17 செப்டம்பர், 2010

ஜனாதிபதியின் அனுமதியின் பின்னர் பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனைசரத் பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது அவர் குற்றவாளியாக காணப்பட்டதால் மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தீர்ப்பானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பியசேன கமகே காத்தான்குடிக்கு விஜயம்


தேசிய வைத்தியதுறை அமைச்சர் பியசேன கமகே இன்று மாலை காத்தான்குடி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அமைச்சர் மஞ்சந்தொடுவாய் அரச ஆயுள்வேத வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

வைத்தியசாலையின் குறைபாடுகளையும் தேவைகளையும் கேட்டறிந்த அமைச்சர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கரடியனாறு சம்பவ இடத்துக்கு பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம்கரயடினாறில் வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மீள்குயேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடமும் கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை பதுளை- செங்கலடி வீதியில் கரடியனாறு சந்தியில் உள்ள பொலிஸ் நிலையத்திலேயே வெடிப்புச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன் படை உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உடனடி விசாரணைக்கும் பணித்தார்.

சம்பவ இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சமாதானத்தை நிலைநாட்ட இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும்: நீல் பூனே

இந்த வருட சமாதான தினத்தை இளைஞர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணித்துள்ளது. உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்ட இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதநேய ஒருங்கிணைப்பாளருமான நீல் பூனே தெரிவித்தார்.

சமாதான தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தூதுவராலயத்தில் இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது நீல் பூனே மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,"இலங்கை உள்ளடங்கலாக நெருக்கடியில் இருந்து மீண்டெழும் நாடுகளில் இளைய சமுதாயத்திற்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக சமாதான தினத்தை இளைஞர்களுக்காக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வருட சமாதான தினத்தின் தொனிப்பொருள் சமாதானம், இளைய சமுதாயம், அபிவிருத்தி என ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன் பிரகடனப்படுத்தியுள்ளார். உலகளாவிய சமாதானத்தை கட்டியெழுப்பும் முகமாக இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் இலங்கையின் வெளிநாட்டுச் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குனியோ தகாஷி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. வெடிப்புச் சம்பவம்: வைத்தியசாலையில் கதறியழும் உறவுகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இன்று முற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மூவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்


இவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் மற்றையவர் சீன நாட்டுப் பிரஜையெனவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழப்பு-

மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சற்று முன்னர் வரை பொலிஸ் உத்தியோகஸ்தர் பொதுமக்கள் உட்பட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து எமது செய்தியாளர் தரும் தகவல்
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு கரடியனாற்றில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியசாலையில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை ஏற்றிவருவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து இரு நோயாளர் காவு வண்டிகள் சென்றுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களை விரைவில் தருகிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி-பான்கீ மூன் 24 ஆம் திகதி சந்திப்புஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பு இம்மாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கையின் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக நியமிக் கப்பட்ட மூன்று போர் அடங்கிய குழுவினர் நேற்று பான் கீ மூனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த குழு தமது உத்தியோக பூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில இலங்கையின் நிலவரம் குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியிருந்தன.
மேலும் இங்கே தொடர்க...

வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பெண் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்

மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய பெண் ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி தீக்காயங்களுடன் நேற்று வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன சந்திரசேகர தெரிவித்தார்.

கட்டார் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய மதுரங்குளி கணமூலையைச் சேர்ந்த 27 வயதுடைய அப்துல் மஜீது ஹில்மியா என்பவரே இவ்வாறு தீக்காயங்களுடன் நாடு திரும்பி சிகிச்சைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

தான் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது தன்னால் ஏற்பட்ட தவறொன்றின் காரணமாக வீட்டு எஜமானிப் பெண் தன் மீது சுடுநீர் அடங்கிய பாத்திரம் ஒன்றை வீசி தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதனாலேயே தனக்கு இந்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் கடந்த 13ம் திகதி இத்தாக்குதலுக்குள்ளானதாகவும், நேற்று முன்தினம் நாடு திரும்பியதாகவும் அப்பெண் பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் கூடவுள்ளதுஇலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் கூடவுள்ளது.

