26 மே, 2011

ஆஸ்திரேலிய அகதி கொள்கைக்கு கண்டனம் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை

ஆஸ்திரேலிய கரையை நோக்கி படகுகளில் வரும் மக்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் ஆகியோர் குறித்த ஆஸ்திரேலிய கொள்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் சீற்றத்துடன் தாக்கியிருக்கிறார்.

அரசியல் தஞ்சம் கோரிவருகின்ற மக்களை கட்டாயமாக தடுத்து வைப்பது என்ற ஆஸ்திரேலிய கொள்கையானது அந்த நாட்டின் மனித உரிமைகள் வரலாற்றின் மீது படிந்துள்ள ஒரு கரு நிழல் என்றும், அந்த நாட்டின் பூர்வகுடியினர் குறித்த அரசாங்க கொள்கையானது அந்த மக்களுக்கு ஆழமான தாக்கத்தையும் வலியையும் கொடுத்திருக்கிறது என்றும் நவிபிள்ளை அவர்கள் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் தஞ்சக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கையை நவிபிள்ளை அவர்கள் அண்மைக்காலத்தில் இவ்வாறு பகிரங்கமாக விமர்சிப்பது இது இரண்டாவது தடவையாகும்.

அத்துடன் இந்தத் தடவை அவர், தனது விமர்சனத்தை ஆஸ்ரேலியாவின் மூத்த குடிகளான, பழங்குடியின மக்களை அந்த நாட்டு அரசாங்கம் நடத்தும் விதம் குறித்தும் விரிவுபடுத்தியுள்ளார்.

ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் அவர்களின் அரசாங்கத்தின் தஞ்சக் கோரிக்கையாளர்களை கட்டாயமாக தடுத்து வைக்கும் கொள்கையானது, ஆஸ்ரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளை மீறும் ஒன்று என்றும், அந்த நாட்டின் மனித உரிமை குறித்த பதிவுகளில் நீண்ட காலத்துக்கு அது ஒரு கரு நிழலாக படிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆண்களும், பெண்களும் மற்றும் அனைத்துக்கும் மேலாக அனைவருக்கும் கவலைதரும் வகையில் குழந்தைகளையும்-- இத்தனைக்கும் அவர்கள் குற்றம் எதுவும் செய்யாத நிலையிலும் கூட தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் தஞ்சக்கோரிக்கையாளர்கள் குறித்த விவாதங்களின் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஏதோ குறுக்கு வழியில் நன்மை பெறவிழைபவர்களால் தமது நாடு நிரம்பிவிட்டதாக இவர்களை அரசியல்வாதிகள் திரும்பத்திரும்ப விவரிப்பதாகவும் அவர் குறை கூறியிருக்கிறார்.

பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவகாரத்தில் அவர் கடுமையாக சீற்றத்தை வெளியிட்டிருக்கிறார்.

பொருத்தமற்ற நெகிழ்வற்ற கொள்கைகள் பழங்குடியின மக்களுக்கு ஆழமான வலியையும், வேதனையும் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுகுறித்த தனது கருத்து எதனையும் வெளியிடவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

எண்ணாயிரம் முஸ்லிம்களின் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி கைது

போர் குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பாவினால் தேடப்படும் மிக முக்கிய நபர்களில் ஒருவரான முன்னாள் பொஸ்னிய சேர்ப்ஸ் இராணுவ ஜெனரல் ரெட்கோ மிளடிக் தமது நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேர்பியா அறிவித்துள்ளது.

ரெட்கோ மிளடிக் பொஸ்னிய சிவில் யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்களில் இழைத்தமையின்பேரில் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.

