13 ஏப்ரல், 2010

செவ்வாய் கிரகத்தில் கால்பதிக்கத் தயாராகும் மனிதன்
விண்வெளி ஆய்வில் பல்வேறு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவும், இந்தியாவும் விண்வெளிப் பயணத்தில் அதிக ஆர்வம் செலுத்துகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம், செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக்கலங்களை அனுப்பி உள்ளது. இந்த கலங்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து தகவல்களை அனுப்பி வருகின்றன.

இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செவ்வாய்க் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்யப்போகிறார்கள்.

இவர்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபடப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்தப் பயணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் பணிகள் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடந்து வருகிறது.

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல சுமார் 250 நாட்கள் ராக்கெட்டில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் அங்கு 30 நாட்கள் வரை தங்கி இருந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டால் சுமார் 240 நாட்கள் பயணம் செய்தால்தான் பூமியை வந்தடைய முடியும். ஆக மொத்தம் சுமார் ஒன்றரை வருடங்கள் பூமியை விட்டு விண்வெளியில் இருக்க வேண்டும்.

இதை தாங்கும் அளவுக்கு விண்வெளி வீரர்களின் உடல் தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். எனவே அத்தகைய தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய சோதனைகள் நடக்கின்றன. பல்வேறு உடல் தகுதி, கல்வித்தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற 11 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களை ஒரு அறையில் 520 நாட்கள் அடைத்து வைத்து சோதனை செய்யப்போகிறார்கள். இந்த அறை ராக்கெட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் பயணம் செய்யும் போது இருக்கும் எடையற்ற தன்மையுடன் இந்த தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி அங்கு தங்கி இருந்து ஆய்வு நடத்துவது போன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த 5 பொறியியலாளர்கள், இரண்டு டாக்டர்கள் மற்றும் பிரான்ஸ் பெல்ஜியம், இத்தாலி, மற்றும் சீனா ஆகிய நாட்களைச் சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர்கள் இந்த சோதனைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சோதனைகள் இந்த மாதம் தொடங்கி 520 நாட்களுக்கு நடைபெறும். இவர்கள் தங்கி இருக்கும் போது அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தனை காலமும் ஆய்வுக்கலங்கள் மூலம் நடக்கப்பட்ட ஆய்வு முடிவுகளைவிட நேரடியாக சென்று ஆய்வு செய்வதன் மூலம் கூடுதலான பல தகவல்கள் கிடைக்கும் என நம்பலாம்.

இவ்வளவு காலமும் சந்திரனுக்கு சென்று பல்வேறு ஆய்வுகளைச் செய்த மனிதன் முதற் தடவையாக வேறொரு கிரகத்தில் கால்பதிக்க இருப்பது விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் திருப்பம் எனலாம்.
மேலும் இங்கே தொடர்க...

மறதி நோயினால் குழந்தை பிறந்ததை அறியாத பெண்ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஸ்காட். இவரது மனைவி ரெபேக்கா டாயிக் (31). இவர் கடுமையான மறதி நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கர்ப்பம் அடைந்தார். பிரசவ வலி ஏற்படவே அவரை சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இமிலிரெபேக்கா என பெயரிட்டுள்ளனர். ஆனால் மறதி நோயினால் அவதிப்படும் ரெபேக்காவுக்கு தான் குழந்தை பெற்றது நினைவுக்கு வரவில்லை.

அவருக்கு குழந்தை பிறந்துள்ளதை மற்றவர்கள் நினைவுபடுத்தினாலும் அதை ஏற்று கொள்ளும் மனபக்குவமும் அவருக்கு வரவில்லை. அதனால் அவரது கணவர் ஸ்காட் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

இந்த அபூர்வ மறதி நோயினால் எனது மனைவி 80 வயது பெண் போல அதாவது ஒரு மூதாட்டியின் நிலைக்கு மாறிவிட்டார். வெளியில் எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியும் அவர் திடீரென தான் யார் என்பதையே மறந்து விடுகிறார். இது மாபெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

