4 ஜனவரி, 2011

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: த.தே.கூ





வடக்கில் சந்திக்கு சந்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த போதிலும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய நிலையில் அங்கு இராணுவம் நிலைகொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. எனவே அப்பிரதேசங்களில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாத காலமாக வடக்கு வாழ் மக்களின் பொது வாழ்விற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பிரேரணையினை முன் வைக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில் : யுத்தம் முடிவடைந்து சிவில் நிர்வாகம் வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது. இப்பிரதேசங்களில் இன்றும் ஏராளமாக பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு எதிராக அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த இரண்டு மாத காலமாக வடக்கில் மிகவும் மோசமான முறையில் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் வடக்கில் ஏதோ ஒரு மூலையில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் இதுவரையில் எந்தவொரு குற்றவாளியையும் பொலிசாரோ இராணுவத்தினரோ கைது செய்து செய்யவில்லை . ஒரு கொலை சம்பவத்தில் மாத்திரம் இருவரை சந்கேத்தில் பேரில் கைது செய்துள்ளதாக அறிய வந்துள்ளது.

ஏனைய பாரிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மானிப்பாய் பிரதேசத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்னை கத்தியால் குத்திவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதற்கு முன்னர் வடமராட்சி பகுதியில் 48 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயொருவர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டுள்ளார். இதேபோன்று இன்னோரன்ன கடத்தல், கொலை மற்றும் கொள்ளை என பல்வேறு சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

ஆனால் படைத்தரப்பினரோ அரசாங்கத் தரப்பினரோ மேற்படி சம்பவங்களை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமாக செயற்படுகின்றனரா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் வடக்கில் ஒவ்வொரு சந்தியிலும் இராணுவ முகாம்களும் பொலிஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாரிய பாதுகாப்பு நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறானதெக்ஷிரு சூழலிலும் கடத்தல் கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றால் வேடிக்கையாக இருப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவிக்கின்றன.

எனவே அரசாங்கம் உடனடியாக வடக்கில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பில் பதில் கூற வேண்டும். இதனை கட்டுப்படுத்த இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் இன்று பெரும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் கோரவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் போது காயமடைந்தவர்களில் 4,209 பேர் அழைத்துவரப்பட்டனர்: ஆணைக்குழு முன் டாக்டர் சாட்சியம்

யுத்தத்தின்போது காயமடைந்த 3,021 பேர் கப்பல்களில் புல்மோட்டை ஊடாக பதவியா வைத்தியசாலையை வந்தடைந்தனர். அவர்களுடன் உதவியாளர்களாக 3,660 பேரும் வந்திருந்தனர். மேலும் தரை மார்க்கமாகவும் 1,188 நோயாளர்கள் வந்திருந்தனர். நோயாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்வீச்சுக்களிலேயே காயமடைந்திருந்தனர். பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாங்கள் அவர்களுக்கு அக்காலத்தில் சிகிச்சையளித்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா வைத்தியசாலையில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் மஹிந்த உயன்கொட தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தேங்காய் இறக்குமதி நிறுத்தம்

இந்திய கேரள மாநிலத்திலிருந்து தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும், அந்த இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நாட்டில் நிலவிய தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையிலும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலுமேயே தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்திருந்தது.

இந்நிலையில், தாவர உற்பத்திச் சட்டத்தின் பிரகாரம் தேங்காயை இறக்குமதி செய்யமுடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியதை அடுத்தே இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தின் பிரகாரம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள தெங்கு ஆராய்ச்சி சபை, விவசாயத் திணைக்களப் பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமைவாக பொருட்களை இறக்குமதி செய்யாலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஆயுதமுனையில் இளம் பெண்ணிடம் தாலிக்கொடி உட்பட நகைகள் திருட்டு: கிளிநொச்சியில் சம்பவம்

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது போல் வன்னியிலும்ஆயுதமுனையில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிளிநொச்சி நகருக்கு மிகச் சமீபமாகவுள்ள கனகபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் இரவு வேளை ஆயுதமுனையில் இளம் குடும்பப் பெண்ணின் தாலிக்கொடி உட்பட மேலும் பல நகைகள் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை இத் தெருவிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை இரவுவேளை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கிளிநொச்சி கணேசபுரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் நகை, பணம், பொருட்கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை, தண்ணிரூற்று, முள்ளியவளைப் பகுதிகளிலும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கொழும்பு லோட்டஸ் தொழிற்சாலையிலேயே இன்று காலை 6.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீ கட்டுப்பாட்டு பிரிவினரால் தீ கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

முட்டுக்கட்டைகளை ஜனாதிபதி நீக்கியதனாலேயே நாளை பற்றி நாம் நம்பிக்கை கொள்ள முடிகிறது

எமது எதிர்கால அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருந்த அனைத்து தடைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீக்கியதன் காரணமாகவே நாம் நாளை பற்றி பேசவும் எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொள்ளவும் முடிகிறது என்று ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று கூறினார்.

