15 மார்ச், 2010

சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை நாளை





முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை நாளை 16ம் திகதி ஆரம்பமாகிறது. முதலாவது இராணுவ நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய முதல் அமர்வின்போது மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை, 2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை ஆகிய இரண்டு பிரதான வகையிலான விசாரணைகளை முன்னெடுக்கவே இரு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டும், 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய அமர்வின்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின்போது நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த இரு இராணுவ நீதிமன்றங்களின் தலைவராக மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவும், அதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல். ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ. பி. ஜயலதிக்க ஆகியோரும், நீதிபதி அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னான்டோவும் செயற்பட வுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு கல்வித்துறையை மேம்படுத்த அதிக அக்கறை




ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க
மொழிப் பயிற்சிக்கான விசேட ஜனாதிபதி செயலணிக் குழுவின் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் திட்டம் நேற்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது. இத் தேசியத் திட்டத்தின் முதற் கட்டமாக கொழும்பு ரோயல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான பத்து நாள் வேலைத் திட்டம் நேற்று ரோயல் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப் பட்டது.

ஆங்கில மொழிப் பயிற்சிக்கான விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவும் கல்வியமைச்சும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆங்கில மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் இணைப்பாளர் சுனிமல் பெர்னாண்டோ, கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்திய ஹைதராபாத் மொழியியற்துறைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களினால் இப் பயிற்சிகள் நடாத்தப்படவுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க :- கல்வித்துறை முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகிறது. குறிப்பாக வாழ்க்கைத் திறனு க்கான ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் தொடர்பாடல்களுக்கென விசேட திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருவதுடன் இதற்கென விசேட ஜனாதிபதிச் செயலணி யொன்றும் அமைக்கப்பட்டு அதனூடாக பல திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத் திற்கும் குறிப்பாக ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் தொடர்பாடல் மேம்பாட்டு க்காக இந்திய அரசாங்கம் பெரிதும் உதவி வருகின்றது. இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்தியத் தூதுவருக்கும் பேராசிரியர்களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்க கடமைப்பட் டுள்ளேன்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.முன்னணி நாடளாவிய ரீதியில் 40100 தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் முதலாவது கூட்டம் கண்டியில்






எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் உட்பட கட்சித்தலைவர்கள் பங்கேற்கும் நாடளாவிய ரீதியிலான சுமார் 40,100 தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப் பெரும நேற்றுத் தெரிவித்தார்.

இரு தடவைகள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் அடுத்தவார இறுதியில் முதற்கட்ட பிரசாரம் வீடு வீடாக நேரில் சென்று மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார். கொழும்பு 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (15) நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கலந்து கொள்ளும் பிரதான பிரசார கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்டியில் ஆரம்பிக்கப்படும். ஜனாதிபதி நாடு பூராவும் 26 கூட்டங்களில் பங்குபற்றுவார். இது தவிர பிரதமர், அமைச்சர்கள், மற்றும் கட்சித் தலைவர்களின் தலைமையில் 74 பிரதான கூட்டங்கள் நடத்தப்படும்.

இதேவேளை தோட்ட மற்றும் சேரி மட்டத்திலான 10 ஆயிரம் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதோடு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான தோட்ட மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை சிறிய மட்டத்தில் 30 ஆயிரம் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எமக்கு கிடைக்க உள்ள வெற்றியை பெரு வெற்றியாக்கும் வகையில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேர்தல் தொடர்பாக 3 கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதோடு முதலாவது கருத்துக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. அந்த முடிவுகள் அடுத்தவாரம் வெளியிடப்படும்.

ஐ.ம.சு. முன்னணி பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. எதிர்த்தரப்பு பிரசாரப் பணிகள் சுவரொட்டிகளுக்கும் தேர்தல் காரியால யங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் போட்டிகளின்றி மந்தமான தேர்தல் பிரசாரமே இடம்பெறுகிறது.

கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன் இணைந்திருந்த எதிர்க் கட்சிகள் இன்று பல்வேறு கூறுகளாக பிரிந்துள்ளன. தாம் இணைந்து செயற்பட்ட நோக்கம் நிறைவேறியதாலா அவை பிரிந்துள்ளன என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2017 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவை எதிர்க் கட்சித் தலைவராக தக்கவைக்கவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எஸ். எப். என் இரண்டாம் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் ஜனநாயகம் என்பதே கிடையாகது : முன்னாள் பிரதம நீதியரச







இலங்கையில் மாற்றுக்கருத்துக்களுக்கோ கருத்துவெளியிடும் சுதந்திரத்திற்கோ இடமில்லை ஜனநாயகக்கட்டமைப்பென்றேதும் கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.

கொழும்பிலுள்ள நட்டத்திர விடுதியில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத்தெரிவித்தார் யுத்தம் நிறைவடைந்து விட்ட நிலையில் யாருக்கு எதிராகவும் யுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை எனக்குறிப்பிட்ட பிரதம நீதியரசர் யார் மீதும் நம்பிக்கையீனம் கொள்ளத்தேவையில்லை என சுட்டிக்காட்டினார்

இலங்கை ஜனநாயகம் தாரண்மை(லிபரல் ) மற்றும் மனித உரிமைகளில் நம்பிக்கை கொண்ட நாடு என உலகிற்கு எடுத்துணர்த்த வேண்டிய தருணம் இது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளதா?என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதம நீதியரசர்,

இது காலகட்டத்தில் படிப்படியாக நடந்துள்ளது.என்ன நடந்ததென்றால் நாம் யுத்த நிலைமைக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது இங்குள்ள இளைஞர்களில் பலர் அவசரகாலச் சட்ட நிலைமைக்குள்ளேயே பிறந்துள்ளனர் இதனைக்கூறவேண்டியதையிட்டு நான் கவலைகொள்கின்றேன் 1970களில் இருந்து அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது அதாவது கடந்த நாற்பது வருடங்களாக அவசரகாலச்சட்டத்தை நாம் முகங்கொடுத்துவந்துள்ளோம்.இதனால் இங்குள்ளவர்களில் பலருக்கு சாதாரண சட்டங்கள் என்னவென்பதே தெரியாது.

நாம் இந்த நிலையிலிருந்து வெளிவரவேண்டும்.தற்போது யுத்தம் நிறைவடைந்துவிட்டது நாம் யாருக்கெதிராகவும் யுத்தம் செய்யவேண்டிய அவசியம் கிடையாது எவரையும் சந்தேகித்து நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.தற்போது திறந்தமனத்துடன் செயற்படுவதற்கான தருணம் என்றே நான் காண்கின்றேன் நாம் ஜனநாயகவாதிகள் தாராளமயமானவர்கள் நாம் மனித உரிமைகளை மதித்து நடப்பவர்கள் என உலகிற்கு காண்பிப்பதற்கான தருணம் இதுவாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மும்பையில் தாக்குதல் நடத்தியபோது நடந்த சண்டையில் பலியான தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் நஷ்ட ஈடு



மும்பையில் தாக்குதல் நடத்தியபோது நடந்த சண்டையில் பலியான தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் நஷ்ட ஈடு வழங்கி உள்ளதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 173 பேர் பலியானார்கள். அப்போது, அதிரடிப்படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கையின்போது தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். மற்ற 9 பேரும் பலியானார்கள்.

லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் என்றும் அந்த இயக்கம் தான் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து உள்ளது.

இதற்கிடையில் இந்த தாக்குதலின்போது, அதிரடிப்படையின் நடவடிக்கையில் பலியான தீவிரவாதிகளின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் நஷ்ட ஈடு கொடுத்து உள்ளதாக தனக்கு தகவல் கிடைத்து இருப்பதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கர்மன் தெரிவித்தார்.

