11 பிப்ரவரி, 2011

பொலிஸார்- இராணுவத்தினர் இடையே குழு மோதல்: 8 பேர் காயம்




பொலிஸார்- இராணுவத்தினர் இடையே குழு மோதல்: 8 பேர் காயம்
புத்தல தேசத்தின் மகுடம் கண்காட்சியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது பொலிஸாருக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே இன்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது 3 பொதுமக்களும் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் தனியாருக்கு சொந்த மான ஒரு படகில் மஞ்சள், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. 300 தொன் சரக்குடன் இந்த படகு, நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து இன்று கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அரச வங்கிகள் இன்று நன்பகல் முதல் அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வங்கிகள் இன்று நன்பகல் முதல் அரைநாள் பணிப் பகிப்பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.

1995ம் ஆண்டின் பின் நியமனம் பெற்ற வங்கி ஊழியர்களது ஓய்வூதியம் தொடர்பாகப் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவை தொடர்பாக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் பயனளிக்க வில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக இன்று பி.ப. 12.30. முதல் அரை நாள் பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது


வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு கொழும்பு பிரதான நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு கதிரேசன் வீதியைச் சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் வர்த்தகரான ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் இவர்கள் 7 மில்லியன் ரூபா கப்பம் கோரியிருந்தனர். பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலிகள் இயக்கத்ததை மீளவும் இயங்கச் செய்வதற்கு 7 மில்லியன் ரூபா வழங்கவேண்டுக்ஷீமன இவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு பணத்தினை வழங்காவிடில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கப்படும் என்றும் இவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பணம் கொடுக்கும்போது கப்பம் கோருபவர்களை கையும் மெய்யுமாக கைது செய்வதற்கு பம்பலப்பிட்டி பொலிஸக்ஷிர் திட்டமிட்டனர். செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைக்கு அண்மையில் வைத்து பணத்தை குறித்த வர்த்தகர் மிரட்டல்காரர்களிடம் கையளித்தபோது இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மொகமட் சலாகுதீன் மொகமட் அஸ்லம் மற்றும் இந்தியப் பிரஜையான நூர் அமித் முகமட் அஸ்ரப் ஆகிய இருவருமே பொலிஸரால் கைதுசெய்யப் பட்டவர்களாவர். இவர்களுக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உண்டா என விசாரணை செய்வதற்காக இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரி நின்றனர்.

இதனையடுத்து இதற்கான அனுமதியினை வழங்கிய பிரதான நீதிவான் விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நேரகாலத்துடன் விமான நிலையத்துக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்



கட்டுநாயக்க, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், தாம் பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னராகவே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதி மூடப்படுவதன் காரணமாகவே நேரகாலத்துடன் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விமான சேவைகள் நிறுவனத்தின் விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதியோடு இணைந்ததாகவுள்ள புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இதன்பொருட்டு நாளை சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இவ்வீதி ஊடான வாகனப் போக்குவரத்தும் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.

இந்த 10 மணித்தியால காலப்பகுதியிலும் விமான நிலையத்தை நோக்கி வரும் பயணிகளின் வாகனங்களை மாற்று வீதிகளினூடாக திருப்பி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்று வீதிகளூடாக பயணம் செய்து, விமான நிலையத்தை வந்தடைவதற்கு அதிக நேரம் எடுக்கலம். அதனைக் கருத்திற்கொண்டே விமான நிலையத்திற்கு பயணிகள் நேர காலத்துடன் வர வேண்டியுள்ளது.

கொழும்பிலிருந்து விமானநிலையம் நோக்கி வரும் வாகனங்கள் ஜாஎல, எக்கல வீதியூடாக மினுவாங்கொடையை வந்தடைந்து, அங்கிருந்து ஆடிஅம்பலம வீதிவழியாக விமான நிலைய நுழைவாயிலை வந்தடையும். சீதுவை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் அங்கிருந்து ரத்தொளுகமை வீதியூடாக பழைய சீதுவை முச்சந்திக்கு திருப்பிவிடப்பட்டு பேஸ்லைன் வீதி, எவரிவத்தை ஊடாக விமான நிலையத்தை சென்றடையும்.

நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் 18ஆம் மைற்கல் சந்திக்கு அருகிலுள்ள பன்சல வீதியூடாக திரும்பி, துளுண சந்திக்கு வந்து பேஸ்லைன் வீதியூடாக எவரிவத்தையை வந்தடைந்து விமானநிலையத்திற்கு செல்லும்.

நீர்கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் தெல்வத்தை முச்சந்தியில் 50 ஏக்கர் வீதியூடாக பயணித்து கிம்புலாப்பிட்டிய முச்சந்தி வரை சென்று அங்கிருந்து ஆடிஅம்பலம ஊடாக விமான நிலையத்தை சென்றடையலாம். நீர்கொழும்பு பிரதான வீதியின் ஊடாக கல்கந்தை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் கிம்புலாப்பிட்டி வீதி வழியே ஆடிஅம்பல ஊடாக விமான நிலையத்தை அடையும்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது





இலங்கைத் தமிழர்கள் உட்பட சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 101 பேருடன் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இரு படகுகளை கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் வைத்து அந்நாட்டின் கடற்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் அதில் பயணித்தவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்திரேலிய கடற்படையினருக்கு சொந்தமான கிமாஸ் மைற்லன்ட் என்ற கப்பலே இரு படகுகளையும் கண்டுபிடித்துள்ளது. 97 பயிணகளுடன் 6 சிப்பந்திகளும் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு படகில் 53 பயணிகளும் 2 சிப்பந்திகளும் மற்றைய படகில் 48 பயணிகளும் 4 சிப்பந்திகளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்த சட்டவிரோதக் குடியேற்ற வாசிகளில் இலங்கையர் பலரும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.

இதற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் புலி உறுப்பினர் என்றும் உங்களை விசாரிக்க வேண்டும் என்றும் மக்கள் செல்வாக்குமிக்க வேட்பாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மிரட்டுவதாக தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் அவர் கூறியுள்ளார்.

வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக செட்டிகுளம் முகாம்களில் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு தத்தமது இடங்களுக்கு மீள்குடியேறியவர்கள் என தெரிவித்துள்ளார்.

'புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களும் அரசியலில் ஈடுபட முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் மக்கள் செல்வாக்குள்ள அப்பாவிகளைப் புலனாய்வுப் பிரிவினர் மிரட்டுவதானது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதுமாகும். அத்துடன் இத்தகைய செயலானது தமிழ் மக்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவதாகவே அமைகின்றது" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதிப்பு பகுதிகளை கட்டியெழுப்ப 330 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு * 8 இலட்சம் மெ.தொ. நெல் உற்பத்தி பாதிப்பு * 20 ஆயிரம் வீடுகள் சேதம் ஜனாதிபதியின் யோசனைக




நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்ப 330 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இடம்பெற்ற அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன்; ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்களில் பல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளம் காரணமாக 3 இலட்சத்து 33 ஆயிரத்து 986 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 49 ஆயிரத்து 533 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அத்துடன் பல குடும்பங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கான ஜீவனோபாயம் இல்லாமற்போனது.

2 இலட்சம் ஹெக்டயர் நெற் செய்கையும் 3 இலட்சம் ஹெக்டயர் இதர பயிர்ச் செய்கையும் முழுமையாக அல்லது பெரும் பகுதி பாதிக்கப்பட்டதுடன் சுமார் 500 சிறிய வாவிகள் சேதமுற்றன.

இதன் காரணமாக சுமார் 8 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமற்போயுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

இது தவிர 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. வெள்ளத்தினால் அழிந்து போன நெல் மற்றும் மரக்கறிச் செய்கையை மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்வது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நெற்செய்கைக்காக உர மானியம் வழங்குவதுடன் விவசாயிகளுக்கு விதை நெல்லை இலவசமாக பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அத்துடன் தேசிய உணவு உற்பத்தியை துரிதப்படுத்தும் நோக்கில் பழங்கள் மற்றும் மரக்கறி விவசாயிகளுக்கு உர மானியம் முறையொன்றை பெற்றுத்தரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தெங்கு செய்கைக்கு வழங்கப்படும் உர மானியத்தை போன்று இடம்பெறும் இந்த உரத்தை சலுகை விலையில் சந்தையில் கொள்வனவு செய்யும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மனித உயிர்களுக்கும் காணி மற்றும் வயல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு புறம்பாக விலங்கு பண்ணைகளுக்கு பாரிய அழிவுகள் இடம்பெற்றுள்ளன.

அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் பசு மாடுகள், எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் என 2 இலட்சத்து மூவாயிரத்து 75 கால்நடைகளும் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 250 கோழிகளும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நட்டம் 1922 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

மனித உயிர்கள், காணி, விலங்குப் பண்ணைகள் மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்ச் செய்கை ஆகியவற்றுக்கு ஏற்பட்ட இந்த பாரிய இழப்பை ஈடுசெய்து மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதனை செயற்படுத்தவும், கண்காணிப்பினை மேற்கொள்ளவும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் செயலணிப்படையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களின் பங்களிப்புடன் முறையான வேலைத் திட்டத்தின் மூலம் இந்த செயற்பாடுகள் ஒருங்கிணைக்கபடவுள்ளன.

இழந்துபோன மனித உயிர்கள் தவிர்ந்த வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான ஏனைய காணி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அனைத்து இழப்புகளையும் பழைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பெற்றுத் தர ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்கால சந்ததியில் நம்பிக்கைவைத்தே கல்விக்கு கூடுதல் நிதி









இயற்கை அனர்த்தங்களினால் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப 33 பில்லியன் ரூபா நிதி அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளதுடன், பாதிப்புக்குள்ளான சகல மக்களினதும் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்ப தற்கான செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்துகம பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் குமாரவெல்கம, பந்துல குணவர்தன, பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் குமார வெல்கமவின் தனிப்பட்ட நிதியிலிருந்து 19,000 முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

எமது எதிர்கால சந்ததியான பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்தே நாம் கல்வித்துறைக்குப் பாரிய நிதியினை ஒதுக்கியுள்ளோம்.

பத்து லட்சம் பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடை 24 இலட்சம் பேருக்கு இலவச பாட நூல் என பெருமளவு நிதியை அரசாங்கம் வருடாந்தம் செலவிட்டு வருகிறது.

மூன்று இலட்சம் மாணவர்கள் முதலாம் வகுப்பில் இணைகின்றனர். இவர்களில் 2,80,000 பேர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் 23,000 பேரே பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்றனர். இத்தகைய போட்டித் தன்மையே எமது கல்வித்துறையில் நிலவுகிறது.

எனினும், பல்கலைக்குத் தெரிவானோரைத் தவிர்ந்த ஏனையவர்களை நாம் கைவிட்டு விடவில்லை. அவர்களையும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் நாம் உள்வாங்குகிறோம். நாட்டின் அபிவிருத்தியில் சகல பிரஜைகளுக்கும் பங்களிப்பும் பொறுப்பும் உள்ளது.

புத்தகக் கல்வியில் மட்டும் வெற்றி பெற்ற மனிதனாக முடியாது. பரீட்சைகளில் சித்தி அடைவதனாலும் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எட்டமுடியாது. கற்க வேண்டிய பல அனுபவ பாடங்கள் உள்ளன. பல்துறைகளிலும் அனுபவத்தை வளர்க்க வேண்டியுள்ளது.

பிள்ளைகளுக்கு டிஷசன், பரீட்சை என சுதந்திரமின்றி பெரும் சுமை சுமத்தப்படுகிறது. பிள்ளைகளுக்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதில் பெற்றோர்களுக்குப் பாரிய பொறுப்புகள் உண்டு.

இது விடயத்தில் பெற்றோர் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். பாரிய பல பொறுப்புக்கள் எனக்குள்ள போதும் பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்குவதில் நான் முன்னுதாரணமாகவுள்ளேன்.

எல்லாவற்றிற்கும் குறை கூறும் சில சக்திகள் இதனையும் ஆட்சியாளர்களின் குற்றம் என விமர்ச்சிக்கின்றமையை காண முடிகிறது. இது விடயத்தில் பெற்றோர் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். பாரிய பல பொறுப்புக்கள் எனக்குள்ள போதும் பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்குவதில் நான் முன்னுதாரணமாகவுள்ளேன்.

