13 நவம்பர், 2010

கதிர்காமர் கொலை நடந்த இடத்தில் விசாரணை : வழக்கில் திடீர் திருப்பம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றம் படுகொலை இடம்பெற்ற இடத்தில் இவ்வழக்கை விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவரது கொழும்பு-07 இல்லத்தில் வைத்து ஸ்னைப்பர் துப்பாக்கியால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில்முத்தையா சகாதேவன், இஸினோர் ஆரோக்கியநாதன் ஆகிய இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இப்படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியமை, உதவி, ஒத்தாசை செய்தமை, மரணத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது இரு எதிரிகளையும் ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகி வாதாடினார். அவர் கொலை நடந்த இடத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று மன்றில் ஏற்கனவே கோரி இருந்தார்.

வழக்காளியான சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டத்தரணி சி.குலரட்ண ஆஜரானார். அவர் படுகொலை இடம்பெற்ற இடத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுகின்றமையில் எவ்வித ஆட்சேபனையும் சட்டமா அதிபருக்கு கிடையாது என்றார்.

இதையடுத்து படுகொலை இடம்பெற்ற இடத்தில் அடுத்த மாதம் முதலாந் திகதி மதியம் 2.00 மணிக்கு வழக்கு விசாரணை இடம்பெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

"சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியமர்த்த முடியுமானால் வலிகாமம் வடக்கு மக்களை ஏன் இதுவரை குடியேற்றவில்லை?

யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியேற்ற முடியுமானால் வலி வடக்கு பகுதி மக்களை ஏன் இதுவரை மீள்குடியேற்றவில்லை? வலி. வடக்கு மக்களுக்கு இந்த ஆனைக்குழு ஏதாவது நல்லது செய்யுமா? என்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமகனான சா.தங்கராசா கேள்வி எழுப்பினார்.

எம்மை அங்கு மீள் குடியேற்றுமாறு கோரி நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தோம். அதேகாலப் பகுதியில் தான் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வலி. வடக்கில் மக்களை குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு கிழக்கையும் பிரிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் வடக்கு கிழக்கு பிரிப்புதொடர்பான தீர்ப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் வலிகாமம் வடக்கில் மக்களை மீள்குடியேற்றுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் பதவியேற்பு தினத்தன்று கொழும்பு 1-4 வரையான பகுதியில் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் இடம்பெறவுள்ள எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு 01 முதல் கொழும்பு 04 வரையிலான பகுதிகளில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினிலொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்றைய தினம் இப்பகுதிகளிலுள்ள அரசாங்க பாடசாலைகள் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் 2010, நவம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் கொழும்பு 01, கொழும்பு 02, கொழும்பு 03, கொழும்பு 04 இல் அமைந்துள்ள அனைத்து அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் தேசிய அலுவலக நிகழ்வாக இருப்பதனாலும், இன்றைய நாளில் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தடங்கலைக் கருத்தில் கொண்டும் மேலுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறை தாபனங்களின் பணியாளர்களுக்கு 2010, நவம்பர் 19 ஆம் திகதியன்று கொடுப்பனவுடன் கூடிய லீவினை வழங்குமாறு உரிய தொழில் தருநர்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர் : இமெல்டா சுகுமார்

சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர். அவர்களை அரசாங்கம் அங்கு குடியமர்த்தவில்லை என தெரிவித்த யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், மேற்படி குடியமர்வு தொடர்பான பூர்வாங்க அறிக்கையொன்று மீள் குடியேற்ற அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை சித்தங்கேணி மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இடம் பெற்றது. இதன் போது தெளிவுபடுத்துகையிலேயே யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்:–

நாவற்குழி அரச காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் 1980 மற்றும் 83களில் வியாபார நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்தள்ளனர். அதன் பின்னர் யாழில் காணப்பட்ட குழப்பகரமான சூழ்நிலையால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால் இவர்களை இராணுவத்தினர் அநுராதபுரத்தில் குடியேறியுள்ளனர். இங்கிருந்தும் பொருளாதார சூழ்நிலைகளினால் மேற்படி மக்கள் மிஹிந்தளை, தம்புள்ளை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் இடம்பெயர்ந்து சென்றதாகவும் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். இதன் பின்னர் அமைச்சர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.

