24 ஆகஸ்ட், 2009

பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சமீது தாக்குதல் நடத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு-
பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்வதற்காக கொழும்பில் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள் தொகுதியொன்றினை புலனாய்வுப் பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர். மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை) பிரதேசத்திலேயே இந்த ஆயுதத் தொகுதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ்அத்தியட்சகர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இப்பிரதேசத்திலுள்ள கட்டிடத் தொகுதியிலிருந்த இரும்புப் பெட்டகமொன்றிலேயே இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த வெடிபொருட்களைப் பொருத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றின்மூலம் பிரமுகர் வாகனத் தொடரணிமீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதன்போது பாதுகாப்புச்செயலர் உயிரிழக்காத பட்சத்தில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் வாகனத்தை குறிவைத்து பெண் தற்கொலைக் குண்டுதாரியைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் திட்டங்களைத் தீட்டிய சந்தேகநபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலீஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
காலி கடற்பரப்பில் தாக்குதல் நடத்த புலிகளினால் அனுப்பப்பட்ட டோறா மற்றும் லொறி மீட்பு-

காலி கடற்பரப்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக புலிகளினால் அனுப்பிவைக்கப்பட்ட டோறா படகு மற்றும் லொறி என்பவற்றைப் பொலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த இயந்திரங்கள் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். மத்திய மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து கண்டியில் வைத்து இந்த இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 25ம் திகதி மொறட்டுவைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இந்த இயந்திங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
கொலரடா கப்பலில் எடுத்துவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் இன்னமும் கொழும்பு துறைமுகத்தில் முடக்கம்-

(2009-08-23 22:09:40)

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு கொலராடோ கப்பல்மூலம் அனுப்பப்பட்ட பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதுடன் அடுத்தவாரம் முற்பகுதியில் அவற்றை வெளியில் கொண்டுவருவதற்கான சாத்தியமுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தேசிய செயலர் நிமால் குமார் கருத்துத் தெரிவிக்கையில்;, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களுக்கு விநியோகிக்கும் முகமாக எமது சங்கத்துக்கு 650தொன் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தன. இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியில் எடுப்பதற்கு அனுமதிப்பதற்குத் தேவையான நடைமுறை செயற்பாடு பூர்த்தியாகாததன் காரணமாகவே வெளியிலெடுக்க முடியாதுள்ளது. இப்பொருட்கள் வெளியில் எடுக்கப்பட்டதும் இதனை வவுனியாவுக்குக் கொண்டுசென்று மூன்று நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கொன ரூபா 4மில்லியனை ஒதுக்கியுள்ளோம். அநேகமாக அடுத்தவார முற்பகுதியில் இப்பொருட்கள் வெளியிலெடுக்கக் கூடியதாகவிருக்குமென நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
வடகடலில் மீன்பிடிக்கச் செல்வோர்மீது கெடுபிடிகள் அதிகரிப்பு-


(2009-08-23 22:12:50)

வடபகுதிக் கடலில் மீன்பிடிக்கச் செல்வோர் மாலை 6மணிக்கு முன் கடலுக்குச்சென்று மறுநாள் காலை 6மணிக்குப் பின்பே கரைக்குத் திரும்பவேண்டுமென்று தெரிவித்துள்ள வடபிராந்தியக் கடற்படைத் தளபதி இரவுநேரங்களில் எவரும் கடலுக்கு செல்வதற்கோ அல்லது திரும்பி வருவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் கூறியுள்ளார். வடகடலில் மீன்பிடிப்பதற்கான நிபந்தனைகளை வடபிராந்திய கடற்படைத் தளபதி யாழ்.அரச அதிபருக்கு அறிவித்துள்ளார்;. இந்த நிபந்தனைகளை கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்திய யாழ்.அரச அதிபர் அவற்றைத் தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். பகலில் மாத்திரம் மீன்பிடிக்கச் செல்வோர் அதிகாலை 4மணிக்கு புறப்பட்டுச்சென்று இரவு 7மணிக்கு முன்பாக கரைக்குத் திரும்பிவிட வேண்டும். சகல மீன்பிடிக் கலங்களும் இரவில் வெளிச்சத்துடன் தரித்து நிற்கவேண்டும். வழமையான மரக்கலங்களில் வெளிச்சக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்குரிய ஏற்பாடுகளை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சு செய்து கொடுக்கவேண்டும். வெளியிணைப்பு இயந்திரமாக 15வரையான குதிரை வலுவுடைய இயந்திரங்கள் மாத்திரமே பாவிக்க முடியும். அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் கடற்றொழில் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
தாயகக்குரல் 15


தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்காத எந்த வெற்றியும் நிச்சயமானதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த ஊவா மாகாணசபை, யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவுகளின் பின்னரே இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தேர்தல் நடந்து முடிந்த மூன்று இடங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற படுதோல்விகளின் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் முக்கியத்துவம் புரிந்துள்ளது.
இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை தழுவியிருந்த போதிலும் படுதோல்வியடையாமல் ஐக்கிய தேசியக் கட்சியை இதுவரை காப்பாற்றி வந்தது தமிழ் முஸ்லிம் மக்களே. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று இடங்களிலும் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. ஊவா மாகாணசபை தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 23
மூ வீத வாக்குகளையே பெற்றிருந்து. வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இந்த தேர்தலில் மிகவும் சொற்ப வாக்குகளையே பெற்றிருந்தன.
ஐக்கிய தேசியக்கட்சியின் தோல்வி குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சி இப்போது பிராந்தியக் கட்சி நிலைக்கு வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இவர்களின் இந்த தோல்விகளுக்கு காரணம் இனப்பிரச்சினை தொடர்பாக இவர்கள் இதுவரை இரட்டைவேடம் போட்டு தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஏமாற்ற முயன்றதேயாகும்.
தமிழ் மக்களை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை இனப்பிரச்சினையே. எனவே தமிழ் மக்கள்pன் மனங்களை யார் வென்றெடுக்க வேண்டுமானாலும் அவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக சொல்வதானால் இனப்பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததே ஐக்கிய தேசியக் கட்சிதான். இனப்பிரச்சினை தீவிரமடைய உரமிட்டவர்கள் சிலர் இப்போதும் ஐக்கிய தேசியக்கட்சியில் மூத்ததலைவர்களாக உள்ளனர்.
கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்ததில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பங்குண்டு. இந்த நிலையிலும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியால்தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்கள் மனதில் அப்படிப்பட்ட நம்பிக்கையை ஊட்டிவிட்டவர்கள் தமிழ் தலைவர்களே. குறிப்பாக தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக்கட்சி மற்றும் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவே தமிழ் மக்களுக்கு அந்த நம்பிக்கையை ஊட்டிவிட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. இன்று தமிழ் மக்கள் மெல்லமெல்ல உண்மையை உணர ஆரம்பித்துவிட்டனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை ஐக்கிய தேசியக்கட்சி குழப்பியபோதெல்லாம் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அவ்வப்போது சில சிங்களத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடவேண்டும்.
1956 யூன் 5ம் திகதி தமிழ் தலைவர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகம் செய்தபோது சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டனர். அது குறித்து 8 யூன் 56ல் லெஸ்லி குணவர்த்தன பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ~~.இலங்கைக்கு மிகப்பெரிய ஆபத்து வரவுள்ளது அம்மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போவற்குகூட தீர்மானிக்கலாம். என்று எச்சரித்திருந்தார்.
1956; யூன் 14ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய கொல்வின் ஆர்.டி.சில்வா சிங்களம் மட்டும் சட்டம் எதிர்பாராத விளைவுகளைத் தரும். இரத்தம் வடியும். துண்டிக்கப்பட்ட இரு சிறு அரசுகள் ஒரு அரசில் இருந்து தோன்றக்கூடும். அண்மையில்; வெளியேறிய ஏகாதிபத்தியவாதிகள் மீண்டும் எம்மை ஏப்பமிட ஏதுவாகலாம் என எச்சரித்திருந்தார்.
1957ல் பண்டா- செல்வா ஒப்பந்தம் உருவானபோது அதற்கு எதிராக கண்டியில் இருந்து ஜே.ஆர் ஜெயவர்தனா மேற்கொண்ட பாதயாத்திரை பாதிவழியில் எஸ்.டி. பண்டாரநாயக்காவால் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து பிக்குகள் மூலம் .தே.கட்சி கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக செல்வாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பண்டாரநாயக்கா பிக்குகள் முன் கிழித்தெறிந்தார். ஒப்பந்தம் கிழித்தெறியும்போது ஓர் எச்சரிக்கையும் அவர் விடுத்திருந்தார்..~~ இதனைக் கிழித்தெறிவதினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படக்கூடும். அது தொடர்பாகவும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்தார்.|| அவர்களுடைய தீர்க்கதரிசனம் போல் தமிழ் மக்கள் மேலம் மேலும் அடக்கி ஆளப்பட்டபோது அவர்கள் பிரிந்து போக முடிவெடுத்தனர். அதற்கு ஆயுதப்போராட்டம்தான் ஒரே வழி என நம்பி ஆயுதம் ஏந்தினர். ஆனால் போராட்டம் வெறும் ஆயுதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட ஒரு போராட்டமாக தொடர்ந்ததால் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தது.
புலிகளின் தவறான அணுகுமுறையால்தான் போராட்டம் தோல்வியடைந்தது என்பதை இன்று புலி ஆதரவாளர்களும்; ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தேர்தலை மையமாக வைத்து அரசியல் நடத்த இனப்பிரச்சினைக்கு எந்த தீர்வையும் தெரிவிக்காத ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று ஏற்பட்ட தோல்வியால் எதிர்கட்சிகள் எல்லாவற்றையும் இணைத்து ஒருகூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால்;கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலக்கட்சிகளான தமிழசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ் என்பன கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மந்திரிகளாக இருந்துள்ளனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் டி.எஸ்.செனநாயக்காவின் அரசாங்கத்தில் மந்திரியானார். அதை அப்போது கண்டித்த தமிழரசுக்கட்சியினர் 1965ல் ஐக்கிய தேசியக் கட்சியின் 7 கட்சி கூட்டரசில் பங்காளியாகி மு.திருச்செல்வம் கபினெற் அமைச்சரானார். தமிழன் தோலில் செருப்பு தைக்கவேண்டும் என இனவாதம் பேசிய கே.எம்.பி. இராஜரட்ன போன்றவர்களுடன் அந்த அரசில் இணைந்த அந்தகட்சிகளின் வழி வந்தவர்களுக்கு இப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில்; சங்கடம் இருக்காது.
.
பொசன ஐக்கிய முன்னணி அரசு கொண்டுவந்த அரசியல் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக .தே.கட்சியுடனும் ஜே.வி.பி.யுடனும் சேர்ந்து எதிர்த்து அந்த தீர்வை வரவிடாது தடுத்ததுமாத்திரமல்ல பின்னர் இனவாதகட்சிகள் எனக் கூறப்படும் கட்சிகளுடன் .தே..கட்சி மேடைகளில் கைகோர்த்தவர்கள் என்பதால் இப்போது .தே.கட்சியுடன் இணைவது ஒன்றும் புதுமையில்லை.
கடந்த ஐந்து வருடங்களாக புலிகளின் போராட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டவர்கள்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். எனவே தமிழ் மக்களின் துயரங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பு ஏற்கவேண்டும். தமிழ் மக்களின் அழிவுக்கும் துயரங்களுக்கும் காரணமான புலிகள் இன்று இல்லாத நிலையில் எஞ்சியிருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.
தமிழ் மக்களின் வாக்குகளை இவர்கள் மூலம் பெறலாம் என .தே.கட்சி கனவு காணலாம். அதே வேளை இவர்களை .தே.கட்சியில் சேர்ப்பதால் மேலும் சிங்கள வாக்குகளை .தே.கட்சி இழக்கநேரிடும்;. .தே.கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைப்பதில் தமிழ் ஊடகங்களே அதிக அக்கறை காட்டுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...
தாயகக்குரல் 14

பிரச்சனையை உருவாக்கிய அதே பழைய சிந்தனை மட்டத்தால் அந்தப் பிரச்சனையை தீர்க்கமுடியாது- - அல்பர்ட் ஜன்ஸ்டைன்
~~யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த தமிழ் தலைவர்கள் இருந்தார்கள். இவர்கள் உலகமட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலிகள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்.|| என்று இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டும் என்று தமிழ் நாடு சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் பீற்றர் அல்போன்ஸ் கூறியிருந்தார்.
தமிழ் அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சாம் தம்பிமுத்து போன்ற பலர் புலிகளால் கொல்லப்பட்டது குறித்தே பீற்றர் அல்போன்ஸ் மேற்படி கூறியிருந்தாரா அல்லது இந்த தலைவர்கள் முதல்கொண்டு இவர்கள் வழி வந்து இன்று கட்சிகளுக்கு தலைமை தாங்கும் மாவை சேனாதிராசா, இரா.சம்பந்தன் வரையும், எவராலுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியவில்லையே என்ற ஆதங்கந்தில் கூறினாரா தெரியவில்லை.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இந்த தலைவர்கள் பாராளுமன்றத்திற்கூடாக பெறமுடியாத உரிமைகளை இன்று வடக்கில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கூடாக பெற்றுத் தருவோம் என மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைபபினர்.
