6 நவம்பர், 2009

இலவச பாடசாலைச் சீருடைகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைப்பு-

அரசாங்க பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கான 2010ம் ஆண்டிற்கான இலவச பாடசாலை சீருடை விநியோக நிகழ்வு இன்றுகாலை 8.30மணியளவில் கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்பொதி ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிகழ்வில் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, பிரதிக் கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன், கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார, கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் புஸ்பகுமார, கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் மொஹமட் தம்பி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 40லட்சம் மாணவர்களுக்கு 1200 மில்லியன் ரூபா செலவில் 04 வகையான, 65 லட்சம் சீருடைகளை விநியோகிக்கக் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதிலுள்ள 09மாகாணங்களில் அமைந்துள்ள 92 வலயக்கல்வி அலுவலகங்களுக்கு சீருடைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியேற்றம் நிறைவுறும் வரையில் அரசியல் தீர்வினை மேற்கொள்வது கடினமாக இருக்குமென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு-

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவுறும் வரையில் தீர்க்கமான அரசியல் தீர்வினை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு கடினமாக இருக்குமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றங்கள் நிறைவடையும் வரையில் அதற்கு எவ்வளவு காலங்கள் எடுக்குமென்ற கேள்வியே எழுந்து வருகிறது. அரசாங்கத்தினால் அரசியல்தீர்வு குறித்து யோசிக்க முடியாத நெருக்கடிநிலை காணப்படுகிறது. இதற்கிடையில் அரசாங்கம் இவ்வாண்டு நிறைவதற்கு முன்னர் 80முதல் 90சதவீதமான இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற முடியுமானதாக இருக்கும். உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்கள் மாத்திரமன்றி இந்தியாவில் அகதிகளாக உள்ளவர்கள்கூட வீடு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நிலக்கண்ணிவெடிகள் பாரிய சவாலாக உள்ளன. மக்கள் அவசரமாக அங்கு மீள்குடியமர்த்தப்பட்டு விட்டால் நிலக்கண்ணிவெடிகள் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அது ஒரு புதிய பிரச்சினையை தோற்றுவிக்கும். அத்துடன் உட்கட்டுமான வசதியின்றி மக்களை மீள்குடியேற்றம் செய்யவும் முடியாதநிலை உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும் இங்கே தொடர்க...
மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அனுப்ப பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தீர்மானம்




வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குச்னர் தமது மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்கொய்ஸ் ஸிமெரெயை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு பிரான்ஸினால் வழங்கப்பட வேண்டிய உதவிகள் மற்றும் ஏதுநிலைகள் தொடர்பிலும் ஆராயும் பொருட்டே அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆசியாவின் மிகப் பழைய யுத்தம் நிறைவடைந்து ஆறு மாத காலங்கள் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்கள் அதன் தாக்கங்களை இன்னும் அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் பாரிய அளவில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், அவர்களுக்கு போதிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

முகாம்களுக்குள் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் கஷ்டமானதாகவே இருப்பதாக தெரிவித்த அவர், இதன் காரணமாகவே மனித உரிமைகள் தூதுவரை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கையில் இந்தமாதம் 5ம் மற்றும் 7ம் திகதிகளுக்கு இடையில் தங்கியிருந்து, அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலவரங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையின் சட்ட திட்ட அமுலாக்க நடைமுறைகள் தொடர்பிலும் அவர் ஆராய்ந்து அறிக்கைப்படுத்துவார் என குச்னர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் யுத்த மற்றும் மனித உரிமை வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
அமெ. உட்சந்தை மோசடி : மேலும் எண்மர் மீது வழக்குப் பதிவு



ராஜரட்னத்தின் உட்சந்தை மோசடி தொடர்பில் மேலும் 8 பேர் மீது அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இது தொடர்பில் ராஜ் ராஜரட்னத்தின் மீது 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்குச் சந்தைத் தகவல்களை வழங்கியதன் ஊடாக உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு தமது பங்குக்கு 25 மில்லியன் டொலர்களை லாபமாக ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பங்கு பரிவர்த்தனை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரும் இன்று பிணை விடுகைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் நேற்று மேலும் 8 பேரை உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த வழக்கு மீதான விசாரணைகள் மேலும் விரிவுப் படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
நொச்சி மாவட்ட அரச அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்



கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி வகித்து வரும் இவர் எதிர்வரும் திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்கவிருக்கின்றார்.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய எஸ்.வேதநாயகம் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத் தக்கது.

அதேவேளை, இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம் தயாபரன் மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளராகக் கடமையேற்றுள்ளார்.ஏற்கனவே இப்பதவியை வகித்த எஸ். சிவநாதன் மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...