புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனைக் கைதுசெய்வதற்கான ஆதாரங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனிடம் (கே.பி) மேற்கொண்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் உருத்திரகுமாரனுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து ஆதாரங்களை திரட்டி வருவதாக பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்நிலையில் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் எவ்வித குற்றச்செயல்களுடனும் தொடர்புபடாத நிலையில் அவரை அங்கு கைதுசெய்ய முடியாதென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளெக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் அவரை அங்கு கைதுசெய்வதற்கான போதிய ஆதாரங்கள் இலங்கையிடம் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவற்றை அமெரிக்காவுடன் பகிர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லங்கை கலைஞர்கள் சங்கம் ஜனாதிபதி மகிந்தாவுக்கே ஆதரவு
- ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்கவிருப்பதாக இலங்கை கலைஞர்கள் சங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.தகவல் ஊடக அமைச்சில் நேற்றுக்காலை ஒலி ஒளி நிபுணத்துவ கலந்துரையாடல் எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக கலைஞர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர்களான சுமித்ரா பீரிஸ், டக்ளஸ் சிறிவர்தன, ரோஹன வீரசிங்க, சோமரத்ன திசாநாயக்க நடிகர்களான மாலினி பொன்சேகா, ரவீந்திர ரன்தெனிய, ஜெக்சன் அந்தனி, பாடகி நீலா விக்கிரமசிங்க அறிவிப்பாளர் ரேனுக்கா பாலசூரிய ஆகியோர் ஏனைய கலைஞர்கள் சார்பில் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தள்ளனர். நாட்டிலுள்ள கலைஞர்கள் நாட்டை மிகவும் நேசிப்பவர்கள். பொதுமக்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தேசத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கு சிறந்த தலைவர் ஒருவரை தெரிவுசெய்ய பொதுமக்களை வழிகாட்ட வேண்டியது எமது கடமையாகுமென நடிகர் ரவீந்திர ரன்தெனிய தெரிவித்துள்ளார்.