இந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளில் தேசியக் கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றைப்பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு புரியும். இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக மாறுவதில் இக்கட்சிகள்; வகித்த பாத்திம் என்ன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வகித்த பாத்திரம் என்ன என்பதுபற்றி தமிழ் மக்களுக்கு குறிப்பாக இன்றை சந்ததியினருக்கு தெரிந்திருக்காது.
பீற்றர் அல்போன்ஸ் கூறியிருந்தபடி ஜீ.ஜீ. பொன்னம்பலம் , எஸ்.ஜே.வி.செல்வநாயகம், செனற்றர் திருச்செல்வம், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற பலர் இராணி வழக்கறிஞர்களாகவும் சாதாரண வழக்கறிஞர்களாகவும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர். இனப்பிரச்சினைக்கு இதுவரை திர்வு காணப்படாமைக்கு அரசாங்கம்மீதே தமி;ழ் தலைவர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். ஆனால் இவர்கள் கூற்றின் உண்மையை அறியவேண்டுமானால் தமிழ் தலைவர்களது கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் திரும்பி பார்க்கவேண்டியுள்ளது. அதே நேரம் கடந்த காலங்களில் தமிழ் தலைவர்கள்மீது ஏனையோரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும் இன்றுவரை நாம் பெற்ற அரசியல் அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதும் அவசியம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் தலைவர்களுக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை கோட்டைவிட அவர்களின் வர்க்க நலன்களே காரணமாக இருந்தது என்றும் சிலர் குற்றம் சாட்டி வந்தனர். வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் யாழ் குடாநாட்டையே மையப்படுத்தி இருந்தன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசுகள் மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று சிங்களம் அரசகரும மொழியாக்கல். இரண்டாவது கல்வியில் தரப்படுத்தல்முறை அறிமுகப்படுத்தியது. இரண்டு சட்டங்களாலும் அதிகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்;கள் யாழ்குடாநாட்டு மக்களே. பொதுவாக யாழ் குடாநாட்டு மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்கல்விகளை கற்று இலங்கையில் அரசநிர்வாகத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அரசநிர்வாகத்தில் அதிஉயர் பதவி வகித்தவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. குறிப்பாக யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்களே. சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் இவர்களே.
கல்வியில் தரப்படுத்;தல் அறிமுகப்படுத்தப்பட்டதும் யாழ் குடாநாட்டு மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் முதல் நடவடிக்கை தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றியது. இந்த நடவடிக்கை தமிழ் மக்களை உடனடியாக பாதிக்காததால் மக்கள் அதில் பெரிதாக அக்கறைகாட்டவில்லை.
சிங்கள அரசுகளின் தமிழ் மக்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகளால் தமிழரசுக்கட்சிக்கும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தங்கள் அமோக ஆதரவை வழங்கிவந்தனர். அரசின் நடவடிக்கைகள் குடாநாட்டை அதிகம் பாதித்ததாலும் அரசியல் தலைமை குடாநாட்டை மையப்படுத்தி இருந்ததால் அரசுக்கெதிரான சட்டமறுப்பு போராட்டங்கள் வடபகுதியில் ஆரம்பித்து கிழக்கிலும் தீவிரமடைந்தது.
இந்தப் போராட்டங்களின் விளைவாக மாறிமாறி பதவிக்கு வந்த அரசுகள் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வராததற்கு முழுப்பொறும் அரசாங்கமே என்ற தமிழ் தலைரவர்களின் குற்றச்சாட்டுக்கு எதிராக பலர் விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் தோல்வியடைய அரசுகள் மாத்திரமல்ல தமிழ் தலைவர்களின் விவேகமற்ற செயல்பாடுகளும் ஒரு காரணம் என இவர்களது தவறுகளை சுட்டிக்காட்டி வந்த இடதுசாரிகள்மீது தமிழ் மக்கள் சேறுபூசினர். ஆனாலும் தமிழ் தலைவர்கள்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஓரளவு நியாயம் இருப்பதாக நாம் கடந்தகால படிப்பினைகளில் இருந்து உணரமுடிகிறது.
தமிழ் தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சிக்; கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தீவிரமான போராட்டங்களை நடத்துவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியுடன் தாராள மனப்பான்மையுடன் விட்டுக்கொடுத்து போவதாகவும் கடந்த காலங்களில் விமர்சிக்கப்பட்டனர். கடந்தகால வரலாற்றை ஆராய்ந்தால் அவர்களுடைய குற்றச்சாட்டில் ஓரளவு உண்மையும் இருப்பதை காணலாம்.
இனப்பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் குறிப்பாக காலிமுகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகம், வடக்கு கிழக்கில் அரச நிர்வாகங்களுக்கெதிராக நடைபெற்ற சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் எல்லாமே சுதந்திரக்கட்சி அரசுக்கெதிராகவே நடைபெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
1956ல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று பண்டா - செல்வா ஒப்பந்தம் உருவாகிற்று. .இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.ஆர் இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதே நேரம் பண்டாரநாயக்கா அரசில் இருந்த வலதுசாரி சக்திகளும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சூழ்சிகள் செய்து பண்டாரநாயக்காவுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதத்தில் ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரம் வலுத்திருக்கும் வேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ~~சிங்கள ஸ்ரீ|| இலக்க பஸ்களை அனுப்பினர்.
சிங்கள ஸ்ரீ க்கு எதிரான போராட்டத்தை சி.சுந்தரலிங்கம் ஆராம்பித்தார். சுந்தரலிங்கத்துக்கு தமிழ் மக்களிடையே நல்ல பெயர்வந்துவிடும் என்பதால் தமிழரசுக்கட்சியும் ஸ்ரீ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்pல் தமிழரசுக்கட்சி ஈடுபட்டதும் பண்டாரநாயக்காவுக்கு நெருக்கடிகள் தோன்றி ஒப்பந்தத்தை கிழித்தெறியும் நிலை ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஸ்ரீ பிரச்சினையே இருந்திருக்காது. (இப்போது எந்தவித போராட்டமும் இல்லாமலே ஸ்ரீ இலக்கத்தகட்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது)
1960 ல் சுதந்திரக் கட்சி அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அரசகரும மொழி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாடசாலைகளை தேசியமயமாக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் தமிழ் அரசுக் கட்சி உடனே பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு அரசமொழிக் கொள்கையையும் பாடசாலைகள் தேசியமயமாக்குவதையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. பாடசாலை தேசியமயமாக்கப்பட்டதால் தமிழ் மக்களின் கல்வித்தரம் குறைந்துவிட்டது என கூறமுடியாது.
