நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வை எட்ட உடன்படுவோம் : டக்ளஸ் தேவானந்தா
|
படிப்பினைகளாக ஏற்று சம்பந்தப்பட்ட தமிழ் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கு உடன்பட்டு வரவேண்டும். இந்த எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் மட்டுமே நான் சுவிஸ் மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன்."
இவ்வாறு ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் ஊடகங்களுக்கான விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :
"நடந்து முடிந்த சுவிஸ் மாநாடு தமிழ்ப் பேசும் கட்சிகளுக்கிடையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கான ஓர் ஆரம்பம் மட்டுமே.
தமிழ் பேசும் கட்சிகளுக்கு மத்தியில் ஓர் ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில் சுவிஸில் நடந்து முடிந்த மாநாடு, தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கான ஆரம்ப நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அந்த மாநாட்டில் தீர்க்கமான முடிவுகள் எதையும் கூட்டாக எட்ட முடியவில்லை.
எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள இவ்வாறான மாநாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்த நடைமுறை சாத்தியமான தீர்க்கமான முடிவுகளுக்கான முயற்சிகளை நோக்கிச் செல்லலாமென நான் நம்புகிறேன்.
இவ்வாறான மாநாடுகளின் நிகழ்ச்சி நிரல் என்பதை ஏற்பாட்டாளர்கள் தயாரிப்பதை விடுத்து, அதில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சிகளின் தலைமைகளே தயாரிக்க வேண்டும். பிறநாடுகளில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் ஏற்கனவே தோல்வி கண்டுள்ளன.
தடையற்ற சுதந்திர சூழ்நிலை
கடந்த காலங்களில் இது போன்ற முயற்சிகளுக்கு புலிகளின் தலைமை பிரதான தடையாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தற்போது அவ்வாறான தடைகள் இல்லாத சுதந்திரமான நிலை உருவாகி உள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் கடந்த காலங்களில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்ப் பேசும் அரசியல் தலைமைகள் பலவும் நடைமுறைக்குச் சாத்தியமான வழிமுறையினை ஏற்று செயற்பட்டிருக்கவில்லை.
எட்ட முடிந்த அரசியல் இலக்கு நோக்கி செல்வதற்கு கற்பனைக்கு எட்ட முடியாததும், வெறுமனே சலசலப்பு காட்டுவதற்கும் மட்டுமான வெறும் சுயலாபங்களுக்கான எதிர்ப்பு அரசியலையே நாம் முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
இதன் காரணமாகவே எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயிருப்பதோடு எமது மக்களை இன்று அவலங்களுக்குள் சிறைப்பட்டிருக்கவும் நிர்ப்பந்தித்திருக்கிறது.
கடந்த கால அனுபவங்களைப் படிப்பினைகளாக ஏற்று சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கு உடன்பட்டு வரவேண்டும்.
மக்கள் நலன்நாடி சிந்திப்போம்
இத்தகைய எதிர்பார்ப்புகளோடும், நம்பிக்கையோடும் மட்டுமே நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தேன். இந்த மாநாட்டை ஓர் ஆரம்பத் தளமாகக் கொண்டு சக தமிழ்ப் பேசும் தலைமைகள் யாவும் எமது மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து நடை முறைக்கு சாத்தியமான விடயங்கள் குறித்து எதிர்வரும் மாநாடுகளில் தீர்க்கமான முடிவுகளுக்கு வர வேண்டும்.
இல்லாவிட்டால் எமது மக்கள் தொடர்ந்தும் அரசியல் உரிமைகள் அற்றவர்களாகவும், அவலங்களைச் சுமப்பவர்களாகவுமே இருப்பார்கள்.
வன்னியில் இருந்தும், அதி உயர் பாதுகாப்பு வலயங்களினாலும் வெளியேறிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட எமது மக்களை மீளக்குடியமர்த்துவது, அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை முன்னெடுத்தல், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டோ, அன்றி சரணடைந்த நிலையிலோ தடுத்து வைக்கபட்டிருக்கும் புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் புனர்வாழ்வு அளிப்பது- காணாமற்போனவர்கள் தொடர்பில் உண்மையினை அறிய ஒரு சுதந்திரமான குழுவினை அமைத்தல் மற்றும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆரம்பிப்பதில் இருந்து தொடங்கி சுயாட்சியை நோக்கிய இறுதி இலக்கை எட்டுவது போன்ற அரசியல் தீர்வு குறித்த விடயங்களையும் இலங்கை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அளப்பரிய அர்ப்பணங்களைக் கடந்த காலங்களிலும் நாம் ஆற்றியிருந்தோம்.
இன்றைய சமகால சூழலுக்கு ஏற்றவாறு சுயநிர்ணய உரிமை குறித்து தடைகள் இன்றி அரசியல் தீர்வு நோக்கி எம்மால் முன்னேற முடிந்திருக்கின்றது.
பயணத்தைத் தொடர்வோம்
மக்களின் மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி. அதற்காக நாம் நடைமுறை சார்ந்து நின்று, எடுத்த பயணத்தைத் தொடர்ந்தும் நடத்தியே முடிப்போம்.
சம்பந்தப்பட்ட தமிழ்ப் பேசும் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறைக்கு வருவதற்கான சந்தர்ப்பம் இன்னமும் இருக்கின்றது.
எமது மக்களின் மகிழ்ச்சி கருதி கடந்த காலங்களில் நாம் சந்தித்திருந்த கசப்பான அனுபவங்களை மறந்து, ஐக்கியத்திற்கான எமது கதவுகளைத் தொடர்ந்தும் திறந்து வைத்திருக்கின்றோம்." இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...