நாம் தாய் நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் சவாலை பாரமேற்றுள்ளோம். கடந்த 50 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன.

எல்லாவற்றிற்கும் குறை கூறும் சில சக்திகள் இதனையும் ஆட்சியாளர்களின் குற்றம் என விமர்ச்சிக்கின்றனர்.

மழை பெய்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்தாலும் எம்மையே குறை கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் வெள்ளம், இயற்கை அனர்த்தங்களால் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கு 33,000 பில்லியன் ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்பவும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பொறுப்பினை நாம் ஏற்றுள்ளோம்.

குறிப்பாக விவசாயத்துறையை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. தேயிலை, தென்னை, மரக்கறி உற்பத்தியாளர்களுக்கும் உரமானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சில பொருட்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டாலும் மார்ச், ஏப்ரல் மாதமளவில் நெல், தேங்காய் போன்றவற்றின் விலைகள் குறைவடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேயிலை, இறப்பருக்கான விலை ஒரு காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் தற்போது அதற்கு சிறந்த விலை கிடைத்து வருகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

25,000 மெட்ரிக் தொன் அரிசியை உடன் சந்தைப்படுத்த உத்தரவு






கையிருப்பில் உள்ள அரிசித் தொகையில் 25 ஆயிரம் மெட்ரிக் தொன்னை உடனடியாக சந்தைப் படுத்துமாறு நுகர்வோர் வர்த்தக விவகார அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவருக்கு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

அரிசித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கூ.மொ.வி. தலைவர் நிராஜ் பெர்னாண்டோவுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, அரிசியையோ, நெல்லையோ எவராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென் றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அதே நேரம் அரிசியைக் கூடுதல் விலைக்கு விற்பவர்களுக்கு எதி ராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்ரன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது சுமார் நூறு வர்த்தகர்கள் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள நிர்ணய விலையை விடவும் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாதென அரசாங்கம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

அதன்படி சம்பா கிலோ ஒன்று 70 ரூபா வாகவும், பச்சை அரிசி, நாட்டரிசி, வெள்ளை அரிசி ஆகியன கிலோ ஒன்று 60 ரூபாவுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாதென்றும் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், மேலதிகமாக சந்தையில் அரிசியை விற்பனைக்கு பெற்றுக்கொடுப்ப தாகவும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளரச மரக்கன்றினை வவுனியா மக்கள் தரிசிப்பு



அரசமரம் கன்று

அநுராதபுரம் ஸ்ரீமகா போதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிற்கும் எடுத்து செல்லப்பட்ட வெள்ளரச மரக்கன்று மக்களுடைய தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

வவுனியாவிற்கு நேற்று முன்தினம் (புதன்) மாலை கொண்டுவரப்பட்ட இந்த மரக்கன்று மணிக்கூட்டு சந்தியிலிருந்து கண்டி வீதி போதி தக்ஸினா ராமயவிற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் கண்டிய நடனம் மற்றும் தமிழ் கலாசார நாதஸ்வரம், காவடி ஆட்டம், சிறுமிகளுடைய கோலாட்டம் ஆகியன இடம் பெற்றது.

பெளத்த கொடி ஊர்வலமும் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர், பாதுகாப்பு படை தளபதிகள், மாவட்ட அரச அதிபர், நகர பிதா, உள்ளிட்ட பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வணக்கத்திற்குரிய சீயம்பலகஸ்வவ விமலசாரதேரே தலைமையில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற பெளத்த தலமான புத்தகாயாவில் இந்த வெள்ளரசு மரம் 17 ஆம் திகதி நாட்டப்படவுள்ளது.

நேற்று காலை வவுனியாவிலிருந்து வெள்ளரசு மரக்கன்று தாங்கிய ஊர்வலம் தம்புள்ளைக்கு புறப்பட்டது. கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய இடங்களில் மக்களுடைய தரிசனத்தின் பின்னர் எதிர்வரும் திங்கள் மாலை அலரிமாளிகையை சென்றடையுமென விமலசார தேரர் குறிப்பிட்டார்.