1964ல் சிறிமாவோ தலைமையிலான கூட்டரசாங்கம் கவிழும் நிலையில் இருந்தபோது பண்டா -செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரியபோது அதற்கு ஆதரவளித்திருந்தால் இவர்கள் தயவில் இருக்கும் அரசிடம் பண்டா செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கலாம். இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசை வீழ்த்தினர்.
கூட்டரசாங்கம் கவிழ்ந்து 65ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்ட தமிழரசுக் கட்சி மாவட்ட சபையை அடிப்படையாக கொண்ட தீர்வுக்கு டட்லியுடன் ஒப்பந்தம். செய்துகொண்டது. ஒரு காலகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தமுடியாது என்று டட்லி அறிவித்த பின்னரும் தமிழரசுக் கட்சி கடைசிவரை அரசாங்கத்தை ஆதரித்தது.
தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உருவான பின்னர் நடைபெற்ற கட்சியின் முதலாவது மகாநாட்டில் தனிநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1977ல் தனிநாட்டு கோரிக்கைக்கு மக்கள் ஆணைகேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட அபிவிருத்திச்சபை திட்டத்தை ஏற்றுக்கொண்டு மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலிலும் பங்குபற்றினர்.
1983ம் ஆண்டு இனக்கலவரத்துடன் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. புலிகள் ஆயுதபலத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய இயக்கங்களை அழித்தனர். இன்று தமிழ்; தேசியக் கூட்டமைப்;பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டதும் பின்னர் கட்சியில் உள்ளவர்கள் சிலர் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று பாராளுமன்ற பதவியை தக்கவைத்துக்கொண்டதும் இன்றைய தலைமுறையினர் அறிந்ததே. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் தமிழ்; தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தவறவிட்டனர். புலிகளை ஏகபிரதிநிதிகளாக இவர்கள் ஏற்று செயற்படத் தொடங்கிய பின்னர் அரசுடனான பேச்சுவார்த்தையை முற்றாக புறக்கணித்துவந்தனர். இப்போது புலிகள் இல்லாதநிலையில் மீண்டும் ஏகபிரதிநிதிகளாக தங்களை அனுப்புங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வை வாங்கித் தருகிறோம் என்கின்றனர். 60 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றியது போதாதா.
தமிழ் மக்களின் நெஞ்சிலேயே குத்திய சிங்கள அரசுகளைவிட தமிழ் மக்களின் முதுகிலே குத்துகிற தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆபத்தானது.
மேலும் இங்கே தொடர்க...
29.07.2009 தாயகக்குரல் 13தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியபின் சுமார் ஆறு வருடங்களில் இப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதுபற்றி சுயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வொன்றைக் காணும்வகையில் மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத்திட்டம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேசத்திடம் முன்வைக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுயஉரிமைத் தத்துவம், தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளும் சுயாட்சிமுறை ஆகிய மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் அமையும் என மாவைசேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநித்துவப் படுத்தி வருவது அகில இலங்கைத் தமிழசுக் கட்சியை பிரதானப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும். இதுவரை இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த உரிமைகள்தான் என்ன?.
இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பலராலும் பேசப்படும் சுயநிர்ணய உரிமை கோட்பாடு தமிழ்மக்கள் சார்பில் முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களால் முன்வைக்கப்பட்டது இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்காது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் முதலில் உருவான கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் 1936ல் நடைபெற்ற தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார். அப்போது அமைக்கப்பட்ட மந்திரிசபை தனிச்சிங்கள மந்திரிசபையாக இருந்தது. இதனால் ஜீ.ஜீ. அவர்கள் 50: 50 கோரிக்கையை முன்வைத்தார். எல்லா விடயங்களிலும் பெரும்பான்மையின மக்களுக்கு உள்ள அதே உரிமைகள் சிறுபான்மை இனமக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும். அந்தக் கோரிக்கை தோல்வியடைந்ததும் 1947ல் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் எஸ்.ஜே.வி.செல்வநாயம் தலைமையில் பிரிந்து 1949ல் உருவாகிய இலங்கைத் தமிழசுக்கட்சியும் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட சமஷ்டி முறையை வலியுறுத்தி வந்தது.
சுயநிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைத்த ஜீ.ஜீ. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவையில் இணைந்த போது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டார். காலத்துக்கு காலம் ஜீ.ஜீ. யின் 50:50 கோரிக்கையும், தமிழரசுக் கட்சியின் சமஅந்தஸ்து கோரிக்கையும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்ததை மறுக்கமுடியாது.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினையை மையமாக வைத்தே அரசியல் நடத்திவந்த இவர்களால் இதுவரை இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீhவையும் காணமுடியவில்லை. அதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் இவர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையை திட்டமிட்டு பறித்த இந்த சிங்கள இனவாத அரசுகளிடம் இருந்தே இந்த மக்களை பிரதிநித்துவப் படுத்திய தலைவர்கள் தங்களுடைய தீர்க்தரிசனமான அணுகுறைகளால் மீண்டும் தங்கள் மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தனர். ஆனால்; வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்களால்மட்டும் ஏன் இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வும் காண முடியாமல் போயிற்று.
அதற்கு ஒரு காரணம் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி தலைவர்களுடைய வர்க்க குணாம்சமாகும். இவர்கள் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் மென்மையான போக்கையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காலத்தில் தீவிரமான போக்கையும் கடைப்பிடித்து வந்ததால் இவர்களால் எந்த அரசிடமும் தீர்வை எட்டமுடியவில்லை.
1972 தமிழ் காங்கிரஸ் தமிழரசுக்கட்சி ஆகியன இணைந்து தமிழ் கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணி 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணியானது. இதன் முதலாவது மகாநாட்டில்தான் தனிநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தனிநாட்டு தீர்மானம் கூட்டணியின் தந்திரோபாயமான அரசியல் தீர்மானமேயன்றி அவர்கள் தனிநாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அதை அமிர்தலிங்கம் அவர்களே சிலரிடம் தெரிவித்திருந்ததுடன் அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியும் எதிர்பாரத விதத்தில் இனப்பிரச்சினை தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுத்தது. இதன் விளைவாக இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தம் செயற்படாமல் போனதற்கான காரணம் தனியாக ஆராயப்படவேண்டிய விடயம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக புலிகளுக்கும் அரசுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் இருதரப்பினரிடையே போர் ஆரம்பித்தது. இடையிடையே போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்ற நிகழ்ச்சி நிரல் இடம்பெற்றாலும் சமாதானகாலத்தில் இரு தரப்பினரும் தங்கள் ஆயுத பலத்தை பெருக்கினரே அன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயம் பேச்சுவார்த்தையில் ஆராயப்படவில்லை.
