5 ஏப்ரல், 2010

புதிய பத்து ரூபா நாணயக்குற்றி வெளியீடு
புதிய பத்து ரூபா நாணயக் குற்றியொன்றை மத்திய வங்கி நேற்று (5) வெளி யிட்டது.

மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கையை வெளியிடும் வைபவம் நேற்று மத்திய வங்கியில் நடைபெற்றது.

முதலாவது நாணயக்குற்றியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகால சட்ட நீடிப்பு; பாராளுமன்றம் இன்று கூடுகிறது
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காகப் பாராளுமன்றம் இன்று 6 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் வகையில் இன்று இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் கூடுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா மூலம் வாக்குப்பெற்று ஹதுன்நெத்தியை சபைக்கு அனுப்ப திட்டம்
ஏமாறவேண்டாம் என்கிறார் விமல் வீரவன்ச
சரத் பொன்சேகாவை காட்டி வாக்குகளைப் பெற்று பின்னர் சுனில் ஹந்துன்நெத்தியை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தீட்டியுள்ளது.

எனினும் இந்த திட்டத்துக்குள் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு மாவட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது- அரசியலமைப்பின் 89 (இ) மற்றும் 91 (1) (அ) ஆகிய ஷரத்துக்கள் மூலம் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான தகுதி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் இரு வழக்குகள் விசாரணையில் உள்ளன.

தற்போதைய நிலையில் அவர் அந்த வழக்குகளில் குற்றவாளியாக காணப்படும் சாத்தியமே அதிகமாக உள்ளது. சரத் பொன்சேகா இவ்வாறு குற்றவாளியாக தண்டனைக்குள்ளாகுமிடத்து ம. வி. மு. வேட்பாளர் சுனில் ஹந்துன்நெத்தியை சரத் பொன்சேகாவுக்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே ம. வி. மு. திட்டமாகும். பொன்சேகாவை கூடிய வாக்குகளைப் பெற்று அவருக்கு பதில் ஹதுன்நெத்தியை பாராளுமன்றம் அனுப்பும் ம. வி. மு. சதியில் எவரும் ஏமாந்துவிடக் கூடாது என்று தனது அறிக்கையில் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐந்து வருட காலத்தில் துரித பொருளாதார வளர்ச்சி

தந்திரம் கிடைத்தது முதல் 2005 ஆம் ஆண்டு வரை தனி நபர் வருமானம் 1062 டொலர்களாகவே இருந்தது. இது கடந்த 5 வருடத்தில் இரு மடங்காக அதிகரித்து 2055 டொலர்க ளாக உள்ளது. கிராமங்களுக்குச் சென்றால் இந்த மாற்றத்தை கண்கூடாகக் காணலாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலக பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பாகத்தில் 6.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தமை நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும். நாம் எதிர்பார்க்கும் எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைவதற்கு சிறந்த குழுவொன்றை எதிர்வரும் தேர்தலில் மக்கள் தெரிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின் பட்டினியும் வேலையின்மையும், அழிவுகளுமே எஞ்சியிருந்திருக்கும். ஆனால் யுத்தம் முடிந்த 3 மாத காலத்தில் இலங்கைக்கு சர்வதேச வரவேற்பு கிடைத்துள்ளது. முதலீடு செய்வதற்கும் சுற்றுலா செல்வதற்கும் ஏற்ற நாடு என சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளுமளவு சிறப்பாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப் படுவதாவும் அவர் கூறினார். மத்திய வங்கியின் 2009 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை நேற்று (5) வெளியிடப்பட்டது. இதன் முற் பிரதியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

கடந்த காலங்களில் உலகில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. எரிபொருள் விலை அதிகரித்ததோடு வங்கித்துறையும் வீழ்ச்சியடைந்தது. இந்த நெருக்கடிகள் காரணமாக 6 மாதங்களில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் என்று கூறிக்கொள்வோரும் அரசியல்வாதிகளும் ஆரூடம் தெரிவித்தனர். இலங்கைக்கு கடனோ, ஜி. எஸ். பி. சலுகையோ வழங்காதே என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்த சவால்களுக்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளோம்.

