11 ஜூலை, 2010

ஐ நா கட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்- வெளிவிவகார அமைச்சு தகவல்

ஐக்கிய நாடுகள் கட்டமைப்பில் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படப் போவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் வெளி விவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தெளிவான உறுதியை வழங்கியுள்ளதாக அமைச்சின் அதிகாரி யொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த காரியாலயத்தின் அன்றாட நட வடிக் கைகளுக்கு இடையூறுகள் ஏற்படு வதாகவும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அர சாங்கம் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதாக வும் ஐக்கிய நாடுகள் சபை சுமத்தியிருந்த குற் றச்சாட்டுக்கு பதிலளிக்கும் முகமாகவே வெளி விவகார அமைச்சு இந்த கருத்துக்களை வெளி யிட்டுள்ளது. அதேவேளை, அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் உரிமை ஜனநாயக முறைமையின் ஒரு அடிப்படை அங்கம் என வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பிராந்திய காரியாலயத்தை மூடுவதற்கு செயலாளர் நாயகம் எடுத்துள்ள தீர்மானம் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் வகையில் அமை வதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த காரியாலயம் ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த 34 நாடுகளுக்கு சேவையாற்றும் ஒன்றாக அமைந்துள்ளது. எவ் வாறாயினும் இந்த காரியாலயத்தை மூடுவதற் கான தீர்மானம் கடந்த வருடமே மேற்கொள் ளப்பட்ட விடயம் என ஐக்கிய நாடுகளின் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

எனினும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தற் போது நிலவும் சூழ்நிலைக்கு ஏதுவானதாக அமைந்தது என இலங்கையின் வெளியு றவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள கருத் தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந் நிலையில் ஐக்கிய நாடுகளின் கொழும்பு காரியாலயத் திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வேறு சில நாடுகள் அறிக்கை விடுத்துள்ளன. இந்த போராட்டங்கள் காரணமாக ஐக்கிய நாடுகளின் காரியாலயம் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக, ஐக்கிய அமெ ரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து அகதிமுகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்தும் 93 குடும்பங்கள் அகதிகளாக உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 37 குடும்பங்களைச்சேர்ந்த 212 பேரும் செங்கலடி பிரிவைச்சேர்ந்த 53 குடும்பங்களைச்சேர்ந்த 221 பேரும் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 36123குடும்பங்களைச்சேர்ந்த 123907பேர் மீளக்குடியமர்த்தப்படடுளள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்திருக்கிறது-த.தே.கூ.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்திருப்பதாக தமிழ்தேசியகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கருதது தெரிவித்த தமிழ் தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இந்திய பயணம் எதிர்பாராத வெற்றியைத்தந்துள்ளது.

இந்தியபிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச்சந்தித்து வடகிழக்கு மக்களின் நிலைமையை விளக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன் முழுமையான அரசியல் விருந்தினர்களாகவும் சென்றுள்ளனர்.

இந்தியஅரசாங்கத்தினால் வடகிழக்ககில் முன்னெடுக்கப்கடும் அபிவிருத்திப்பணிகள் யாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அரசியல் தீர்வு குறித்து ஆடுத்த கட்டமாக பேச்சு நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

ஜோன் ஹோம்ஸின் இடத்திற்கு புதியவர் நியமனம் ஐ.நா. செயலர் அவசர நடவடிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய ஜோன் ஹோம்ஸின் இடத்துக்குப் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவுக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றும் திருமதி வெலேரி அமோஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனினால் ஹோம்ஸின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதா அவரின் இணைப் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இதுவரை காலம் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் பான் கி மூன் புதியவர் அந்தப் பணியைத் திறம்பட மேற்கொள்வாரென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இலங்கை அரசாங்கத்தரப்பால் முன்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

விமலின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ஜனாதிபதி


கொழும்பு ஐ. நா. தலைமை அலுவலகத்திற்கு முன்னால் வியாழனன்று விமல் வீரவன்ச ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜனாதிபதி நேற்று மாலை முடித்து வைத்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு நீராகாரம் கொடுத்து நிறைவு செய்து வைத்தார்.

மூன்று நாட்களாக நீருமின்றி உண்ணாவிரதம் இருந்து வந்த வீரவன்ச நேற்று நண்பகல் மிகவும் சோர்வடைந்திருந்தார். மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய இவருக்கு நேற்று நண்பகல் அளவில் சேலைன் ஏற்றப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ பி.ப. 3 மணியளவில் அந்த இடத்திற்கு விஜயம் செய்து விமல் வீரவன்சவின் நிலையைப் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்து விமல் வீரவன்சவை பார்வையிட்டதோடு, அவரோடு உரையாடி நீராகாரம் வழங்கினார்.