இதில் போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களிடம் சாட்சியங்கள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த இலங்கை தொடர்பான ஆலோசனைக் குழுவின் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழு-பான் கீ மூன் சந்திப்பு
இலங்கையின் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக நியமிக் கப்பட்ட மூன்று போர் அடங்கிய குழுவினர் நேற்று பான் கீ மூனை சந்தித்துள்ளதாக ஊடக பேச்சாளர் மார்டின் நெசக்கி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.நா செயலாளரின் ஊடக பேச்சாளர் மார்டின் நெசக்கி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த குழு தமது உத்தியோக பூர்வ நடவடிக்கைகளை, பொது செயலாளர் பான் கீ மூனுடனான சந்திப்பின் பின்னர் ஆரம்பிக்கும் என மார்டின் நெசக்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பீரிஸ் அடுத்த மாதம் இந்தியா விஜயம்இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அடுத்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. இந்தியாவில் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே. மிஷ்ரா ஞாபகார்த்த நிகழ்வில் உரை நிகழ்த்தும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அரசியல் தீர்வு விடயம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜீ.எல். பீரிஸ் இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பீரிஸ் சந்தித்து பேசவுள்ளார். இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயத்துக்கான ஏற்பாடுகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக விரைவில் இடம்பெறும் என்று அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் இருதரப்பு விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டுள்ள கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின்போது அந்த ஆணைக்குழுவின் அமர்விலும் கலந்துகொள்வார் என்றும் அமைச்சின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை அவர்களுக்கான வசதிகள் குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயத்தின்போது ஆராய்வார் என்றும் தெரியவருகின்றது.

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சவூதி மலாஸ் சிறைச்சாலையில் இலங்கையர் பலர் தடுத்துவைப்புசவூதி அரேபியாவில் றியாத்திலுள்ள மலாஸ் சிறைச்சாலையில் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் சிறு சிறு குற்றச்சாட்டுக்களின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களின் விடுதலை தொடர்பிலோ அன்றேல் சேமநலன் குறித்தோ சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் இதனால் அவர்கள் மிகுந்த விரக்திக்கு ஆளாகியுள்ளதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் றியாத்திலுள்ள மலாஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் கேசரிக்கு நேற்று வழங்கிய தகவலில், இங்கு நூற்றுக் கணக்கான இலங்கைப் பிரஜைகள் சிறு சிறு குற்றச்சாட்டுக்களின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் அநேகமானோர் மிகவும் அப்பாவிகள். தங்கள் சம்பளம் குறித்து வீட்டு எஜமானர்களிடம் கேள்வி எழுப்பினாலேயே உடன் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறைச்சாலைக்குள் தள்ளிவிடுகின்றனர். எம்மை இங்குள்ள வேலை வழங்குனர்கள் அடிமைகளைப் போன்றே நடத்துகின்றனர். இரவு பகலாக வேலை வாங்குவதுடன் ஏதேனும் சிறு தவறு இழைத்தால்கூட அடித்து சித்திரவதை செய்வதுடன் பொய்க் குற்றச்சாட்டுக்களின்பேரில் எம்மீது அவர்களின் நாட்டு சட்டப்படி வழக்குத் தொடர்கின்றனர்.

அநேகமாக எம்மில் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களேயாவர். எமக்கு வாக்குறுதி அளித்தபடி ஊதியம் வழங்கப்படுவதில்லை. அது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அத்துடன் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் கூறுவது அவர்களுக்குப் புரியாது. இதனால் நாம் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

பெரும்பாலும் பெண்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர். இவற்றைத் தட்டிக் கேட்கவும் எவரும் இல்லை. நாம் எப்படியாவது வேலை செய்து பிழைக்கவே இங்கு வந்தோம். ஆனால் எமது நிலை “அடுப்புக்குள் இருந்து நெருப்புக்குள்’ விழந்ததைப் போன்றுள்ளது.