நாளை மலர்கிறது விகிர்தி புத்தாண்டுபுதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது எனக் கூறப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாகத் திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே புதிய விமான நிலையம் சீனா கட்டுகிறதுஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக குவியும் வெளிநாட்டு பயணிகள் எல்லோருக்கும் நேபாளம் தான் வாசலாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்றும், அவர்களை சீனாவின் பக்கம் இருந்து மலை ஏறச்செய்யவேண்டும் என்றும் சீனா விரும்புகிறது. இதற்காக அது எவரெஸ்ட் சிகரம் அருகே புதிய விமான நிலையத்தை கட்டுகிறது. அதற்கு அமைதி விமான நிலையம் என்று பெயர் சூட்டி உள்ளது.

இந்த விமான நிலையம் திபெத் பகுதியில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. சீனா-நேபாள நெடுஞ்சாலையில் இது அமைய இருக்கிறது. இது திபெத்தில் கட்டப்படும் 5-வது பயணிகள் விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் அமைந்தால் வெளிநாட்டு பயணிகள் வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விமான நிலையத்தின் கட்டுமானப்பணி, இந்த மாதம் தொடங்குகிறது. வருகிற அக்டோபர் மாதம் பணி முடிகிறது. இந்த விமான நிலையத்திற்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்ல முடியும்.

இது தவிர இந்த பகுதியில் நக்கூ என்ற இடத்திலும் ஒரு விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது. இது தான் உலகத்திலேயே உயரமான இடத்தில் அமைய இருக்கும் விமானநிலையம் ஆகும். இது 4436 மீட்டர் உயரத்தில் கட்டப்பட இருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஊர்காவற்துறையில் கோஷ்டி மோதல்:வாள்வெட்டில் நால்வர் காயம்ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
மேலும் இங்கே தொடர்க...

சோமாலிய கடற்கொள்ளையர்கள் 11 இந்தியர்கள் உள்பட 26 பேருடன் மேலும் ஒரு கப்பலை கடத்திச் சென்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் தான்சானியாவின் ஜான்ஸிபார் நகருக்கு சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை செசல்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பலில் வந்த கடற்கொள்ளையர்கள் சரக்குக் கப்பலை தடுத்து நிறுத்தினர். பின்னர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

இதில் பயணம் செய்த 10 தான்சானியர்,11 இந்தியர், 5 பாகிஸ்தானியரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இவர்கள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. இவர்களை மீட்க கப்பல் நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய அரசுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சமீபத்தில்தான் 11 படகுகளில் சென்ற 120 இந்தியர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இதில் 5 படகையும், 67 இந்தியர்களையும் அவர்கள் திடீரென சில நாள்களுக்கு முன்பு விடுவித்தனர்.

இன்னும் 6 படகும், 67 இந்தியர்களையும் விடுவிக்கவில்லை. அவர்களின் நிலைகுறித்து தெரியவில்லை. ஆனால் அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படை கப்பல் மூலம் பயிற்சி

இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்தியக் கடற்படை கப்பல் அந்நாட்டுக்கு போய் சேர்ந்தது.

திரிகோணமலை துறை முகத்தை சனிக்கிழமை அடைந்த "ஐஎன்எஸ் மகர்' கப்பலை அந்நாட்டுக் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கைக் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இந்தியக் கப்பலுக்கும், அதில் சென்ற இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கைக் கடற்படையில் 100 அதிகாரிகள் பயிற்சியில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் மகர் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் கடல்வழி தொலைதொடர்பு, எதிரிகளின் தாக்குதலில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்படும் நேரத்தில் எவ்வாறு துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு அளிக்கப்படவுள்ளன.

மீனவர்கள் விடுவிப்பு: இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரை அந்நாடு விடுவித்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகும் திரும்ப அளிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களை இலங்கை விடுவித்துள்ள நிலையில், அந்நாட்டு மீனவர்கள் 6 பேரை இந்தியாவும் விடுவித்துள்ளது.

குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த 108 புலிகள்: விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய 108 பேர் அவர்களது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தனர்.

புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய அவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அவர்களின் விருப்பம், திறமைக்கு ஏற்ப தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிறைவடைந்த நிலையில் அவர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...