3 மே, 2011

ஓமந்தை இராணுவத் தடுப்பு முகாம் பாடசாலையாக மாற்றம்





ஓமந்தை மகா வித்தியாலயத்தில் இயங்கி வந்த இராணுவ தடுப்பு முகாம் மூடப்பட்டு பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வருடகாலமாக ஓமந்தை மகா வித்தியாலயம் இராணுவத் தடுப்பு முகாமாக இயங்கி வந்தது.

அதில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சகலரும் நல்வழிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கட்டிடம் உரிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்தேவியின் சேவை ஓமந்தை வரை விஸ்தரிப்பு




கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் யாழ்தேவி ஓமந்தை வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. வடபகுதியில் புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதலாவது புகையிரத நிலையம் ஓமந்தையில் இம்மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் வரை மேற்கொண்ட யாழ்தேவியின் சேவை இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஓமந்தை வரை விஸ்தரிக்கப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...


தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் இன்று காலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட உள்ளதாகவும், அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைகள் குறித்தும் ரொபேர்ட் ஓ பிளேக் ஆராய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்சமயம் கிளிநொச்சியில் உள்ள அவர் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுகின்றார்.

நேற்றிரவு இலங்கையை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. _
மேலும் இங்கே தொடர்க...

ரொபேர்ட் ஓ பிளேக் - த.தே.கூ. சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று இரவு உடனடியாகவே அவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலைவரம் குறித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் இரவு 8 மணி முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்ற இச்சந்திப்பில் இரு தரப்பினரும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியாகி உள்ள பின்னணியில் அரசியல் சூழல் என்பன குறித்து நாம் பிளேக்குக்கு விளக்கினோம் என்று, சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மாலை தீவுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு வந்த பிளேக், இங்கு வந்ததும் முதன் முதலில் கூட்டமைப்புப் பிரதிநிதிகளையே சந்தித்துக் கலந்துரையாடினார். பிளேக் இன்று, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரையும் அரச தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிளேக்கைச் சந்திக்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் யுஎஸ் எய்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களைப் பார்வையிடும் நோக்கோடு அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளூர் தலைவர்களுடனும் அவர் அரசியல் நிலை குறித்துக் கலந்துரையாடக் கூடும்.
மேலும் இங்கே தொடர்க...

ஒசாமாவை ரகசியமாக சுட்டுக் கொன்றது எப்படி? அமெரிக்க அதிகாரி

ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது பற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றார்கள். ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி விளக்கம் அளிக்கையில்,

பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் ஒசாமா பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு மிக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலை உறுதி செய்த பிறகு பின்லேடனை கொல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரகசிய திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. அவ்வளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதுபற்றி பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுக்கும் தெரிவிக்கப்படவில்லை. ஒசாமாவை கொல்ல 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. ஒசாமாவுடன் 3 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் 40 நிமிடத்தில் முடிந்து விட்டன.

இந்த நடவடிக்கையின்போது ஒரு ஹெலிகாப்டர் இயந்திர கோளாறு ஏற்பட்டு சேதம் அடைந்தது. ஆனால் அமெரிக்க படையினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒசாமாவை கொல்ல ஏப்ரல் 29ல் ஒபாமா கையெழுத்து








ஒசாமா பின் லேடனை கொலை செய்ய ஏப்ரல் 29 ஆம் திகதியன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் திட்டம் தீட்டி, நேர்த்தியாக அதை வழிநடத்திச் சென்ற அமெரிக்கா, ஏப்ரல் 29 ஆம் திகதியன்று ஒசாமாவை கொல்ல அமெரிக்க இராணுவத்துக்க அனுமதி அளித்துள்ளது. அலபாமாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி ஒபாமாவுக்கு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவு அதிகாரிகள் ஒசாமாவை நெருங்கிவிட்ட செய்தியை கூறினர். அதனை கேட்ட ஒபாமா, ஒசாமாவை கொன்று விடுமாறு உத்தரவிட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டொம் டானிலன் தான் ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை தயார் செய்து அதனை படை தளபதிகளுக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது குறித்து உயர் மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடந்துள்ளது.

