இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் முன்னிலையில் சுபவேளையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்.
இந்த வைபவத்தை முன்னிட்டு தலைநகர் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரதான வீதிகளில் நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க என்று எழுதப்பட்ட கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. தேசியக்கொஐ, மாகாண கொடிகளால் மட்டுமன்றி வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு காலி முகத்திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான ஏற்பாடுகள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு கொழும்பு 1 முதல் 4 வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருக்கும். பிரதான வைபவம் நிறைவு பெற்று அதிதிகள் அங்கிருந்து வெளியேறும் வரை புறக்கோட்டைக்கான வீதிகள் யாவும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.
இரண்டாவது தவணைக்கான பதவி பிரமாண வைபவத்தில் மாலைதீவு ஜனாதிபதி,பூட்டான் பிரதமர் மற்றும் சீனாவின் உபபிரதமர் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்கவிருக்கின்றனர். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்ட ஏனைய நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகள் அதிதிகளாக பங்கேற்கவிருக்கின்றனர். அவர்களில் பலர் நேற்றிரவு வருகைதந்து விட்டதாக தூதரகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக்காலம் 2011 நவம்பர் மாதமே நிறைவடைய விருக்கின்றது அதற்கு முன்னரே இரண்டாவது தவøணக்கான தேர்தல் 2010 ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கெணண்ட ஜனாதிபதித்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிரணியின் வேட்பாளர் சரத்பொன்சேகாவை தோல்வியுறச்செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டினார்.
அத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பதிவுசெய்யப்பட்ட 1 கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 50 வாக்குகளில் 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை அவர் பெற்றுக்கொண்டார். இது 57.88 சதவீதமாகும். எதிரணியின் வேட்பாளரான சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது 40.15 வீதமாகும். ஏனையோர் 1.0 வீத வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன் அத்தேர்தலில் 0.97 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
தென்மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் குடும்பமான டீ.ஏ. ராஜபக்ஷவின் குடும்பத்தில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ தனது 65 ஆவது வயதில் இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்ளவிருக்கின்றார்.
1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி தனது 24 ஆவது வயதில் பாராளுமன்றத்திற்கு தெரிவான மஹிந்த ராஜபக்ஷ 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி அன்றைய அரசாங்கத்தில் தொழில், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டியதை அடுத்து எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு வரையிலும் அப்பதவியை வகித்தார்.
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் வெற்றியீட்டியதை அடுத்து இலங்கையின் 13 ஆவது பிரதமராக 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி தெரிவானார்.
2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அத்தேர்தலில் 48 இலட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளை பெற்றிருந்தார் அது 50.29 சதவீதமாகும் அத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளை பெற்றிருந்தார். இது 48.43 வீதமாகும்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 1 கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த போதிலும் 1 கோடியே 4 இலட்சத்து 95 ஆயிரத்து 41 பேரே வாக்களித்திருந்தனர். அதிலும் 1 கோடியே 3 இலட்சத்து 93 ஆயிரத்து 613 வாக்குகள் மட்டுமே செல்லுபடியாகியிருந்தன.
இத்தேர்தலில் 18 பேர் பதிவு செய்யப்பட்ட கட்சிகளிடமிருந்தும் நான்கு பேர் சுயேட்சையாகவும் போட்டியிட்டமையினால் வரலாற்றிலேயே மிக நீளமாக 19.5 அங்குலத்தில் வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன நான்கு வருடங்களுக்கு பின்னர் 1982 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் வெற்றியீட்டிக்கொண்டதுடன் 1988 ஆம் ஆண்டு வரையிலும் அவர் அப்பதவியை வகித்தார்.
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றியீட்டியதுடன் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அவர் பலியானார். அதற்கு பின்னர் மறைந்த ஜனாதிபதி டி.பி விஜயதுங்க ஒருவருடம் மட்டுமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிவகித்தார்.
அதே ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டியதுடன் தனது ஐந்தாண்டு நிறைவில் 1999 ஆம் ஆண்டு மக்கள் ஆணையை கோரி நின்றார். அவ்வாண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றியீட்டிய அவர் 2005 ஆம் ஆண்டு வரை பதவிவகித்தார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது தவணைக்காக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியதுடன் இன்று வெள்ளிக்கிழமை சுபநேரத்தில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவிருக்கின்றார்.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் 1978 ஆம் ஆண்டு யாப்பியின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் பாராளுமன்றத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 18 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் இரண்டு தவணைக்கு மேல் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற வரையறை நீக்கப்பட்டது.
அவ்வாறானதொரு நிலையிலேயே மிகப்பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் காலி முகத்திடலிலுள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையில் வைத்து ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொள்வதுடன் நாட்டு மக்களுக்கும் உரையாற்றவிருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...