பொஸ்னியாவின் 'ஸ்ரெப்ரெனிகா' நகரில் 1995 ஆம் ஆண்டில் சுமார் 8,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கான கட்டளையை ரெட்கோ மிளடிக்கே வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சுமார் 10 வருடங்கள் தலைமறைவாகியிருந்த இவர் பொஸ்னிய யுத்தத்தின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களின் பிரதான சூத்திரதாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வந்த இவர் மீது இனப்படுகொலை, மனித உரிமை மீறல் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வறுமையின் உச்சிக்குச் சென்று தற்கொலைக்கு துணியும் நிலையிலுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த புலம்பெயர் நிதிசேகரிப்பு உதவுமா?‏

வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நேற்று முன்தினம் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் புலிகள் இயக்க முன்னாள் பெண் உறுப்பினரான 21வயதுடைய லாவண்யா எனும் யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட இந்த புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினரான லாவண்யாவை அவளின் தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பம் கடந்த வன்னி இடப்பெயர்வின் பின்னர் மிகவும் வறிய நிலையில் சீவியம் நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை பாடசாலைக்கு போகும் நான்கு தம்பிகள். தாய்தான் கூலிவேலை செய்து குடும்பப் பொறுப்பை பார்க்க வேண்டிய நிலைமை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை. மிகச்சிறிய குடிசையிலேயே அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்ப கஸ்டம்; வீடு இல்லை இவ்வாறே மன விறக்தியும் வறுமையும் நிறைந்ததாய் வாழும் வளரும் காலத்தில் வாழ்க்கை நடத்திய லாண்யாவிற்கு தந்தையின் கண்டிப்பு மனமுடைந்து போயிருந்த இவளை இலகுவாக தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது. யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டு இரு வருடங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில், சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் புலி உறுப்பினர்களும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரால் ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட்டுவரும் நிதியினில் கொஞ்சத்தையேனும் இவ்வாறான மக்களுக்கு கொடுத்து உதவாமல் புலிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட நிதியினை அதற்குப் பொறுப்பாக செயற்பட்ட பலர் சொகுசாக செலவுசெய்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானோர் மனசு வைத்தால் எந்த வழியிசலும் அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட இவ்வாறான மக்களுக்கு சென்றடையச் செய்யலாம். அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதைவிட புலம்பெயர் நாடுகளில் உள்ள நிதியினை இவ்வாறான மக்களைச் சென்றடையவாவது ஏதும் வழிவகைகளை செய்வதற்கு புலம்பெயர் நாடுகளில் நிதிசேகரிப்போர் முன்வருவார்களா? அல்லது புலம்பெயர் தமிழர்கள் முன்வந்து இவ்வாறான குடும்பங்களின் துயர் போக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய அத்தியாவசிய கேள்வியாகவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விசாக்களின்றி சிங்கப்பூரில் தங்கியிருந்த 48 இலங்கையர் கைது

சிங்கப்பூரில் விசாக்களின்றி தங்கியிருந்த 48 இலங்கையர்கள் கடந்த திங்கட் கிழமை சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் செயற்படும் அனைத்து தங்கு விடுதிகளையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போதே சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 48 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 1570 வரையான வயது பருவங்களைக் கொண்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த வாரமும் சிங்கப்பூரில் 52 வரையான சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடியும்: சீனா

இலங்கை தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு முழுத் தகைமையையும் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார மைச்சர் ஜி.எல் பீரிஸ் சீனாவுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே சீன வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள், இலங்கை அராங்கத்தால் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக் குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்தும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சீன அமைச்ருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீன வெளியுறவு அமைச்சரை அமைச்சர் பீரிஸ் பீஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மிகவும் சுமுகமானவையென இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

சீனாவின் திடமான வெளிநாட்டுக்கொள்கையான “ஒரே சீனா“ என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் ஆதரிக்கும். சீனா எட்டியுள்ள உயரிய மாற்றமுடியாத முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இலங்கையின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளை சீன வெளிநாட்டமைச்சர் பாராட்டியதோடு நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் வழிநடத்தியுள்ளமைக்கு தனது அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் சீனக் குடியரசுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

தருஸ்மன் அறிக்கையிலுள்ள பல்வேறுபட்ட விடயங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக்குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்து அமைச்சர் பீரிஸ் சீன அமைச்சருக்கு விவரமாக எடுத்துரைத்தார்.

