22 ஜூன், 2010

தீவிரவாதிகளுக்கு ஆலோசனை; பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் : அமெரிக்கா

பயங்கரவாத குழுக்களுக்கு தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ, ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாபதி ஒபாமாவின் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதக் குழுக்களுக்கு உபகரண உதவி, பயிற்சிகள், சேவைகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் உதவி என்பன வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், துருக்கியின் குர்திஸ் ஆகிய அமைப்புகளுக்குச் சமாதான நடவடிக்கைகளுக்காக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குவது தொடர்பில், இரண்டு அமெரிக்கர்களும் 6 அமெரிக்க அமைப்புகளும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 12 வருடங்களாக நீடித்து வந்த சட்டச் சிக்கல் நிலை தொடர்பிலேயே அமெரிக்காவின் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அமெரிக்கத் தலைமை நீதியரசர் ஜோன் ரொபர்ட், இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போது, தமிழீழ விடுதலைப்புலிகளும் குர்திஸ் அமைப்பும் அவர்களின் நாட்டில் சுதந்திரத்தை எதிர்ப்பார்க்கும் அமைப்புக்களாகும் எனத் தெரிவித்தார்.இரண்டு குழுக்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை காரணமாகவே இந்த பிரகடனம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நிபந்தனை அடிப்படையில் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத் திட்டம் நீடிப்பு

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் நீடிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சலுகைத் திட்டத்தை நீடிப்பது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் சில முக்கிய நிபந்தனைகளுக்கு இணங்குவதாக அரசாங்கம் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டுமென இலங்கை மற்றும் மாலை தீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.

ஆறு மாத காலத்திற்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளிக்க வேண்டும் எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நிபந்தனைக் காலம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடைநிறுத்தப்படும் சலுகைத் திட்டம் நிபந்தனையின்றி மீளவும் நீடிக்கப்படாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையரை விடுவிக்கக் கோரி மலேசியாவில் இன்று பேரணி

மலேசியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் 75 பேரையும் விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவிருக்கின்றது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி ஒன்றையும் நடத்தவிருக்கின்றனர்.

மலேசியாவில் முகாம்களில் அடைத்து வைத்துள்ள 75 ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

போலி முகவர்கள் மூலம் வந்தவர்கள் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டும்.

இவர்களை இலங்கை அரசு அழைத்தாலும் அங்கே இவர்களைத் திருப்பி அனுப்பக்கூடாது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தனியறைச்சிறையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று செயலணித் தலைவர் கலைவாணர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்தப்படவுள்ளது.

பேரணியின் நிறைவில் ஐ.நாவின் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதி ஜமால் மல்கோத்ராவிடம் நேரடியாக மனுவைக் கையளித்து கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொலிவூட் நடிகர் சல்மான்கான் இன்று இலங்கை விஜயம்

பொலிவூட் நடிகர் சல்மான்கான் இன்று இலங்கை வருகின்றார்.'ரெடி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் படப்பிடிப்புகளுக்காகவே அவர் இங்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ரெடி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடம் பெற்றுக் கொண்டதன் பின்னரே நடிகர் சல்மான்கான் இலங்கை வருவதாகவும் இங்கு 40 நாட்கள் வரை தங்கியிருந்து படப்பிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அடுத்த சில தினங்களில் இலங்கை வரவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு மனம் வருந்திய அமைச்சர் சம்பிக்கரணவக்க

யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை என்றுமே மனவருத்தத்துக்குரியது என்று மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ். குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று வருகை தந்திருந்த அவர் யாழ். பொது நூலகத்திற்கும் விஜயம் செய்திருந்தார். யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்தபின்னர் உரையாற்றுகையிலேயே தனது கவலையை இவ்வாறு அவர் பகிர்ந்து கொண்டார்.

ஆசியாவிலேயே முதன்மை வாய்ந்த இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒருபோதும் எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது ஆகும். இச் செயலை எவர் செய்திருந்தாலும் அதனை நியாயப்படுத்தவும் முடியாது.

