முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக முகாம்களில் இடம்பெயர்ந்த நிலையிலுள்ள 16ஆயிரத்து 394பேரைக் குடியமர்த்துவதற்கான நடவடி;ககை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதற்கேற்ப நிவாரணக் கிராமங்களிலுள்ள 4415குடும்பங்கள் துணுக்காய் பிரதேசத்தின் 20கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இதற்கிடையில் இதுவரையில் 1575குடும்பங்களைச் சேர்ந்த 5220பேர் துணுக்காய் மற்றும் மல்லாவி பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் அவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காக இரு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக ஐந்து உழவு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
14 நவம்பர், 2009
யாழ்ப்பாணத்திற்கு எவ்விதமான பாதுகாப்பு அனுமதியுமின்றி பஸ்களில் பயணிகள் செல்லக்கூடிய அனுமதி கிடைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை இன்று அல்லது நாளை அமுலுக்கு வருமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு செல்லுகின்ற பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து, பாதுகாப்பமைச்சின் அனுமதியுடன் செல்லவேண்டிய தேவை இதுவரை காலமும் காணப்பட்டது. தற்போது ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின்கீழ் பாதுகாப்பு செயலர் கொழும்பிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் செல்வதற்கான பயண அனுமதியை வழங்கியுள்ளார். இன்றிலிருந்து அல்லது நாளையிலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. எனவே பிரயாணிகள் எவ்வித பிரச்சினையுமின்றி, எந்தவித முன் அனுமதியுமின்றி தங்களுடைய பிரயாணத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் வவுனியா அரசஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.