புது வருடத்தில் வேலையை ஆரம்பிக்கும் நல்லநேரத்தை முன்னிட்டு ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சு ஊழியர்களிடையே தொடர்ந்து பேசிய அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது :-

மேற்குலக நாடுகள் பல நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் சீனா மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளுடன் இலங்கையும் ஆசியாவின் புதுமை மிக்க நாடாக மாறும் இலக்கை அடைய நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு எமது அர்ப்பணிப்பு அத்தியாவசியமான ஒன்றாகும்.

முன்னைய அரசாங்கத்தில் உலக வங்கி, சர்வதேச நாணய சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு சுமையாகக் கருதப்பட்டனர். அவர்கள் கட்டாய லீவில் அனுப்பப் பட்டதுடன் புதிதாக ஊழியர்களை சேர்ப் பதும் குறைத்துக் கொள்ளப்பட்டது.

எனினும் ஜனாதிபதி அவர்களும் இந்த அரசாங்கமும் அதற்கு மாறாக அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான நம்பிக்கையை வைத்துள்ளதுடன் அரசாங்க சேவையை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்துள்ளதுடன் பல சலுகைகளையும் வழங்கியுள்ளனர்.

தேர்தல்கள் ஜனநாயக சமூகமொன்றில் மக்கள் அபிப்பிராயத்தை அளக்கும் முறையாக கருதப்படுகிறது. ஜனநாயக சமூகமொன்றில் பெரும்பாலானோரின் கருத்துக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு வரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

இந்த அபிவிருத்தி யுகத்தில் அரசாங்க ஊழியர்கள் நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்புகள் உள்ளன. இலங்கையை ஆசியாவின் புதுமை நாடாக மாற்றும் நோக்கத்தை நடைமுறைப்படுத்த அர சாங்கத்துக்கு அவர்கள் உதவ வேண்டும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப் பிட்டார்.

அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகல அங்கு உரையாற்றுகையில் :

இலங்கையை ஆசியாவின் புதுமை நாடாக மாற்றும் நோக்கத்தை எட்டுவதற்கான அடிப்படையை அரசாங்கம், மொத்த உள்ளூர் உற்பத்தியை 8 சதவீதமாக அதிகரித் துள்ளதுடன் பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்ததன் மூலம் ஏற்படுத்தி யுள்ளது. அத்துடன் உலக வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் பாராட்டுக்கும் அரசாங்கம் உரித்தாகியுள்ளது என்று குறிப்பிட்டார். அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே. டபிள்யூ. டி. என். அமர துங்கவும் அங்கு உரையாற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...

மனித நேயத்துடன் சேவை அரச ஊழியர்கள் புத்தாண்டு உறுதிமொழி



புத்தாண்டு பிறந்ததையடுத்து முதன் முதலில் அரச அலுவலகங்களில் பணிகளை நேற்று ஆரம்பித்த அரசாங்க ஊழியர்கள் ‘மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவோம்’ என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

புத்தாண்டில் முதற் பணிகளை ஆரம்பிக்கும் பிரதான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நடைபெற்றதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஊழியர்க ளுக்கு வாழ்த்துக் கூறி அறிவுரைகளையும் வழங்கினார்.

புத்தாண்டில் அரச அலுவலகங்களில் முதற் பணிகளை ஆரம்பிக்கும் வைபவங்கள் அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் உட்பட மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மட்டங்களிலும் நேற்று இடம்பெற்றன. பாற்சோறு மற்றும் சிற்றுண்டி வகைகள் பகிரப்பட்டு மகிழ்ச்சியுடன் இச்செயற் பாடுகள் இடம்பெற்றன. நிறுவனத்தின் தலைவர்கள், பிரதானிகள் முன்னிலையில் ஊழியர்கள் மனித நேயத்துடன் மக்களுக்கு சேவை செய்வதாக உறுதிமொழியெடுத்துக் கொண்டனர்.

