8 டிசம்பர், 2009

இலங்கையில் புதிய அணுகுமுறைக்கு வலியுறுத்தி அமெரிக்கா அறிக்கை



பிராந்தியத்தில் அமெரிக்காவின் அக்கறையை எடுத்துக்காட்டி, அந்நாட்டு செனற் வெளியுறவுக்குழு தயாரித்துள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையில் முரண் பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. மேற்படி அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கிறதுஇலங்கையின் வட பகுதியில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்திய விதம் குறித்து அரசாங்கம் பரவலான விமர்சனத்திற்கு உள்ளான அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிராந்தியத்தை புனர்நிர்மாணம் செய்வதிலும் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்ததும் நாட்டில் புதிய அரசியல், பொருளாதார சீரமைப்புக் களை ஏற்படுத்திக்கொள்வதில் இலங்கை யுடனான தொடர்புகளை அமெரிக்கா புதுப்பிக்க விரும்புவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

மனிதநேய அம்சங்கள் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய அதேவேளை இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கை, ஒரு விடயத்தை மட்டும் வைத்து கணிப்பிடப்படக் கூடியதல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. குழுவின் ஜனநாயக கட்சித்தலைவரான செனற்றர் ஜோன் கெரியினாலும், சிரேஷ்ட குடியரசுக்கட்சி செனற்றர் றிச்சட் லூகரினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இரு தரப்பு அறிக்கை, ஒபாமா நிர்வாகம் இலங்கை தொடர்பான அதன் புதிய கொள்கையை அறிவிக்க இருக்கும் இவ்வேளையில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடும் போக்கான அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையைத் தீவிரப் படுத்திய அதேவேளை, கடந்த சில வருடங் களில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகள் மற்றும் அவர்களுக்கான மனிதநேய உதவிகள் ஆகியன பற்றிய அக்கறையே மேலோங்கி நின்றது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாதவது:

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது இரு சகோதரர்களான கோத்தபாய, பஷில் ஆகிய மூவரினதும் கடுமையான நிலைப்பாடே இரண்டு தசாப்தகால யுத்தத்தை கடந்த மே மாதத்தில் தோற்கடிக்க உதவியது. சிறுபராய போராளிகள், பெண் தற்கொலைப் படையினர் போன்ற கொடிய தந்திரங்களை எல்லாம் தீவிரவாதிகள் பயன்படுத்தினார்கள். 1991ஆம் ஆண்டில் மீண்டும் பதவிக்கு வரும் நம்பிக்கையுடன் இருந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் விடுதலைப்புலி இயக்கமே பொறுப்பாகும்.

யுத்தத்தின் கடைசி வாரங்களில் சுமார் 3 லட்சம் தமிழ்ச் சிவிலியன்களுடன் விடுதலைப்புலிகள் சிக்கியிருந்த ஒடுக்கமான ஒரு கடற்கரைப் பிரதேசத்தை அரசாங்கப் படையினர் சுற்றிவளைத்து கைப்பற்றினர். இந்த இறுதி யுத்தத்தின் போது சிவிலியன்கள் நெருக்கமாக இருந்த பகுதிகளில் அரசாங்கப் படைகள் கனரக ஆயுதங்களை சகட்டுமேனிக்குப் பயன் படுத்தியுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த இறுதியானதும் இரத்தக்களரியை ஏற்படுத்தியதுமான யுத்தம் உட்படாத முன்னைய மோதல்களில் குறைந்தது 7,000 சிவிலியன்கள் இறந்திருக்கலாம் என்று ஐக்கியநாடுகள் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