16 ஆம் திகதி இந்தியாவிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு மறுநாள் போயா தினத்தன்று புத்தகாயாவில் சமய வைபவத்துடன் வெள்ளரச மரம் நடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தென்கிழக்கு கடற்பரப்பில் தொடர்ந்தும் தாழமுக்கம்: வெள்ளம் வடிந்தாலும் மழை அறிகுறி; மலையகத்தில் மண்சரிவு அபாயம்






கனத்த மழை ஓய்ந்துள்ள போதிலும் தென்கிழக்கு கடற்பரப்பில் தொடர்ந்தும் தாழமுக்க நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். எச். காரியவசம் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த தாழமுக்கம் தற்போது பலவீனமடைந்திருந்தாலும் ஒரு வார காலத்திற்கும் மேலாக ஒரு இடத்திலேயே நிலை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் பெய்த கனத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்திருந்தவர்களில் 37 ஆயிரத்து 330 பேர் நேற்று சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

வெள்ள நீர் தொடர்ந்தும் வடிந்துவருவதையடுத்து நேற்று 123 முகாம்கள் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கனத்த மழை ஓய்ந்துள்ள போதிலும் மலையகத்தின் சில பிரதேசங்களில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படக் கூடிய முன்னறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாக தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் விஜேவிக்ரம தெரிவித்தார்.

மாத்தளை, யட்டவத்த பிரதேசத்தில் சுமார் 30 அடி உயரமான பாராங்கல் உருண்டு விழக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அதனை உடைத்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலைய மாத்தளை மாவட்ட அலுவலகம் கேட்டுக்கொண்டிருப்பதாக பூகற்பவியலாளர் மொரேமட கூறினார்.

கடந்த சில தினங்களாக கனத்த மழை ஓய்ந்திருந்த போதிலும் நாட்டிலுள்ள 39 பாரிய குளங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்தும் வழிந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.

இதேவேளை குருநாகல், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களின் நீர் மட்டம் குறைந்து விட்டதாகவும் 15 குளங்களின் வான் கதவுகளும் திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சயரோக ஒழிப்பு : உடனடி கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பு



இலங்கையில் இருந்து சயரோகத்தை முற்றாக ஒழிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சயரோகம் பற்றிய உடனடிக் கண்காணிப்பு நிலையங்கள் நேற்று (10) முதல் தனியார் மருத்துவமனைகளில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகிறார்.

ஆண்டுதோறும் புதிதாக பத்தாயிரம் சயரோக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் அரச மருத்துவமனைகளில் மாத்திரம் சயரோக உடனடிக் கண்காணிப்பு நிலையங்களை நடத்தி வருவதன் மூலம் இந்த நிலையினைக் கட்டுப்படுத்த முடியாதெனவும் அதனால் அரசாங்கம் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்படும் முதலாவது உடனடி கண்காணிப்பு நிலையம்

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஆசிறி மருத்துவமனையில் நேற்று திறந்து வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஏனைய தனியார் மருத்துவமனைகளுக்கும் விஸ்தரிக்க உள்ளதாகக் கூறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு சயரோகத்தை பரப்பும் நிலையமாக கொழும்பு நகரம் விளங்குவதாகவும், நாளாந்தம் கொழும்பு நகரிற்கு வருகின்ற சுமார் பத்து இலட்சம் வெளி மக்கள் மீண்டும் வீடு திரும்பும் போது சயரோகக் கிருமிகளையும் எடுத்துச் செல்வதாகவும் மேலும் கூறினார்.

சயரோக நோயாளர்களுக்கு உடனடி கண்காணிப்புப் திட்டத்தின் ஊடாக சிகிச்சையளிக்கும் அரசாங்க வேலைத் திட்டத்திற்கு பொதுமக்கள் காட்டி வரும் ஆர்வம் குறைந்து வருகின்றமையால் அரசாங்கம் இந்த முடிவிற்கு வந்ததாக அமைச்சர் விளக்கினார்.
மேலும் இங்கே தொடர்க...