இதன்பின்னர் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மிகவும் சோர்வடைந்த நிலையில் நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தம்மை போராட்டத் திலிருந்து பலவந்தமாகக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி முயற்சிக்கக் கூடாதென்றும் தாம் அதனை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

தாம் மரணமடைய நேர்ந்தால், அதற்கான பொறுப்பை செயலாளர் நாயகம் பான் கி மூனும், இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியுமே பொறுப்பு என்றும் விமல் வீரவன்ச எம்.பி. கூறினார்.

இலங்கை விவகாரமாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் நியமித்துள்ள விசேட நிபுணர் குழுவைக் கலைக்குமாறு வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை (08) காலை 10.15 முதல் விமல் வீரவன்ச எம்.பி. உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார். நேற்று மூன்றாவது நாளாகவும் அவர் போராட்டத்தைத் தொடர்ந்ததால் மிகவும் உடல் சோர்ந்து மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டார்.

நேற்றுப் பிற்பகல் அளவில் அவரது உடல் நிலை மோசமடையவே, அவருக்கு சேலைன் வழங்கப்பட்டது. உடல் நிலை யைக் கண்காணிக்கவென இரண்டு தாதி யர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். எவ்வாறெனினும், தாம் மரணிக்கும் கட்டத்தை அடைந்தாலும், உண்ணா விரதத்தை முடித்துவைக்க எவரும் பல வந்தமாக நடவடிக்கை எடுக்கக் கூடாதென விமல் வீரசன்ச எம்.பி. தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை: ஐரோ. ஒன்றிய தூதுவர்களுடன் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பேச்சு அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளின் தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் நேற்று முன்தினம் (09) அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வெளிவிவகார பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தனவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

கடந்த ஜூன் 17ஆந் திகதிய ஐரோப்பிய ஆணைக் குழுவின் கடிதம் தொடர்பில் கடந்த 24ஆம் திகதி அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டமை குறித்தும் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையும் கால அவகாசத்தையும் அரசாங்கம் நிராகரிக்க மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னணி பற்றி பேராசிரியர் பீரிஸ், இந்தச் சந்திப்பின்போது தெளிவுபடுத்தியுள்ளார். பொதுமக்களின் நலன் கருதியும் தேசிய பாதுகாப்பை முன்னிட்டும் சில மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தற்போதைக்கு நீக்க முடியாதென்றும், பின்னர் பரிசீலிக்க முடியுமென்றும் பேராசிரியர் பீரிஸ் விளக்கியுள்ளாரென்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கைக்கு ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகையை வழங்குவது தொடர்பாகத் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் விடுத்திருந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், இலங்கை மக்களுக்கு ஜீ. எஸ். பீ. சலுகையைப் பெறுவதைப் பற்றிய வழிகளை ஆராய்வதுடன், ஜூன் 17 ஆம் திகதிய கடிதத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அரசாங்கம் இல்லையெனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆணைக் குழுவின் ஜூன் 17, 2010 திகதிய கடிதம் தொடர்பில் விளக்கமளித்தமைக்காக நன்றி தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இலங்கை அரசாங்கத்தின் கருத்துகளை ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கையின் கெளரவத்தையும் இறைமையையும் சமரசம் செய்யாத ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பரிசீலிக்கத் தயாரென்று அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித் துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நைஜீரியா: பையில் 70 குழந்தைகளின் சடலங்கள் வைத்திருந்தவர் கைது

70 குழந்தைகளின் சடலங்களை பையில் வைத்திருந்த மனிதனை நைஜீரியாவின் வர்த்தக தலைநகரமான லாகோசில் போலீஸக்ஷ்ர் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையின் சவகிடங்கில் போதிய இடமில்லாததால் சடலங்களை வேறொரு இடுகாட்டில் புதைப்பதற்கு எடுத்துச் சென்றதாக கைதானவர் கூறினார். போலீஸக்ஷ்ர் இதனை விசாரித்து வருகின்றனர்.

லாகோசின் மருத்துவமனையின் சவகிடங்குகள் சிறிய இடமாக உள்ளதால், அதிலிருந்து வரும் துர்நாற்றம் மக்களை பெரிதும் துன்புறுத்தியது நீண்ட கால பிரச்னையாகவே இருந்து வந்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனை அதிகாரிகள் சிலரை போலீஸக்ஷ்ர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்காங்கோ நாட்டுக்கான ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனெரல் சந்தர் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான்-கி-மூன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். தற்போது, இந்தியாவுக்கான ஐ.நா. அமைதி நடவடிக்கைக் குழுவின் பொறுப்பாளராக உள்ளார் பிரகாஷ். இந்திய ராணுவத்தில் 1973-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பிரகாஷ், கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

ஈரான்-இராக் நாடுகளுக்கான ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழுவில் உயர் அதிகாரியாகவும் பிரகாஷ் பணியாற்றியுள்ளார்.