பிறப்புச் சான்றிதழ்களையும் தபால் அடையாள அட்டைகளையும் ஆதாரமாக அவர்கள் காட்டினார்கள். ஒரு பெரியவர் தான் யாழ். பிராமணர் இனத்து பெண்ணையே மணந்துள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகையில் திடீரென யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் அனைவரும் நாவற்குழியில் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் குடியேறிவிட்டனர்.

இது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம் அல்ல மேற்படி குடியேற்றம் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், மீள்குடியேற்ற அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்த பாதிப்பு : காணிகளை இழந்தோருக்கு உறுதிப் பத்திரம்

வடக்கு கிழக்கில் சொந்த நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடக்கு கிழக்கில் வாழ்ந்த மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 'பிம் சவியஞூ' நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மேற்படி காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

யுத்தத்தின் போது தமது காணி உறுதிப் பத்திரத்தை இழந்தவர்களுக்கு இதன் மூலம் பலன் கிட்டச் செய்வதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் நில அளவைத் திணைக்களங்களில் அப்பிரதேசங்களில் வாழ்ந்ததற்கான பதிவுகள் உள்ளன. 'பிம் சவிய' நிகழ்ச்சித் திட்டம் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைதீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கு, மத்தியில் அதிகாரப் பரவலாக்கம் அவசியம் : புத்திஜீவிகள்

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கு, மத்தியில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறவேண்டும். அத்துடன் தமிழ்மொழி அமுலாக்கம் உரியமுறையில் இடம்பெறவேண்டும். இனங்களுக்கிடையில் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று யாழ். மாவட்ட புத்திஜீவிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் நேற்று மாலை சாட்சியமளிக்கையிலேயே யாழ். மாவட்ட புத்திஜீவிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அமர்வில் முதலில் சாட்சியமளித்த கலாநிதி. ஜீவரத்தினம் ஹூல் கூறியதாவது:–

2006ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டேன். எனினும் புலிகள் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தமையினால் நான் நாட்டைவிட்டு வெளியேறினேயே. ஆனால் இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள் தேசிய நல்லிணக்கத்தை முன்னிட்டு மீண்டும் இலங்கை திரும்பவேண்டுமென ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கேற்ப நான் மீண்டும் இலங்கை வந்தேன். நாட்டிலிருந்து வெளியேறிய ஏனைய மக்களில் அதிகமானோரும் இங்கு வந்து சேவையாற்றுவதற்கு எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

நாங்கள் ஒரு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். அத்துடன் எமது கடந்தகால தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நிராகரித்தமையானது புலிகள். தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பாரிய காட்டிக்கொடுப்பாகும்.

அதிகாரப்பரவலாக்கம்

எனவே தற்போதைய நிலைமையில் நாட்டில் அதிகாரப்பரவலாக்கம் இடம்பெறவேண்டும். அதாவது உள்ளக ரீதியில் அதிகாரப்பரவலாக்கம் வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும். ஆனால் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் விடயமானது அரசாங்க மட்டத்தில் தாமதப்படுத்தப்படுவதாகவே நாங்கள் உணருகின்றோம். அது அப்படி நடக்கக் கூடாது. விரைவில் அதிகாரப் பரவலாக்கம் முன்வைக்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பு

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். இது மிகவும் தேவையானது. சரத்பொன்சோகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியுமானால் ஏன் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியாது?

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அரசாங்கம் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். அவர் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். மக்களின் ஆதரவு அதிகமாகவே அவருக்கு இருக்கின்றது. அதாவது ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றேன்.

யுத்தத்தின்போது அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே இவை தொடர்பிலான நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா நியமித்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.