யுத்தத்தின் பின்னர் கண்ணீர் மட்டுமே மிஞ்சும். மக்களுக்கு எதுவித நிவாரணமும் தர முடியாது என சேர்வின்சர் சேர்சில் கூறியிருந்தார். ஆனால் நமது நாட்டில் அத்தகைய நிலை உருவாகவில்லை. யுத்தம் முடிவடைந்து 6 மாதங்களுக்குள் முதலீடு செய்வதற்கு ஏற்ற 36 நாடுகளில் ஒன்றாக இலங்கை அறிவிக்கப்பட்டது. சுற்றுலா செல்லக் கூடாது என எச்சரிக்கப்பட்ட நாடு தற்போது சுற்றுலா செல்லச் சிறந்த நாடாக ஏற்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.

கடந்த காலங்களில் மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 சத வீதமே உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டு முதல் 6 சதவீதத்தை விட அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது.

முன்பு யுத்த தாங்கிகள் சென்ற வீதிகளில் இன்று டிரக்டர்கள் செல்கின்றன. ஆயுதத்தினால் மீட்கப்பட்ட பூமி தற்போது ஏர் கொண்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

சுதந்திரம் கிடைத்தது முதல் 2005 ஆம் ஆண்டு வரை தனி நபர் வருமானம் 1062 டொலர்களாகவே இருந்தது. இது கடந்த 5 வருடத்தில் இரு மடங்காக அதிகரித்து 2055 டொலர்களாக உள்ளது. கிராமங்களுக்குச் சென்றால் இந்த மாற்றத்தை கண்கூடாகக் காணலாம்.

தினமும் ஒரு கோடி 30 இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள் பாவிக்கப்படுகின்றன. தினமும் பெருமளவு குறுஞ் செய்திகள் பரிமாறப்படுகின்றன. இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம் என்பன கிடையாது என சில தரப்பினர் குற்றஞ் சாட்டுகின்றனர். ஆனால் 35 க்கும் அதிகமான பத்திரிகைகள் வெளிவருதோடு 30 ற்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வானொலி சேவைகள் உள்ளன. அவை குறைவில்லாமல் அரசாங்கத்தை விமர்ச்சிக்கின்றன.

பண வீக்கம் பெருமளவு குறைந்துள்ளதோடு வட்டி வீதமும் குறைவடைந்துள்ளது. மேலைத்தேய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகையில் நமது நாடு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை கண்டிருக்கிறது. இது தற்செயலாக நிகழ்ந்ததல்ல.

மஹிந்த சிந்தனையூடாக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வங்கித் துறையை கட்டியெழுப்பவும் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிக்கவும் முடிந்தது.

2009 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் 2 சத வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் டிசம்பர் ஆகும் போது 6 வீதமாக உயர்ந்தது. இந்த வெற்றி தனி நபருக்குக் கிடைத்த வெற்றியல்ல. இதனை ஏற்றுக் கொள்ள சிலர் தயாராக இல்லை.

இது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே காட்டுகிறது.

விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் கஷ்டப்படுவதாக ஊடகங்களின் மூலம் காட்டப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு தங்களுக்கு 1350 ரூபா செலவாவதாகவும் ஆனால் அரசு 26 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாமல் பாதிக்கப்படுவதாக பொய்ப் பிரசாரமே செய்யப்படுகிறது.

யுத்தம் முன்னெடுக்கப்படும் போது எம்மால் யுத்தம் செய்ய முடியாது என்று கூறியவர்கள் இன்று எம்மால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்கின்றனர்.

தாய் நாடு குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இன்று உருவாகியுள்ளது. நாட்டுக்குப் பாதகமாகச் செயற்பட்டவர்களை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பகிஷ்கரித்துள்ளனர். இந்தத் தேர்தலிலும் அத்தகையவர்களை மக்கள் நிராகரிப்பது உறுதி.

எமது நாட்டைக் கட்டியெழுப்ப அமெரிக்கா, பிரான்ஸ் என வெளிநாடுகளின் உதவி தேவையில்லை. இது எமது நாடு இதனை நாமே கட்டியெழுப்ப வேண்டும்.