தெற்கைச் சேர்ந்த இலங்கையன் என்ற வகையில் எனது இதயபூர்வமான மனவருத்தத்தை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவருடன் ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் மற்றும் மஹரகம மஹிந்த தேரர் ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர். இவர்களை யாழ் . அரச அதிபர் க. கணேஷ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் ஆகியோர் வரவேற்றனர். யாழ். குடாநாட்டில் மின்சார விநியோகத்தினை மேம்படுத்துவது தொடர்பாகவும் குடாநாட்டுக்கான லக்ஷபான மின்விநியோக மார்க்கங்களை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் அமைச்சர் மின்சார சபை அதிகாரிகளுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகாரப் போக்கில் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முயற்சி- கயந்த எம்.பி

அரசியலமைப்பில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை ஏற்படுத்தப் போவதாக கூறுகின்ற அரசாங்கம் தனது சர்வாதிகாரப் போக்கை முன்னெடுத்து வருகின்றது. இது சுதந்தி ரக் கட்சியின் யாப்பு அல்ல எனவே, பகிரங்கத்தன்மை இல்லாவிட்டால் அதற்கெதிராக ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செய ற்பட வேண்டி ஏற்படும். இதனை எவராலும் தடுக்க முடியாது. என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பேச்சாளார் கயந்த கருணா திலக்க எம்.பி மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் விமர்சித்தவர்களும் அது இந்நாட்டுக்குப் பொருத்தமில்லாதது என்று வர்ணித்தவர்களும் இன்று அரசாங்கத்தின் பங்காளிகள் அமைச்சர்கள் என்பதால் மக்களை ஏமாற்றுகின்ற அனைந்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் நோக்கில் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் எப்படிபட்டவை என்பது இதுவரையில் இரகசியமாகவே இருக்கின்றது. வேறு வகையில் கூறினால் அரசாங்கம் திருட்டுத்தனமாக தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு காலப் பகுதிகளின்போது அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் அன்று பகிரங்கத் தன்மை வெளிப்படைத்தன்மை காணப்பட்டது. ஆனால், இன்றைய அரசாங்கம் தனது இருப்பையும் பதவிகளையும் தக்கவைத்து கொள்வதற்காகவே அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

எவ்வாறான மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் உள்வாங்கப்படவிருக்கின்றன என்பது தொடர்பில் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை இதுவரையில் காணக்கிடைக்கவில்லை.

ஒரு புறத்தில் அரசாங்கம் சர்வாதிகாரப் போக்குடனேயே செயற்பட்டு வருகின்றது. இதனை உணர்ந்துதான் பொதுத் தேர்தலின்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டாம் எனக் கூறினோம். ஏனெனில், அதிகாரத்தைப் பெறுகின்ற அரசாங்கத்திடம் மக்கள் குறிந்த சிந்தனையோ நாடு தொடர்பிலான அக்கறையோ இருக்காது. ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கு நாடு தொடர்பிலான அக்கறை உண்டு. மக்களின் எதிர்காலம் குறித்த அக்கறை இருக்கின்றது.

எனவே, அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவிருக்கின்ற அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதோ, யாப்பாக இருந்தால் அது குறிந்து நாம் கவலைப்படப் போவதில்லை. அரசாங்கம் கைவைத்திருப்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு சட்டத்திலாகும். இதில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற மாற்றங்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையை அரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறுமாயின் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளையும் மாற்றுக்குழுக்கள் மற்றும் மாற்றுதரப்பாரை இணைத்துக் கொண்டு சட்டரீதியிலும் அதேநேரம் அரசியல் ரீதியாக பாரியளவிலான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்பதையும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையுடன் நினைவூட்ட விரும்புகிறோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் டக்ளஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்புஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியா சென்றார். அப்போது சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி மேல் நீதிமன்றில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு மனுவில், "தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கை மந்திரியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் விசாரித்து, மத்திய அரசு இதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை பொலிஸ் தரப்பில் மத்திய அரசின் பதிலுக்குக் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி இதில் பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. மனித உரிமை மீறல் குழுவுக்கு இலங்கை எதிர்ப்பு

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை குழு அமைப்பதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கூறப்பட்ட பிரச்னைகளை அரசு உரிய வகையில் அணுகி தீர்வு கண்டுவரும் நிலையில் இத்தகைய குழு தேவையற்றது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் தெரிவித்தார்.

