17 நவம்பர், 2010

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் அனுஷ்டிப்பு இன்று ஆரம்பம்

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிக்கின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பு இன்றிலிருந்து ஆரம்பமாகிறது. இதனையொட்டி அலுத்மாவத்தையில் உள்ள ஸ்ரீ நாகராஜ பெருமான் ஆலயத்தில் விஷேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிக்கின்றனர். அவர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் பக்தி, வைராக்கியத்துடன் விரதம் இருந்து பின்பு யாத்திரை செய்து ஐயப்ப சுவாமியை தரிசித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று ஐயப்ப சுவாமியை தரிசித்து விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து தமது விரதத்தை ஆரம்பித்தனர்.

நம் நாட்டிலும் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும் ஆன்மிகத்தில் ஈடுபட்டு, மாலை அணிந்து, மனதை ஒருநிலைப்படுத்தி ஆன்மிகத்தில் தொண்டாற்றி வருவது ஆன்மிகத்தின் மகிமைக்கு சான்றாக இன்று பல இளஞர்கள் மாலை அணிவதை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் முதல் முறையாக மாலை போட்டு சபரிமலை யாத்திரை செல்லும் கன்னி சுவாமி மார்கள் முக்கியமாக இன்று மாலை அணிந்து தனது 41 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பை ஆரம்பித்தனர். சபரிமலை செல்லும் பெண்கள் பக்தர்கள் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பர். இது தூய்மையான விரதமாகும். கார்த்திகை முதலாம் திகதி குரு சுவாமியின் துணையோடு துளசிமாலை அணிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இவர்கள் கோயில்களில் அர்ச்சனை வழிபாடு செய்து கோயிலில் வைத்து குருக்கள் மூலமாகவும் மாலை அணிந்துகொள்ளலாம். மாலை அணிந்த பின் சுவாமி என்ற பெயராலேயே அந்த பக்தர் அழைக்கப்படுகின்றார். அந்த புனிதமான பெயருக்கு உடையவராகி விட்டால் அதற்குரிய தூய்மையை நேர்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தீய எண்ணங்களையும் பழக்கங்களையும் முழுமையாக கைவிட வேண்டும். காலை, மாலையில் நீராடி விரதம் அனுஷ்டித்து, கோயில் பஜனைகளிலும் கூட்டுப்பிரார்த்தனைகளிலும் பங்கெடுத்து கொள்ளவேண்டும். பக்தர்கள் சாந்தம் வைராக்கியம் தீரம், தியாகம் ஆகிய குணங்களை உடையவர்களாக இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பிரம்மச்சரிய விரதத்தை திடமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விரதங்களில் இந்த பிரம்மச்சரிய விரதம் தலையானதாகும். காலில் காலணி அணியக் கூடாது. கறுப்பு, நீலம், காவி வேட்டி, சட்டையும் மேல் துண்டும் அணிய வேண்டும். இந்த விரத உடையின் கருத்து யாதெனில் குருடன் கையில் இருக்கும் விளக்கு போன்றதாகும்.

ஆம், குருடனுக்கு விளக்கினால் பயனில்லைதான். அந்த விளக்கின் உதவியினால் வேறு மனிதர்கள் பக்தர்கள் மீது மோதாமல் தடுக்க இயலுமே. அசுத்தங்கள் பக்தர்களை அணுகாமல் இருக்கும்.

விரதங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாக முழுமனிதனாகப் பக்தர்கள் தங்களைப் பூரணமாகவே புரிந்துகொள்ளவும் அதன்படி நல்ல மனிதர்களாக வாழவும் தெரிந்து கொள்கிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா திடீர் சுகவீனம் : வைத்தியசாலையில் அனுமதிமுன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பிய பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

முந்தலில் கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

பள்ளம வீதியில் அமைந்துள்ள முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவால ஹந்தி எனுமிடத்தில் விற்பனைக்கென எடுத்து வரப்பட்டதாகச் சொல்லப்படும் கஜமுத்துக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று யானைத் தந்தங்களில் இருந்து எடுக்கப்பட்ட கஜமுத்துக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக முந்தல் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இந்த கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு பொலிசார் சென்ற போது அங்கிருந்த மேலும் மூவர் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த வானும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ அலவத்தை தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல : சபாநாயகர்

உள்ளூராட்சி மன்ற (விஷேட ஏற்பாடுகள்) மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களோ அவற்றின் எந்தவொரு சரத்துக்களோ அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