பொதுவாக உருவாகிவரும் சூழ்நிலைகள் பற்றி சீன வெளிநாட்டமைச்சர் யாவ்ஜீசி குறிப்பிடுகையில், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் தமது சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான தகைமையை கொண்டுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மீள் நிர்மாணம் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு சீனா இலங்கைக்கு பக்கபலமாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்பு குறித்து அøமச்சர் பீரிஸ் குறிப்பிடுகையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், மாத்தளை விமான நிலையம், புத்தளம் அனல் மின்சார திட்டம், கொழும்பு கட்டுநாயக்கா கடுகதிப் பாதை என்பவற்றுக்கு சீனா நிதி வழங்கியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பல வீதி அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாண திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை இரு அமைச்சர்களும் குறிப்பிட்டதோடு இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2ஆம் கட்டப் பணி மற்றும் மாத்தøற கதிர்காமம் புதிய ரயில் பாதை விஸ்தரிப்பு என்பவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்தும் இருவரும் பேச்சுவார்ததை மேற்கொண்டனர்.

2011ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேந்கொள்ளும் வருடமென பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் கூறியதுடன் ஸ்ரீலங்கன் விமக்ஷினசேவை தனது சேவையினை ஷங்காய், குவாங்ஸோ ஆகிய இடங்களுக்கு ஆரம்பித்துள்ளதையும் குறிப்பிட்டார். கடந்த வருடம் ஆகஸ்டில் ஜுனான் மாகாணத்தின் ஆளுநர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது சீன ஈஸ்ரன் எயார்லைன்ஸ் தனது கன்னிச் சேவையை ஆரம்பித்ததை இரு அமைச்சர்களும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தனர்.

இலங்கைக்குள் சீன உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுப்பதில் அதிகரித்த வேகத்தை வழங்கும் வசதியை அளித்ததன் மூலம் இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட சேரிட அந்தஸ்தை சீனா வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது. மேம்படுத்திய விமானத்தொடர்புடன் இலங்கைக்குள் கூடுதலான சீன முதலீடுகள் வருமென அøமச்சர் பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை சீன அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர் விவகாரம் பிரதமரை சந்திக்கிறார் ஜெயா

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்தித்துப் பேசுவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணிநடந்துகொண்டிருக்கிறது.

இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து பேசுவீர்களா?' என்று கேட் டதற்கு, பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போலி கடவுச்சீட்டு: இலங்கை பெண் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சென்னையிலிருந்து கொழும்பு செல்ல முயன்ற இலங்கைப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன் னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானமொன்று புறப்படுவதற்கு தயாராகவிருந்தது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதி காரிகள் சோதனையிட்டபோது வசந்தி (வயது 42) என்ற இலங்கைப் பெண்ணொருவர் இந்திய கடவுசீட்டை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விமான நிலைய பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கை பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது தெரியவந்ததாவது,

இலங்கையை சேர்ந்த வசந்தி மஸ்கட்டில் பணியாற்றியபோது அங்கிருந்த ராமுலு என் பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து கிருஷ்ணகிரியில் தங்கி விட்ட இவர், தான் இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய கடவுசீட்டை பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் அக்கடவுச்சீட்டை பயன்படுத்தி இரு முறை இலங்கையில் உள்ள தங்கை வீட்டிற்கும் அவர் சென்று வந்துள்ளார்.

