல் போன சிறுவர்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த ஜெயக்குமார் சிந்துஜன் (வயது 12) , ஞானசேகரம் நியந்தன் (வயது 12) ஆகிய இருவருமே மீட்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் யாழ். இணுவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் எனவும் கடந்த 6 ஆம் திகதி தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற போது காணாமற் போனவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் மாணவர்களின் பெற்றோர் முறைப்பாடு செய்ததுடன் ஊடகங்களில் விளம்பரமும் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை யாழ். பஸ் நிலையத்திற்கு பஸ்ஸில் வந்திருந்த இம் மாணவர்கள் இருவரையும் யாழ். பஸ் நிலைய பகுதியில் அமைந்த தேனீர்க் கடை உரிமையாளர்கள் இனங்கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

யாழ். பொலிஸார் இருவரையும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சுன்னாகம் பொலிஸாரின் விசாரணையைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தேசத்துரோக குற்றம் செய்திருந்தால் என்னையும் ஜயலத்தையும் கைது செய்யுங்கள்: விக்கிரமபாகு

நாட்டுக்கு எதிராக தேசத்துரோக குற்றம் செய்திருந்தால் என்னையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனாவையும் கைது செய்யுமாறு சவால் விடுக்கின்றேன் என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமாபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு 02 இல் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

தனிப்பட்ட அழைப்பின்பேரில் லண்டனுக்கு சென்றிருந்தேன். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வமற்ற விஜயமொன்றை மேற்கொண்டு லண்டன் வந்திருந்தார். ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 லட்சம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அரசாங்கம் தனது முட்டாள் தனத்தை மறைத்துக்கொள்ள என் மீதும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மீதும் பழி சுமத்துகின்றது. நாங்கள் ஏதேனும் தேசத்துரோக செயலில் ஈடுபட்டிருந்தால் எம் மீது வழக்குத் தொடரமுடியும்.
மேலும் இங்கே தொடர்க...

இரத்தினபுரியில் தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம்



இரத்தினபுரி ரக்வானை வீதி மாதம்பையில் தனியார் பஸ் சாரதி ஒருவரை தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த சாரதியொருவர் கொலன்னாவை - கொழும்பு தனியார் பஸ் சாரதியை தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இரத்தினபுரியில் இன்று காலை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் டக்ளஸ் குற்றவாளியல்லர் :சென்னை நீதிமன்றம் தீர்ப்பு


இந்தியாவால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி அல்லர் என்று சென்னை மேல்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞன் சென்னையில் 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கீழ்நிலை நீதிமன்றம் ஒன்றால் தேடப்படும் குற்றவாளியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு எதிராக இவர் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பிடியாணை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என கீழ்நிலை நீதிமன்றத்திடம் தேவானந்தா கோர வேண்டும் என தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவானந்தா கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் டில்லி வந்திருந்தபோது இப்பிடியாணை உத்தரவால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்தே மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தந்தை கொலை, மகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம்: ராகமையில் சம்பவம்

வீட்டில் தங்கிருந்த தந்தையை கொலை செய்து விட்டு மகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று ராகமையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

யன்னலை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த மூவர் அடங்கிய குழு வீட்டில் தங்கியிருந்த 68 வயதுடைய தந்தையை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற இரு யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அவசர கால சட்டம் 130 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 130 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஜே. வி. பி. யும் ஐ. தே. க. வும் எதிராக வாக்களித்தன.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்துடன் அவசர காலச் சட்ட பிரேரணை மீதான விவாதமும் ஒன்றாக நடைபெற்றன.

பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டம் மீதான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார். எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போர்க்குற்றம் தொடர்பாக கரு ஜயசூரியவின் பேட்டி சபையில் சர்ச்சை; கூச்சல் குழப்பம்: சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு






போர்க்குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.தே.க எம்.பி. கரு ஜயசூரிய ஆங்கில பத்திரிகையொன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்றும் பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

கரு ஜயசூரிய எம்.பி. தெரிவித்துள்ள கருத்து பற்றி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விசேட விளக்கமொன்றை சபா நாயகரின் அனுமதியுடன் சபையில் தெரிவித்தார். இந்த விளக்கத்தின்போது தனது பெயர் குறிப்பிடப்பட்டதால் தானும் விளக்கமளிக்க வேண்டியவனாக இருக்கின்றேன் எனக் கூறி சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.

