7 ஜூன், 2010

இந்தியாவின் தாளத்துக்கு ஆடுகிறது இலங்கை : ஜே.வி.பி கூறும் அதிரடித் தகவல்


இந்தியாவின் தாளத்துக்கு நன்றாகவே ஆட்டம்போடுகிறது இலங்கை. நமது நாட்டு அரசியலில் எது,எப்போது நடந்தாலும் அதனை இந்தியா நன்கு அறிந்துவைத்திருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புலி முத்திரை குத்தி பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அக்கட்சியின் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது” என ரில்வின் சில்வா அங்கு மேலும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தால் நாம் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் கோபமான தொனியில் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவைத் தூக்கிலிட முடியும் - கோத்தபாய

இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவைத் தூக்கிலிட முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பி.பி.சி தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான கார்ட் ரோக் நிகழ்சிச்சியில் கலந்து கொண்ட இவர் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சரத் பொன்சேக்கா வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் செய்தியாளர் கேள்விகளைக் கேட்ட போது ஆத்திரமடைந்த கோத்தபாய ராஜபக்ஷ போர்க்குற்றங்கள் குறித்து சரத் பொன்சேகா தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் தேசத் துரோகம் செய்கின்றார். அவரைத் தூக்கிலிட வேண்டும் என கோபமாகத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

மாளிகாகந்த நீதிமன்ற சிறையிலிருந்து 11 பேர் தப்பி ஓட்டம்

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், விசேட தடுப்புப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்த 10 கைதிகளும் ஒரு சந்தேக நபரும் தற்காலிக சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்கள பேச்சாளரும் ஆணையாளருமான கெனித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டிருந்தமையால் இந்தக் கைதிகளும் சந்தேக நபரும் விசேட தடுப்புப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர். மகசீன் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த வேளையிலேயே இவர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர் எனச் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவை ஈ.பி.டி.பி.யும் சந்திக்கிறது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்னு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. குழுவி னர் சந்தித்து பேசவுள்ளனர். இது குறித்து ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். இன்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்கிறார். இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது. இந்தக் கூட்டுப் பிரகடனத்தில் யாழ். குடாநாட்டின் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், யாழ். நகர கலாசார கேந்திர மற்றும் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை தொடர்பிலான மேம்பாட்டு விடயங்களும் உள்ளடக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புதுடில்லி வரும் மகிந்தவிடம் இரு முக்கிய விடயங்களைப் பேச வேண்டும்: தமிழக முதல்வர்

புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருபிரதான விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்திப் பேச்சு நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்கோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான நிரந்தரத் தீர்வுக் காண்பது மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் விரைவாக மீள் குடியேற்றப்படுவது ஆகிய இரு விடயங்கள் குறித்தே கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அவர் தமது கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 8 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் உட்பட முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இக்கோரிக்கைகள் அடங்கிய அவசர கடிதமொன்றை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் அனுப்பி வைத்துள்ள கடிததத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நிலையில் பல்வேறு முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் 6 மாதக் காலத்தில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார்.

ஆயினும், சுமார் 80 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இலங்கையில் முகாம்களில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, எஞ்சியுள்ளவர்கள் மீள் குடியேற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மீள் குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் நீதியான நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

புதுடில்லி வரவிருக்கும் இலங்கை ஜனாதிபதியுடன் தாங்கள் இந்த இரு விடயங்கள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்திப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் மீள் குடியேற்றத்தையும், மீள் கட்டுமானப் பணிகளையும் விரைவுபடுத்துமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமது அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் போதிய மனநிறைவை அளிக்கவில்லையெனவும், இனிமேலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் தி.மு.க.வின் உயர்நிலைக் கூட்டம் அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றபோது பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய விஜயத்தின்போது மன்மோகன் சிங், சோனியா பிரதீபா, கிருஷ்ணா உட்பட பலரையும் ஜனாதிபதி சந்திப்பார்