யுத்தம் முடிவிற்கு வந்ததிலிருந்து மூடப் பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறும் அரசாங்கத் திற்கு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்களுள் விடுதலைப்புலிகள் மறைந்திருக்கிறார்களா என்று சோதனை செய்யப்பட வேண்டு மென அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் பருவப்பெயர்ச்சி மழை ஆரம் பித்ததும் முகாம்களுக்குள் நிலைமை மோச மடையத் தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சில கட்டுப் பாடுகளுடன் முகாம் வாசிகளுக்கு நட மாடும் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யுத்தம் நடத்தப்பட்ட விதம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. மேலும், பெருமளவு மனிதநேய உதவி களை வழங்கிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகளெனக் கூறி உதாசீனம் செய்துள்ளது. தங்கள் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையில் உறவுகள் வளர்ந்து வருவது அங்கு மேற்கு நாடுகளின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருவதற்கான அறி குறியே என்று இலங்கை அரச அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார்கள். யுத்த வெற்றியை தமது துரும்பாகப் பயன்படுத்தி, திரும்பவும் ஜனாதிபதியாக வருவதற்கு ஜனவரி மாதத்தில் நடை பெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு உதவி நிறுவனங்களையும் மேற்கு நாடுகளையும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடு வதாக குற்றம் சாட்டி வருகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் வெளிநாடுகளினால் பெருமளவிலான விமர்சனத்துக்குள்ளாவது குறித்து அரசாங்க அதிகாரிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

இந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய யுததத்தின் ஒரு பகுதியே என்று தெரிவிக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, புலிகளை வெற்றிகொண்டமை ஏனைய பகுதிகளிலும் கிளர்ச்சி எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது என்று குறிப்பட்டுள்ளார். பெருர் தொகையான சிவிலியன்கள் அரசாங்கப் படைகளினால் கொல்லப் பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் நிராகரிக்கிறார்கள். இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கென கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் வாக்கெடுப்பின் போது அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி முன்வைத்து அமெரிக்கா இலங்கைக்கான இராணுவ உதவியை குறைத்துள்ளது.

எனினும் மேற்கு நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும் என்றும் அமெரிக்க செனற் வெளியுறவுக் குழுவின் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் ஐரோப்பாவையும் மத்தியக்கிழக்கையும் சீனாவுடனும் ஏனைய ஆசிய நாடுகளுடனும் இணைக்கும் வர்த்தக மார்க்கத்தில் ஒரு கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கடல் மார்க்க வர்த்தகத்தை சீர்குலைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் கடற்கொள்ளைச் சம்பவங்களையும் முறியடிக்கும் அக்கறை அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குமே உண்டு
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு செல்லுபடியற்றதாகும் -தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு



இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணாக, தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் உள்ளிட்ட அரச மற்றும் மாகாண நிறுவனங்களில் ஆட்சேர்ப்புக்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகள் இடம்பெறுவதாகத் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவையாவும் செல்லுபடியற்றதாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. இவை தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச்சட்டத்தின் 104ஆ(4),104(ஒ) ஆகிய உறுப்புரைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகளின் தலைவர்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது.

இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் அரச, கூட்டுத்தாபனம், நியதிச்சபை நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவியுயர்வு என்பன தேர்தல் காலங்களில் நிறுத்தி வைக்கப்படுவது அவசியமாகும். தேர்தல் காலமென்பது பிரகடனம் வெளியிடப்பட்ட திகதிக்கும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தினத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும்.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்து இக்காலப்பகுதியானது 23.11.2009 தொடக்கம் முடிவுகள் அறிவிக்கப்படும் தினம் வரை ஆனதாகும் மேற்குறிப்பிட்ட திகதியிலோ அல்லது அதற்கு பின்னர் இடம்பெறும் நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் செல்லுபடியற்றதாக்கப்படும்,
மேலும் இங்கே தொடர்க...
பொதுநலவாய மாநாட்டுக்கான அங்கீகாரம் மஹிந்தவின் தலைமைத்துவத்துக்கான பரிசு-வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம பெருமிதம்



ஆம் ஆண்டில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு எமக்குக் கிடைத்த அங்கீகாரமானது, கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் தலைவிரித்தாடிய பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செலுத்திய சிறந்த தலைமைத்துவத்துக்குக் கிடைத்த பரிசாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். கடந்த மாதம் ட்ரினிடாட் டுபெகோவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு அங்கு ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு எமது நாட்டில் நடைபெறவுள்ளது. இலங்கை இந்த மாநாட்டை நடத்துவதற்கு பொருத்தமான நாடாக இருப்பதனாலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடத்தும்படி முதலில் கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகவும் அதனால் அதற்கு தாம் ஆதரவு வழங்க முடியாதெனவும் அவுஸ்திரேலிய மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

