23 ஜூலை, 2010

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும்



வேண்டுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை- போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் புளொட் தலைவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் முற்றுமுழுதாக ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை எவருமே மேற்கொள்ளவில்லை. அனைவருமே புலிகள் இயக்கப் போராளிகள் பற்றியும் அல்லது புலிகள் அமைப்பில் இருக்கக்கூடிய விதவைகள் பற்றியுமே பேசுகிறார்களே தவிர மாற்று இயக்கங்களில் இருந்து விடுபட்ட கடந்தகால போராளிகள் அல்லது அந்த இயக்கங்களில் இருந்து பிரிந்த தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள் சம்பந்தமாக எவருமே கதைக்கவில்லை. இது தொடர்பாக நான் அண்மையில் அமைச்சர் டியூ குணசேகர அவர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேறு பலருடனும் கதைத்து அவர்களுடைய புனர்வாழ்வையும் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன். அல்லது இதுபெரிய சமூகப் பிரச்சினையாக உருவாகும் என்பதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக திரு டியூ குணசேகர அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நியாயமான அகதிகளை ஆஸி, ஏற்க வேண்டும் : ஐநா பிரதிநிதி

நியாயமான அundefinedகதிகளை அவுஸ்திரேலியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சர்ட் டவல் கோரிக்கை விடுத்துள்ளார்.

நியாயமான அகதிகள் என ஐக்கிய நாடுகள் சபையினால உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவுஸ்திரேலியா அவர்களுக்கான அகதி அந்தஸ்த்தை வழங்காமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான பாதுகாப்பு விசா வழங்கும் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவில் கணிசமாக குறைவடைந்துள்ளதாக ரிச்சட் டவல் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனினும் அவர்களுக்கான பாதுகாப்பு விசாக்களை வழங்குவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்னிற்பது ஏன் எனவும் அவர் விளக்கம் கோரியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தென்கொரிய போர்க்கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க விஜயம்

தென்கொரியாவிற்குச் சொந்தமான கடற்படை போர்க்கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கை வந்துள்ள வாங் ஜியோன் என்ற இந்தக் கப்பல் மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் கப்பல் வந்துள்ளதாக கொரியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த மாதத்தில் இந்தியா,பங்களாதேஷ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சொந்தமான போர்க்கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
undefined

undefined


மேலும் இங்கே தொடர்க...

இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் போர் மூளும்



மும்பை தாக்குதல் போன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் ராணுவக் கூட்டுப் பணிகள் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் புதன்கிழமை கூறியதாவது:

மும்பை தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சிறிய பயங்கரவாதிகள் குழுதான் நடத்தியது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுவிடும் அளவுக்கு அதன் விளைவுகள் இருந்தன.

இரு நாடுகளிடையே போர் ஏற்படாவிட்டாலும், போர் ஏற்படும் அளவுக்கு பயங்கரவாதத் தாக்குதல் பயங்கரமாக அமைந்திருந்தது.

இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அது இந்தியா-பாகிஸ்தான் போர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுபோன்று நடக்காதிருக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்றார் அவர்
மேலும் இங்கே தொடர்க...

இரட்டைக் குழந்தைகளுடன் தாய் உருக்கமான சந்திப்பு

ஆஸ்திரேலியாவில் அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை பெண் குழந்தைகளை அவர்களின் தாய், 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தார்.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மாலிக் (24). இவருக்கு தலை ஒட்டிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவரது வறுமையை அறிந்த ஆஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனம், 3 வயதான அந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்தன. கடந்த டிசம்பரில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 32 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை அளிக்கப்படும் அந்தக் குழந்தைகளை அவர்களின் தாய் லவ்லி மாலிக், இந்த மாத தொடக்கத்தில் சந்தித்துள்ளார்.