2001ம் ஆண்டு தேர்தலில் சமாதானத்துக்கான மக்கள் ஆணை கேட்டு வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கா நாட்டின் தலைவி என்ற முறையில் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஆலோசிக்காமலே, அவரின் ஒப்புதல் பெறாமலே புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளுக்கே ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தின்மூலம் நிரந்தர சமாதானம் ஏற்படும் என மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இந்தக் காலத்திலேயே தமிழர்விடுதலைக் கூட்டணி, ரெலோ, .பி.ஆர்.எல்.எவ் ஆகியன இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைபை உருவாகியது. இந்தக் கூட்டை விரும்பாத இக்கட்சிகளின் உறுப்பினர்கள் பிரிந்து தனியான அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர்.
வடக்கு கிழக்கில் புலிகள் ஆயுதபலத்துடன் இருந்ததால் 2004ல் நடந்த தேர்தலில் புலிகளின் ஆதரவுடன் தங்கள் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தனர். 2001 வரைதேர்தலில் பங்குபற்றுவோரை துரோகிகள் எனக்கூறி கொலை செய்துவந்த புலிகள் 2004 தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தனது ஆட்களையும் தேர்தலில் போட்டியிட வைத்து தேர்தல் மோசடிகள்மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பின் 22 பிரதிநிதிகளை தெரிவு செய்ய வைத்தனர்.
புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு முக்கிய தலைவர் கொல்லபட்டுவிட்டார்கள் என்ற செய்தி வெளியாகும்வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஈழத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள் உடனேயே ஈழத்தை நாங்கள் எப்போதும் ஆதரிக்கவில்லை அரசியல் தீர்வுக்குத் நாங்கள் தயார் எனக் கூறினர். இப்போது இறைமை, சுயஉரிமை, சுயாட்சி பற்றி தீர்வுத்திட்டம் தயாரிக்கப்போவதாக தெரிவிக்கினி;றனர்.
சிறீலங்கா இனவாத அரசு தமிழர் பிரச்சினையை தீhவு எதையும் தராது என்று அடிக்கடி கூறிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வை யாரிடம் இருந்து பெறப்போகிறார்கள். இந்தியாவிடமா? அல்லது சர்வதேசத்திடம் இருந்தா.? தீர்வுத்திட்டத்தை தயாரித்து இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் வழங்குவதாக தெரிவித்துள்ளமை இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்திய அரசியலமைப்புக்கு மேலான உரிமைகளை இந்தியா பெற்றுக்கொடுக்குமா? இந்தியாவை மீறி சர்வதேசம் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுமா? என்பதை ஆராயும் பக்குவம் மக்களுக்கு வந்துவிட்டது.
ஆனால் இப்போதும் மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
மேலும் இங்கே தொடர்க...
22.07.2009 தாயகக்குரல் 12
ஏமாற்றலாம் என்று எண்ணுகின்றது. .மக்கள் ஏமாறுவார்களா

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் தமிழ் மக்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வோ, யதார்த்தமான அணுகுமுறையோ இல்லாதிருந்ததால் அது வளர்ச்சி பெற்றது. பல இனக்கலவரங்களைத் தொடர்ந்து 1983 ஆடி கலவரத்தின் பின்னர் இனப்பிரச்சினை தீவிர ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.
ஆயுதப் போராட்டத்தின் விளைவாக இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்மூலம் ஒருதீர்வை ஏற்படுத்தியது. இந்த தீர்வு தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக தீர்க்காவிட்டாலும் இனப்பிரச்சினைக்கான ஓர் ஆரம்பதீர்வாக புலிகள் உட்பட தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்த பிரதமர் பிரேமதாசா ஜனாதிபதியானதும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உதவியாக இலங்கை வந்த இந்திய படையினரை வெளியேற்ற புலிகளை கூட்டு சேர்த்தார்.
இந்தியப்படை வெளியேறியதும் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே போர்மூண்டது. இடையிடையே பலமுறை யுத்தநிறுத்த ஒப்பந்தங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் நடைபெற்றபோதிலும் இனப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. காரணம் புலிகள் ஈழத்தை தவிர வேறு எந்த தீர்வையும் எதிர்பார்க்கவில்லை.
இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், பலகோடிக்கணக்கான சொத்துகள் அழியவும் சுமார் மூன்று லட்சம் மக்கள் அகதிகளாகவும் காரணமான ஈழயுத்தம் இன்று முடிவுற்ற நிலையில் இன்று வடக்கில் வவுனியா நகரசபை, யாழ்ப்பாணம் மாநகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுவரைகாலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய உள்ளுராட்சித் தேர்தல்களை பகிஷ்கரித்து அதில் பங்குபற்றுவோரை துரோகிகள் என் முத்திரை குத்திவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய பல கட்சிகளும்; இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
சரியோ பிழையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு ஒரு நிலையான கொள்கை உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டமைப்பாகும். தங்கள் தலைவர்களையும் ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி படுகொலை செய்த புலிகளை தங்களது பாராளுமன்ற பதவிக்காக தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட கட்சிகளின் கூட்டாகும். இவர்கள் கூட்டு சேருவதற்கு முன்னர் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொண்டவர்கள்.
புலிகளின் தலைவர் மரணிக்கும்வரை ஈழம்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறிவந்தவர்கள் புலிகளின் தோல்விக்குப் பின்னர் உடனடியாக தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொண்டனர். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் அரசியல்ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வந்திருக்கிறோம். தவறுகளை உணர்ந்து திருந்தாவிட்டால் எமது இனம் எம்மை குப்பைக் கூடைக்குள் வீசிவிடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐக்கியம், இறைமை என்பவற்றுக்கு பங்கம் ஏற்படாதவரையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா இப்போது பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சரியாகவோ பிழையாகவோ மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திற்கு சென்றவர்கள். இவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுத்திருக்கவேண்டும். ஆனால் இவர்கள் கட்சி மட்டத்தில் இனப்பிரச்சினை பற்றி விவாதித்து ஒரு தெளிவான முடிவு எடுக்காத காரணத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர்.
