1 செப்டம்பர், 2010

சீன உயர்மட்டக்குழு இலங்கை வருகை

சீனாவின் 200 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனக்குழுவினரை, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

சீன யுவான் மாகாணத்தின் ஆளுநர் கிவின் குவான் ரொன்னும் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.

சீனாவுக்குக் கடந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீன உயர்மட்டக் குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவை இன்று மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பாதாள உலக கோஷ்டி தலைவர் ஒல்கோட் சுட்டுக்கொலை




பாதாள உலக கோஷ்டி தலைவர் ஒல்கோட் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரிடமிருந்து அவர் தப்பி செல்ல முற்பட்ட வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய அரசின் உதவிகள் இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்படும்:நிருபமா ராவ்

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான மாதிரி வீட்டு வடிவம் முடிவுசெய்யப்பட்டு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் வவுனியாவில் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த நிருபமாராவ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவினர், திருமுறிகண்டி பகுதியில் இன்னும் மீள்குடியேற்றம் செய் யப்படாமல் உள்ள பொதுமக்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரைச் சந்தித்தன் பின்னர் வவுனியா செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதன் பின்பு மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.

அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிருபமாராவ் இந்தியா இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதியின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும் இந்த உதவிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது:

நாங்கள் மனிக்பாம் முகாமுக்குச் சென்று அங்குள்ள பொதுமக்கள் சிலரைச் சந்தித்து அவர்களுடன் பேசினோம். எங்களுடன் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியும் வந்திருநதார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ உயரதிகாரியும் இங்கு இடம்பெறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொர்பான பல தகவல்களைத் தெரிவித்தார்.

சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மனிக்பாம் முகாமில் இப்போது 28 ஆயிரம் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் அவர்களது அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும், வடபகுதியின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் இந்திய அரசாங்கம் உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது.

இந்தியா உறுதியளித்துள்ள 50 ஆயிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி வீட்டு வடிவத்தை இலங்கை அராசங்கத்துடன் இணைந்து இந்தியா முடிவுசெய்துள்ளது. இதேவேளைஇ மதவாச்சியில் இருந்து மன்னார் வரையிலான ரயில் பாதையையும்இ ஓமந்தையில் இருந்து பளை வரையிலான ரயில் பாதையையும் அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இந்தியா வழங்குகின்ற அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும்.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும், திருமுறிகண்டி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்துப் பேசினோம். திருமுறிகண்டி பகுதி மக்கள் தாங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதையே விரும்புவதாக எங்களிடம் கூறினார்கள். இதற்கான உதவிகளைச் செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதையே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கேட்டார்.

திருமுறிகண்டி இந்துபுரம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இடத்திலேயே மீண்டும் வாழ விரும்புவதாகவும், அங்கு பல வான்பயிர்களை வைத்து சிறப்பாக வாழ்ந்து வந்ததாகவும், மீண்டும் அங்கு சென்று மீள்குடியேறுவதில் தமக்குள்ள குறைகளையும் தெரிவித்து இதனைப் போக்குவதற்கு உதவுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறிவிக்கப்படும்

உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான ஆவணத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. 5 பேர் கொண்ட நீதிபதகளின் தலைவரான ஷிராணி பண்டாரநாயக்க இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியிலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி பதவி ஏற்றகும் முறைகள் எல்லைகளற்றதாய் மாற்றப்படும் சரத்தானது, ஜனாதிபதியானவர் பாராளுமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளதாக தலைமைச் சட்ட அதிகாரி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கொள்கைகள் அமைப்பு மற்றும் டொக்டர்.ரொகான் எதிரிசிங்க ஆகியோரின் அரசியலமைப்பிற்கு எதிரான வழக்கு பதிவினை கருத்திற் கொண்டு சபாநாயகருக்கு இறுதித் தீர்மானம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை






இந்தியப் பெருங்கடலில் இருக்கும் அமெரிக்க விமானம்தாங்கி கப்பல்
இந்தியப் பெருங்கடலில் சீனா அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டத் துவங்கியிருப்பதை இந்தியா தற்போது உணர்ந்திரு்பபதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு கொண்டுவந்த கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கிருஷ்ணா இந்தத் கருத்தைத் தெரிவித்தார்.

கடந்த 2000-வது ஆண்டு முதல் இதுவரை 206 முறை இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியதில், 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பாலு சுட்டிக்காட்டினார். கச்சத்தீவை இலங்கையிடமிருந்தி திரும்பப் பெறவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களை பாதுகாக்க கடலோரக் காவல் படை ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், இலங்கை, இந்திய அரசுகள், தமிழக அரசு மற்றும் மீனவ்ர்களுக்கிடையே நேரடி தொடர்பு வசதியை ஏற்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முயலவேண்டும் என்றும் டி.ஆர். பாலு கோரினார்.

அதிமுக உறுப்பினர் தம்பிதுரை உள்பட தமிழகத்தின் பிற கட்சி உறுப்பினர்களும் இப் பிரச்சினையை எழுப்பினார்கள். தம்பிதுரை பேசும்போது, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பேசும்போது, இந்தியப் பெருங்கடலில், சீனா அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டி வருவதை இந்திய அரசு உணர்ந்திருப்பாககத் தெரிவித்தார். சீனாவின் நோக்கத்தை நுணுக்கமாகக் கண்காணிப்பதாகவும், இந்தியப் பெருங்கடலில் நடக்கும் மாற்றங்களையும் கண்காணித்து வருவதாகவும் கிரு்ஷ்ணா தெரிவி்ததார். இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்கவும், இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொருத்தவரை, இரு நாடுகளுக்கு்ம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அது இலங்கை அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கிருஷ்ணா தெரிவித்தார்.

அதே நேரத்தில் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துதல் உள்ளிட்ட சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுச் செயலர் தற்போது இலங்கையில் உள்ள நிலையில், இந்தப் பிரச்சினையையும் இலங்கை அரசிடம் எடுத்துச் செல்வார் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா உதவவில்லை -யாழ் மக்கள்






இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, அரசு தனது தேவைக்காகத் தமது காணிகளை எடுப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தடுத்து, தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இடம்பெயர்ந்துள்ள மக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர் நடைபெற்ற வேளையிலும், போருக்குப் பிந்திய வேளையிலும் தமிழ் மக்களின் நன்மை கருதி இந்திய அரசு எடுத்திருக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறப்போம்

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் நடந்து முடிந்தவற்றை மறந்து, இனிமேல் நடக்க வேண்டிய விடயங்களில் இணைந்து செயலாற்றுவோம் என பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறிகண்டி, இந்துபுரம் போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை அரசு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இதனைத் தவிர்த்து தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றம் செய்வதற்கு உதவ வேண்டும் என இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமைப் பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்த இந்திய வெளியுறவுச் செயலர் தலைமையிலான இந்தியக் குழுவினர், ஓமந்தை பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.

பிறகு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நிருபமாராவ், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அவற்றில் ரயில் பாதைகளை அமைத்தல், அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுத்தல், வாழ்வாதார உதவிகளை வழங்குதல் என்பன முக்கியமானவை என தெரிவித்துள்ளதுடன். இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...