டாக்காவிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் வந்த அவர், இரு குழந்தைகளையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருப்பார்கள் என்றும், அவர்கள் வங்கதேசம் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்களின் தாய் லவ்லி மாலிக் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

17ஆவது திருத்தம் தொடர்பில் ஐ.தே.க., ஐ.ம.சு.மு. பேச்சு

undefined
அரசியல் யாப்பின் 17ஆவது திருத் தத்தை அமுல் செய்வது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

17வது திருத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்த யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி தூதுக்குழுவினர் அமைச்சர் பீரிஸை சந்தித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசம் கோரியிருந்ததால் அவை பற்றி பேசவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று திரு. மைக்கேல் பெரேரா மேலும் தெரிவித்தார்.

17வது திருத்தித்திற்கான அரசியல்யாப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகள் அமைச்சர் டியு?? குணசேகர தலைமையிலான குழுவொன்று பரிசீலனை செய்து வருகிறது. நாட்டின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல்யாப்பின் 17வது திருத்தத்தை அமுல் செய்வது அவசியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதராக ஜனநாயக தேசிய முன்னணி சட்ட சடவடிக்கை

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது தினமாக பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆனுமதி மறுக்கப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்த செயலாகும் என்று கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

ஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் உட்பட பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை மீறி அவர் நேற்றும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முரளி 800வது விக்கட்டை கைப்பற்றி சாதனை

இலங்கை சுழற்பந்து வீச்சு வீரர் முத்தையா முரளிதரன் காலியில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான நேற்று அவரது 800வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் 800 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாது வீரர் முரளி ஆவார். முரளி டெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்த கருத்து குறித்து சீற்றம்

undefined
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக கொண்ட பலஸ்தீன இலங்கை நட்புறவுச் சங்கம், இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் இளைப்பாறிய இராணுவ அதிகாரி டொனால்ட் பெரேரா இஸ் ரேலை ஆதரித்துத் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீற்றம் அடைந்துள்ளது. பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் இஸ்ரேல் அவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று டொனால்ட் பெரேரா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்தின் இணை தலைவரும் அரசாங்க அமைச்சருமான அதாவுட செனிவிரத்ன இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தூதுவர் பெரேரா என்னதான் சொன்னாலும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு ஆதரவானது என்றும் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு ஊக்குவிப்பதே என்றும் தெரிவித்தார்.

எவராலும் அறிக்கைவிட முடியும் ஆனால் இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு நாங்கள் பலஸ்தீனர்களின் அனுதாபிகள் என்பதே என்றும் அமைச்சர் செனிவிரத்ன மேலும் தெரிவித்தார்.

இமிதியாஸ் பார்கீர் மார்கார் எச்சரிக்கை இதற்கிடையில், நட்புறவுச் சங்கத்தின் மற்றுமொரு இணை தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான இமிதியாஸ் பாக்கீர் மார்கார் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் பெரேரா தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்திற்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இத்தகைய பொறுப்பற்ற கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்த தூதுவர் பெரேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமிதியாஸ் கேட்டுக் கொண்டார்.

இஸரேலே இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு போர்ப்பயிற்சி அளித்து உதவிய இஸ்ரேல், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகøளை தோற்கடிக்கவும் உதவியது என்று ஒரு எழுத்தாளர் எழுதியதை சுட்டிக்காட்டிய இமிதியாஸ், தற்போது இலங்கை இராணுவத்தில் பொறுப்பான பதவி வகித்த பெரேரா இஸ்ரேலை ஆதரித்து பேசுவதையும் ஒப்பிட்டுக் காட்டினார். பலஸ்தீனர்களுக்கு விடுதலை தேவை, இந்த நிலைப்பாட்டை இலங்கை ஆதரிக்கிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்டதால் அந்த நாடு பலஸ்தீனர்கள் மீது தொடுத்துள்ள யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்றில்லை எனக் குறிப்பிட்ட இமிதியாஸ் இத்தகைய அறிக்கைகள் விடப்படுவது தொடருமானால் இலங்கை இஸ்லாமிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்ப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்
மேலும் இங்கே தொடர்க...