தமது பொறுப்புக்களை வினைத்திறமை யுடனும் திடசங்கற்பத்துடனும் பயன்மிக்கதாக நேர்மையாக அர்ப்பணிப்புடன் மக்களுக்கு வழங்குவதாக அவர்கள் உறுதிமொழி யெடுத்தனர்.

வருடாந்தம் இந்த உறுதி மொழி எடுத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனைத்து அரச திணைக்களங்களுக்கும் இம்முறையும் சுற்றுநிருபங்களை அனுப்பிவைத்திருந்தது.

நேற்றுக் காலை 8.55 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய கொடியை மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் தேசிய கொடி யுடன் பொலிஸ் கொடியையும் ஏற்றி இரண்டு நிமிட மெளனம் அனுஷ்டிக் கப்பட்டது.

பாடசாலைகளும் முதலாம் தவணையின் பொருட்டு திறக்கப்பட்ட போது மாண வர்கள் மகிழ்ச்சியுடன் தமது ஆசிரியர் களுக்கும், நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட் டத்தில் உள்ள சகல அரசாங்க அலுவல கங்களிலும் உறுதிப்பாட்டு வைபவங்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸார், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன முன்னிலையில் உறுதிமொழி செய்து கடமைகளை ஆரம்பித்தனர்.

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் விஜயவர்தன, மாவட் டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கித்துள் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை



கித்துள் உற்பத்திப் பொருட்களை ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி. சிவஞானசோதி தெரிவித்தார்.

கித்துள் உற்பத்திப் பொருட்களுக்கென அமெரிக்காவிலிருந்து கேள்விப் பத்திரம் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெரு முயற்சியின் பயனாக கித்துள் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அவற்றை சந்தைப்படுத்துவதற்கு இப்போது வெற்றிகரமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கித்துள் மரத்தில் இருந்து பெறப்படும் கித்துள் பாணி, கருப்பட்டி ஆகியவற்றுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு இருப் பதனால் இதன் மூலம் பெருமளவு அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கித்துள் பாணியையும், கருப்பட்டியையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பாதிப்பு ஏற்படாது என வைத்தியர்கள் தெரிவிக் கின்றனர்.

கித்துள் மாவை பயன்படுத்தி இடியப்பம், பிட்டு போன்ற உணவைத் தயாரிப்பதற்கு உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்ட வர்களும் இப்போது பெரிதும் விருப்பம் காட்டி வருகின்றனர்.

கித்துள் மரத் தயாரிப்புகள் இயற்கையான இனிப்புத் தன்மை இருக்கின்றதனால் அது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு இழைக்காது என்று கூறப்படுகின்றது.

கித்துள் மரத்திலிருந்து நல்ல சுவையான கள்ளையும் பெறக் கூடியதாக இருக்கிறது. இவற்றை பழுதடையாமல் பதனிட்டு போத்தலில் அடைத்தும் சந்தைக்கு அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்பும் இருக்கின்றது.

இந்த உற்பத்தி பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும்.

இலங்கையில் சுமார் 300,000 கித்துள் மரங்கள் இருந்த போதும், அவற்றில் 90,000 மரங்களில் இருந்தே கித்துள் பாணி, கருப்பட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள கித்துள் மரங்களில் 85 சதவீதமான மரங்கள் வர்த்தக ரீதியில் பயன்படாதிருப்பதனால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அமைச்சு கெஸ்பர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கித்துள் மரத்தின் உற்பத்தியை அதிகரிப் பதற்கான நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வர்த்தக அமைச்சின் நேரடி கண்காணிப்பில் தம்புள்ளை பொருளாதார நிலையம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவப் பொறுப்புக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேற்படி பொருளாதார மத்திய நிலை யத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ள ஊழல் மோசடிகளைத் தடுக்கும் வகையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகள் தொடர்பாக வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு விஜயம் செய்த அமைச்சர், அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். இதற்கிணங்க அதன் முகாமைத்துவப் பொறுப்புக்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சர் தீர்மானித் தார்.