ராணுவத்தின் குழந்தை

இவர் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பாராளுமன்ற துணைக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார். பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பற்றி விவாதிப்பதற்காக அந்த குழுவின் தலைவர் என்ற முறையில் துணைக்குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசியபோது தான் இந்த தகவலை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை தெரிவித்த அவர் அதற்கு மேல் விவரம் எதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த ஆசிப் நவாஸ் ஜன்ஜுவாவின் தம்பியான ஷூஜா நவாஸ் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் லஸ்கர் இ தொய்பாவை உருவாக்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் என்று தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது-

காஷ்மீரி சுதந்திர போராட்டத்துக்காக...

காஷ்மீரி சுதந்திர போராட்டத்துக்கு உதவுவதற்காக தான் லஸ்கர் இயக்கம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வந்த அதிபர்கள் சக்தி வாய்ந்த இந்தியாவை எதிர்கொள்வதற்கான மிகப்பெரிய சொத்தாக லஸ்கர் இயக்கத்தை கருதினார்கள். அதற்கு ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் அந்த இயக்கம் காலப்போக்கில் சுதந்திரமான தனி அமைப்பாக செயல்பட தொடங்கி விட்டது.

இவ்வாறு ஷூஜா நவாஸ் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

90 சதவீத பக்தர்கள் என்னை நம்புகிறார்கள்: ஆன்மீகப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் சாமியார் நித்யானந்தா பேட்டி





சுவாமி நித்யானந்தா தற்போது அரித்துவாரில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்கு அவர் எங்கு தங்கியிருந்து புனித நீராடி வருகிறார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- நடிகை ரஞ்சிதாவுடன் நீங்கள் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் உண்மையானதுதானா? அதில் இருப்பது நீங்கள் தானா?

நித்யானந்தா பதில்:- எனக்கு எதிராக நிறைய சதி நடந்துள்ளது. உண்மைக்கு மாறாக தகவல்களை திரித்து வெளியிட்டு விட்டனர். எனக்கு எதிராக மிக அதிகப்படியான வதந்தி பரப்பப்பட்டு விட்டது.

கேள்வி:- வீடியோ காட்சியில் வரும் பெண் யார்? என்று உங்களுக்கு தெரிகிறதா?

பதில்:- ஆமாம். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். எங்களது தியானப் பீடத்துக்கு வரும் பக்தர்களில் அவரும் ஒருவர். அவர் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார்.

அந்த சமயத்தில் நான் உடல் நலம் சரி இல்லாமல் இருந்தேன். பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள எனது அறையில் ஓய்வு எடுத்து வந்தேன். எனது அறைக்கு எல்லா பக்தர்களும் வந்து செல்வார்கள். அது எப்போதும் திறந்தே இருக் கும். அப்படித்தான் நீங்கள் குறிப்பிடம் பக்தரும் வந்து சென்றார்.

கேள்வி:- தொலைக்காட்சியில் உங்களது வீடியோக் காட்சிகள் ஒளி பரப்பான பிறகு, நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு கொண்டு பேசினீர்களா?

பதில்:- இல்லை. நான் பேசவில்லை. ஆனால் அந்த வீடியோவில் உள்ள சதி திட்ட தகவல்களை சேகரிப்பதற்காக எமது தியான பீட அன்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி விளக்கம் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி:- உங்களுக்கு எதிரான இந்த சதி திட்ட பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- என் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்கு தல்களை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார் என்றே தெரியவில்லை. நாங்கள் எப்போதும் எல்லோரிடமும் மென்மையாகவும், அமைதியாகவுமே இருக்கிறோம். படுக்கை அறையில் நான் இருப்பது போன்ற காட்சிகளை எடுத்தது லெனின்தான் என்பது, பத்திரிகைளை பார்த்த பிறகே எனக்குத் தெரிய வந்தது.

கேள்வி:- லெனின்தான் இந்த திட்டத்தின் சதிகாரர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?