தமிழீழம் கேட்கவில்லை என்று ஒரு தருணத்தில் கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன்.
கடைசி தமிழன் இருக்கும்வரை போராட்டம் என்றார் மாவை சேனாதிராசா.
தமிழீழம் அமைக்கவேண்டும் என்றார் ஜெயானந்தமூர்த்தி.
யுத்தம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம்; பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.. இரா.சம்பந்தன் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் இன்னும் 50 வருடங்களுக்கு நீடிக்கும் என்றும் அப்படி நீடித்தால் அச்சந்தர்ப்பத்தில் ஒரு தமிழர்கூட நாட்டில் இருக்கமாட்டார்கள் என்று கூறியிருந்தார். அப்படிப்பட்ட யுத்தத்தை நிறுத்த் இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
2008ம் ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற டட்லி சேனநாயக்க நினைவுதினக் கூட்டத்தில் பங்குபற்றி உரையாற்றிய இரா.சம்பந்தன் டட்லி - செல்வா ஒப்பந்தம் அரசியல் தீர்வுக்குரிய சரியான யோசனை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதைவிடவும் மேலான பண்டா-செல்லவா ஒப்பந்தம் ஏற்பட்டது இவருக்குத் தெரியாதுபோலும்.
சந்திரிகா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசு கொண்டுவந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை இனவாத கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் எதிர்த்தது. .பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத்திட்டம் தமிழ் நாட்டு அரசுக்கு இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் கொண்;டது என இந்திய அரசியல் வல்லுனர்களே தெரிவித்திருந்தனர். இந்த தீர்வுத் திட்டதை இனவாதக் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்தது மாத்திரமன்றி அதன் பின்னர் .தே.கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் கைகோர்த்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர்.
தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை மாற்றப்படவேண்டும் என்று தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் 2001ம் ஆண்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றவேண்டும் எனவும் அரசியலமைப்பை மாற்றுவதற்கு மக்கள் விரும்புகிறார்களா என்பதை அறிய சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்போவதாகவும் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்கா அறிவித்திருந்தார். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி மத்திய குழு 5.08.2001 ல் கூடி அரசியலமைப்பு மாற்றம் தேவையில்லையென மக்கள் வாக்களிக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. இந்த அரசியலமைப்பை மாற்றாமல் இன்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொண்டுவரமுடியாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. .வி.கூட்டணி எடுத்த தீர்மானத்துக்கு காரணம் எதுவும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவான காலம் முதல் இதுவரை தமிழ் மக்களின் துன்பங்களுக்கு பட்டியல் போட்டார்களே அன்றி அந்தத் துன்பங்களுக்கு முடிவு கட்ட அரசியல் தீர்வை ஒருநாளும் வற்புறுத்தவில்லை. இப்போது அரசியல் தீர்வை கூறி மக்களிடம் வருகிறார்கள்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் கொள்கைகளை மாற்றியபோதிலும் தேசியம் என்ற மாயையால் மக்களை தொடர்ந்து?
மேலும் இங்கே தொடர்க...
15.07.2009 தாயகக்குரல் 11


ஊவா மகாணசபை மற்றும் யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபைகளுக்கான தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் களத்தில் மீள்குடியேற்றம், வடபகுதிக்கான அபிவிருத்தி பற்றியே கூடுதலாக பேசப்படுகிறது.
அரசாங்கம் இத்தேர்தலில் வடபகுதிக்கான அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரங்களை மேற்கொள்ளுகிறது. எல்லாக் கட்சிகளும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பனபற்றி பொதுவாக பேசிவருகின்றன.
இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் வவுனியா நிவாரணக் கிராமங்களை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதியை பேட்டி கண்டபோது ஜனாதிபதி மீள்குடியேற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீண்டும் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க அப்பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். அப்பிரதேசங்களில் இருந்து கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு .நா. வின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அதுவரை மீள்குடியேற்றத்தைச் செய்யமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வவுனியா வடக்கு உதவி பிதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டு புலிகளின் பிடியில் இருந்த 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் எட்டு (நெடுங்கேணி கிராமசேவையாளர் பிரிவு) கிராமங்களில் முதல்கட்டமாக குடியேற்றும் நடவடிக்கைளை மேற்கொள்வதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நிவாரணக் கிராமங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நாளொன்றுக்கு 25 கோடி ரூபாவைச் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே மக்களை மீளக்குடியமர்த்தினால் இந்தச் செலவுகள் குறையலாம் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சுமார் மூன்று லட்சம் மக்கள் தொகையில் 55ஆயிம் மாணவர்களும் 1969 ஆசிரியர்களும் அடங்குவர். இங்குள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலேயே கூடிய அக்கறை கொண்டுள்ளனர். பிள்ளைகளுக்காகத்தான் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொள்கிறோம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். பிள்ளைளின் கல்விக்கான வசதிகளை அரசாங்கம் ஓரளவுக்கு செய்து வருகிறது.
இனப்பிரச்சினை வடபகுதி தேர்தல் களத்தில் மாத்திரமல்ல தென்னிலங்கை தேர்தல் களத்திலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. யுத்தத்தை மூலதனமாக்கி அரசியல் நடத்திய கட்சிகள் யுத்தம் முடிந்துவிட்டதால் இப்போது யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக எதிர்கட்சிகள் வன்னி நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடிப்பதை காணமுடிகிறது.
மக்கள் படும் துன்பம் குறித்து யாரும் கண்ணீர் வடிப்பது மனிதாபிமானம். தமிழ் மக்களின் இன்றைய துயரநிலைக்கு அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் காரணியாக இருந்துள்ளன. எனவே இக்கட்சிகள் மக்களின் துயரங்களுக்காக கண்ணீர் வடிப்பதோடு நின்று விடாமல் மக்களின் துன்பங்களுக்கான காரண காரியங்களை இல்லாமல் செய்ய முன்வரவேண்டும்.
அரசாங்கமும், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக தங்களது தெளிவான கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கிறது.
அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காது அரசாங்கம் இழுத்தடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியும் இதுவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு எதனையும் முன்வைக்காத நிலையில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொருந்தலாம். தமிழ் மக்களின் வாக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையான காலங்களில் மட்டும் இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி கருத்து தெரிவிப்பது வழக்கம்..
இனப்பிரச்சினை தீர்வில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுசன ஐக்கிய முன்னணியும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் இனப்பிரச்சினைக்கு சுமூகமான ஒரு தீர்வைக் கண்டு விடலாம். தென்னிலங்கை அரசியல் களத்தில் இனப்பிரச்சினையும் முக்கிய கருப்பொருளாக இருப்பதால் இனப்பிரச்சினையில் இரு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வரும் என்பது சந்தேகமே.
இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகமான அதிகாரங்களை வழங்க தயாராக இருப்பதாய் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் கூறிவருகிறார். ஆனால் பல தசாப்த காலமாக இழுபறி நிலைக்கு உள்ளாகிவரும் தமிழர் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் எவ்வித தீர்வும் இல்லையென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கிறார்.
இனப்பிரச்சினை தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்த எதிர்கட்சிகளின் விமர்சனம் ஒருபுறம் இருக்க ஜனாதிபதி இந்து நாளிதழின் ஆசிரியர் ராமுக்கு அளித்த பேட்டியில் பதின்மூன்றாவது திருத்த சட்டமூலத்திற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் எனது அரசியல் தீர்வு வரும். நாளைகூட ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கலாம். எனினும் அதற்கு மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படமாட்டாது என்பது தெளிவு.
நாட்டின் ஐக்கியம், இறைமை என்பவற்றுக்கு பங்கம் ஏற்படாதவரையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா கடந்த புதனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தான் கடந்த காலங்களில் ஏனைய தமிழ்கட்சிகள் கூறிவந்தபோது அவர்களை துரோகிகள் என்று புலிகளுடன் சேர்ந்து விமர்சித்து வந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது வந்துள்ள ஞானோதயம் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வு திட்டத்தை பாராளுமன்றத்தில் எதிர்த்து இனவாதக் கட்சிகளோடு கைகோர்த்தபோது வந்திருக்கவேண்டும். இதை ஒருவகையில் காலம் கடந்த ஞானம் என்றுதான் கூறவேண்டும்.
ஒரு பிரச்சினைக்கான தீர்வை ஒருவர் முன்வைக்கும்போது அதை விமர்சிப்பவர்கள் அதற்கான மாற்றுத்தீர்வை முன்வைக்கவேண்டும். அப்படியின்றி வெறும் விமர்சனம் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.
மேலும் இங்கே தொடர்க...
தாயகக்குரல் 10தாயகக்குரல் (08.07.2009)கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களை மனதில் கொண்டு ஒரு சரியான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்மைப்பு எடுக்கவேண்ட

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி கூட்டம் கடந்த 4ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டமை முக்கிய நிகழ்வாகும். கடந்த மூன்று வருடங்களாக ஜனாதிபதியுடன் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தோல்விக்குப் பின்னரே ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அந்தக் கூட்டதில் கலந்து கொண்டுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த காலங்களில் முக்கிய எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி; மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியன அரசாங்கத்துடன் பேசுவதை தவிர்த்து வந்தன. இக்கட்சிகளும் இப்போது ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் அழைத்ததற்கான காரணத்தை விளக்கிய ஜனாதிபதி;, பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது இடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை தாமதமின்றி அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தல், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை நடைமுறைப்படுத்தல், சகல பிரதேசங்களையும் பேதமின்றி அபிவிருத்தி செய்தல் என்பன பற்றி விளக்கி இவற்றை அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் செயல்படுத்தப்போதாகத் தெரிவித்தார்.
ஹெலஉருமய, ஜே.வி.பி. போன்ற இனவாதக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையும் மீள்குடியேற்றத்தையும் வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருந்தன. ஆனால் இனப்பிரச்சினைக்கு எப்படிப்பட்ட தீர்வு காணப்படவேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை.
இனப்பிரச்சினை தொடர்பாக பிரதான எதிர்கட்சிகள் பொதுவாக அரசியல் தீர்வின் அவசியத்தை ஏற்றுக்கொண்டபோதிலும் ஒவ்வொரு கட்சியும் வௌ;வேறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே சர்வ கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் நோக்குடன் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன இந்தக் குழுவில் பங்குபற்றி இனப்பிரச்சினை தொடர்பான தமது கருத்தை வலியுறுத்தவோ அல்லது தமது நிலைப்பாட்டை மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்காமலே இவர்கள் வெளியில் நின்று இந்தக் குழுவையும் அரசையும் விமர்சித்து வந்தன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இனப்பிரச்சினை தொடர்பாக இதுவரை நிலையான கொள்கைகள் எதுவும் கிடையாது.
இனப்பிரச்சினைக்கு குறைந்த பட்சத் தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட (பதின்மூன்றாவது திருத்தம் ) தீர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஜே.வி.பி. தீவிரமாக எதிர்க்கிறது. பதின்மூன்றாவது திருத்தம் பிரிவினைக்கு வழி கோலுவதாக ஜே.வி.பி கூறுகிறது. பிரிவினைக் கோரிக்கைக்கு மாற்றாகவே பதின்மூன்றாவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. பதின்மூன்றாவது திருத்தம்; தனிநாட்டு கோரிக்கையை மழுங்கடித்துவிடும் என்பதாலேயே புலிகள் அதை எதிர்த்தார்கள் என்பதற்கான காரணமாகும்.
பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பாக அரசாங்க தரப்பிலேயே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சிலரும், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடிய அதிகாரங்களைக் கொண்ட தீர்வு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிலரும் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடாது என்று இன்னும் சிலரும் தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பல கட்சிகள் கொண்ட கூட்டணி. இந்தக் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அதை பேசி தீர்க்காமல் அரசாங்கத்தில் பங்குகொண்ட கட்சிகள் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையையே ஏற்படுத்தும்.
அரசியல் தீர்வு யோசனை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு அராசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாதத்திற்கு தீர்வு கண்டதைப்போல் இந்தப் பிரச்சினைக்கும் தன்னால் தீர்வு காணமுடியும் எனவும் எனவே இதற்கு தனக்கு ஒரு சந்தர்ப்பம் தருமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனை ஒருமாதத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் இதுகுறித்து பொது இணக்கப்பாடு கண்டபின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்படும் எனவும் மக்கள் அங்கீகாரம் கிடைத்தால் யார் எதிர்த்தாலும் அத்தீர்வு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலிகளின் வழி தமி;ழ் மக்களை அழிவுக்கு கொண்டு செல்லும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் புலிகளின் தவறான செயற்பாட்டை பலர்; விமர்சனம் செய்தபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ~~விளக்கை பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவதுபோல|| புலிகளின் அணுகுமுறைகளை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. புலிகள் இனப்பிரச்சினையை சிக்கலாக்கியது மாத்திரமல்ல தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் விளையாடி இருக்கின்றனர். அரசியல் தீர்வைப் பொறுத்தவரை தனிநாட்டுக் கோரிக்கை காலாவதியாகிவிட்டது. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்பதே யதார்த்தபூர்வமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு போவதற்கு முன்னர் இனப்பிரச்சினை தொடர்பாக யதார்த்தத்திற்கு முரணான அணுகுமுறையால் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களை மனதில் கொண்டு ஒரு சரியான யதார்த்தபூர்வமான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்மைப்பு எடுக்கவேண்டும். கடந்தகால படிப்பினைகளில் இருந்து பாடம் கற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முடிவை எடுப்பார்கள் என நம்புவோம்.