இராணுவ அகடமிக்கு அருகில் இருந்த ஒசாமா கட்டடம்

ஒசாமா கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் இராணுவ அகடமியில் இருந்து மிக அருகாமையில் (800 யார்) இருக்கிறது. இது குறித்து அடோபாபாத் வாசிகள் கூறுகையில், இந்த இடத்தில் இருக்கும் கட்டடம் கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டடத்திற்குள் குடி வந்தது யார் என்பது மர்மமாகவே இருந்தது. அங்கிருக்கும் யாரும் பொதுமக்களுடன் பழகியதில்லை. அவர்கள் யாரும் அடிக்கடி வெளியில் வந்ததும் இல்லை என்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாரும் நுழைய முடியாத வீடு




இஸ்லாமாபாத் அருகே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பட்டா பாத்தில் ஒரு மாடி வீடொன்றிலேயே ஒஸாமா பின் லேடன் தங்கியிருந்துள்ளார் இந்த வீடு எவரும் உள்ளே நுழையாத வகையில் அதிக பாதுகாப்பு அரண்களுடன் அமைக்கப்பட்டிருந்தது.

இங்கு அவர் வெளி தொடர்புக்காக சில நம்பிக்கையான உதவியாளர்களை மட்டும் வைத்திருந்தார். அவர்கள் மூலம் தான் எந்த தகவலும் வெளியே செல்லும் அல்லது ஒசாமாவுக்கு கிடைக்கும் பொதி தபால் மூலம் மட்டுமே இவருக்கு தகவல்கள் வந்தன. அது மூலமே இவரும் தகவல்களை அனுப்பினர். தபால் கொண்டு செல்லப்படுவதை நான்கு ஆண்டுகளாக அமெரிக்க உளவுப் படைகள் கண்காணித்தன. இதன் மூலம் தான், ஒசாமா பதுங்கியிருந்த வீடு தெரிய வந்தது.

இந்த வீடு 2005 இல் கட்டப்பட்டது. அருகில் இருந்த வீடுகளை விட, 8 மடங்கு பெரியது. வீட்டை முதலில் பார்த்த அமெரிக்க படைகளே ஆச்சரியம் அடைந்தன. காரணம் வீட்டைச் சுற்றி 12 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் நுழைய முடியாத வகையில் இரண்டு அடுக்கு ‘கேட்’ அமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் தொலைபேசி அல்லது இணைய இணைப்புகள் இல்லை.

குப்பை கூட வெளியே செல்லக்கூடாது என்பதால் அவை வீட்டுக்கு உள்ளேயே எரிக்கப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...

அடிக்கடி இடம் மாறுகையில் அகப்பட்டார் பின்லேடன் ஐரோப்பிய, அரபு நகரங்களில் மகிழ்ச்சி ஆரவாரங்கள்





அல்கைதாவின் தலைவர் ஒஸாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற மேற்குலக ஊடகங்கள் அதைப் பிரதான செய்தியாக வெளியிட்டதுடன் ஐரோப்பிய நகரங்களில் மகிழ்ச்சி ஆராவாரங்களும் இடம்பெற்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்ட மக்கள் அமெரிக்கா வாழ்க.

ஒபாமா வாழ்க என்ற கோஷங்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு ஒஸாமாவின் செய்தியை ஒளி, ஒலிபரப்பிக் கொண்டிருந்தன. உலகின் முக்கியமான பயங்கரவாதத் தலைவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே டொலர், யூரோ நாணயங்களின் பெறுமதிகள் உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் மாத்திரமின்றி, அரபு நாடுகளிலும் ஒஸாமா இறந்த செய்தி கேட்டு ஆரவாரம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் மாநிலத்தில் ஒஸாமா மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அமெரிக்கா வஸிரிஸ்தானில் இராணுவ நடவடிக்கையை வேகமாக்கியது.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அஷ்பக் கயானியை ஒதுக்கி வைத்த அமெரிக்கா வஸிரிஸ்தான் இராணுவ நடவடிக்கைக்கென நேட்டோ இராணுவ அதிகாரியை தளபதியாக்கியது. இதன் பின்னர் விமான, தரைமார்க்க நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டன.

இதனால் அடிக்கடி ஒஸாமா இருப்பிடத்தை மாற்ற வேண்டியேற்பட்டது. இவ்வாறு இஸ் லாமாபாத் வந்த வேளையிலேயே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒஸாமாவின் பிரேதம் கடலில் அடக்கம் செய்யப்பட்ட தாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் தொலைக்காட்சியொன்று ஒஸாமாவின் சடலம் இதுவல்லவென மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது. ஒஸாமாவின் அடக்கஸ்தலம் தெரிந்தால் அல் கைதா போராளிகள் உஷாரடையலாம் என எண்ணியே கடலில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன்





புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு அரச வங்கிகளினூடாக கடனுதவி வழங்கத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க கூறினார்.

இவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக இந்தக் கடனுதவி வழங்கப்பட்டு வருவதோடு கடனுதவி வழங்க உள்ளவர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சுமார் 11 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 ஆயிரம் பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடு தலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களுக்குத் தொடர்ந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

புனர்வாழ்வு பெற்று வெளியேறுவதற்கு 3 நாட்களுக்கு முன் இவர்களுக்கு விசேட பயிற்சிப்பட்டறை யொன்று நடத்தப்பட்டு பல்வேறுபட்ட அறி வூட்டல்கள், கடனுதவி பெறுவது தொடர்பான வழிகாட்டல்கள் என்பன வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்ட ஆயிரம் பேருக்கு இந்த மாத இறுதியில் வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளதோடு 500 பேருக்கு வீடுகட்ட உதவியும் வழங்கப்படும். வீடுகளைக் கட்ட 2 1/2 இலட்சம் ரூபா வழங்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இந்த உதவிகளை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பின்லாடன் கொலை: பாக் ஆப்கான் கருத்துக்கள்




ஒசாமா பின் லாடன்
பின் லாடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டுள்ளது உலகின் பல பகுதிகளில் வரவேற்கப்பட்டாலும், பாகிஸ்தானுக்குள்ளிருந்து வெளியாகும் கருத்துக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கூடியதாகவே இருக்கிறது.

அப்டாபாத் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் பின் லாடன் இருந்தார் என்பது பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு ஒரு தர்மசங்கடமாகவே இருக்கும் என்று இஸ்லாமாபாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

அல் கயீடா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான போரில், அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்து போரிடுவது தேவையான ஒன்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்"


அமெரிக்கப் படைகள்
அமெரிக்கப் படைகள்
ஆனால் பாகிஸ்தானின் எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவரான இம்ரான் கானும், அந்நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியின் தலைவருமான சையத் முனாவரும் பின் லாடனின் மரணம் என்பதுடன் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் தனது வெளியுறவு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது எனவும் சையத் முனாவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாகிஸ்தானின் பிரதான அரசியல் கட்சிகளும் அந்நாட்டின் இராணுவமும் குறிப்பாக அதன் உளவுப் பிரிவான ஐ எஸ் ஐ ஆகியவற்றிடமிருந்து கருத்துக்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஒசாமா பின் லாடன் இருக்கும் இடம் நம்பகத்தகுந்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இருக்குமாயின், நேரடியாக நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவின் கொள்கையின் அடிப்படையின் கீழ் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானியப் பிரதமர் இந்த நடவடிக்கையை ஒரு பெரிய வெற்றி என்று மட்டுமே கூறியுள்ளார்.

“பயங்கரவாதம் முடிவுக்கு வரும்"


ஹமீத் கர்சாய்
ஹமீத் கர்சாய்
இதனிடையே பின் லாடன் கொல்லப்பட்டுள்ளது என்பது, பல ஆண்டுகளாக ஆப்கானிய மக்கள் எதிர்கொண்ட பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வரும் என அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஐரோப்பா ஆகியவற்றின் தியாகங்கள் மற்றும் முயற்சிகளை தாம் பாராட்டுகிற அதே வேளை, தமது நாடு காட்டிய பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும் எனவும் கர்சாய் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா- இலங்கை வரவேற்பு'






அல்கைய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது அல்கைதா மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களுக்கு பெருத்த அடியாக அமையும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றுள்ளார்.

அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, மனித சமுதாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கும் இதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களை ஒழித்துக்கட்ட சர்வதேச சமூகம், குறிப்பாக பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒசாமா கொல்லப்பட்டது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் எட்டப்பட்டிருக்கும் வெற்றியின் ஒரு மைல் கல் என்றும் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் கூறும்போது, பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல், பயங்கரவாதக் குழுக்கள் அண்டை நாட்டில் அச்சமின்றி செயல்படும் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நேரடியாகவே பாகிஸ்தானைச் சாடியிருக்கிறார்.

ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானுக்குள் கொல்லப்பட்டிருப்பது, பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் அடைக்கலம் கொடுக்கப்படுகிறது என்ற இந்தியாவின் கவலையை மீண்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது என்று சிதம்பரம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தானின் தொடர்ந்து புகலிடம் கொடுக்கப்படுவதாகப் புகார் கூறியுள்ள சிதம்பரம், அவர்களைப் பற்றிய விவரங்கள் பாகிஸ்தான் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையும் வரவேற்றுள்ளது

பின்லாடன் அவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நியோமல் பெரேரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பின் லாடனை கொல்வதற்கான நடவடிக்கையின் போது சிறு பிள்ளையும் கொலை செய்யப்பட நேர்ந்தமை குறித்து தாம் மனம் வருந்தினாலும், ஒரு பயங்கரவாத தலைவரான அவர் கொலை செய்யப்பட்டமை குறித்து தாம் மகிழ்வதாகவும், இதேபோன்ற மகிழ்ச்சியை இரு வருடங்களுக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட போதும் தாம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...