பதில்:- எனக்கு தெரிய வில்லை. ஆனால் படம் பிடித்தது நான்தான் என்று லெனினே சொல்லியுள்ளார். அவரை எனக்கு நன்கு தெரியும். பெங்களூர் ஆசிரமத்தில் எனது பக்தர்களில் ஒருவராக அவரும் இருந்து வந்தார்.

சதி திட்டத்தில் அவர் பங்கு என்ன என்று எனக்குத் தெரியவில்லை. முழு உண்மையும் தெரியாமல் லெனின் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க நான் விரும்பவில்லை. அவர் செய்தது போல, திருப்பிச் செய்ய நான் விரும்பவில்லை.

எனக்கு யார் மீதும், எந்த வித கோபமும் இல்லை. ரத்தத்தால் ரத்தத்தை கழுவ முடியாது என்பதை நான் நம்புகிறேன்.

கேள்வி:- உங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- தியான பீடம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்யும்.

கேள்வி:- இங்கிருந்து எங்கு செல்வீர்கள்?

பதில்:- கும்பமேளா பணி முடிந்ததும் ஆசிரமம்தான் செல்வேன். தொடர்ந்து எனது ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவேன். தியான பீட சொற்பொழிவுகளில் கலந்து கொள்வேன்.

கேள்வி:- இங்கு (அரித்து வார்) ஏன் நீங்கள் ரகசிய இடத்தில் தங்கி இருக்கிறீர்கள்?

பதில்:- நான் இங்கு பதுங்கி இருக்கவில்லை. மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறேன். என்னைத் தேடி வரும் பக்தர்களிடம் பேசுகிறேன். பத்திரிக்கையாளர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதானே இருக்கிறேன்.

அரித்துவாருக்கு நான் கும்ப மேளாவில் பங்கேற்கவே வந்துள்ளேன். மேளா முடிந்ததும் நான் பெங்களூர் ஆசிரமம் செல்வேன். நான் செய்து வரும் மனிதநேய சேவைப் பணிகளை தொடர்ந்து செய்வேன்.

கேள்வி:- உங்கள் பக்தர்கள் இன்னமும் உங்களை நம்புகிறார்களா? உங்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்களா?

பதில்:- எனக்கு எதிரான சதி திட்டங்கள் வெளியானதும் ஏராளமான அன்பர்கள், பக்தர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக தியான பீடம் சார்பில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம். அதில் 90 சதவீதம் பக்தர்கள் தொடர்ந்து என் பக்தர்களாக, என்னை ஆதரிப்பவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கேள்வி:- ஆனால் உங்கள் ஆசிரமங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதே?

பதில்:- எங்கள் தியான பீட ஆசிரமங்களை சிலர் மட்டுமே தாக்கினார்கள். நாளடைவில் அது குறைந்து விட்டது. உண்மையான எனது பக்தர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என் பின்னால் உறுதியாக நிற்கிறார்கள்.

கேள்வி:- படுக்கை அறை காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானதால் உங்கள் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளதே?

பதில்:- இணையத் தளங்கள் மூலம் ஏராளமானவர்கள் என்னை ஒரு ஆன்மீக குருவாக ஏற்றிருந்தனர். என்னைப் பற்றிய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பான பிறகும், அந்த சதி திட்டம் பற்றி அறிந்து கொள்ள ஏராளமானவர்கள் இணையத் தளத்தில் பார்த்து வருகிறார்கள்.

எனது 33 வருட ஆன்மீக வாழ்க்கையில் நான் எல்லா வற்றையும் பார்த்து விட்டேன். புகழின் உச்சிக்கு சென்று வந்து விட்டேன்.

என்னை பற்றிய வதந்திகளை சற்று அதிகமாகவே பரப்பி விட்டனர். அந்த செய்தியை காட்டும் முன்பு என்னிடமும் பதில் பெற்றிருக்கலாம். என் தரப்பு தகவல், உரிய பதில் இல்லாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர்.

சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை செய்திருப்பவர்கள், தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் வழி வகை செய்திருக்க வேண்டும்.

என்னை எல்லாரும் சாமியார் என்ற ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். நான் ஆய்வாள னும் கூட. அது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட புத்த கங்கள் எழுதி உள்ளேன்.

எனவே என்னைப் பற்றிய தகவல்களை வெளியிடும் முன்பு, என்னிடம் கேட்டு உறுதி செய்து இருக்கலாம். அதை விடுத்து எனது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டு என் அந்தரங்கத் துக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது எந்த வகையில் நியாயம்...?

கேள்வி:- வீடியோ காட்சிகள் தவிர வேறு சில குற்றச்சாட்டுக்களும் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதே?

பதில்:- அவை எல்லாமே பொய்.

கேள்வி:- உங்களை இப்படி பல கோணங்களில் அழிக்க முயல்வது யார்?

பதில்:- தெரியவில்லை. என் படுக்கை அறையை படம் பிடித்த சதிகார கும்பல்தான் என் மீது பொய் குற்றச்சாட்டுக்களையும் பரப்பி வரலாம் என்று சந்தேகிக்கிறேன்.

கேள்வி:- நீங்கள் எங்கு படித்தீர்கள்? எப்போது ஆன்மீக வழியை தேர்வு செய்தீர்கள்?

பதில்:- எனக்கு இப்போது 33 வயது ஆகிறது. மிக சிறிய வயதிலேயே நான் ஆன்மீகத்துக்கு வந்து விட்டேன்.

எனது ஆன்மீகத் தேடல்கள், படிப்புகள், பயிற்சிகள் மூலம் நான் ஆன்மீக சாதனையை எட்ட முடிந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் இந்த ஆன்மீக பாதைக்கு வந்தேன். அதற்கு முன்பு நான் வேலூரில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்தேன்.

கேள்வி:- வீடியோ காட்சிகள் ஒளிபரப்பான பிறகு கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் இருந்து உங்களை யாராவது அணுகினார்களா?

பதில்:- இல்லை. யாரும் என்னை அணுகி எதுவும் கேட்கவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

நான் இருப்பது போன்ற வீடியோ காட்சிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. சில காட்சிகளை திருத்தி தில்லு முல்லு செய்து இருக்கிறார்கள். அந்த ஒட்டு வேலை தெரியாதபடி நன்கு எடிட்டிங் செய்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சிகளை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் உள்ள தில்லு முல்லு வேலை தெரியும். குறிப்பாக என் அருகில் பெண் இருக்கும் காட்சி களைப் பார்த்தால் அந்த தில்லுமுல்லு புரியும்.

கேள்வி:- அந்த வீடியோ காட்சிகள் எப்போது படம் பிடிக்கப்பட்டது?

பதில்:- டிசம்பர் மாதம் அந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

கேள்வி:- டிசம்பர் மாதம் உண்மையில் என்ன நடந்தது?

பதில்:- டிசம்பர் மாதத்தில் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வு பெற்று வந்தேன். எனக்கு பல்வேறு பக்தர்கள் பணிவிடைகள் செய்தனர்.

உடல் நலக்குறைவாக இருந்த நாட்களில் நான் சுயநினைவே இல்லாமல் தான் இருந்தேன் என்பதே உண்மை.

இவ்வாறு நித்யானந்தா சாமிகள் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் தேசிய கூட்டணி தனி ஈழ கொள்கையை கைவிட்டுள்ளது.




இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த கட்சி,​​ இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடப் போவதாகவும் உறுதிபூண்டுள்ளது.