இந்தியாவுக்கு நாளை செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க , ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது பாதுகாப்பு உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்க சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ“.எல். பீரிஸ் அங்கிருந்தவாறே இந்தியாவின் புதுடில்லியை சென்றடைவார் என்றும் தெரியவருகின்றது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினர் அங்கு 11 ஆம் திகதிவரை தங்கியிருப்பர் என்றும் இதன்போது சில உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பன கைச்சாத்திடப்படும் என்றும் வெளிவிகார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை குழுவினரின் விஜயம் தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் நேற்று மாலையே புதுடில்லிக்கு விஜயம் செய்ததாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. இந்திய தலைவர்களுடனான சந்திப்புக்களின்போது தேசிய பிரச்சினை தீர்வுத்திட்டம், வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்ற விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தெரியவருகின்றது.

இந்திய விஜயத்தின்போது பொருளாதார விடயங்கள் குறித்து ஆராயப்படுவது முக்கிய அம்சமாக அமையும் என்று கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலைமையில் சில அமைச்சர்கள் இடம்பெறு வார்கள் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

இதேவேளை கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

"ஐஃபா'வைக் காட்டி பாதகமான "சீபா'வில் அரசாங்கம் கைச்சாத்திடப் போகின்றது-விஜித ஹேரத்அரசாங்கம் நாட்டு மக்களுக்கு "ஐஃபாவை' காட்டி, நாட்டுக்குப் பாதகமான "சீபா' உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகிறன்றது. அரசின் இத்தகைய செயல் ""தங்கையைக் காட்டி அக்காவைத் திருமணம் செய்து வைப்பது'' போன்றதாகும் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

"சீபா' என்பது என்னவென தனக்கே தெரியாதென்கிறார் ஜனாதிபதி.

எனவே அதில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகளை பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

கொழும்பு 7 இலுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

2003 ஆம் ஆண்டு "சீபா' (பரந்தளவிலான பொருளாதார நல்லிணக்க) உடன்படிக்கை தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

2005 ஆம் ஆண்டு நகல் வடிவம் பெற்று இலங்கையில் இடம்பெற்ற சார்க் மாநாட்டின் போது இதில் அரசாங்கம் கைச்சாத்திடவிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைப்புக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் கையெழுத்திடுவது கைவிடப்பட்டது.

தற்போது சீபாவில் கையெழுத்திட வேண்டுமென இந்திய தரப்பிலிருந்து கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் இதில் நிச்சயம் கையெழுத்திடும். எனவே அதற்கு முன்பு பாராளுமன்றத்திடமும் அமைச்சரவைக்கும் முன் வைக்கப்படாத உடன்படிக்கை விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். சீபாவில் என்ன இருக்கின்றதென தனக்கே தெரியாதென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது நகைப்புக்குரிய விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் சீபா தொடர்பிலான விபரங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும்.

ஏனெனில் இதேபோன்று இந்தியாவுடன் "சப்டா' உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாக எதுவும் ஏற்படவில்லை. நாம் 100 வீதமான ஏற்றுமதியை மேற்கொண்டோம். ஆனால் இந்தியா 500 வீத ஏற்றுமதியை எமது நாட்டுக்குள் மேற்கொண்டது. இதனை விட பயங்கரமான உடன்படிக்கையே சீபாவாகும். இதனால் இலங்கையின் உற்பத்தியாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். இந்தியாவின் விசாலமான உற்பத்திகள் இங்கு ஆரம்பிக்கப்படும்.

இதனால் தேசிய உற்பத்தியாளர்கள் பாதிப்படைவார்கள். அத்தோடு இந்தியாவிலிருந்து வைத்தியர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், கணினி நிபுணர்களென, ஊழியர்களுக்கும் இங்கு வந்து தொழில்புரிய கதவுகள் திறக்கப்படுகின்றன.

இதனால் தேசிய உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைவார்கள். உள்ளூர் தொழிலாளர்கள் தொழில்களை இழப்பார்கள். மொத்தத்தில் எமது நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடையும். எனவே இதனை பாராளுமன்றத்தில் முன் வைத்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து ஷல்மான்கானையும், ஐஸ்வர்யாராயையும் காண்பித்து மக்களை மோக வலையில் சிக்க வைத்து அரசாங்கம் சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்
மேலும் இங்கே தொடர்க...