13 ஆவது திருத்தம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக மாகாணசபை முறைமை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் தீர்வொன்றிற்கு செல்வதற்கு முன்னர் சட்டத்தில் இருக்கின்ற அம்சத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். முக்கியமாக நாம் அனைவரும் பொதுவான இலங்கையர் என்ற அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் மொழி

இதேவேளை தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்கள் தமது விடயங்களை தமது மொழியிலேயே கையாளுவதற்கும் அரசாங்கத்துடன் தமிழ் மொழியிலேயே செயற்படுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவது கட்டாயமாகும். அரச நிர்வாகத்தில் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் வளங்கப்பட வேண்டும் என்றார்.

தோல்விகண்ட உடன்படிக்கைகள்

தமிழ் அரசியல் தலைவர்கள் அனைத்து சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் பேசி நியாயமான தீர்வுக்கு வர முற்பட்டுள்ளனர். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஆகிய உடன்படிக்கைகளை குறிப்பிடலாம். –அதேபோல் போர் நிறுத்த உடன்படிக்கையும் தோல்வியடைந்தது. இரண்டு தரப்பினரும் சந்தேகத்துடனேயே இருந்தனர் விளைவாக, மனித உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்தன. சுற்றாடலும் பாதிக்கப்பட்டது.

மக்களின் அபிலாசைகள்

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கூட வெளிவரவில்லை. 30 வருடகால யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் அபிலாøஷகள் பூர்த்தியடையவில்லை. உண்மையான சமாதானமும் அமைதியும் நாட்டில் ஏற்பட வேண்டுமானால் நியாயமான தீர்வு முன்வைக்கப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது விடயங்களை கையாளும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் இந்தத் தீர்வு இருக்கவேண்டும். இது இடம்பெறாதவøர அமைதி, சமாதானம் என்பவற்றை எதிர்பார்ப்பது கடினம். அத்துடன் அதிகாரப் பரவலாக்கலும் மிகவும் முக்கியமானது. காலதாமதமின்றி அது அமுல்படுத்தப்படவேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி

கொழும்பு : இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் சட்ட நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இலங்கை சட்டத்துறை அமைச்சர் சென்விரத்னேவும், இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தாவும் நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் இலங்கை சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் சட்ட நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிப்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்பின் இலங்கை நீதிபதிகள் பெங்களூரு மற்றும் போபால் நகரங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பெறுவர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தவரை இந்தியா, இலங்கை இடையே சட்ட நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வெலிகந்தையில் புனர்வாழ்வு பெற்ற 58 பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட 58 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு கூறியது,

இது தொடர்பான வைபவம் அமைச்சர் டியூ. குணசேகரவின் தலைமையில் வெலிகந்தையில் நடைபெற்றது. இதன் போது தொழிற்பயிற்சி பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதுவரை 5300 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணசேகர இங்கு தெரிவித்தார். ஏனையவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஈ.பி.டி.பி உயர் மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்தித்து பேச்சு