நாம் இங்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கூட எமது உறவினர்களுக்குத் தெரியாது. சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் எமக்கு உதவும் என்ற நம்பிக்கையிலேயே இன்னும் இருந்து வருகிறோம்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வேறு நாட்டுப் பிரஜைகளை அவர்களின் நாட்டு தூதரக அதிகாரிகள் வந்து பார்வையிடுவதுடன் அவர்களின் விடுதலைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எமது தூதரக அதிகாரிகள் எம்மை வந்து பார்த்து எமக்கு ஆறுதல் கூறாதது எம்மை வேதனையடையச் செய்கிறது. அது மாத்திரமன்றி பல பெண்கள் எஜமானர்களின் கொடுமை தாங்காது வீட்டிலிருந்தும் ஓடிவந்து றியாத்தில் பாலங்களின் அடியில் அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள். இவர்கள் திரும்பிச் செல்ல பணமில்லாத காரணத்தினாலேயே இவ்வாறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். எனவே சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் எமது விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மன்றாடிக் கேட்கின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை -அமைச்சர் கெஹெலிய
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் பூரணமானதுமான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் அது இலங்கையின் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு சாதகமானதாக அமையும் என பிரித்தானிய பாராளுமன்றம் தெரிவித்துள்ள நிலையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த மாநாட்டில் ஜனாதிபதி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் உரையாற்றினார். இம்முறை ஜனாதிபதி விஜயம் செய்திருப்பது மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இலங்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேசியிருப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி கொள்ளவில்லை. எதிர்க்கவும் இல்லை. ஜனநாயக ரீதியில் பேசப்படுகின்றது எனினும் நாட்டின் இறைமை ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதாவது பேசப்படுமாயின் அவைதொடர்பில் நடவடிக்கைளை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை.

பாராளுமன்ற பேரவைக்கான பெயர்கள் கிடைத்தால் ஏழு ஆணைக்குழுக்களும் ஜனவரிக்கு முன்னதாக நியமிக்கப்படும். 17 ஆவது திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்களுக்கான பெயர்களை சிபாரிசு செய்வதில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டிருந்தது. 18 ஆவது திருத்தத்தின் ஊடாக அந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

17 ஆவது திருத்தம் போல பெயர்களை சிபாரிசு செய்யாமல் இருக்கமுடியாது. ஒரு வாரத்திற்குள் பெயர்களை சிபாரிசு செய்யவேண்டும். இன்றேல் சபாநாயகர் பெயரை சிபாரிசு செய்யலாம். அந்த வகையிலேயே 18 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அத்துடன் கொழும்பு மாநகர சபையை விசேட அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. அவைதொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. ஐந்து நட்சத்திர ஜனநாயக நாட்டில் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி முறையொன்றே முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மாணிக்க கற்களை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைதுசட்ட விரோதமாக பத்து இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களை கொண்டு செல்ல நபர் ஒருவர் கட்டுநாயக்க விமாநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு மாணிக்க கற்களை கொண்டு செல்ல முற்பட்ட வேளை அவர் கட்டுநாயக்க பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக எமது விமாநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மாணிக்க கற்களை கடத்திய நபர் பேருவளையைச் சேர்ந்த வர்த்தகர் என எமது விமாநிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 25,000 பேர் மாத்திரமேஇடம்பெயர்ந்த மக்களில் சுமார் 25 ஆயிரம் பேரே மீள்குடியேற்றுவதற்காக எஞ்சியுள்ளனர். இவர்களில் அதிகமானவர் கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

10 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.

இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள் ளதாக கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினமும் தொழிலுக்குச் சென்று மாலையில் திரும்பி வருகின் றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. ஆட்சிக்கால திருத்தங்களைவிட அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் ஜனநாயக அம்சம் கொண்டது


அரசாங்கத்தின் 18வது அரசியலமைப்புத் திருத்தம் முன் னைய ஐ.தே.கவின் திருத்தங்களை விடவும் பன்மடங்கு ஜனநாயக அம்சம் கொண்டதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கருவுக்கு அமைச்சர் சுசில் பதில

61 இலட்சம் மக்களின் வாக்கு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாகக் கிடைத்தவையே எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்; 18வது அரசியலமைப்புத் திருத்தம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலம் போன்று அவசர மாகப் பாராளு மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டதொன்றல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டு வரும் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக “அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணிதிரள் வதற்கு காலத்தை அர்ப்பணிப்பேன்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது இருப்பது கரு ஜயசூரியவின் ஐ.தே.க வினால் 1978ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கு உட்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கமுமாகும்.