கட்டணங்களை குறைக்காவிடின் வேலைநிறுத்தப்போராட்டம்-தனியார் பஸ் சங்கம்

undefined
மேல் மாகாண தனியார் பஸ் சேவையாளர்களுக்கான குறுந்தூர போக்குவரத்துக் கட்டணம், பயணிகளுக்கான சேவைக் கட்டணம், போக்குவரத்து அனுமதிக் கட்டணம் போன்ற பல்வேறு கட்ட ணங்களை மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை அதிகரித் துள்ளது. அவ்வதிகரிப்பினை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் குறைக்காவிடின் மேல் மாகாணத்தில் தாம் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஒழுங்கான நேர அட்டவணையின்மையினால் போக்குவரத்து சேவையில் பாரிய சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆகையினால் உரிய முறையிலான நேர அட்டவணையினையும் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் அந்தச் சங்கத்தின் தøலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பானது தனியார் பஸ் உரிமையாளர்களை பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆகையினாலேயே அதனை உடனடியாக குறைக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக் எமக்கு விருப்பமில்லை. இருந்த போதிலும் எமது பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கா விட்டால் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதை தவிர வேறு வழியும் இல்லை. இதனை சகல பஸ் உரிமையாளர்களுடனும் கலந்தாலோசித்தே தீர்மானித்தோம். அத்தோடு எமக்கு தொடர்ச்சியாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத போதும் இவ்வாறு புதிது புதிதாக கட்டணங்களை அதிகரிப்பதானது முறையற்ற செயலாகும்.

நினைத்த நினைத்த நேரங்களில் எல்லாம் பொலிஸார் பஸ் தரிப்பு நிலையங்களை மாற்றுகிறார்கள். அவ்வாறு மாற்றுவதால் பயணிகள் உட்பட சகலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். அவ்வாறு மாற்றுவதற்கு பொலிஸாருக்கு உரிமையுமில்லை.

பஸ் தரிப்பு நிலையங்களை அவ்வாறு மாற்றியமைப்பதானால் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு பெற்றதன் பின்னரே அது மாற்றியமைக்க வேண்டும். அண்மையில் கொழும்பு சலாக்கா பகுதியில் இருந்த பஸ் தரிப்பிடம் மாற்றப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் உட்பட போக்குவரத்து பஸ்சாரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல முறைகள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே தான் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென்று முடிவெடுத்துள்ளோம். எமது இந்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஐநாவின் நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் கெஹெலிய

ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அரசாங்கம் இன்று உறுதியாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், இலங்கை அரசு முன்னர் தெரிவித்தது போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

விசாரணைக்குழு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் செற்பாடுகளும் அவர்களின் தீர்மானங்களுக்கும் அமையவே இலங்கை அரசாங்கத்தின் செற்பாடு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல்


மன்னார் தலைமன்னார் வீதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஊடகவியவாளர் ஒருவர் இன்று இரவு 8.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.

54 வயதுடைய அந்தோனிமார்க் என்பவரே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வாகனங்கள் அதிகளவு சென்றதால் வெள்ளை வானில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த ஊடகவியலாளரிடம் இருந்த ஆவணங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட ஊடகவியவாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தன்னை தாக்கிய இனந்தெரியாத நபர்களையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் குறித்த வேனில் இருவர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.

டெய்லிமிரர் மற்றும் சன்டே டைம்ஸ் ஆகிய ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளர்
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமை மீறல் அமெரிக்கா கண்டிப்பு


கொழும்பு:"மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இலங்கையை, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், இலங்கையில் ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்ஷே, எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் போர் முடிந்துள்ளது. இனிமேல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது தான், முக்கிய வேலை. இதன்மூலம் மட்டுமே, இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்த முடியும். மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க, நடவடிக்கை அவசியம். குறிப்பாக, மீடியாக்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு பிளேக் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில், தமிழர்கள் துயரத்தை அனுபவிக்கிறார்கள் ஜெயலலிதா அறிக்கை



அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.

வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத்தமிழர்கள், இலங்கை ராணுவ முகாம்களில் முள் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேக முத்திரையுடன் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இன்று கூட மீதமுள்ள மற்றவர்களின் கதி என்ன வாயிற்று என்பது நிச்சய மற்ற நிலையில் தான் இருக்கிறது.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைப்பாதுகாக்க தந்தையர்களும், கணவர்களும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில், வெட்ட வெளியில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய நிலைமைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் பெண்களில் பலர் உணவிற்காக ராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

பாக் ஜலசந்திக்கு அப்பால், மிக அருகில் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளின் இத்தகைய நெஞ்சை பிளக்கும் நிலைமை மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் நியாயமான கிளர்ச்சியை, கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றங்கள் நடைபெற்ற, இனப்படு கொலை நடைபெற்ற, வெட்கமே இல்லாமல் இன்னமும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற ராஜபக்ஷே தலைமையிலான இலங்கை நாட்டை, எவ்வித சட்டத்தையும் மதிக்காத குற்றவாளி நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று இவைகள் கருதுகின்றன.

ஐக்கிய முற்போக்குக்கூட்டணியிலிருந்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று பார்த்தனர். இந்தக்குழு இலங்கை அதிபரை சந்தித்தது.

இந்தக் குழு, இலங்கையில் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியுடன் இந்தியா வந்தடைந்தது.

ஆனால் 3.7.2010 அன்று, இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. அப்படியானால் பத்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பொய்யான தகவலைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

9.7.2010 அன்று கருணாநிதிக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்குத்தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்ற உறுதியை பாரதப் பிரதமர் அளித்தார். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருணாநிதியின் ஆலோசனையையும் கேட்டார் பாரதப்பிரதமர்.

16.7.2010 அன்று பாரதப்பிரதமருக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கை நாட்டிற்குள் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்பது அதிமுக்கியமானது, அவசரத்தன்மை வாய்ந்தது என்று தெரிவித்தார் கருணாநிதி.

இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் மிகவும் கடுமையான துன்பத்திற்கு இன்றும் கூட ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. உண்மை நிலையை கண்டறிவதற்காக மற்றுமொரு குழுவை அனுப்புமாறு பாரதப் பிரதமரை கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் இதற்கு முன்பு அனுப்பப்பட்ட குழுவின் மதிப்பீடு உண்மைக்குப் புறம்பானது என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ராஜபக்சே மீதான போர் குற்றச்சாட்டை நிரூபிக்க தயார்: உலகப் புகழ்பெற்ற வக்கீல் அறிவிப்பு




இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள ராணுவம் நடத்திய வெறித்தாக்குதலில் சுமார் 50 ஆயிரம் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.

வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய தமிழர்களில் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பு முகாம்களில் இன்னமும் அடைப்பட்டு கிடக்கும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் யாரும் கேட்பாரற்ற நிலையில் உள்ளனர்.

இறுதிப் போர் நடந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான நடேசன், பிரபாகரனின் மகன் சார்லஸ் உள்பட பலர் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்திடம் பிடிபட்ட பாலகுமரன், யோகி ஆகியோரும் துடிக்க, துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிருடன் பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விடு தலைப்புலிகளும் கண்களை கட்டி தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை சில மாதங்களுக்கு முன்பு இணையத் தளத்தில் வெளியான காட்சிகள் அம்பலப்படுத்தின. உலகத் தமிழர்களை இந்த காட்சிகள் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதையடுத்து ராஜபக்சே அரசு மீது போர் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. உலகின் பல நாடுகள் இதை கண்டித்தன. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஈழத்தமிழர்கள் கோரிக்கையை ஏற்று போர் குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த குழு ஒன்றை ஐ.நா. அமைத்தது. சீனா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் துணையுடன் இந்த விசாரணையை ராஜபக்சே எதிர்த்தார்.