இச்சமயத்திற் கருத்துத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயலத் ஜயவர்தன எம்.பி. மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் முயற்சியின் அடிப்படையிலேயே கரு ஜயசூரிய எம்.பி. இக்கருத்தை வெளியிட்டுள்ளார் எனக் கூறியதுடன் அரசின் மீது அவதூறுகளை சுமத்தினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தனர். கூச்சலுக்கு மத்தியில் கரு ஜயசூரிய எம்.பி.யும் தனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரியபடி எழுந்து நின்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

உறுப்பினர்களை ஆசனங்களில் அமருமா றும், அமைதியாக இருக்குமாறும் பலமுறை சபாநாயகர் அறிவுறுத்தல் வழங்கினார். சபையில் தொடர்ந்தும் குழப்பநிலை ஏற்பட்டதால் சபையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். காலை 10.35 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் காலை 10.55 க்கு ஆரம்பமானது. கரு ஜயசூரிய எம்.பி. தனது விளக்கத்தை அளிப்பதற்காக எழுந்து நின்றார். அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் எழுந்து நின்று கூச்சலிட்டவாறே இருந்தார்.

மிக முக்கியமான விடயங்கள் இன்றைய விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் பலமுறை மேர்வின் சில்வாவை அமைதியாக இருக்குமாறு பணித்தார். அவர் தொடர்ந்தும் எழுந்து நின்றவாறு பேசிக்கொண்டிருந்தார். நீங்கள் அமரவில்லையா நான் இன்று முழு நாளும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டுச் சென்று விடுவேன் என சபாநாயகர் கூறினார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் மேர்வின் சில்வாவை அமரச் செய்தனர். இதன் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. கரு ஜயசூரிய தனது விளக்கத்தை தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2,500 மெ. தொ. கோழி இறைச்சி, 50 மில். முட்டைகள் உடன் இறக்குமதி





பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் விதத்தில் 2500 மெற்றிக் தொன் கோழி இறைச்சியும் 50 மில்லியன் முட்டைகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என கூட்டுறவு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாகவோ குறைவாகவோ விற்கப்படமாட்டாது. சந்தையில் கோழி இறைச்சியின் கட்டுப்பாட்டு விலையாக 350 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்ற த்தில் கேட்ட வாய் மொழி மூல விடை க்கான கேள்வியொன் றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித் தார்.

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான கோழி இறைச்சியை சந்தையில் 350 ரூபாவுக்கு விற்கப்படும். பண்டிகை காலத்தில் இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு 11,000 மெற்றிக் தொன் கோழி இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 8750 மெற்றிக் தொன் இறைச்சி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. பண்டிகை காலமொன்று வரும்போது இவ்வாறு விலை அதிகரிப்பது இயற்கையே. எனினும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படாத விதத்தில் கட்டுப்பாட்டு விலையை விட குறைவாக விற்பதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளோம் என்றார்.

அத்துடன் உள்ளூரில் தயாரிக்கப்படுகின்ற சொசேஜஸ் வகைகளுக்கான கோழி இறைச்சியும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சோசேஜஸ் வகைக்காக மனித பாவனைக்கு உகந்ததென அங்கீகரிக்கப்பட்ட கோழி உள்ளுறுப்புகள் இறக்குமதி செய்யப் படுகின்றன.

இவை கோழி இறைச்சி என்றே குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், சீனா,ஜேர்மன் போன்ற நாடுகளிலிருந்து சொசேஜஸ் உற்பத்தி நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்கின்றன. 2006 ஆம் ஆண்டு 3,90,322 கிலோ இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. இதனைத் தொடர்ந்து கேள்வி நேரம் ஆரம்பமானபோதே தயாசிறி ஜயசேகர இக்கேள்வியை கேட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி, களுத்துறை, காலி, மாத்தளை, கேகாலை: மலைசார்ந்த பிரதேசங்களில் மண்சரிவு அபாயம்; எச்சரிக்கை


அடை மழை பெய்து வருவதால் மலை சார்ந்த பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப் பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இதன் காரணத்தினால் கண்டி, களுத்துறை, மாத்தளை, காலி, கேகாலை ஆகிய மாவட்டங்களின் மலை சார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, கடந்த இரு வாரங்களில் கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 61 மண் சரிவுகள் பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார். இது இவ்வாறிருக்க, கண்டி மாவட்டத்தில் 90 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 40 வீடுகளும், மாத்தளை மாவட்டத்தில் ஒரு வீடுமென 131 வீடுகள் மண்சரிவு ஆபத்து மிக்க பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தில் ஓரளவு மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் 30 வீடுகளும் அமைந்துள்ளன.