÷2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசு மீது கடுமையான புகார் எழுந்தது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தற்போது முகாமில் அடைக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் மீதும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இது குறித்து தனக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கான குழுவை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் முடிவு செய்துள்ளார். இக்குழு உறுப்பினர்களின் பெயர்களை விரைவில் அறிவிக்க உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலர் லின் போஸ்கோவுடன் பேசுகையில், ஐ.நா. ஆலோசனைக் குழு அமைப்பது தேவையற்றது என்று தெரிவித்ததாக பெரிஸ் கூறினார்.

கடந்த வாரம் இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த லின் போஸ்கோ, அதிபர் ராஜபட்ச, பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாசில் ராஜபட்ச, பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபட்ச, அட்டர்னி ஜெனரல் மோகன் பெரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியர் தங்கக்கடைகளில் கொள்ளை:பிரிட்டனில் அட்டகாசம்

லண்டன்:தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், பிரிட்டனில், இந்தியர்கள் நடத்தும் நகைக் கடைகள் தான் கொள்ளையர்களின் முக்கிய இலக்காக உள்ளன. கொள்ளையர்கள் அடுத்து எந்தக் கடையில் கை வைப்பார்களோ என்று பிரிட்டன் இந்தியர்கள் பீதியில் உள்ளனர்.பிரிட்டன் மத்தியப் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லீசெஸ்டர் நகரத்தில், பெல்கிரேவ் சாலையில் இந்தியர்களின் நகைக் கடைகள் பெருமளவில் இருக்கின்றன. அதனால் இந்தச் சாலை,"கோல்டன் மைல்' என்றும் அழைக்கப்படுகிறது.

தற்போது பிரிட்டனில் தங்கத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதால், அப்பகுதியிலுள்ள கொள்ளையர்கள் இந்தியர்களின் நகைக் கடைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில், அங்குள்ள "அலங்கார்' என்ற நகைக் கடைக்கு இரவில் ஒரு வேனில் வந்த கொள்ளையர்கள், கடை ÷ஷாகேசின் கண்ணாடிகளை உடைத்து அதிலிருந்த பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.இதேபோல், "பிபின்' என்ற கடையில் புகுந்த கொள்ளையர்கள் வெட்டும் கருவி ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளையடித்துள்ளனர்.

அப்பகுதி போலீசார் இந்திய நகைக் கடைகளுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். அலங்கார் கடையில் நடந்த கொள்ளை வழக்கில் 22 வயதுடைய ஒரு வாலிபரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.தொடர்ந்து நடந்து வரும் கொள்ளைச் சம்பவங்களால் பீதியில் உறைந்துள்ள இந்தியர்கள், கொள்ளையர்களிடம் துப்பாக்கி கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து பெல்கிரேவ் தொழில் கூட்டமைப்பின் உறுப்பினரும் ராம் ஜுவல்லர்ஸ் கடையின் உரிமையாளருமான மகுல் விஸ்ரம் கூறுகையில்," இங்குள்ளவர்கள் பயத்தில் உள்ளனர். அடுத்த இலக்கு எந்தக் கடையாக இருக்கும் என்று உறைந்து போயுள்ளனர். அவர்களிடம் இந்த கடப்பாரை மற்றும் வெட்டும் கருவி போன்றவற்றைப் பார்க்கும் போது, துப்பாக்கிகளும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது' என்று மகுல் விஸ்ரம் தெரிவித்தார்.இதுகுறித்து அப்பகுதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கோடீஸ்வரர் பயணித்த விமானம் திடீர் மாயம்
மெல்போர்ன்:ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் கென் டால்போட் உள்ளிட்ட 11 பேர் பயணித்த விமானம் ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டு எல்லை அருகே மாயமானது.கோடீஸ்வரர் கென் டால்போட் உள்ளிட்ட ஆறு ஆஸ்திரேலியர்கள், இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள், இரண்டு பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு அமெரிக்கர் உள்ளிட்டோர் இரும்புத் தாது குறித்த ஒப்பந்தம் மேற்கொள்வற்காக ஆப்ரிக்காவில் உள்ள கேமரூன் சென்றனர். காங்கோ எல்லையில் விமானம் பறந்து சென்ற போது திடீரென மாயமானது. தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இந்த விமானம் மலைப் பகுதிகளில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. கேமரூன் நாட்டு அதிபரின் உத்தரவுப்படி காணாமல் போன விமானத்தைத் தேடுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...