அதிபர் ராஜபட்சவுக்கு, ஜெனரல் பொன்சேகா எழுதிய காட்டமான கடிதம் வருமாறு:
என்னால்தான் வெற்றி: "என்னுடைய தலைமை, தொலைநோக்குப் பார்வை, வழிநடத்தல் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றிகொள்ள முடிந்தது என்று கூறினால் அது மிகைப்படுத்தல் அல்ல என்பது உங்களுக்கே தெரியும். அதிபர் பதவி வகிக்கும் நீங்கள் அளித்த அரசியல் ரீதியான ஆதரவும் அந்த வெற்றிக்குக் காரணம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
"விடுதலைப் புலிகளை இந்த ஆண்டு மே மாதம் வெற்றி கண்ட பிறகு நீங்கள் பேசிய பேச்சும், நடந்துகொண்ட விதமும் ராணுவத்தின் மீதும், என் மீதும் நீங்கள் நம்பிக்கை இழந்து வருகிறீர்கள் என்பதை நன்றாகவே உணர்த்தியது.
திடீர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வேன் என்று கருதியே என்னை தரைப்படை தலைமை தளபதி பதவியிலிருந்து ஜூலை மாதம் விலக்கினீர்கள்.
தயார் நிலையில் இந்திய ராணுவம்: இலங்கை ராணுவம் திடீர் புரட்சியில் ஈடுபடும் என்று அஞ்சி, அப்படி ஏதும் நடந்தால் துணைக்கு உடனே விரைந்துவந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவத்துக்குத் தூது அனுப்பி அவர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி கூறினீர்கள். இதைவிட எங்களுக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்.
மிகத் திறமைவாய்ந்த, ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க ராணுவங்களில் இலங்கையும் ஒன்று என்று நாங்கள் பெற்றிருந்த புகழைச் சீர்குலைக்கும் வகையில் உங்களுடைய செயல் அமைந்துவிட்டது.
புலிகளுக்கு எதிரான போரை தீரத்துடனும் திறமையாகவும் வழிநடத்தினேன் என்பதற்காக இலங்கையின் ஒவ்வொரு ராணுவ வீரனும் என்னை, தங்களுடைய வீர தளபதியாக ஏற்றுக்கொண்டு விசுவாசம் காட்டியதால் உங்களுக்கு என் மீதும், ராணுவத்தின் மீதும் சந்தேகம் வந்தது.
ராணுவத்துக்கு வலு கூடுவது குறித்து நீங்கள் அஞ்சினீர்கள். அதை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினீர்கள். நெருக்கடியான நேரத்தில் ராணுவத்தைப் புகழ்ந்து பேசிவிட்டு பிறகு நம்பிக்கை இல்லாமல் பேசியது கண்டு நான் வருந்தினேன்.
என்னை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமித்தபோது மிகவும் சக்திவாய்ந்த பதவியாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். முப்படைகளின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ""ஒருங்கிணைப்பாளர்''தான் நான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன்.
""மூன்று படைகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பதவி உங்களுக்கு என்றால், உங்களுடைய பதவிதான் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துவிடும்'' என்று பாதுகாப்பு அமைச்சரும், உங்களுடைய சகோதரருமான கோத்தபய ராஜபட்சவும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
எனக்கு அடுத்தபடியாக ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவை ராணுவத் தளபதியாக நியமித்தீர்கள், நான் பரிந்துரைத்தவரை நிராகரித்தீர்கள். ஜகத் ஜெயசூரியா மீது விசாரணை நடைபெறும் விவகாரம் ஒன்று இருக்கிறது என்று தெரிந்தும் அவருக்குப் பதவி தந்தீர்கள். இதனால் ராணுவத்தில் ஒழுங்கும் நேர்மையும் சீர்குலைய ஆரம்பித்திருக்கிறது.
வெறும் சோற்றுப்பட்டாளமாக இருந்த ராணுவம், வீரம் செறிந்த போர்ப்படையாக என் தலைமையில் மாறியது. இப்போது மீண்டும் பழைய கதை ஆரம்பித்துவிட்டது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறவர்களும் விட்டு ஓடுகிறவர்களும் அதிகரித்துவிட்டார்கள். புதிதாகச் சேருகிறவர்களைவிட விட்டு ஓடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
மக்களுக்கு சமாதானத்தை அளிக்கத் தவறிவிட்டது அரசு; சிறுபான்மைச் சமூகமான தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. அரசு உரிய வகையில் திட்டமிடாததால் தமிழர்கள் வாழும் சூழல் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. முகாமில் இருக்கிறவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுடன் போய் தங்கிக்கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் பெறும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. இது இப்படியே தொடர்ந்தால் நமது ராணுவத்தின் வெற்றியே அடையாளம் இல்லாமல் பாழாகிவிடும். தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
உரிமைகள் மறுப்பு: போரினாலும் அதன் பிறகு அரசு காட்டும் மெத்தனமான நிர்வாகத்தாலும் மக்களுடைய பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அரசில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. அரசுப் பணம் கோடிக்கணக்கில் விரயமாகிறது. பத்திரிகைககளின் கருத்துச் சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் காலில்போட்டு நசுக்கப்படுகின்றன' என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் பொன்சேகா.