11 நவம்பர், 2010

போரில் பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதிக்கு பி.பி.சி. நிருபர்கள் செல்ல தடை


இலங்கையில் போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கமிஷன் போர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுபற்றி செய்தி சேகரிக்க இங்கிலாந்து பி.பி.சி. நிருபர்கள் குழு ஒன்று இலங்கை வந்திருந்தது. அவர்கள் விசாரணை கமிஷன் விசாரிக்கும் வட பகுதிகளுக்கு செல்ல முற்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு இலங்கை ராணுவ துறை அனுமதி மறுத்துவிட்டது.
போர் காலங்களில் ராணுவத்திடம் அனுமதி பெற்று விட்டுதான் வடபகுதிகளுக்கு செல்ல முடியும். தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் இன்னும் ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

வட பகுதிக்கு செல்ல அனுமதி கிடைக்காததால் பி.பி.சி. நிருபர்கள் குழு கொழும்பு நகரிலேயே முடங்கி கிடக்கிறது. 2 மாதத்துக்கும் முன்பும் இதே போல பி.பி.சி. நிருபர்கள் குழு வடபகுதிக்கு செல்ல முயற்சித்தது. அப்போதும் அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

கொழும்பில் நேற்று முதல் பெய்து வரும் அடை மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உதவி கோரியுள்ளது.

கொழும்பில் பெய்து வரும் அடை மழைக் காரணமாக இதுரை சுமார் 2,00,000 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு உதவ விரும்புவர்களை 0112-670002 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு போலாந்தில் கண்டெடுப்பு





வார்சா: இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டு போலாந்து நாட்டின் தலைநகர் வார்சா சர்வதேச விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டு்ள்ளது. இரண்டாம் உலகப்போர் கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கி 1945-ல் முடிவுற்றது. அப்போது நேசப்படைகள் பிரிவில் போலாந்து இடம்பெற்றிருந்தது. போலாந்து நாட்டின் தலைநகரமான வார்சா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் விமான நிலையத்தினை இணைக்கும் ரயில் நிலையம் அமைக்க கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த போது போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில் கண்டுபிடிக்கப்பட்ட‌ வெடிகுண்டினை தகுந்த வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இத்தகைய குண்டுகள் போலாந்து மட்டுமின்றி ‌ஜெர்மன், உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளி்ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது வழக்கமான ஒன்று தான் என விமான நிலைய போக்குவரத்து போலீஸ் ஒருவர் கூறினார்..
மேலும் இங்கே தொடர்க...

இரண்டு கோடி தங்கம் கடத்த முயன்றவர் சுங்க அதிகாரிகளால் கைது

இலங்கையில் இருந்து 2கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவரை சுங்க அதிகாரிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு கோடி ரூபா பெறுமதியான இத்தங்கம் சுவிட்ஸர்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டு, சிங்கப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட இருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள மிகப் பெரிய நகைக் கடை உரிமையாளர் ஒருவரின் ஒத்துழைப்பின் பேரில் மேற்படித் தங்கம் சிங்கப்ப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட இருந்ததாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

மேல் மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணை பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

மேல் மாகாண பாடசாலைகளில் இன்று நடைபெறவிருந்த இந்த தவணைக்காக பரீட்சைகள் இரத்து செய்யுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நிலவிய சீரற்ற காலநிலைக் காரணமாக பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் கடும் மழை

கொழும்பு நகரில் இன்று மாலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் கொழும்பு நகரின் வீதிகள் முழுவதும் வெள்ளநீர் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

பெய்துவரும் கடும் மழையினால் போக்குவரத்தும், பாதசாரிகளும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவுக்கு ஒபாமா ஆதரவு: பாகிஸ்தான் கடும் அதிருப்தி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர அந்தஸ்து பெற அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளதற்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாதில் புதன்கிழமை அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸக்ஷ் கிலானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர அந்தஸ்து பெற தங்களது முழு ஆதரவு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அவர் கூறியதால் மட்டுமே இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கிடைத்துவிடாது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் செüத்ரி அஹமத் முக்தார் கூறினார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அந்தஸ்தை எட்டிப்பிடிப்பதென்பது இந்தியாவுக்கு எளிதான விஷயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

""ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அந்தஸ்தைப் பெற பல்வேறு நாடுகள் போட்டா போட்டி போடுகின்றன. இந்தியா நிரந்தர அந்தஸ்தைப் பெற இப்போது உலகில் நிலவும் சூழல் இடம் கொடுக்காது. ஒபாமா நிர்வாகம் கூறியதால் மட்டுமே இந்தியாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அந்தஸ்து கிடைத்துவிடாது'' என்று அந்நாட்டின் கல்வித் துறை அமைச்சர் சர்தார் ஆசிப் அகமது அலி கூறினார்.

பயங்கரவாதிகளால் இந்தியாவைவிட பாகிஸ்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானும் இந்தியாவும் கைகோத்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் செüத்ரி அஹமத் தெரிவித்தார்.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானும் பயங்கரவாதிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஒபாமாவே கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: இலங்கை அரசு

செயல்படும் வெளிநாட்டு அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது.

இதன்படி தொண்டு நிறுவனங்களுக்கு 1961-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தின்படியான ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு மறுக்கப்படும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் இலங்கையில் தீவிரவாதத்தை வளர்க்கும் செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு வெளிநாடுகளில் சிவில் வழக்குகளில் இருந்து சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம். ஏதேனும் சிவில் வழக்குகளில் அவர்கள் சிக்கினாலும் அவர்களை வெளியேற்றலாமே தவிர உள்நாட்டுச் சட்டங்களின்படி அவர்களை தண்டிக்க முடியாது.

அந்த வகையில் இலங்கையில் செயல்பட்டுவரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் தலைதூக்க மறைமுக ஆதரவு அளித்து வருவதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது.

இதை அடுத்து இலங்கை அரசின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவலில், "வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு இனி வழங்கப்பட மாட்டாது.

அந்த நிறுவனங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை ஒன்றும் வகுக்கப்படும். அதன்படி அந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் முறைப்படி பதிவுசெய்யப்பட்ட வேண்டும்.

அதன் பின்னர் ராணுவ அமைச்சகத்திடம் அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே இலங்கையில் அந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இப்போது இலங்கையில் சுமார் 1250 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 250 நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரண்டையுமே முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. சண்டை நடந்தபோது சில தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசா கெடுபிடி: மேற்கத்திய நாடுகள், தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் 85 நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்கான விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து அணி திரண்டு விடக் கூடும் என்ற அச்சத்தால் இலங்கை அரசு இந்த முடிவை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...