பயங்கரவாதம் நிறைவடைந்துள்ளதோடு பொருளாதார நெருக்கடியும் வழமைக்குத் திரும்பி வருகிறது.

வடக்குப் பிரதேசம் வேகமாக அபிவிருத்தியடைகிறது. வீதிகள், வீடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. ஓலை வீடுகள் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் எதிர்பார்த்துள்ள இலக்குகளை அடைவதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும். கடந்த காலங்கள் போலன்றி மக்களின் மனத்துடிப்பை அறிந்து புரிந்துணர்வுடன் செயற்படும் நிறுவனமாக மத்திய ரிசீகி வளர்ச்சியடைந்துள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரசாரப் பணிகள் யாவும் நிறைவு; இராணுவம், அதிரடிப்படை உஷார்


பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பாதுகாப்பு நாடு முழுவதும் கடுமையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

58,700 பொலிஸாருடன் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் இன்று முதல் சேவைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

தேவையைப் பொறுத்து இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் அழைக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் பிரசார நடவடிக்கைகள் யாவும் முடிவடைந்துள்ளன. தேர்தல் சட்ட திட்டத்தின்படி, தேர்தல் தினம் வரை எவரும் பிரசாரங்கள் செய்ய முடியாது. அதே நேரம் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் எதனையும் முன்னெடுக்கவும் முடியாது. இதேவேளை குழப்பங்கள் விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி பொலிஸாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறுசிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தேர்தல் வன்முறையினால் நேற்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகமயில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக கட்சிகளுக்கிடையிலேயே வன்முறைகள் அதிகரித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல், மட்டக்களப்பு, அனுராதபுரம், பதுளை ஆகிய 4 மாவட்டங்களில் வன்முறைகள் ஈடுதலாக இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி தினகரனுக்குத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேர்தலை மிகவும் அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கு ஏற்ப பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்தி முடிப்பதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன், வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களைத் தயார் செய்யும் பணிகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

8ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.

மாவட்ட ரீதியாக 196 ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7625 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டை கட்டியெழுப்ப அணிதிரளுங்கள்
ஐ.ம.சு.மு பிரசாரத்தை முடித்துவைத்து மித்தெனியவில் ஜனாதிபதி உரை
எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக நாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மித்தெனிய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமாக அமைந்த இம்மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தனி நபர் வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைப் பெற்றுத்தருவது மக்களின் பொறுப்பாகும்.

நாம் பலமாக எமது பயணத்தைத் தொடர வேண்டுமானால் பெருமளவிலா னோரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இரண்டாகப் பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஒன்றிணைத்து தொங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற பலத்தையும் பலப்படுத்தினோம். யுத்தம் நடந்தபோதும் நாம் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட் டிருந்த அபிவிருத்தியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் உட்பட இலட்சக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கினோம்.

இராணுவத்தினர் உளரீதியில் பலவீனமடைந்திருந்தவேளையில் அவர்களுக்குப் பலமூட்டியது போன்றே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களையும் தைரியப்படுத்தியுள்ளோம்.

நாம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிக்கையில் அதனைக் காலதாமதப்படுத்த மங்கள சமரவீர போன்றோர் செயற்பட்டனர். அதனால்தான் நாம் அத்தகையோரை ஒதுக்கிவிட்டோம். அப்பதவியில் பொருத்தமான அமைச்சரையும் நியமித்தோம்.

இளையோரின் பலமும் திறமை மிக்க தலைமைத்துவமும் நாட்டின் எதிர்காலத் தேவையாகிறது. அத்துடன் எமது பாரம்பரிய விழுமியங்கள் கலாசாரங்களைப் பாதுகாத்தே நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமுள்ளது.

நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். ரணில் விக்கிரம சிங்கவின் காலத்தில் விமான சேவை உட்பட பல தவறான - பொருத்தமில்லாத உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாம் இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாம் பலமான நாட்டை நேசிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளோம்.
நாமனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

.24 .மணி சேவையாக காற்றலையில் வலம் வரும் வானொலி .ETR.24 .மணி சேவையா காற்றலையில் வலம் வரும் வானொலி .ETR .
மேலும் இங்கே தொடர்க...