காங்கோவில் தற்போது 18,884 ராணுவத்தினரும், 1,233 போலீஸக்ஷ்ரும் பணியில் உள்ளனர். இதில் இந்தியா, இலங்கை, வங்க தேசம் மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அடங்குவர்.

இதுவரை காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக செனகல் நாட்டைச் சேர்ந்த பபாகர் கயே பணியாற்றி வந்தார்.

காங்கோவில், சுகாதார மேம்பாடு, பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஈரான்: பெண்ணை கல்லெறிந்து கொல்லும் தண்டனை மறுபரிசீலனை

கல்லால் அடித்துக் கொல்லுமாறு ஈரான் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என அந்நாட்டு மனித உரிமை கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சகினா முகமதி அஷ்தியானி (43). இரு ஆண்களுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சகினாவை, கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தகவல் வெளியானதும், பல்வேறு தரப்பினரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காட்டுமிராண்டித் தனமான, மனிதநேயமற்ற செயல் இது என பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், சகினாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கல்லால் அடித்து அவர் கொல்லப்படமாட்டார் என லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்ததாக, லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதே கருத்தை ஈரான் மனித உரிமை கவுன்சில் அதிகாரி முகமது ஜவத் லரிஜனியும் தெரிவித்துள்ளார்.

கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனைக்கு மாற்றான தண்டனை வழங்க, ஈரானிய சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் நீதிபதிகள் அதை பயன்படுத்துவது கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சகினாவின் வழக்கறிஞர் அதிகாரபூர்வமாக தண்டனை மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் வரையில் சகினாவின் நிலை கேள்விக்குறிதான் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி

இலங்கையில் தமிழர் பகுதியான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அப்பகுதி இலங்கையின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு படிப்படியாக தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழர்கள் வாழ்வாதாரத்துக்கான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோஹராதலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அவர் பேசியுள்ளார். ஆனால் இலங்கை அரசு இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் மெüனம் காத்துவருகிறது.

முல்லைத்தீவு கடல் பகுதியில் மீண்டும் மீன் பிடிக்கலாம் என்று இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீன்பிடித் தொழிலில் இறங்க அவர்கள் தயாராவதற்குள் இலங்கை அரசின் நடவடிக்கை அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

நந்திக்கடல் பகுதியில் 60.45 சதுர கி.மீ. சுற்றளவில் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் உள்ளன. மருத்துவ குணம் வாய்ந்த விலை மதிப்புமிக்க மீன்களும் அப்பகுதியில் உள்ளன. இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் வருவாய் ஈட்டமுடியும் என்ற நோக்கில் அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் நந்திக் கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதற்கு சீனர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டாக்டர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அவரைத் தொடர்புகொண்டபோது இதை உறுதி செய்ய மறுத்துவிட்டார். இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் சிறப்பாக உள்ளதால் வணிக ரீதியாக அதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கையால் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் உள்ளூர் மக்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தொழில் முடக்கப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று வினோ நோஹரதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடலில் சென்று மீன்பிடிப்பதைத் தவிர மாற்றுத் தொழில்கள் தெரியாது. அப்படி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதில் போதிய மீன்கள் கிடைப்பதில்லை.

ஏற்கெனவே இப்பகுதியில் சிங்கள மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களும் கால் பதிப்பதால் தாங்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்படுவோம் என்று தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்களுக்கு ஆபத்து?

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் நிலையில், சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ள நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் புதிய தலைவலி உருவாகியுள்ளது.

இலங்கையில் சீனர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழர்கள் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் உரிமை சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பூர்வீககுடி தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் மறைமுகமாக பறிக்கப்பட்டன. இந்நிலையில் கடல் தொழிலிலும் தமிழர் பகுதிகளில் சீனர்கள் காலூன்றுவதற்கு இலங்கை அரசு உரிமை அளித்துள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழக மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய கடல் பகுதியில் சீனர்கள் அத்துமீறி மீன்பிடிக்கும் பட்சத்தில் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் சங்கடமான சூழ்நிலை உருவாகும். இந்த விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருவது கவலையளிக்கிறது என தமிழக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...