எனினும் அதற்கு நாம் பதிலாக நாம் ஒரு போதுமே குடி மக்களுக்கு எதிராக யுத்தத்தினையோ அல்லது இன வன்முறைகளிலோ ஈடுபடுவில்லையெனவும் நாம் தொடுத்த போரானது புலிப் பயங்கரவாதிகளுக் எதிராகவேயன்றி பொதுமக்களுக்கானது அல்ல என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தோம். அதன்படி 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையிலும் 2015 ஆம் ஆண்டில் மொரீஷியஸ் நாட்டிலும் நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் 53 உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொதுநலவாய நாடுகளில் ஆபிரிக்கா, ஆசிய, பசுபிக், கரிபியன் தீவுகள், தெற்காசியா உட்பட மேலும் பல பிராந்திய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இம்முறை மாநாட்டில் கால நிலை மாற்றம், உறுப்பு நாடுகளில் பயங்கரவாதத்தினை ஒழித்துக் கட்டல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், பொருளாதார மேம்பாடு இளைய தலைமுறையினருக்கான எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இலங்கை ஏனைய நாடுகளுடன் சிறந்த நட்புறவினைப் பேணி வரும் நாடு. இதனை பொதுநலவாய நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இப்போது எமக்குக் கிடைத்த இந்த வெற்றியினை எம்மவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் இங்கு வந்து வர்த்தகத் துறையில் ஈடுபடவும் புதிய புதிய முதலீடுகளில் இறங்கவும் இங்கு கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலைமையும் நாட்டின் தற்போதைய சூழலும் கவலைக்குரியவை -பொன்சேகா




உயிர்த் தியாகங்களைச் செய்து, பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்நாட்டின் தற்போதைய நிலைமைகளையும், இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கையில் அது மிகவும் கவலையளிக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்ததன் பின்னரும் எனக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. அதனை செவ்வனே நிறைவேற்றுவேன். மக்களின் வாக்குகளைப் பெற்று, ஜனõதிபதிப் பதவியில் அமர்வது, சுகபோகங்களை அனுபவிப்பதற்காக அல்ல. 30 வருட காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இந்நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அதனை மக்களிடம் ஒப்படைப்பதே எனது பணியாகும் என்றும் அவர் கூறினார்ஜே.வி.பி. கட்சிப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் கொழும்பு07, புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன், விஜித ஹேரத் உள்ளிட்ட எம்.பி.க்களும் மாகாண சபை, பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்களும் மற்றும் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நாட்டின் நலனுக்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்ற கட்சியாக நான் ஜே.வி.பி.யை காண்கின்றேன். அந்த வகையில், எனது இராணுவ சேவை இன்னும் ஒன்றரை வருடத்திற்கு நீடித்திருக்கக் கூடியதாக இருந்தாலும், சீருடையைக் கழற்றி வைத்து விட்டு மக்களுக்குச் சேவை செய்ய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.


இராணுவத் தளபதியும் தான் ஓய்வுபெற்றதன் பின்னர் அவருக்கு வழங்கப்படுகின்ற உடைமைகளை அரசாங்கம் இலஞ்மாகவே கருதுகின்றது. எனக்கு அமைச்சின் செயலாளர் பதவியும், அமைச்சுப் பதவிகளும் தேடிவந்தன. ஆனாலும், அவற்றை நான் ஏற்கவில்லை. பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின்னரும் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எண்ணியபோதிலும், அது நடைபெறவில்லை.


ஆனால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற சுமைகள் ஆகியவை மாத்திரம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலைமைகளை மாற்றியமைப்பதற்கும், நல்லாட்சி ஒன்றை மலரச்செய்வதற்கும், அதேபோல் அரச சேவை, பொலிஸ் சேவை உள்ளிட்ட மக்கள் சேவைகளில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்படுவதற்கும், ஊழல் மோசடிகள் மற்றும் இலஞ்சம் ஆகியவற்றை இல்லாது செய்வதற்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.எனது இந்தப் பயணத்தில் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவு எனக்கு இருக்கின்றது. அதன்பஐ, நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி என்ற உத்தியோகபூர்வ பதவி அதிகாரம் இருக்கவேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, வெறுமனே சுகபோகங்களை மாத்திரம் அனுபவித்துக் கொண்டு, மக்கள் சேவைகளிலிருந்து விலகியிருப்பதை நான் விரும்பவில்லை.