நாவற்குழி குடியேற்ற விடயம்; சமகால அரசியல் நிலைபற்றி ஆராய்வு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உயர்மட்டக் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், சம காலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது பிரதான விடயமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான யாழ். நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்ட விரோதமான முறையில் குடியேறியிருக்கும் விடயம் குறித்து ஈ.பி.டி.பி. தரப்பினரால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எந்த மக்கள் சமூகமாக இருப்பினும் அவர்கள் விரும்பிய பிரதேசங்களில் வாழ்வதற்குரிய ஜனநாயக உரிமைக்கு தாம் மாறானவர்கள் இல்லை என்றும் ஆனாலும் இனங்களுக்கிடையிலான மனக் கசப்புகளை உருவாக்கும் வகையிலான சட்டவிரோத குடியேற்றங்கள் இன ஐக்கியத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் ஈ.பி.டி.பி தரப்பினரால் ஜனாதிபதியிடம் எடுத்து கூறப்பட்டதாக ஈ.பி.டி.பி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாவற்குழியில் குடியேறியிருக்கும் தென்னிலங்கை மக்களை ஏற்கனவே சந்தித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு தனக்கு 3 மாத கால அவகாசம் தேவை என ஏற்கனவே தெரிவித்திருந்ததை ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தியிருந்ததோடு அந்த மக்கள் ஏற்கனவே யாழ். குடாநாட்டில் சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்தமைக்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும், அவர்களில் சிலர் வாடகை வீடுகளில் மட்டுமே யாழ். குடாநாட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள் என்றும் ஈ.பி.டி.பி தரப்பில் எடுத்து விளக்கப்பட்டதோடு யாழ். மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களில் நிலமற்ற மக்கள் தொகையினர் அதிகமாக உள்ளனர் என்றும், அவர்களுக்கான நிலப்பங்கீடு என்பது இதுவரை வழங்கப்படாத ஒரு சூழலில் தென்னிலங்கையில் இருந்து வந்திருந்த மக்கள் சட்ட விரோதமாக நாவற்குழி நிலத்தில் குடியேறியிருப்பது யாழ். மாவட்ட நிலமற்ற மக்கள் மத்தியில் கசப்புணர்வுகளையே உருவாக்கும் என்றும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி; அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களை சிலர் திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்ததோடு ஈ.பி.டி.பி. தரப்பில் இருந்து எடுத்து விளக்கப்பட்ட நியாயங்களை தான் புரிந்துகொள்வதோடு இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்தும், தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் சமகால பிரச்சினைகளில் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார வசதிகளை மேலும் உருவாக்கி கொடுப்பதோடு எஞ்சியுள்ள சிறுதொகை மக்களும் மீள்குடியேறுவதற்கான தடைகளை விரைவாக அகற்றி அவர்களுக்கான அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான இச்சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தரப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவரும், யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் கே. தயானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசுடன் இணைந்து செயற்பாடு மு. காவின் தீர்மானத்திற்கு அதியுயர் பீடம் அங்கீகாரம்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் படுர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்தினை கட்சியின் அதியுயர் பீடம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதையடுத்து 11 ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீடம் கூடியது. இதன் போது இவ் விடயம் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்வரும் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தலைவர் றவூப் ஹக்கீம் தனது உரையின் போது இதனை அறிவிக்கவுள்ளார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் உயர்மட்டத் தூதுக்குழு இன்று 13ஆம்

யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறது.

இங்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய உதவிகளை வழங்குவது தொடர்பாக இத் தூதுக்குழுவினர் ஆராய்வர்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் ஐவர் கொண்ட ஈரான் உயர்மட்டத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஹஜ் யாத்திரிகரிடம் கூடுதல் கட்டணம் அறவிட்டால் கடும் நடவடிக்கை



ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் அறவிடும் முகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் டி. எம். ஜயரட்ன அறிவித்துள்ளார்.

நியாயமான கட்டணம் அறவிடுமாறு முகவர்களுக்கு அறிவித்துள்ள போதும் அதிக கட்டணம் அறவிடுவதாக பிரதமருக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்ப ட்டுள்ளன. இதனை கருத்திற் கொண்டே பிரதமர் இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளார்.

விமான டிக்கட், தங்குமிட வசதி, உணவு என்பவற்றுக்காகவே இவ்வாறு அதிக கட்டணம் அறவிடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப் பாடுகளை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்ப ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் நேற்று உத்தரவிட்டார்.

ஹஜ் யாத்திரையை பணம் சம்பாதிக்கும் தொழிலாக ஆக்குவதற்கு ஒருபோதும் தான் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் இவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் உடனடியாக தனக்கு அறியத் தருமாறும் ஹஜ் யாத்திரிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்வதற்காக 70 முகவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு இலங்கையிலிருந்து 5800 யாத்திரிகருக்கு ஹஜ் செல்வதற்கு சவூதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...