வர்த்தகர்கள் மற்றும் பாவனையாளர் களின் நலன் கருதியே இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

தமிழில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை இவ்விரு மாகாணங்களிலும் நியமிக்கும் வகையில் தனியான போட்டிப் பரீட்சைகளை நடத்தி அப்பிரதேசங்களிலிருந்தே அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிர்வாக சேவைக்கான பொது போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு பெரும்பாலானோர் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் வடக்கு கிழக்கு மக்கள் நலன் கருதி தமிழ் மொழியில் பணியாற்றக்கூடியவர்களையே அங்கு நியமிக்க வேண்டுமென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்தை செயற்படுத்தும் வகையில் தமிழில் பணியாற்றக்கூடிய நிர்வாக சேவை அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கென தனிப் போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கிலிருந்தே இவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இப்போட்டிப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய பொங்கல் விழா வடக்கில்

தேசிய பொங்கல் விழா இம்முறை வடமாகாணத்தில் நடைபெறவுள்ளது. தைபொங்கல் வருடா வருடம் தேசிய நிகழ்வாக அரசாங்கத்தினால் கொண்டா டப்படுவது வழக்கமாகும்.

அந்த வரிசையில் வடக்கே யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் இந்த விழாவை கொண்டாடுவது என்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் முடிவு செய்யப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணியில் நாமும் பங்காளிகளாக வேண்டும் லேக்ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார


2011 ஆம் ஆண்டை அபிவிருத்திக்கான வருடமாக ஜனாதிபதி அறிவித்துள்ளதால் நாமும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் முழுமையான பங்காளர்களாக மாறவேண்டும் என லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார நேற்று கூறினார்.

2011 ஆம் ஆண்டின் பாரிய இலக்குகளை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

லேக்ஹவுஸ் நிறுவன 2011 புத்தாண்டு வைபவம் நிறுவன தலைவர் பந்துல பத்மகுமாரவின் தலைமையில் லேக்ஹவுஸில் நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆசிரியர்பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் உபுல் திசாநாயக்க, சட்டப்பிரிவுப் பணிப் பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர, பொது முகாமையாளர் அபய அமரதாஸ, பிரதம நிர்வாக அதிகாரி ரோஹன ஆரிய ரட்ன, முகாமையாளர்கள், பத்திரிகை ஆசி ரியர்கள், நிறுவன உயரதிகாரிகள், உட்பட பெருந்திரளான ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய தலை வர் பந்துல பத்மகுமார, 2011 ஆம் ஆண்டை அபிவிருத்திக்கான வருடமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாமும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்காளிகளாக வேண்டும். பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு முக்கிய பங் களிப்பு வழங்கவும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.

நிறுவன அபிவிருத்தி தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கு எதுவித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. ஆனால் இப்போது ஊழியர்கள் பழைய சம்பிரதாயங்களை விட்டும் ஒதுங்கி நாம் ஆரம்பித்த சகல நற்பணி களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக லேக்ஹவுஸ் நிறுவனம் சென்ற பாதை மாறி நல்ல பாதைக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.

அந்த அடித்தளத்தின் படி 2011 இல் முன்னோக்கி செல்வதற்கு தயாராகியுள்ளோம்.

கடந்த காலத்தில் யுத்தம் முன்னெடுக்கப் பட்ட போது அரசாங்கத்தின் ஒரே ஒரு அச்சு ஊடகமான லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பாடல் பணிகளை முன்னெடுத்தது.

எமது நிறுவனத்தினால் வெளியிடப்படும் பிரதான பத்திரிகைகளுடன் புதிதாக இலவச வெளியீடுகளை வெளியிடவும் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றோம். புதிதாக தமிழ் சஞ்சிகையொன்றையும் ஆரம்பித்துள்ளோம். அதற்கு வடக்கில் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேநேரம் புதிய அச்சு இயந்திர மொன்றை கொள்வனவு செய்வதே எமது பிரதான இலக்காகும். வணிகப்பிரிவு இயந்திரத்தை மேலும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு அமைச்சரவை அனுமதி இருவாரங்களில் கிடைக்கும். வணிக பிரிவின் வருடாந்த வருமானத்தை 500 மில்லியனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

நான் தலைவர் பதவியை ஏற்ற பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பிலும் அதன் ஊழியர்கள் தொடர்பிலும் உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

95 வீதமான லேக்ஹவுஸ் ஊழியர்கள் நிறுவனத்தை நேசிக்கின்றனர். தாம் பெறும் சம்பளத்திற்கு சிறந்த சேவையாற்று கின்றனர்.

2011 ஆம் ஆண்டுக்குரிய பாரிய இலக் குகளை எட்டுவோம். போனஸை அதி கரிக்கவோ, கொடுப்பனவுகளை அதிகரிக் கவோ மாத்திரமல்லாமல் நிறுவனத்தின் எதிர்கால மேம்பாட்டுக்காக அனைவரும் பாடுபடுவோம். லேக்ஹவுஸ் எனும் தேசிய சொத்தை பாதுகாக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...