அதனைத் தொடந்து அவர் மீண்டும் இலங்கைக்கு செல்லவிருந்த போதே விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் நியாயமானது: பொன்சேகா

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நியாயமானது. அவர்கள் விடயத்தில் அரசாங்கம் தனது கடமைகளை சரிவர செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் நேற்றை விசாரணையில் கலந்துகொள்வதற்காக மன்றுக்கு வருகைதந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

தமிழ் அரசியல் கைதிகள் விடயங்களில் அரசாங்கம் தன்னுடைய கடமையை முறையாக மேற்கொள்ளவில்லை அதனால் தான் அவர்களின் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதேவேளை வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மதிய போசன இடைவேளைக்காக மன்றிருந்து வெளியேறிய அவர். அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை அடிமைகளாகவே நடாத்துகின்றது. அவர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். பேச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டே செல்கையில் சிறைச்சாலை அதிகாரிகள் ஒளி,ஒலிபதிவு கருவிகளை தங்களுடைய கைகளினால் பலத்தடவைகள் மறைப்பதற்கு முயற்சித்தனர். அதற்கிடையில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம். அவர்களின் பணிகளை செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள்: மூன்று இலட்சம் பேர் மீள்குடியமர்வு; அரசு மனிதாபிமான நல்வாழ்வளிப்பு

அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச
அமைப்புகள் உதவியுடன் நிறைவேற்றம்



பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களுக்கு நல்வாழ்வளிக்கும் சமூகப் பணியை மனிதாபிமான முறையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.

அரச சார்பற்ற சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் மீள்குடியேற்றப் பணிகள் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தும், மன்னாரில் இருந்தும் வெறுமனே 48மணி நேர முன்னறிவித்தலை கொடுத்த பின்னர் அங்கிருந்து எல்.ரி.ரி.ஈயினரினால் விரட்டியடிக்கப்பட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணிகளையும் அரசாங்கம் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட யாழ்ப்பாண குடாநாட்டுக்கும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத வன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்த போதும் அரசாங்கம் அனுப்பி வைக்கத் தவறவில்லை.

எல்.ரி.ரி.ஈயினர் இந்த உணவுப் பொதிகளை தங்களின் சொந்தத் தேவைக்காக அபகரித்துக் கொண்டது மட்டுமன்றி அவற்றை இப்பிரதேசங்களுக்கு ஏற்றிச் சென்ற லொறிகளையும், கப்பல்களையும் தாக்கி சேதப்படுத்திய போதிலும், பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் அரசாங்கம் உணவுப் பண்டங்களை இந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

2009ம் ஆண்டு மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் வன்னியில் யுத்தம் கொடூரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ யினர் கேடயங்களாக வைத்து, அவர்களுக்கு பின்னால் மறைந்திருந்தவாறு இலங்கை ஆயுதப் படை வீரர்களை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும், இலங்கை இராணுவத்தினர் ஆத்திரமடையாமல் சாதாரண மக்களுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில் எல்.ரி.ரி.ஈ தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து, இறுதியில் எந்தவொரு உலகநாடும் செய்ய முடியாத ஒரு பெரும் சாதனையை புரிந்துள்ளார்கள்.

யுத்தத்தின் போது பணயக் கைதிகளாக எல்.ரி.ரி.ஈயினர் வைத்திருந்த சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பொதுமக்களை இலங்கைப் படையினர் பாதுகாப்பான முறையில் மீட்டெடுத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக நலன்புரி முகாம்களில் சேர்த்து அங்குள்ள மக்களுக்கு உணவு விநியோகம் உட்பட சகல சுகாதார வசதிகளையும், இருப்பிட வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

இவ்விதம் பல்லாண்டு காலம் எல்.ரி.ரி.ஈ கொடுமையினால் தங்கள் உரிமைகளையும் சுய கெளரவத்தையும் இழந்து, அல்லல்பட்டுக் கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான மீள்வாழ்வு செயற்பாடுகளினால் அவர்கள் எதிர்பாராதவாறு ஒரு அமைதியான புதுவாழ்வு இன்று கிடைத்திருக்கிறது. நலன்புரி முகாம்களில் இருந்த பிள்ளைகளின் கல்விக்காக அரசாங்கம் அங்கு பாடசாலைகளை ஆரம்பித்து, அப்பிள்ளைகளை ஜி.சி.ஈ சாதாரண பரீட்சையில் சித்தியடைவதற்கு ஏற்றவகையில் கல்வியையும் புகட்டிய சாதனையை புரிந்துள்ளது.