அத்துடன் 13வது திருத்தத்தினூடாக ஐ.தே.க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்திலும் ஐ.தே.க வால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச சபை சட்ட மூலத்திற்கிணங்கிய பெருமளவு பிரதேச சபைகளும் அரசாங்கத்தின் நிர்வாகத்திலேயே உள்ளன. இதற்கான பெரும்பான்மை அதிகாரங்கள் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வையாகும்.

1977ம் ஆண்டு ஆறு வருடங்களுக்காக நியமிக்கப்பட்ட எம்.பிக்கள் மற்றும் நிர்வாக முறையை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு வருடங்களுக்கு ஐ.தே.க. நீடித்தபோது ஜே.ஆரின் சர்வாதிகாரம் பற்றியோ ஐ.தே.க.வின் சர்வாதிகாரம் பற்றியோ கரு ஜயசூரிய எம்.பி. குரலெழுப்பவில்லை.

யுத்தம் எனும் சாபத்திலிருந்து நாட்டை மீட்பதற்காகவே தாம் அரசாங்கத்துடன் இணைந்ததாக கூறிய கரு ஜயசூரிய; அவருடன் அரசாங்கத்தில் இணைந்த ஏனையோர் இறுதி யுத்தம் வரை அரசுடன் இருந்தபோதும் இடை நடுவில் எதிர்க்கட்சிக்கு மீண்டும் சென்றமை எந்தவிதத்தில் நியாயமாகும்?

அரசாங்கம் கொண்டு வந்துள்ள 18 வது அரசியலமைப்புத் திருத்தம் ஐ.தே.க அதன் ஆட்சிக்காலத்தில் மேற் கொண்ட திருத்தத்தை விட ஜன நாயக ரீதியானது.

18வது திருத்தம் சர்வாதிகாரமானதல்ல. அவ்வாறு இருந்திருக்குமானால் கரு ஜயசூரிய பத்திரிகைக்கு அறிக்கை விடுவதை விட்டுவிட்டு கடந்த 8ம் திகதி பாராளுமன்றத்துக்கு வந்து ஹன்சாட்டில் பதியும்படி தர்க்க ரீதியான விடயங்களை முன்வைத்திருக்கலாமே அதனை ஏன் அவர் செய்யவில்லை? அவரது பத்திரிகைக் கூற்றின் தர்க்கப்படி, 2010 ஜனாதிபதி தேர்தலின் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது பற்றி கூறப்படவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

கரு ஜயசூரிய ஆதரவு வழங்கிய சரத் பொன்சேகா நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக மக்களுக்குக் கூறிய போதும் அவருக்கு 40 இலட்சம் வாக்கே கிடைத்தது. இதன் மூலம் அக்கருத்தை மக்கள் நிராகரித்துவிட்டமை தெளிவாகிறது.

13வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக படையினரின் பாதுகாப்புடன் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அழைத்துவந்ததை அவர் மறந்துவிட்டாரா? அப்போது ஐ.தே.க. எம்.பிக்கள் வழங்கிய இராஜினாமாக் கடிதங்கள் ஜே. ஆரிடம் பத்திரமாக இருந்ததையும் கரு ஜயசூரிய ஞாபகப்படுத்திப் பார்க்கட்டும்.

2002 பெப்ரவரியில் ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் போது கரு ஜயசூரிய எவ்வித அதிர்ச்சியுமடையாதது புதுமைதான்.