என்றாலும் ஐ.நா.சபை, போர் குற்றச்சாட்டு விசாரணையை நடத்துவதில் தீவிரமாக உள்ளது. நியூயார்க் நகரில் நேற்று ஐ.நா.நிபுணர் குழுவின் விசாரணை தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐ.நா.மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராஜபக்சேயின் போர் குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இடம் பெற உலகப்புகழ் பெற்ற வக்கீல் லூயிஸ் மொரீனோ அக்கம்போ விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் கறுப்பு இன பழங்குடிகளை கொன்ற அதிபர் அல்பஷீர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தவர்.

அல்பஷீரை கைது செய்ய உத்தரவிடும் அளவுக்கு திறமையாக வாதாடினார். அது போல ராஜபக்சேக்கு எதிராகவும் வாதாட தயார் என்று அக்கம்போ அறி வித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஐ.நா.சபை கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தவறுகளை என்னால் வெளியில் கொண்டு வர முடியும். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார். இவரை ஐ.நா. மனித உரிமை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு உலகத்தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புழல் பெண்கள் ஜெயிலில் பூவரசி மீது சாப்பாட்டு தட்டை வீசி எறிந்த பெண் கைதிகள்; “கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்” என்று கதறி அழுதார்

புழல் பெண்கள் ஜெயிலில்    பூவரசி மீது சாப்பாட்டு தட்டை    வீசி எறிந்த பெண் கைதிகள்;    “கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்” என்று கதறி அழுதார்
சிறுவன் ஆதித்யாவை கொலை செய்த பூவரசியை போலீசார் நேற்று இரவு ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாந்தினி வீட்டில் அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் பூவரசியை இரவு 9.30 மணிக்கு புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இரவில் மற்ற பெண் கைதிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் பூவரசியை யாரும் அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. இன்று காலை புழல் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

மற்ற பெண் கைதிகளுடன் பூவரசியும் உணவு வாங்க கையில் தட்டுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மற்ற பெண் கைதிகள் சிறுவன் ஆதித்யாவை கொன்ற பூவரசி அவள் தான் என்று அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் பெண் கைதிகள் பூவரசியை ஆவேசமாக திட்டித்தீர்த்தனர்.

ஆவேசத்தின் உச்சிக்கு சென்ற சில பெண் கைதிகள் கையில் வைத்திருந்த சாப்பாட்டு தட்டை தூக்கி பூவரசி மீது வீசி எறிந்தார்கள்.

உடனே பெண் சிறை அதிகாரிகள் பூவரசியை பத்திரமாக அங்கிருந்து அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டிபன் வாங்கி கொடுத்தனர். அறையில் வைத்தே பூவரசி காலை உணவை சாப்பிட்டார்.

பின்னர் ஜெயிலில் உள்ள டாக்டர்களிடம் பூவரசியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த போது பூவரசி தேம்பி தேம்பி அழுதார். அவரை ஜெயில் அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள். அப்போது பூவரசி கண்ணீர் மல்க கூறியதாவது:-

நான் சிறுவன் ஆதித்யாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை. ஏதோ என்னை அறியாமல் ஆத்திரத்தில் ஜெயக்குமார் மீது இருந்த வெறியில் கொலை செய்து விட்டேன். ஜெயக்குமார் என் கருவை அழித்தார். அதற்காக அவரது குழந்தையை கொல்ல வேண்டும் என்ற வெறி எனக்கு ஏற்பட்டது.

ஆதித்யாவை கொலை செய்த போது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தேன். வெறி அடங்கும் முன்பு அவனை கொலை செய்து விட்டேன். கொலை செய்த போது என்ன நடக்கிறது என்பதை என்னால் யூகிக்கவே முடியவில்லை. நான் சுயநினைவிலும் இல்லை. ஆதித்யாவை கொலை செய்த பிறகு தான் நான் நினைவுக்கு வந்தேன். தவறு செய்து விட்டோமே என்று கதறி துடித்து அழுதேன்.

பின்னர் பாரிமுனையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று பாவமன்னிப்பு கேட்டேன். ஆனாலும் கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்.

இந்த கொடூர செயலை நான் தான் செய்தேனா என்பதை நினைத்து பார்க்கும் போது பதற்றமாக உள்ளது. எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பூவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீண்டும் ஜெயில் அறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...