11 ஜூலை, 2011

நீதி, சுதந்திரமான தேர்தல் வடக்கில் இடம்பெறுவதற்கான சூழல் இல்லை: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

வட பகுதியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லாது போயுள்ளதோடு, அரசாங்கத்தின் அடக்குமுறை தலைதூக்கி சிவில் நிர்வாகம் அற்றுப் போயுள்ளது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். நாட்டில் "அரசாங்கம்'' என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர, செயலில் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் நாய் கழுத்து வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. அத்தோடு வேட்பாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எமது ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் பிரசாரங்களை நடத்தியபோது சிறு இராணுவக் குழுவினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமாக பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

வட பகுதிக்கு அண்மையில் கொழும்பிலிருந்து சென்ற அரச தொலைக்காட்சி குழுவினர் அங்குள்ள தாய்மாரை அழைத்து அரசாங்கத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பேட்டி எடுத்துள்ளனர்.

ஆனால் இப்பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார் தாம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும் கண்ணீர் மல்க கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏமாந்து போன படப்பிடிப்புக் குழுவினர் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியுள்ளனர்.

வடக்கில் இன்று சிவில் நிர்வாகம் இல்லை. அரசாங்கத்தின் அடக்கு முறையே தலைதூக்கியுள்ளது. நாட்டில் இன்று அரசாங்கம் என்பது பெயரளவிலேயே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. மக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க முடியாமல் உள்ளது.

யுத்தம் முடியட்டும் சம்பள உயர்வை வழங்குகிறோம். வாழ்க்கைச் செலவை குறைப்போம். வரிகளை குறைப்போம், மக்கள் மீது சுமைகளை சுமத்தமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தது.

இன்று யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றார்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. ஸ்திரமான அரசாங்கம் தேவை என்றார்கள். அதனையும் பெற்றுக் கொண்டனர்.

சிறப்புரிமைகள் சலுகைகளை வழங்கி மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் மக்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக சுமைகளையே அதிகரித்துள்ளனர். நுரைச்சோலை, கொத்மலை அனல் மின் நிலையங்கள் பல இலட்சம் ரூபா செலவில் கோலாகலமான வைபவங்களை நடத்தி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்காமலேயே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு 2000 மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது.

ஊழியர்களின் சம்பள நிலுவை 900 மில்லியன் ரூபா செலுத்தப்படாதுள்ளது. பல கோணங்களில் மின்சார சபை நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனல் மின்நிலையங்கள் இயங்காமையின் பின்னணியில் "சதிகாரரர்கள்'' இருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கு ""சதித் திட்டம்'' என்ற வார்த்தை தாரக மந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் இந்நாள் சுகாதார அமைச்சரும் டெங்கை முற்றாக ஒழிப்போம் பி.ரி.ஐ. பக்டீரியாவை பயன்படுத்துவோம் என்றெல்லாம் உறுதி மொழிகளை வழங்கினர்.

ஆனால் டெங்கு நோயாளர்களின் தொகை 11,110 ஆக அதிகரித்துள்ளது. 82 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு வாரத்திலும் 900 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு முழு நாடுமே சீர்குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொருளாதாரம் பின்னடைவைக் கண்டுள்ளது.

ஆனால் அரசாங்கத்திடம் எதுவிதமான திட்டங்களும் இல்லை. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு பின்னரும் விலையேற்றங்கள் இடம்பெறும்.

எதுவிதமான நிர்வாகத் திறனும் இல்லாத மக்கள் மீது சுமைகளை அதிகரிக்கும் இந்த அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் தோல்வியøடயச் செய்ய வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுத்தை கடித்து கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற பெண் பரிதாபகரமாக உயிரிழப்பு

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தாயொருவர் புலியிடம் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யால காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி என்ற 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கதிர்காமம் உற்சவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றனர். விஷேடமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இம்முறை பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையினை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற இளம் தாயான கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி நேற்று அதிகாலை யால காட்டுப் பகுதியில் வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் காலைக் கடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறுத்தையொன்று இப்பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.

சிறுத்தையினால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட போது குறித்த பெண் கதறி அழுததுடன் சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய யாத்திரிகர்கள் அந்த ஆற்றுப் பக்கமாக ஓடியுள்ளனர். அதனால் குறித்த பெண்ணை அவ்விடத்தில் சிறுத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளது.

பின்னர் யாத்திரிகர்கள் அவ்விடத்திற்குச் சென்று பார்த்த போது குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் கழுத்தில் சிறுத்தை கடித்துள்ளமையினாலேயே குறித்த பெண் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது

இலங்கை இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப். கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப். கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும் , அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலர் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலரை நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதி அமெரிக்கத் தூதுவர் வலேரி சி.பௌலர் அம்மையர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தச் சந்திப்பில் பங்கேற்ற லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விடைபெற்றுக் கொண்டார் என்பதும்
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் முன்னால் மலர்வளையங்கள், சுடலைச் சாம்பல் மதிலில் அஞ்சலி தெரிவித்து வாசகங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களது இல்லங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவது போன்ற அநாகரிக செயற்பாடுகள் யாழ். குடாவில் தொடர்ந்த வண்ணமுள்ளன. இம் மாதம் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு வேட்பாளர் கந்தையா அசோகலிங்கம் என்பவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சுடலையில் வைக்கப்பட்டிருந்த மலர் வளையங்களை எடுத்துவந்து வீட்டின் முன் எறிந்துள்ளதுடன் சுடலை சாம்பலையும் வீட்டின் முற்றத்தில் வீசி, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்களை மதில்களில் வரைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யயப்பட்டுள்ளது.