இவ்வீடுகளில் வாழ்பவர்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிபாரிசுகளை அந்தந்த பிரதேச செயலகங் களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை விரிவுபடுத்த திட்டம்

தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் இலங்கையினுள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றனர். சர்வதேச ஒத்துழைப்புடன் உள்நாட்டில் புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பும் முயற்சியை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேசிய பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதமும் இடம் பெற்றது.

பிரதமர் மேலும் கூறியதாவது:- தனது முதலாவது பதவிக் காலத்தில் யுத்தத்தை வெற்றி கொண்ட ஜனாதிபதி தற்பொழுது தனது இரண்டாவது பதவிக் காலத்தில் பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்ளும் சவாலை ஏற்றுள்ளார்.

5 துறைகளில் நாட்டை அபிவிருத்தி செய்ய மஹிந்த சிந்தனை திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முடிவு கட்டியுள்ள நிலையில் பிரதான நாடுகள் இலங்கை குறித்து கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. இதனூடாக நமது நாட்டுக்கு நன்மையான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை பொறுக்காத தேசத்துரோக சக்திகள் உலகின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ளன. கடந்த மாதத்தில் புலிகளின் சர்வதேச மட்ட செயற்பாடுகள் அதிகரித்திருந்தது. ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தை தடுக்க புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புலிகளின் செயற்பாடு அரிகரித்து வருகிற போதும் சில மேலைத்தேய நாடுகள் இன்னும் தமது போக்கை மாற்றிக் கொள்ளாதுள்ளன. அவை இலங்கை தொடர்பில் குரோதத்துடன் நடந்து கொள்கின்றன. அத்தகைய நாடுகளுடன் பேச அவற்றின் போக்கை மாற்ற வேண்டியுள்ளது.

புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படாத போதும் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. 50 ற்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்து வதில்லை என உறுதியாக கூறியுள்ளனர்.

இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளதாக செனல் – 4 தொலைக் காட்சி மீண்டும் குற்றஞ்சாட்டி யுள்ளது. இந்த குற்றச்சாட்டினால் சர்வதேச மட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கு, கொழும்பு நகரப் பகுதியில் புலிகளும், ஆயுதங்களும் தொடர்ந்து பிடிபடுவது தொடர்ந்து இடம்பெறுகிறது.

வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கையினுள் தமது செயற்பாடுகளை பரப்ப திட்டமிட்டு வருவது அவர்களின் செயற்பாடுகள் மூலம் தெளிவாகிறது. அதனால், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டில் புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பு வதைத் தடுக்க உடனடியாக செயற்பட வேண்டியுள்ளது.

வவுனியாவிலுள்ள இடம் பெயர்ந்தோருக் கான முகாம்களில் இருந்து கைதான 4 புலி பயங்கரவாதிகளிடமிருந்து பெற்ற தகவல்களின்படி, கிளிநொச்சியில் அமைக் கப்பட்டிருந்த வதை முகாமில் சுட்டுக் கொலை செய்து எரிக்கப்பட்ட 60 படை யினரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

தலைமறைவாக உள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களை மீள இணைத்து செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கவும், நிதி உதவி வழங்கி ஆயுத போராட்டங்களில் ஈடுபடுத்தவும் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் முயல்வது தெரிய வந்துள்ளது. இது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள். நான் பல தடவை அங்கு சென்று வந்துள்ளேன். அவர்களுடன் உரையாடியுள்ளேன். உதவிகளும் வழங்கியிருக்கிறேன். தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றியது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச ரீதியிலும் புகழ் பெறும் வகையில் மஹிந்த சிந்தனையே அரசாங்கத்தின் கொள்கை






தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் புகழ்பெறக் கூடிய வகையில் மாணவர்கள் தமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே தமது பேரவா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள் ளார்.

நேற்றைய தினம் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற 2011 ம் ஆண்டிற்கான பாட நூல் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் கொழும்பிலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியதுடன் அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

பிள்ளைகளே! நீங்கள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் பாடசாலை நூல்கள் உங்களுக்கான பெரும் வரப்பிரசாதமாகும். உலகிலேயே கொள்ளையிட முடியாத சொத்து அறிவும் கல்வியும் மட்டுமே. ஆதலால் நீங்கள் சிறப்பாகக் கற்க வேண்டும்.

எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்கள் புகழ் ஓங்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் பெற் றோர்களை மறந்துவிடக் கூடாது. உங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்க ளையும் மறக்கக் கூடாது.