எனக்கென்று இருக்கின்ற பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. வில்லியம் கோபல்லாவைப் போல் இருப்பதற்கு என்னால் முடியாது. மக்களுக்குப் பதிலளிக்கக் கூடிய பாராளுமன்றத்தை நிறுவி, அதனூடாக நல்லாட்சியை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். இன்று குடும்ப அதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதி சர்வாதிகாரியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாடு மீட்டெடுக்கப்பட்டது குடும்ப அதிகாரத்திடம் கையளிப்பதற்காக அல்ல.


இந்நாட்டில் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்தே தீருவேன். பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்பட்டமைக்குச் சொந்தக்காரன் யார் என்பதற்கு இப்போது விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இது தற்போது தேவையற்ற விடயமா கும். அதனை விடுத்து, சகோதரக் கம்பனி இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கு முயற்சிக்கின்றமையானது, கவலைக்குரியதாகும். 15 வருடங்கள் நாட்டிலிருந்து விலகியிருந்த ஒருவர் இதற்குத் தகுதியற்றவராவார்.


எனக்கென்று ஒரு கனவு இருக்கின்றது. அதனை நனவாக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கின்றது. எமது எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்ததொரு வளம் நிறைந்த நாட்டை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கின்ற நல்லாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்தக் கனவாகும்.அரசாங்கமும், அதன் நிர்வாகிகளும் எனக்கு எதிராக எத்தகைய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சட்டத்தை மதிக்கின்ற 95 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர்.


அதுமட்டுமல்லாது, பொது மக்களும் எமது பயணத்தில் இணைந்துள்ளனர். எனவே, உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கான எமது இந்தப் பயணத்தில் அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் கட்சிகளும், அதன் உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு வழங்கும் முகமாக எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

மேலும் இங்கே தொடர்க...





மட்டக்களப்பு கல்குடா கடற்கரையிலிருந்து சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற நபரொருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாளான நேற்றிரவு சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவதினமான கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத பயணத்தை மேற்கொள்வதற்காக கல்கடா கடற்கரையில் குறித்த நபர்கள் இன்னும் சிலருடன் நின்று கொண்டிருந்த வேளை இராணுவத்தின் நடமாட்டததைக் கண்டு தப்பியோட முயற்சித்துள்ளனர். அவ்வேளையில் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.

தப்பிச்செல்ல முயன்ற இருவர் அதன்போது அந்த பகுதியிலுள்ள நீரோடையொன்றில் தவறி விழுந்துள்ளனர்.அவர்களில் ஒருவர் முதலைக்கடிக்கு உள்ளாகி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீரோடையில் முதலையினால் கவ்விப் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட நபர் பெரியகல்லாற்றைச் சேர்ந்த மனேகரன் வினோதன்வயது 31 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாமெனக்கோரி
ருஹ_ணு பிக்கு பேரவை மனுத்தாக்கல்- முப்படைகளின் முன்னாள் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாமெனக்கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூஹ_ணு பிக்கு பேரவையினால் இந்தமனு உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ருஹ_ணு பிக்கு பேரவையின் பொதுச்செயலாளர் உமாரி கஸ்யப்பதேரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் ஜெனரல் சரத்பொன்சேகா பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இம்மனுவினை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. யுத்த குற்றம் புரிந்த நபராக சர்வதேசரீதியாக காணப்படும் ஜெனரல் சரத் ;பொன்சேகாவுக்கு அதிகமான பாதுகாப்பு வழங்குவதால் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் பாதகமான ஒரு நிலை தோன்றுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டுமென்றும் ருஹ_ணு பிக்கு பேரவையின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறுவர் மற்றும் ஆயுத வன்முறை தொடர்பிலான விசேட பிரதிநிதியின்
சந்திப்புக்கள்- இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுத வன்முறைகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி மேஜர்ஜெனரல் பற்றிக் கெம்ரட் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மற்றும் அவர் முன்னாள் புலி உறுப்பினர்கள் கல்வி பயிலும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மற்றும் இன்று அவர் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளரை சந்திக்கவிருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து வுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு செல்வாரென்றும் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா இரா.சம்பந்தன் சந்தித்துக்