2003ல் மின் சக்தித்துறை அமைச்சராக அவர் இருந்தபோது இந்திய ஒயில் கம்பனிக்கு திருகோணமலை எண்ணெய்க்குதத்தை குத்தகைக்கு வழங்கவும் பெற்றோலியக் கூட்டுத்தாப னத்தை மூன்றாகப் பிரித்து அதில் மூன்றில் ஒரு பகுதியை விற்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் கூட்டுத்தாபனத்தி ற்குப் பெற்றுக்கொடுத்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எதிர்காலத்தில் ஜனநாயக அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வதுடன் இலங்கையை ஆசியாவின் உன்னத நாடாக உயர்த்தும் எனவும் அமைச்சர் தமது பதிலில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சன்சீ’ கப்பல் விவகாரம்; நான்கு பெண்களின் விடுதலைக்கு கனடா இடைக்கால தடை
‘சன் சீ’ கப்பல் மூலம் கனடா சென்ற இலங்கை அகதிகளில் நான்கு பெண்களை தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை தற்காலிகமாக நிறுத்திவைக்க கனேடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘சன் சீ’ கப்பலில் சென்ற மூன்று தாய்மார் மற்றும் ஒரு தனிநபர் என நான்கு பெண்களை விடுவிப்பதற்கு கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகளுக்கான சபை கடந்த செவ்வாய்க்கிழமை காலை முடிவு செய்திருந்தது.

எனினும் கனேடிய அரசாங்கம் சமஷ்டி நீதிமன்றத்தில் இவர்களின் விடுதலைக்கு எதிராக தாக்குதல் செய்த மனுவொன்றை அடுத்தே இந்த நான்கு பேரினதும் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பின்னிரவு சமஷ்டி நீதிபதி ஒருவர் மூன்று தாய்மாரை விடுவிப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவை தொலைபேசி மூலமாக உரிய அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளார்.

அதேவேளை புதன்கிழமை நண்பகல் வன்கூவர் டவுன்ரண் நீதிமன்ற நீதிபதி மற்றொரு பெண்ணின் விடுதலைக்கான இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த அகதிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மேலதிக கால அவகாசம் தேவை என்று கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்ற சபைக்கு சுமந்திரனின் பெயர் எதிர்க்கட்சி தலைவரால் சிபார்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபைக்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள் ளது. அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

அதனால் அத்திருத்தத்தின் கீழ் உருவாக்கப் படும் பாராளுமன்ற சபையில் அங்கம் வகிப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருப் பதாக அக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. எம். சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது அனுமதியைப் பெறாமல் இச்சபைக்குத் தமது பெயரைப் பிரேரித்துள்ளார். இதனை ஊடகங்கள் மூலம் தான் நான் அறிந்துகொண்டேன். என்றாலும் இந்நியமனத்தை நாம் ஏற்கமாட்டோம் என்றார். அரசியலமைப் புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அடங்கலாக ஐவர் அங்கம் வகிப்பர்.

இதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகிய மூவரும் பதவிநிலை உறுப்பினர்கள். ஏனைய இருவரும் பிரதமரினாலும், எதிர்க் கட்சித் தலைவராலும் நியமிக்கப்படும் உறுப்பினர்களாவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆணைக்குழுக்கள் ஜனவரி முதல் செயற்படும்


பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 7 சுயாதீன ஆணைக்குழுக்களும் ஜனவரி மாதம் முதல் செயற்படும். அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (16) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,17வது திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையோ சுயாதீன ஆணைக்குழுக்களோ நடைமுறைச் சாத்தியமற்றவையாக இருந்தன. இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

அரசியலமைப்பு சபைக்கு பிரதிநிதி ஒருவர் பிரேரிக்கப்படாவிடின் அதனை செயற்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. ஒரு சிறுபான்மைக் கட்சி பிரேரித்த உறுப் பினரை மற்றொரு கட்சி எதிர்க்கும் நிலை காணப்பட்டது.

17வது திருத்தத் தில் காணப்பட்ட குறைபாடுகள் நடைமுறைச் சாத்திய மற்ற விடயங்கள் என்பவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் 18வது திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு வாரத்தில் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை பிரேரிக்க வேண்டும். இல்லாவிடின் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பார்.

இதன் மூலம் உரிய காலத்தினுள் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதோடு சுயாதீன ஆணைக்குழுக்களும் செயற்படும்.

18வது திருத்தச் சட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை நிய மிக்கவும் சுயாதீன ஆணைக்குழுக் களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்படவுள்ளன.

அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் செயலி ழந்தது.

