11 டிசம்பர், 2010

மீண்டும் ஓர் ஆயுதக்குழு உருவாக இடமளிக்கக் கூடாது : பாதுகாப்புச் செயலாளர்

நாட்டின் பாதுகாப்பில் இராணுவத்தினரின் பங்கு அளப்பரியது. நாட்டுக்கு முக்கிய பங்காற்றுபவர்கள் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மீண்டும் ஓர் ஆயுதக்குழு உருவாக இடமளிக்கக் கூடாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன் தெரிவித்தார்.

பொலன்னறுவை மாதுறுஓயவில் இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் 400 பேர் தமது பயிற்சிகளை முடித்து இன்று வெளியேறினர். அந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். .

"முப்பது வருட யுத்தத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். ஆயுதக்குழுவொன்று உருவாகியமையே இதற்குக் காரணம். இனியொரு ஆயுதக்குழு உருவாக எப்போதும் இடமளிக்கக் கூடாது. இனி அபிவிருத்தியை நோக்கியே எமது பயணம் ஆரம்பமாக வேண்டும்" என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்..

இந்த நிகழ்வை முன்னிட்டு பொலன்னறுவை நகர்ப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீதான தாக்குதல்
இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது பாரியார் கமிலா பயணம் செய்த கார் நேற்று தெற்கு லண்டனில் தாக்கப்பட்டமையானது லண்டனின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசு மேற்கொண்ட முடிவை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸும் அவரது பாரியாரான கமீலா பார்க்கரும் சென்று கொண்டிருந்த காரின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இவர்கள் காரை உதைத்து சேதம் ஏற்படுத்த முற்பட்டதுமன்றி வெள்ளை நிற திரவத்தினை காரின் மீது எரிந்துமுள்ளனர்.

எனினும் அவர்கள் இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இத்தாக்குதலில் சுமார் 20 வரையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முழுப்பொறுப்பினையும் பொலிஸாரே ஏற்கவேண்டும் எனவும் அவர்களின் அஜாக்கிரதையே இதற்கான காரணம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் சாடியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சிறிகொத்தாவில் நாளை ஐதேக சம்மேளனம் : கயந்த தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம் நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய யாப்புக்கு அங்கீகாரம் பெறப்படும் என்று ஐ.தே.கவின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த விசேட சம்மேளனத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா 55 பிரதிநிதிகள் வீதமும் கலந்துகொண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ள புதிய யாப்புக்கு அங்கீகாரமளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இந்த விசேட சம்மேளனம் நாளை நடைபெறுகின்றது. கட்சியைப் பிரதிநிதித்துப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள்.

இதன் போது புதிய யாப்புக்கு அங்கீகாரம் பெறப்படும். அந்த வகையில் எதிர்காலத்தில் புதிய யாப்பின் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வகையில் நாங்கள் செயற்படுவோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

படைகளுக்கிடையில் முறண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சி :
முறண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சி : ஜனாதிபதி
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளையும், அதற்கான அரசியல் தீர்வுகளையும் வெளிப்படுத்தும் நோக்கிலேயே லண்டனுக்குச் சென்றேன். இருப்பினும், அதனை விரும்பாத சக்திகளே எதிர்ப்பினை வெளிப்படுத்தின. இன்னும் சிலர் படைகளுக்கு இடையில் சந்தேகத்தை ஏற்படுத்தி, முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை ரத்துச்செய்யப்பட்டதை அடுத்து, அதனை சாதகமாக்கிக் கொண்ட சிலர், யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக சாதிக்கவும் நினைக்கின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன். சிலர் இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தத்தின் பின்னர் 2010 ஆண்டு அமைதி, சமாதானம் நிறைந்த ஆண்டாகத் திகழ்கின்றது. இந்த நிலையிலும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கென அதிக நிதி ஒதுக்கப்படடிருப்பதாக இங்கு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாட்டை மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது படையினருக்கான ஊதியம் மற்றும் நிவாரணத் தேவைகளுக்காக, பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியின் 80 வீதம் செலவிடப்படவிருக்கின்றது.

எனவே, இது அதிகமான தொகை அல்ல. எமது படையினர் இங்கு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு மூன்று இலட்சம் மக்களை மீட்டனரே தவிர, அவர்கள் எந்தவொரு யுத்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை.

ஆனாலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுப் பயங்கரவாதிகளை போஷிக்கும் வகையில் சில சக்திகள் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதற்கு இடமளிக்கக் கூடாது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர்களும் லண்டன் செல்ல முடியாத நிலை : லக்ஷ்மன் கிரியெல்ல
ஐரோப்பாவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் எமது ஏற்றுமதி இன்னும் குறைந்துவிடும். ஜனாதிபதியின் விவகாரத்தால் எதிர்காலத்தில் அமைச்சர்கள், வியாபாரிகளும் பிரிட்டனுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.தே.க. எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் வியாபாரம் சீரழிந்துவிடும் என்பதுடன் பிரச்சினைக்கான பக்கம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"அபிவிருத்தி ஏற்படுவதாயின் அதனை மக்கள் உணர வேண்டும். புள்ளிவிபரங்கள் தவறானது என்பதனால் மக்கள் உணரவில்லை. தனது விருப்பத்திற்கும் அரசு விருப்பத்திற்கும் ஏற்ப புள்ளிவிபரங்கள் மாற்றப்பட்டுள்ளன.புள்ளிவிபரத்தில் நம்பிக்கையின்மையால் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் முதலீட்டாளர்கள் வருகை தரவில்லை. முதலீட்டாளர்களின் வருகை 20 வீதத்தால் குறைந்துள்ளது.