யுத்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து, துன்பத்தில் மூழ்கியிருந்த மக்களுக்கு புதிய வாழ்வாதாரங்களை பெற்றுக்கொள்வதற்கு உதவியதுடன் அம்மக்களுக்கு தொழிற்பயிற்சியையும் இந்த முகாம்களில் வழங்கி வந்தது.

இவ்விதம் அரசாங்கம் தனது தேசிய பொருளாதாரத்தின் பெரும் பகுதியை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக செலவிட்டுள்ளது. இப்போது வடபகுதியில் பாதைகளை அமைத்தல், ரயில் பாதையை நீடித்தல், யுத்தத்தினால் சிதைந்து போன பாடசாலை கட்டடங்கள், அரசாங்க கட்டடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை திருத்தியதீ மத்தும் வருகின்றது.

யுத்த காலத்தில் வடபகுதிக்கு 60 சதவீதமான வைத்திய உபகரணங்களை யும், மருந்து வகைகளையும் அரசாங்கம் அனுப்பி வைத்து, அங்குள்ள நோயாளிகளுக்கு உதவி செய்தது. எஞ்சிய 40 சதவீத மருந்துகளை தென் இலங்கைக்கு விநியோகித்தது.

இவ்விதம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் யுத்தம் நடந்து கொண்டிருந்த போதும் அரசாங்கம் தனது மனிதாபிமான பணிகளை சரியான முறையில் மேற்கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பேருதவி புரிந்திருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் இராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது

முக்கிய கோப்புக்களுடன் சிக்கியது ‘பென்டிரைவ்’

ஐரோப்பிய வங்கிகளில் பெருந்தொகை பணம் வைப்பு

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் எஸ். இராமச்சந்திரன் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமச்சந்திரனின் வீட்டை சோதனை யிட்ட பொலிஸார் ‘பென் டிரைவ்’ (யு எஸ் பி)வில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகளை கைப்பற்றியுள்ளனர். இதில் 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளதாகவும் அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ‘ஒபரேசன் கொன்னிக்’ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அம்சோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிக ளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

இது தொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.

இவரது மடிக் கணனியில் 20 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

அந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25 மி.மீ. விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப் – 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக் குழல் 30 மி.மீ. கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக் கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள், கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி – 4 வெடிமருந்து, 5 தொன் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 50 தொன் ரிஎன்ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடிபொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக் கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக் கணனியில் இருந்த தகவல்களின் மூலமே தெரியவந்துள்ளது.

இதேவேளை நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று நேற்று ஒஸ்லோவுக்கு புறப்பட்டுச் சென்றது.

சந்தேக நபர்களின் சட்டவாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்கின்றனர்.

இவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.

‘ஒப்பரேசன் கொனிக்’ என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணனிகள், இறுவட்டுக்கள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு ள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இராணுவத்தினர் தகவல்

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவியதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகக் கிடைத்த தகல்களைக் கொண்டே இலங்கை இராணுவத்தினர் நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தனர்.

அதனை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாகவே விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தினரின் தகவல்களைக் கொண்டே நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் வலையமைப்பைக் கண்டறிந்து அதன் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாக நெதர்லாந்தின் அரச வானொலியும் செய்தியொன்றை ஒலிபரப்பியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க. சபையினுள் ஆர்ப்பாட்டம் அமளிதுமளிக்கு மத்தியில் சட்டமூலம் நிறைவேற்றம்






பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கு எதிராக ஐ. தே. க. நேற்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் பதாகைகளைத் தாங்கிய வண்ணம் ஆர்ப் பாட்டத்தை மேற்கொண்ட போதிலும் நேற்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பீடைக் கொல்லிகளைக் கட்டுப்படுதல் திருத்தச் சட்டமூலம் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதுவுமின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் எழுந்துநின்ற போதும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்படி சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்தார். இதற்கான விவாதத்தில் எத்தரப்பினரும் உரையாற்றவில்லை. அதனையடுத்து சபையின் இணக்கப்பாட்டுடன் அந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

க்கிய தேசியக் கட்சியினர் சுமார் ஒரு மணிநேரம் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய போதும் சகல நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றன. அதனையடுத்து பிற்பகல் 3.15 மணியளவில் ஐ. தே. க. ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஐ. தே. க. மேற்படி ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பிக்க முன் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா விசேட அறிக்கையொன்றை சபையில் முன்வைக்க முயன்ற போது சபாநாயகர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. அதற்கான அனுமதியை ஏற்கனவே பெற்று பிறிதொரு நாளில் அதனை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அவரைக் கேட்டுக் கொண்டார். அதனை யடுத்து ஐ. தே. க. வினர் பதாகைகளை ஏந்தி சபையில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். சிறிது நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுநீரகங்கள் பாதிப்பு:நடிகர் ரஜினிக்கு லண்டனில் சிகிச்சை






சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் அவரை லண்டனுக்கு

கொண்டு செல்ல முடிவு செய்ய ப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் திகதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.

இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல் நலக்குறைவுடன் உள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே ரஜினிகாந்துக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால் சிறுநீரகங்களும் பாதிக்கப்பட் டன. சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலை, சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய நட்புறவை சீர்குலைக்க ஜே.வி.பி முயற்சி

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான நெருங்கிய நட்புறவைப் பலப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் இந்த நட்புறவைச் சீர்குலைக்கும் செயற்பாடுக ளையே ஜே. வி.பி. மேற்கொள்வதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க இலங்கை- இந்திய வெளிநாட்டமைச்சர் களின் அண்மைய கூட்டறிக்கை தொடர்பான விசேட அறிக்கையொன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்று கையில், இவ்வறிக்கையானது இலங்கையின் இறைமை, பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா தலையீடு செய்வதையே காட்டுகிறது எனவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன; வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதால் அவர் நாடு திரும்பி யதும் அநுர குமார திசாநாயக்கவின் கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளிப்பார் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹசான் திலகரத்ன தலைமறைவு தேடித்தருமாறு ஐ.தே.கவிடம் அமைச்சர் மஹிந்தானந்த கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் தொடர்பு பட்டிருந்ததாக ஐ.தேக. மாகாண சபை உறுப்பினர் ஹசான் திலகரத்ன குற்றஞ்சாட்டியிருந்தார்.

அது குறித்து விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் உறுப்பினர்கள் இலங்கை வந்த போது அவர் தலைமறை வாகி விட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே கூறினார்.

வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கை வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக ஹசான் திலகரத்ன ஊடகமொன்றினூடாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் அது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதனையடுத்து இது பற்றிய தகவல்களை பெறுமாறு நான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தேன்.

இதன் படி இரு தடவைகள் ஹசான் திலகரத்னவை பொலிஸார் விசாரித்தனர். ஆனால் அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

பாதுகாப்பு வழங்கினால் உண் மையை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். அதன்படி அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தோம். ஆனால் அவரை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் மனைவிதான் பதில் வழங்கினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் பிரதிநிதிகள் இங்கு வந்தனர்.

அவர்கள் ஹசான் திலகரத்னவை சந்திக்க முயன்ற போதும் முடியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடித்தருமாறு ஐ.தே.க. தலைவரையும் ஐ.தேக. வையும் கோருகிறேன்.

2010 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் பல கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் டொலர் முதல் 10 ஆயிரம் டொலர் வரை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சபையில் நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. ஊழியர்களுக்கு உரிய படி சம்பளம் வழங்கப்படுகிறது. கிரிக்கெட் சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்.
மேலும் இங்கே தொடர்க...