அடுத்த வருடம் முதல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வும் இயங்கும். அதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளதோடு ஆணைக்குழுவுக்கு 5 மாடிக் கட்டிடமொன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 155 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக துரிதமாக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

"தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டுவிட்டது"
இலங்கையில் விசாரணை இன்றி பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டு விட்டதாக இலங்கையின் மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


இலங்கையில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், பல்லாயிரக் கணக்கான சிறுபான்மைத் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, இலங்கையின் ஓய்வு பெற்ற மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் பலர், பல ஆண்டுகளாக இவ்வாறு அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைப் போரின் இறுதி நாட்கள் குறித்து ஆராயும், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இத்தகைய போர் ஒன்று இலங்கையில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிவகைகளையும் இந்த ஆணைக்குழு ஆராய்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறைந்தது இரண்டாயிரம் தமிழ் இளைஞர்களாவது இவ்வாறு பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் முன்னாள் தூதரான நந்தா கொடகே அந்த ஆணைக்குழுவின் முன்பாக கூறினார்.

இவர்களைவிட பல்லாயிரக்கணக்கானவர்கள், கடந்த ஆண்டு போர் முடிந்தது முதல் முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நீதித்துறை அவர்களை கைவிட்டு விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இவர்களை இந்த மாதிரி தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், பல பிரபாகரன்கள் தோன்றுவதற்கு அது வழி செய்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம், சுமார் 500 இளைஞர்கள் கொழும்பு வெலிக்கட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தான் மிகுந்த ''ஆத்திரம்'' கொண்டுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அவர் ஒப்புக்கொள்கிற போதிலும், அந்த இளைஞர்களுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லாதபட்சத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நந்தா கொடகே கூறினார்.

தான் பிரிட்டனில் இருக்கும் போது விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய ஒரு தமிழ் பொறியியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருக்கும் பலர் இவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவது குறித்து அவர் பல தடவைகள் வலியுறுத்தியும், ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நந்தா கொடகே கூறினார்.

சில உயர் அதிகாரிகள் இந்த கைதிகள் குறித்து அனுதாபத்துடன் இருக்கின்ற போதிலும், சிக்கலான அதிகாரவர்க்கக் கட்டமைப்பு காரணமாக அந்தக் கைதிகள் மறக்கப்பட்டு விடுகிறார்கள் என்றும் அந்த ஓய்வுபெற்ற இராஜதந்திரி கூறினார்.

முன்னாள் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் அல்லது சந்தேக நபர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை.

மிகவும் மூத்த உறுப்பினரான கேபி என்று அழைக்கப்படுபவர், பெயரளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்.

மற்றுமொரு மூத்த உறுப்பினரான தயா மாஸ்டர்- தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிலையத்தை நடத்துவதற்கு தான் உதவிக்கொண்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

bbc
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவின் உதவியின்றி செயல்படுவதாலேயே பொருளாதாரத் தடை: ஈரான் அதிபர்

மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் உதவியின்றி செயல்படுவதாலேயே ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதன் அதிபர் மெக்மூத் அஹமதிநிஜாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:

நாங்கள் சரியான முறையிலேயே அணு திட்டங்களை பயன்படுத்தி வருகிறோம். அணு சக்திக்காக மட்டுமே அணு திட்டங்களை பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவில் மதபோதகர் ஒருவர் குர்ரானை எரிக்கப் போவதாக அறிவித்தது குறித்து கேட்டதற்கு, இதன் மூலம் இரு மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முடியாது.

முஸ்லிம்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் இடையே பிரச்னையை தூண்டிவிடும் வகையில் குறுகிய எண்ணம் கொண்ட சில அமெரிக்கர்கள் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று குறிப்பிட்டார்.

குர்ரான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான புத்தகம், அது எரிக்கக்கூடியது அல்ல என்று கூறினார். அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா.பொதுக்கூட்டத்தில் அஹமதி நிஜாத் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. யுரேனியம் செறிவூட்டலை நிறுத்திக் கொள்ள வேண்டும்; பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூறியிருந்தது. ஆனால் அதை ஈரான் ஏற்க மறுத்ததையடுத்து ஜூன் மாதம் 4-வது முறையாக ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...