நீதிமன்றம் சுயாதீனமாக இருக்க வேண்டும். இல்லையேல் முதலீட்டாளர்களை எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பிய நாடுகள் 65 வீதமான பொருட்களை இறக்குமதி செய்கின்றன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதிக்கு அங்குள்ள பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருக்கலாம். எதிர்காலத்தில் அமைச்சர்கள், வியாபாரிகளும் செல்ல முடியாத நிலைமை ஏற்படும். அரசாங்கத்துக்கு தெரியாதது எங்களுக்கு தெரிகிறது. அதுவே வெளிநாடுகளுக்கும் தெரிகிறது.

இலங்கையுடன் பிரச்சினை இருந்தமையால்தான் பிரித்தானியா பாதுகாப்பு வழங்கவில்லை. என்பதுடன் அரசுக்குத் தெரியாத பக்கத்தை அரசாங்கம் கண்டுபிடித்து அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கேபிக்கு விழுந்த அடியால் கையாட்கள் ஆடுகின்றனர் : ரவி கருணாரத்ன

புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதக்ஷின நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இவை குழு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது ரவி எம்.பி உரையாற்ற தயாராக இருந்தார்.

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மேசையில் இருந்த புத்தகமொன்றை காண்பித்து இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டா நாம் இன்று (நேற்று) விவாதிக்கின்றோம். அப்படி விவாதிப்பதாயின் அதில் கே. பி.யிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை எனக் கூறி அமர்ந்தார்.

இதனிடையே எழுந்த ஆளும் கட்சியின் பின் வரிசையை சேர்ந்த சில எம்.பி.க்கள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், "காலையில் வந்தவுடனேயே கே.பி... கே.பி... என்று கொக்கரிக்கின்றீர்களே..." எனக் கோஷம் எழுப்பினர்.

உரையை ஆரம்பிப்பதற்கு எழுந்திருந்த ரவி கருணாநாயக்க எம்.பி., "கே.பிக்கு காலையிலேயே கன்னத்தில் பலமாக அடித்தமையினால் அவரின் அடியாட்கள் சபைக்குள் ஆடுகின்றனர்..." என்று எழுந்திருந்து கூச்சல் செய்த உறுப்பினர்களை பார்த்துக் கூறினார்.

"கருணா, பிள்ளையான் போன்ற புலிகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு எங்களிடம் கேட்கின்றனர்..." எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எமது நல்லெண்ணத்தை அரசு பலவீனமாக நினைக்கிறது : அரியநேத்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நல்லெண்ணத்தை எமது அரசியல் பலவீனம் என்று நினைத்து செயற்பட அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. எமது நல்லெண்ணத்தை அரசு உரிய முறையில் கையாளாவிடின் அது தொடர்பில் ஜனவரியில் மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் இந்த சபையில் ஆளும் தரப்பினரால் இழிவுபடுத்தப்படுகின்றனர்; அவமானப்படுத்தப்படுகின்றனர். இனவாதம் பேசப்படுகின்றது. சமத்துவம் இல்லை; உரிமைகள் இல்லை. அதிகாரப் பகிர்வு இல்லை. அப்படியானால் இங்கு நல்லாட்சி மலருவது எப்படி என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"பெண்கள் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நாளை மறுதினம் (நாளை ஞாயிறு) மட்டக்களப்பில் விசேடமாக ஏற்பாடாகியுள்ளன. ஆனாலும் நாடு முழுவதிலுள்ள 17 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 866 தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை வேண்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைதிகளில் பெண்களும் சிறுவர்களும் கூட அடங்குகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடாகியிருக்கின்றன. இதனை வைத்துப் பார்க்கையில் இங்கு நல்லாட்சி இடம்பெறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

இந்த வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது ஆளும் கட்சியினர் தேவையான விடயங்களை விடுத்து எதிர்க்கட்சியை விமர்சித்துக் கொண்டிருப்பதையே தமது வேலையாகக் கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் மேர்வின் சில்வா தனதுரையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். எமது மக்கள் குளிப்பது கூட இல்லை என இந்தப் பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி உரையாற்றினார்.

கொடியதான வார்த்தைப் பிரயோகங்களால் இங்கு இனவாதமும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழர்கள் என்ற காரணத்தினால் இவ்வாறான இழி பேச்சுக்களை கேட்க வேண்டியவர்களாகியுள்ளோம்.

எமது நாட்டில் நல்லாட்சியே அவசியம். இதனை அரசும் கூறுகின்றது. ஆனால் இங்கு நடப்பது அப்படியானது அல்ல. குறிப்பாக இந்தப் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள மக்கள் பிரதிநிதிகளிடத்திலேயே ஒழுக்கத்தைக் காண முடியாதிருக்கின்றது. நாடாளுமன்றத்திலேயே ஒழுக்கம் இல்லாதுள்ள நிலையில் அதனை நாட்டில் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

நல்லாட்சி மலர வேண்டுமானால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும். சமத்துவம் அதிகாரப் பகிர்வு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாத போது நல்லாட்சிக்கு இடமளிக்காது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிரணியில் மனித உரிமைகளின் காவலனாக இருப்பவர் பதவிக்கு வந்தும் மாறிவிடுகிறார் : சரத் என்.சில்வா


எதிரணியில் இருக்கும் போது மனித உரிமையின் பாதுகாவலனாக உள்ளவர்கள் பதவிக்கு வந்ததும் மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறிவிடுவது தான் இன்றைய விந்தையாக இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போது இவர் இதனைக் குறிப்பிட்டார்.

மதிக்கப்படவேண்டியவர்களால் உரிமைகள் மீறப்படுவது கவலை தரும்விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

த.தே.கூட்டமைப்பு - தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்க் கட்சிகள் இணைந்து இனப்பிரச்சினை தீர்வில் ஒருமித்த குரல்கொடுப்பது மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்த விடயங்கள் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...