மேலும் இங்கே தொடர்க...
தாயகக்குரல் 9

01-07-2009 தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் கொள்கைகளை மாற்றியபோதிலும் தேசியம் என்ற மாயையால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று எண்ணுகின்றது போலும்......


யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை, ஊவா மாகாணசபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளன. ஊவா மாகாணசபைத் தேர்தல் பற்றி தமிழ் மக்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. ஏனைய இரண்டு உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்ற களிப்பில் அரசாங்கம் நடைபெறவிருக்கும் மூன்று இடங்களுக்குமான தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும். அரசின் நோக்கம் மூன்று இடங்களிலும் வெற்றிலைச் சின்னம் வெற்றி பெறவேண்டும் என்பதேயாகும். எனவேதான் இரண்டு உள்ளுராட்சி சபைகளிலும் .பி.டி.பி. யை வெற்றிலைச் சின்னத்தில் கேட்க வைத்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் பல அபிவிருத்தி வேலைகளை அரசு அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் மீன்பிடிப்பதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டுக்கான மின்வினியோகத்தை அதிகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்கட்சியான .தே.கட்சி நடைபெறவிருக்கும் மூன்று தேர்தல்களிலும் போட்டியிடுகின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்கள்பால் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் அக்கறை அரசுக்கு கிடையாது என குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றினால் -9 பாதையை 24 மணிநேரத்தில் மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடுவதாக ஜயலத் ஜெயவர்த்தன தெரிவிக்கிறார்.
இனப்பிரச்சினைக்கு கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிகளின்போது ஐக்கிய தேசியக் கட்சி சரியான முடிவு எடுத்திருந்தால் இலங்கையில் இப்போது ஏற்பட்ட பேரழிவுகளைத் தவிர்த்திருக்கலாம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்த ஒவ்வொரு முயற்சியின்போதும் தீர்வை தடுப்பதற்காக செயற்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாது வடக்கு கிழக்கு மாகாண சபையை இயங்காமல் செய்தனர்.
பொதுசன ஐக்கிய முன்னணி கொண்டுவந்த தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்குகூட எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்கவில்லை. விவதத்திற்கு அனுமதித்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதற்கான காரணத்தைக் கூறவேண்டி இருக்கும். அப்போது தமிழ் மக்களின் வாக்குகளை இழக்க நேரிடலாம் என்பதாலேயே தீர்வுத்திட்டத்தை விவாதத்திற்கும் விடாமல் தடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி. இவர்கள் இப்போது யாழ், வவுனியா உள்ளுராட்சி தேர்தல் களங்களில் நின்று இனப்பிரச்சினை பற்றி பேசுகின்றனர்.
வடக்கில் 1998ம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை.
ஆனால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகி வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் பின்போடப்பட்டு வந்தன. அப்போது உள்ளுராட்சித் தேர்தல்களை தீவிரமாக எதிர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் யாழ் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் போட்டியிடுகின்றது.
தேர்தலை விரும்பாத புலிகளின் அறிவுறுத்தலுக்கமையவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் உள்ளுராட்சித் தேர்தல்களை பகிஷ்கரித்து வந்தது. இப்போது புலிகள் அழிந்ததும் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஆகியன குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேசப்போவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தங்களுக்கு அறிவுறுத்தல் கிடைத்ததாலேயே தாங்கள் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அவர்களுக்கு அறிவுறுத்தல் யாரிடம் இருந்து கிடைத்தது என்பதை அவர் தெரிவிக்காவிட்டாலும் அது மக்களுக்கு விளங்கும். அப்படியானால் இதுவரை காலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தாங்கள் செயற்பட்டது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது இப்போதைய நிலைப்பாடு தந்திரோபாயமான செயற்பாடா என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய தேர்தல் களத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
தமிழ் மக்களின் இன்றைய அகதி வாழ்க்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒருவிதத்தில் காரணகர்த்தாவே. புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய சர்வதேசத்தினூடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் இவர்கள் காலம் கடத்தினரே அன்றி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண எந்தச் சந்தர்ப்பத்திலும் முயற்சிக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி தொடர்பாக ஜனாதிபதியும், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதை உதாசீனப்படுத்தி வந்தது.
சந்திரிகா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசு கொண்டுவந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை இனவாத கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் எதிர்த்தது. .பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத்திட்டம் தமிழ் நாட்டு அரசுக்கு இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் கொண்;டது என இந்திய அரசியல் வல்லுனர்களே தெரிவித்திருந்தனர். இந்த தீர்வுத் திட்டதை இனவாதக் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்தது மாத்திரமன்றி அதன் பின்னர் பொதுசன ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராக .தே.கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் நடத்திய போராட்டங்களில் இவர்களும் முன்நின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் கொள்கைகளை மாற்றியபோதிலும் தேசியம் என்ற மாயையால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று எண்ணுகின்றது போலும்.
மேற்குறிப்பிட்ட எல்லாக் கட்சிகளையும் வவுனியா, மற்றும் யாழ் தேர்தல் களத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( புளொட், பத்மநாபா .பி.ஆர்.எல்.எவ், .வி.கூ) சந்திக்கிறது. வவுனியா தேர்தல் களத்தில் முன்னாள் நகரசபைத் தலைவர் லிங்கநாதன் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புளொட்டின் சின்னமான நங்கூரத்திலும், யாழ் மாநகர சபையில் ஆனந்தசங்கரி தலைமையில் .வி.கூட்டணியின் சின்னமான சூரியனிலும் களத்தில் நிற்கின்றது. வவுனியா நகரசபைக்கு கடைசியாக நடைபெற்ற தேர்தலில் புளொட் வெற்றிபெற்று லிங்கநாதன் தலைமையில் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தி வவுனியாவில் பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டிருந்தது. இலங்கையிலேயே சிறந்த நகரசபையாக வவுனியா நகரசபை அப்போது தெரிவுசெய்யப்படதையும் குறிப்பிடவேண்டும். இவர்களுக்கு பின் வவுனியாவில் எந்த ஒரு நகர அபிவிருத்தியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...