அதே போன்று தாய் நாட்டையும் மறந்து விடக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். உங் கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர் காலம் உருவாகட்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புலம் பெயர்ந்தோரை பலிக்கடாவாக்குகிறது பிரிட்டிடி; அரசு






பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்க ளென்பது, ஜனாதிபதிக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் புலனாகுவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கான முழுப் பொறுப்பையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்க வேண்டுமென்றும் பிரதியமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டிருந்தால், ஜனாதிபதி உரையாற்றித் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்க முடியுமென்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி சேவையின் நடப்பு விவகாரப் பிரிவினரால் தயாரித்து வழங்கப்படும் ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்து ள்ளார். அவர் மேலும் கூறு கையில்,

‘ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் முற்றிலும் தனியாருக்குச் சொந்தமானது அல்ல. 40% -50% அரசு மானியத்தில் இயங்குகிறது. எனவே, ஆர்ப்பாட்டம், நடந்துவிட்டது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறிச் சமாளிக்க முடியாது. இது தாக்கத்தை மட்டுமல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

ஏகாதிபத்திய அரசுகள் காலா காலமாக எவ்வாறு பிரச்சினைகளை உருவாக்கினார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது. ஆகவே, ஆளுங்கட்சி எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பார்க்கவேண்டும்.

மேற்கத்திய சமூகம் தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கியுள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் இந்தத் தருணத்தில், ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். வன்முறைகளில் மீண்டும் ஈடுபட முடியாது. மேற்கத்தைய சமூகம் தமிழ் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டன் சென்றபோது புலம்பெயர் சமூகத்தினரைச் சந்திக்கச் செய்திருக்கலாம். ஜனாதிபதி வெளிப்படையான மனதுடன் செயற்படுபவர். பிரிட்டிஷ் அரசின் அனுமதி இல்லாமல் வன்முறையில் ஈடுபட முடியாது. இதனை அரசு நினைத்தால் தடுத்திருக்கலாம்.

நாட்டின் தலைவர் வரும்போது அவமதிப்பதை ஏற்க முடியாது. வெளிநாட்டிலிருந்து எவராது பிரமுகர், அமைச்சர் வந்தால், அவர்களை அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்று விருந்தளிப்பவர் ஜனாதிபதி. அப்படியான ஒருவர் வந்தபோது பிரிட்டிஷ் அரசு பொறுப்பேற்றிருக்க வேண்டும். இலங்கை வாழ் மக்கள் இனியாவது ஒன்றுபட்டுச் செயற்படுவார்களென்று வேண்டுகோள் விடுக்கின்றேன். இலங்கை வாழ் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகப் புலம்பெயர் தமிழர்கள் செயற்படுகிறார்கள் என்று கூறுவே முடியாது.

தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவாகி பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்கள். அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவோ வேறு யாராகவோ இருக்கலாம். அவர்களுக்குத் தான் அந்தக் கடப்பாடு உண்டு. புலம்பெயர்ந்த சிலர் மீண்டும் வன்முறையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். நாடு கடந்த அரசு, பிரதமர் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதனால், பாதிப்பும் தாக்கமும் இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தான்.

இலங்கை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் தங்கியிருக்க வேண்டுமென அந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. எனினும், இலங்கை தனித்துவமான தந்திரோபாய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கின்றது. இலங்கை பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், புலம்பெயர்ந்தவர்களை மேற்குலகம் தூண்டிவிடுகின்றது.

தேர்தல் நலனுக்காக எமது மக்களைத் திசை திருப்புவதற்கு அனுதாபப்படுகிறார்கள். போர்க்குற்றம் வீடியோ எனக் காண்பித்து மக்களைத் தூண்டி விடுகிறார்கள். பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டிய தேவை கிடையாது. இராஜதந்திர நட்பு ரீதியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

இங்குள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சரியான தகவல்களை பிரிட்டனுக்கு வழங்கவில்லை. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென 68% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பாரபட்சமற்ற அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது. இதனை பிரிட்டிஷ் தூதுவர் எடுத்துக் கூறவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது சாதகமான மாற்றமொன்றை அறிவித்திருக்கிறது. இவ்வாறான தமிழ் அரசியல் கட்சிகளின் மாற்றத்தை புலம்பெயர் தமிழர்கள் பின்பற்றவேண்டும்.

எதிர்க் கட்சி தவறான பிரசாரத்தை வெளிநாடுகளில் மேற்கொள்ளக்கூடாது. இதற்குத் தமிழ் மக்கள் ஆளாகிவிடக்கூடாது. ஐ.தே. கட்சி தமிழ் மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பாராளுமன்ற விவாதங்களில் உரையாற்றுகிறது. தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பதைப்போல் காட்டிக்கொள்கிறது.

ற்போதைய வளர்ச்சியில் தமிழ் மக்களும் பங்காளர்களாக மாறவேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்து அனுப்புகள் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...