இதேவேளை இவரது வீட்டிற்கு கடந்த வாரம் இரவு வேளைகளில் கற்களால் எறிந்துள்ளதாகவும் குறித்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளூராட்சி வேட்பாளருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் மீது வாய்க்கால் கழிவுகள் இனந்தெரியாத நபர்களினால் எறியப்பட்டுள்ளது. அன்றைய தினம் வலி. மேற்கு பிரதேச சபை வேட்பாளர் ஐங்கரன் நாகரஞ்சினியின் வீட்டிலும் இவ்வாறான கழிவொயிலை ஊற்றிவிட்டு நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளதாகவும் ஆனால் வேட்பாளர்கள் அதை முறையிட தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் ஒன்றிணையும் காலம் வந்துவிட்டது: ரணில்

சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்துவிட்டது.

தாமதித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டம் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னெடுத்து நிலையான அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மறைந்த ஐ.தே. கட்சியின் வடகொழும்பு எம்.பி.யும். அமைச்சராக பதவி வகித்தவருமான வீ.ஏ. சுகததாசவின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு கொழும்பில் சுகததாஸ விளையாட்டரங்கின் முன்பாக அன்னாரது சிலைக்கருகில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட எம்.பி. யும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க, முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான மகேந்திர டி. சில்வா, காமினி ஹேமச்சந்திர ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்த நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீன் மூனை சந்தித்தேன். இதன்போது இலங்கை சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கமையவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றும் மூன் என்னிடம் தெரிவித்தார்.

இக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

2009 ஆம் ஆண்டு பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது போரின் இறுதிக் கட்டம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராயவும் விசாரணை நடத்தவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

ஆனால் அரசாங்கம் இதனை முன்னெடுக்கவில்லை. எனவே மூன் தருஷ்மன் குழுவை நியமித்தார். அக்குழு அறிக்கையையும் வெளியிட்டது.

இதனை அரசாங்கம் கடுமையாக விமர்சித்ததோடு தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. எம்மால் சர்வதேச நாடுகளுடன் மோத முடியாது. மோதுவதா? பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

உலகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியதில்லை. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோமென ஒரு சிலர் கூறுகின்றனர். இந்தத் தர்க்கம் பிழையானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற நாடுகளுடன் வர்த்தகங்களை தொடர வேண்டும்.

அந்நாடுகளின் உதவிகள், ஒத்துழைப்பு என்பன எமது பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகும்.

மேற்குலகின் உதவிகள் கிடைக்காவிட்டால் நாடு பின்னடவு காணும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எமது கட்சியில் சிலர் கூறுகின்றனர், இது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினையென. இப்பிரச்சினை நாட்டையும் மக்களையும் பாதிக்கும். நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகும்.

எனவே இதனை தீர்த்து வைப்பதில் எதிர்க்கட்சியான எமக்கும் பொறுப்பு உள்ளது.

ஐ.நா. அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.

அதன்போது இச் சவாலை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐ.தே.க. தயாராகவே உள்ளது.

இதனை ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் தெரிவித்தேன்.

இன்று எமது நாட்டு பிரச்சினை தொடர்பாக உலகிலுள்ள பாராளுமன்றங்களில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 மக்கள் உயிரிழந்ததாகவும் அதனைவிடக் குறைவென்றும் பல்வேறு எண்ணிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

அதற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்திலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் படையினர், புலிகள் என பலர் உயிரிழந்தனர். சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் மூன்று விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும்.

அரசியல் தீர்வை வழங்கி நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தை நாட்டில் நிலை நாட்ட வேண்டும். இதனை முன்னெடுத்தால் சர்வதேச பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்து இறுதித் தீர்வை எட்ட வேண்டும்.

அதற்கு ஐ.தே.க. பூரண ஆதரவை வழங்கும்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் காணப்பட்டது போன்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சர்வதேசத்திற்கு எம்மால் பதிலளிக்க முடியும். அத்தோடு விசேடமாக வட பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை சுதந்திரமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறி விடுவார்கள்.

இவ்வாறான நிலைமை தோன்றுமானால் சர்வதேச ரீதியிலான பிரச்சினைகள் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும்.

செப்டெம்பர் மாதம் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடவுள்ளது. எனவே காலத்தை இழுத்தடிக்காது அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தீர்வுகளை காண வேண்டும்.

இதன்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க நாம் தயார்.

யுத்த வெற்றி மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தாது. அதற்கு ஜனநாயகமே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

லியாம் பொக்ஸ் நாடுதிரும்பினார்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த பிரித்தானியாவின் பாதுகாப்புத் து றை அமைச்சர் லியா ம் பொக்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார்.

பிரத்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலமாக நேற்றுக்காலை 10.15 மணியளவில் டோஹா கட்டார் நோக்கி புறப்பட்டு சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வருகைதந்த லியாம் பொக்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு பேருரையில் கலந்துகொண்டு நினைவு சொற்பொழிவாற்றினார்.

இலங்கைக்கு விஜயத்தின் போது அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சனிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு சொற்பொழிவில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை நவம்பர் மாத்திற்குள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை லியாம் பொக்ஸ் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் எதிர்தரப்பில் எவரையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நியூசிலாந்து செல்ல முயற்சி 87 இலங்கையர்கள் கைது

இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 87 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெட்டன் எனும் இடத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் சிறுவர்கள், பெண்களும் அடங்குவார்கள் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலிசியா எனும் கப்பல் மூலம் நியூசிலாந்துக்கு புறப்பட்டு இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கப்பலுடன் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...