மேற்படி விடயங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இது தொடர்பில் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் அறிவித்தல் நேரத்திலேயே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதனை அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஆற்றுப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற (விஷேட ஏற்பாடுகள்) மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்தம்) எனும் சட்ட மூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை 50 (2) (இ) எனும் நிலையியற் கட்டளையின் கீழ் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க விரும்புகிறேன். மேற்கூறப்பட்ட சட்ட மூலங்களோ அவற்றின் எந்தவொரு சரத்துக்களுமோ அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல வென்று அரசியலமைப்பின் 123 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நஞ்சருந்திய நான்கு மாணவிகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி : யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்.வலிகாமம் கல்வி வலய பாடசாலையொன்றைச் சேர்ந்த நான்கு மாணவிகள் நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தத்தை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையைச் சேர்ந்த க.பொ.த சாதாரண மாணவிகளை நேற்று முன்தினம் சம்பவம் ஒன்று தொடர்பாக அதிபர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நேற்று பாடசாலைக்கு வரும்போது தம்முடன் எடுத்து வந்த மென் பானத்துடன் பாடசாலையில் இருந்த சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட திரவத்தைக் கலந்து உட்கொண்டுள்ளனர். இதனால் மயக்கமடைந்தனர்.

இதனைக் கண்ட ஏனைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர் உதவியுடன் சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இச் சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பதவியேற்புக்கு 500 கோடி ரூபா செலவிடும் அரசு ஏன் சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாது?: ரணில்

யுத்தம் முடிவடைந்துள்ள போதும் பாதுகாப்புக்கான செலவினங்கள் 1,400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாண நிகழ்வுக்காக சுமார் 500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறான செலவினங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தால் ஏன் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

யுத்தம் முடியும் வரை பொறுத்திருங்கள். சம்பள உயர்வு உட்பட பல்வேறு நிவாரணங்கள் பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். தற்போது யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பான அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பு ஐ.தே.க. தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. அதன் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது,

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலையிலேயே அரசாங்கம் வீணான செலவுகளை செய்து வருகிறது.

இரண்டு வருடத்திற்கு முன்னர் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபாய் சம்பள உயர்வினை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அதனையும் வழங்கவில்லை. அன்று இருந்த பொருட்களின் விலையல்ல இன்றுள்ளது. எனவே இன்று அதை விட அதிகமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அதாவது அரச ஊழியர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பினை வழங்க வேண்டும். அதற்கு சமனாக தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பினை வழங்க வேண்டும். இதன் முதற்கட்டமாக 4500 சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குவதுடன் எஞ்சிய நிலுவைத் தொகையுடன் ஒரு வருடத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

திஸ்ஸ அத்தநாயக

பாராளுமன்றத்தில் கூச்சலிடும் அமைச்சர் ஒருவருக்கான மாதாந்த வீட்டு வாடகை ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படாதுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியினுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நல்ல பதவிகள் கொடுக்கப்படுகிறது. அவர்களின் நண்பர்களுக்காக சூதாட்ட சட்டமூலத்தையும் நிறைவேற்றியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை செய்து வருபவர்கள் மக்களுக்கான சம்பள உயர்வினையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று சிறிகொத்தாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக, எம்.பி.க்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கௌரவத்துடனான சமாதானம் நிலைத்திருப்பதற்கு தியாகத்திருநாளில் இறைவனை பிரார்த்திப்போம் : ஜனாதிபதி


அனைத்து மக்களுக்கும் கௌரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைத்திருக்கவேண்டி, இன்றைய தினத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்யவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இப்பெருநாள் வசதிபடைத்தோர்கள் ஆவலோடு மேற்கொள்ளப்படுகின்ற புனித ஹஜ் யாத்திரையையும் இஸ்லாம் மார்க்கத்திலுள்ள உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது. இந்த வருடமும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து சுமார் 6,000 யாத்திரிகர்கள் புனித மக்கா சென்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றும் ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இஸ்லாம் போதிக்கின்ற இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களோடும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் ஐக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புகளைச் செய்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதோடும், அதனைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகின்றனர்.

பயங்கரவாதத்தினால் தங்களது சொந்த இருப்பிடங்களை வீட்டும் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்காக முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.

முஸ்லிம்கள் இன்றைய நாளில் கௌரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைத்திருக்கவேண்டி பிரார்த்திப்போம் என்பதில் சந்தேகமெதுவுமில்லை.
மேலும் இங்கே தொடர்க...

அத்துமீறிக் குடியேறியவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கைநாவற்குழியிலிருந்து வெளியேறுமாறு அத்துமீறிக் குடியேறியவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கையாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் விமல் வீரவன்சவும் தம்மிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள சிங்கள மக்களைச்சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி நல்லதோர் முடிவை ஏற்படுத்த அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியும் அமைச்சர் விமல் வீரவன்சவும் என்னுடன் காலையில் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.

