இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க வவுனியாவில் 48 சாவடிகள்
மெனிக்பாம் நிவாரணக் கிராமம் உட்பட வவுனியா நகருக்குள் இடம்பெயர்ந் துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 48 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக 55 பஸ் வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரி தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த வவுனியா நகரிலுள்ள இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் அந்தந்த பகுதிக்குச் சென்று வாக்களிப்பதற்காக தேர்தல் தினத்தன்று காலை 6.00 மணிக்கு காமினி மகா வித்தியாலயத்திலிருந்து புறப்படும் பஸ் வண்டிகளில் செல்ல முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாயின் அவர்கள் வாக்களிக்க வுள்ள வாக்குச் சாவடியின் விபரம், இடம்பெயர்ந்த வாக்காளர்களாக பதிவு செய்ததற்கான ஆவணம் என்பவற்றுடன் பஸ் வண்டிகளூடாக செல்ல முடியும். ஒவ்வொரு பஸ் வண்டியிலும் தெரிவத் தாட்சி அதிகாரியினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் செல்வார்.
வவுனியா நகருக்குள்ளும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை அழைத்துச்செல்வதற்கு எனவும் 77 தனியார் பஸ் வண்டிகளை சேவையிலீடுபடுத்த தெரிவத்தாட்சி அதிகாரி பீ. எம். எஸ். சார்ள்ஸ் திட்டமிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக விண்ணப்பிக்குமாறு விடுத்த அறிவித்தலின் பின்னர் விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட, விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கும் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என அறிவித்ததன் பின்னர் சுமார் 3700 பேர் இதுவரையில் மேலதிகமாக பதிவு செய்துகொண்டுள்ளனர்.
இவர்களுக்கென விசேட டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்களிக்கச் செல்லும் போது இந்த டோக்கன்களையும் எடுத்துச் செல்லலாம். வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் வவுனியா தபாலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் குறிப்பாக மெனிக்பாம், மற்றும் வவுனியா நகரிலுள்ளவர்கள் வாக்களிப்பதற்காகத் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு ஆளடையாள அட்டை இல்லையெனில் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக 2009 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் 2009 டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரையில் வழங்கப்பட்ட 1,50,000 முதல் 2,38,326 வரையிலான தொடரிலக்கம் கொண்ட பொலிஸாரினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வாக்களிப்புக்காக பயன்படுத்தலாம்.
இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கு மெனிக்பாம் வலயம் – 2 இல் ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் 16 வாக்குச் சாவடிகளும், வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் 32 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – மன்னார் - கிளிநொச்சி செல்ல வேண்டியவர்கள் காலை 6.00 மணிக்கு முன்னதாக வவுனியா காமினி மகா வித்தியாலயத்துக்கு வரவேண்டும்.
வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வலய கட்டளையிடும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள், வன்னி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...