பல ஆண்டுகளாக தனி ஈழத்தை ஆதரித்து வந்த தமிழ் தேசிய கூட்டணி தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியுள்ளது இலங்கை அரசியலில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட பின் இலங்கையில் தனி ஈழத்துக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள அடுத்த கட்ட பின்னடைவு இது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இலங்கையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.​ இதனை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டணி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி இணைந்த ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.​ 1987-ல் ​ ஏற்பட்ட இந்திய-​ இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் அப்பகுதிகளுக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் கட்சி போராடும்.​ இது தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை பிரித்ததன் மூலம் இந்திய-​ இலங்கை ஒப்பந்தத்தை அரசு மீறிவிட்டது.​ இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுத்து வந்துள்ளன என்றும் தமிழர் தேசிய கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் பலமுறை கவலை தெரிவித்தும் இலங்கை அரசு அதனை பொருட்படுத்தவில்லை.​ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறி தமிழர்களுக்கு எதிராக பலமுறை மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களும்-​ முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​ இதனிடையே,​​ "இலங்கையில் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அமைச்சர் திசா விதாரனே குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான்,​​ இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

:

டோக்கியோ, ​​ மார்ச் 14: ஜப்பான் மற்றம் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.​ ஜப்பானில் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே 250 கி.மீ தொலைவில் பசிபிக் கடல் பகுதியில் உள்ள புக்ஷிமா பகுதியில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.​ இந்த நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவு கோலில் 6.6 அலகாக பதிவானது.​ ​

​ ​ ​ இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் இருந்ததாக ஜப்பானிய நிறுவனங்கள் தெரிவித்தன.​ ஆனால் 26.6 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.​ ​

​ ​ ​ இந்த நில நடுக்கத்தால் அலைகளின் உயரம் சற்று அதிகரித்துக் காணப்படும் என்றாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டது.​ நிலநடுக்கத்தையடுத்து பறக்கும் ரயில் சேவைகளும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.​ பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.​ ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் எச்சரித்தன.​ ​ ​ ​

இந்தோனேஷியா: ​​ இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.​ ரிக்டர் அளவு கோலில் இதன் வீச்சு 7 அலகாக பதிவானது.​

கடலுக்கு அடியில் 56 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

​ ​ ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலுமே உயிரிழப்போ,​​ உடைமைகளுக்கு சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா விடுதலையாவது எளிதல்ல': அனோமா




இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா விடுதலையாவது எளிதாக நடக்கும் காரியமல்ல என்று அவரது மனைவி அனோமா தெரிவித்தார்.

ராணுவ சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்றுதான் பொன்சேகா விரும்புகிறார்.​ ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்று அனோமா கூறினார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் நல்லெண்ணம் கொண்டோரும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.​ இது மனதுக்கு ஆறுதலாகவும் திருப்தியாகவும் உள்ளது.​ ஆனால் இந்த வேண்டுகோளுக்கெல்லாம் இந்த அரசு செவிசாய்க்காது என்பது தெரியும்.​ அவர் விடுதலையாக வேண்டுமானால் சட்ட ரீதியாக மட்டுமே சாத்தியமாகும்.​ நீதித்துறை மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார் அவர்.

பொன்சேகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி,​​ ஆள்கொணர்வு மனு ​(ஹேபியஸ் கார்பஸ்)​ தாக்கல் செய்துள்ளார் மனைவி அனோமா.

'பொன்சேகா ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.​ எனவே அவரை ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாது.​ சிவில் சட்டத்தின் கீழ் அவரை விசாரிக்க வேண்டும்'என்று மனுவில் கோரியுள்ளார்.

'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிக் கொடி நாட்டியவர்.​ அவர் சிறந்த ராணுவ தளபதி என்று பாதுகாப்புச் செயலரே பாராட்டி உள்ளார்'என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா ஜேவிபி கட்சியின் தலைமையில் உள்ள ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

அவருக்காக அவரது மனைவி அனோமா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

ஆயுதக் கடத்தல் தொடர்பாக பொன்சேகா மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பொன்சேகா மனைவி அனோமாவிடம் கேட்டபோது உண்மைக்கு மாறாவை.​ உண்மை விரைவில் வெளியாகும் என்று அவர் கூறினார்.​ மருமகன் தனுனா திலகரத்னே எங்கிருக்கிறார் என்ற விவரம் தற்போது இல்லை.​ அவரைப் பற்றி தனக்கு ஏதும் தெரியாது.​ அப்படி தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன் என்று அனோமா கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சாட்சியம் வழங்குவது குறித்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படியே பொன்சேகா தீர்மானம் : ஜ.தே.கூ அறிவிப்பு


"அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை இராணுவ நீதிமன்றத்தில் மாத்திரம், அல்ல, சிவில் நீதிமன்றத்தில் கூட நிறுத்த முடியாது. இந்த நிலையில் நாளைய தினம் அவர் சாட்சியங்களை வழங்குவதா இல்லையா என்பதை எமது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே தீர்மானிப்பார்'' என்று ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

மூன்று குற்றப் பத்திரங்களினூடாக 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்ற நிலையில் இன்று விசாரணைக்குட்படுத்தப்படும் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மத வழிபாடுகளை நடத்துமாறு கேட்டுக் கொள்வதுடன் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நாளையும் நாளை மறுதினம் புதன்கிழமையும் பொது மக்கள் தமது எதிர்ப்பினைக் காட்டுமாறும் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதியையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் படுகொலை செய்வதற்காகவும் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டே ஜெனரல் பொன்சேகா மீது முன்னதாக சுமத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர் ஆயுதக் கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் அவர் இராணுவ சேவையில் இருந்த காலப்பகுதியில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் உட்பட 7 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஆயுதக் கொள்வனவு தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நோக்கும் போது ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலப் பகுதியில் சி.சி. தொலைக்காட்சிகள் 2, 12 வோல்ட் மெயின்டனன்ஸ் பிறீ பற்றறிகள் 50, டே விஷன் ரக தொலைநோக்கிகள் 250 மற்றும் 5 கிலோ பைட் ரக கள ஜெனரேட்டர்கள் 50 உள்ளிட்ட பொருட்களே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஜெனரல் பொன்சேகா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்ன, தற்போது அரசில் அங்கம் வகிக்கின்ற ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, முன்னாள் எம்.பி.க்களான எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் உடுவே தம்மாலோக்க தேரர் ஆகியோரும் கூட ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்புகளை வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராணுவத் தளபதியுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உரிமை இல்லையா என்று கேட்க விரும்புகிறேன்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளிப்பட்டதுடன் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இதில் இடம்பெற்றுள்ள ஊழலை அரசு மூடி மறைத்து அற்ப விடயத்தை ஊதி பெருப்பித்துக் காட்டுகின்றது.

அதேபோல் இன்றைய அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பு சக்தியாகவும் சவாலாகவும் ஜெனரல் பொன்சேகா விளங்கியமையினாலேயே அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு அரசு வழி தேடியது.

இந்த சூழலில்தான் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு 16, 17 (அதாவது நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும்) ஆம் திகதிகளை குறிப்பிட்டுள்ளது.

நாளைய தினம் இராணுவ நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் பட்சத்தில் அங்கு அவர் சாட்சியம் அளிப்பது சந்தேகமாகும். தான் சாட்சியங்களை வழங்குவதா அல்லது இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்களை வழங்காதிருப்பதா என்பதை எமது சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தீர்மானிப்பவராக இருக்கின்றார்" என்றார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை






இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை 2.33 மணியளவில் 6.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து தெற்கு, தென் கிழக்குக் கடல் பகுதியில் 1,151 கிலோ மீட்டர் (716 மைல்) ஆழத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நில நடுக்கம், நிலப்பகுதியிலிருந்து வெகுதூரத்தில் உணரப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை 6.4 மற்றும் 6.6 ரிச்டர் அளவில் நில அதிர்வுகள் தாக்கியதைத் தொடர்ந்தே இலங்கையில் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று மீண்டும் சிலியில் 5 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவை 5 ரிச்டர் அளவிலும் குறைவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிலிப்பைன்சிலும் 5 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...