இன்று (நேற்று) நான் அவர்களை சந்தித்து ஜனாதிபதியின் செய்தியை தெரிவித்து நல்லமுடிவை ஏற்படுத்துவேன் என்று பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுக்காலை (16) யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முதலீட்டு அபிவிருத்தி கருத்தரங்கையும் இயந்திரசாதனங்களின் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க சபையின் தலைவர் உதயஸ்ரீ காரியவசம் பொது முகாமையாளர் திருமதி ஜஸ்மின் மன்னம்பெரும உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டத்துக்கு புறம்பாக தமிழராகிலும் சரி சிங்கள மக்களாயினும்சரி அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்.

மஹிந்த சிந்தனை செயற்றிட்டத் துக்கமைவாக தொழில் உருவாக்க நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஊடாக நாடளாவிய ரீதியில் தொழில் விருத்தித் திறமையை கிராமிய மட்டங்களில் உருவாக்கக் கூடியதொரு வேலை திட்டம் அவசியமாகவுள்ள இச்செயல்திட்டத்தை இன்றைய தினம் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் நடத்தப்படுகின்ற இம்முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டமானது தொழில்விருத்தித் திட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமையுமென நான் நம்புகிறேன்.

வட மாகாணத்தில் செயல்படுகின்ற கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் திட்டம் அவசியமாகவுள்ள இச்செயல்திட்டத்தை இன்றைய தினம் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் நடத்தப்படுகின்ற இம்முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டமானது தொழில்விருத்தித் திட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமையுமென நான் நம்புகிறேன்.

வட மாகாணத்தில் செயல்படுகின்ற கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகமானது பல்வேறு உற்பத்தி முறைகளை கைத்தொழில் முயற்சியாளர் களுக்கு அறிவுபூர்வமாக வழங்கக்கூடிய தொழில்நுட்ப வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதால் வட மாகாணத்தில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது.

குறிப்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கிட்டவுள்ளதுடன் சுய முயற்சியாளர்கள் தொழில்களை ஆரம்பிக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கியத்தை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும் பிரதமர்

சமாதான சூழலில் அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டு வரும் இவ் வேளையில் இலங்கையின் மத ஐக்கியம் மற்றும் அதற்கு தேவையான சமூக பின்புலத்தை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன அவரது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியதாவது; சர்வமத ஐக்கியத்துக்கு ஊடாக நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகும்.எனவே இந்த ஹஜ்ஜுப் பெருநாளில் மத மற்றும் தேசிய ஒற்றுமை மூலம் நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே நாம் செய்ய வேண்டியதாகும்.

வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக ஹஜ் பெருநாளை கொண்டாட இம் முறை வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டியதன் மூலமே அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள் ளது.

அனைத்து மதங்களிலும் கூறப்படும் மனிதாபிமானம், ஐக்கியம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இஸ்லாம் மதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்தின் மூலம் கூறப்படும் மத அனுஷ்டிப்பு ஒரு நாட்டின் முன்னேற்ற த்துக்கு உந்து சக்தியாக அமைகிறது என்று பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு 100 உழவு இயந்திரங்கள் விநியோகம்


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் நூறு அடுத்த வாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிகழ்வின் போதே இவை விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாண விவசாயிகளின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளு க்கிணங்க இந்திய அரசாங்கம் ஐநூறு நான்கு சக்கர உழவு இயந்திரங்களை வழங்க வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இவற்றில் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்களில் 52 கடந்த வாரம் வவுனியா பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

எஞ்சிய உழவு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்


சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றபோதிலும், ரிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜயசேகர தெரிவித்தார்.

றிசானாவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னருக்குக் கருணை மனுவொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த வீட்டுரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மன்னர் தமது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சவூதி அரேபிய அரசிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்று வெளிவிவார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

குழந்தையை மலக்குழிக்குள் வீசிய தாய் ஆஸ்பத்திரியில்

தான் பெற்றெடுத்துள்ள பச்சிளங் குழந்தையை மலசல குழிக்குள் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள தாய் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (16) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக குறுதிப் போக்குக் காரணமாகவே குறித்த தாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடுமையான சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் குழந்தையொன்றை பிரசவித்து மலசல குளியொன்றினுள் தூக்கி வீசி விட்டு கடந்த 14ம் திகதி தன் கணவனுடன் மற்றும் ஏனைய தமது குழந்தைகளுடனும் இவர் தலைமறைவாகி உள்ளார்.

குறித்த தாய் நேற்று முன்தினம் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் சமயம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...