கலந்துரையாடல்- எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமது முடிவினை அறிவிக்காத நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. சிறுபான்மை இனப்பிரச்சினை விடயத்திற்கான தீர்வு, அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்தேசங்கள் என்பன பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இந்நிலையில் இரா.சம்பந்தன் ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இது இவ்விதமிருக்க ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களின் கருத்து மற்றும் நிலைப்பாட்டை கேட்டறிந்த பின்னரே தமது கட்சி யாருக்கு வழங்குமென அறிவிக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.பி திசாநாயக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி திசாநாயக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்தி தனது இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார். ஐ.தே.கட்சியில் தான் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவது இழிவான செயலெனவும், ஐ.தே.கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து மிகுந்த கவலையடைவதாகவும் குறிப்பிட்ட அவர், வேட்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்யும் ஆற்றல்கூட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லையென்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய தொழிற்சங்கம் என்ற பெயரில் மலையகத்தில் புதிய தொழிற்சங்கம்
உதயம்- ஐக்கிய தொழிற்சங்கம் என்ற பெயரில் மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வழிகாட்டலின்பேரில் நுவரெலியா, ஹற்றன் வெலிஓயா மேற்பிரிவில் இதன் ஆரம்ப வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சட்டத்தரணி எஸ். கிருஸ்ணகுமார் இத் தொழிற்சங்கத்தின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைமைக் காரியாலயம் மாத்தளையில் திறந்துவைக்கப்பட்டு இயங்கிவருவதாக தொழிற்சங்கத்தின் நிர்வாக உறுப்பினரொருவர் கூறியுள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நியாயமான முறையில் போராடப்போவதாகவும், சந்தாவை நோக்கமாகக் கொள்ளாமல் தொழிலாளர்களின் நலனுக்காக எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும்-வெங்கையா நாயுடு-
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.வெங்கையா நாயுடு தமிழகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தபோது தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிப்பதாக இலங்கை இந்தியாவிடம் உறுதியளித்தது. எனினும் இதுவரையில் இந்த உறுதி நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் தமிழர்களின் பிரச்சினை நிறைவடைந்து விட்டதாகக் கருதமுடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வொன்று வழங்கப்படாத பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பாக அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த கட்டுப்பணம் செலுத்தினார்-
எதிர்வரும் ஜனவரிமாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இதனை தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த தேர்தல்களின்போது வழங்கப்பட்டிருந்த தற்காலிக அடையாள அட்டைகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பயன்படுத்தலாம்- கடந்த தேர்தல்களின்போது வழங்கப்பட்டிருந்த தற்காலிக அடையாள அட்டைகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பயன்படுத்தலாமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கிடையில் சேதமுற்றுள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக மாற்று அடையாள அட்டைகள் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளர். தேர்தல்களின்போது புகைப்படம் கொண்ட அடையாள அட்டைகளை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு- புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் வழிகாட்டல்களின் காரணமாக குறித்த நபர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் புலி உறுப்பினர்களில் 100பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் தமது கல்வியை இவர்கள் தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கே.டில். லால்காந்தவின் அனுராதபுர காரியாலயம் மீது தாக்குதல்-

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கே.டில். லால்காந்தவின் அனுராதபுர காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காரியாலயம்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக கட்சிக் காரியாலயத்திற்கு முன்னால் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறெனினும், இந்தத் தாக்குதல்களை எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொலீஸ் சீருடை தரித்த நபர்களே இத்தாக்குதலை நடத்தியதாக ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை, புத்தளம் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி காரியாலம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் தாக்கியழிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் கட்சி காரியாலயம்மீதே மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் அண்மையில் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத குழுக்களே இந்தாக்குதலை மேற்கொண்டிருக்கக் கூடுமென அறிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...