உண்ணாவிரதம் இருந்த பௌத்த பிக்குகள் பொலிஸாரால் பலவந்தமாகக் கலைப்பு(பட இணைப்பு)

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி பிக்குகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸார் பலவந்தமாக கலைத்தாணர்.

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்கக் கோரி கடந்த மூன்று நாட்களாக பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை முதல் கோட்டைப் பகுதியில் சுமார் 200 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிக்குகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களைப் பலவந்தமாக பொலிஸார் அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் ஊடகவியலார்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர்.

இந்நிலையில் பிற்பகல் வேளையில் அங்கு வந்த பொலிஸார், பிக்குகள் அமைத்திருந்த கூடாரத்தை அகற்றியதுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பிக்குகளைப் பலவந்தமாகப் பஸ்களில் ஏற்றிச் சென்றனர்.

அதனால் பெரும் பதற்றம் நிலவியது, எனினும் சற்று நேரத்தில் நிலைமை வழமைக்குத் திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


___ E-mail to a friendமேலும் இங்கே தொடர்க...

தாக்கப்பட்ட மாவோ பிரதேச சபைத் தலைவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதி


நேற்றிரவு பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாவோ பிரதேச சபை தலைவர் பந்துல புஸ்பகுமார தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10.30 மணியளவில் மாவோ பளல்ல என்ற இடத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோவின் ஆதரவாளர்களே இவர்மீது தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, புஸ்பகுமாரவின் வாகன சாரதியும் தாக்கப்பட்டுப் பலத்த காயங்களுக்குள்ளானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் நடந்த ததேகூ பிரசாரக் கூட்டங்கள்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்று தேர்தல் பிரசார கூட்டங்கள் நேற்று மன்னாரில் இடம்பெற்றன.

பலத்த மழைக்கு மத்தியில், இன்னிசை நிகழ்வுகளுடன் சால்வுபாத கிராமத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தை, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பலர் களைக்க முனைந்தனர்.

இதனையடுத்து மன்னார் சால்வுபாத கிராமத்தில் சற்று நேரம் பதற்ற நிலை காணப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், மற்றும் புதிய வேட்பாளர்களான, சூசைநாதன், சிராய்வா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியதாகவும் பலத்த சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலின் பின் 7 நாட்கள் வரை பேரணி நடத்தத் தடை:பிரதி பொலிஸ் மா அதிபர்எதிர்வரும் பொதுத்தேர்தல் முடிவடைந்து ஏழு நாட்கள் வரை ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தடைசெய்யப் பட்டுள்ளதாகத் தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள 2584 நடமாடும் பாதுகாப்பு பிரிவுகளும் செயற்பட ஆரம்பிக்கவுள்ளன.

அதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் இதுவரை வாக்களிக்காதவர்கள், தவறாது உடனடியாக வாக்களிக்குமாறும் எதிர்வரும் எட்டாம் திகதி மாலை 4.00 மணிக்கு வாக்குச் சீட்டுக்கள் யாவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

19,500 முப்படையினரும் 58,700 பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் இன்று முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் வேட்பாளர்கள் அனைவரும் தமது பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தைத் தவிர்ந்த ஏனையவற்றை மூடிவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்கள், வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் என்பவற்றுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் தபாலகங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவிக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட, பொதுத் தேர்தலுக்குப் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 413 பொலிஸ் பிரிவுகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் தாம் வாக்களிக்கும் வாக்குச்சாவடியைத் தவிர வேறு வாக்குச் சாவடிக்கு செல்வதாயின் வேட்பாளருக்குரிய ஆளடையாள அட்டையுடன் மட்டுமே செல்லமுடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சாமியார் லீலைகளை படம் பிடித்தது எப்படி? சீடர் லெனின் பரபரப்பு வாக்குமூலம்

சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் புதுப்புது தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகளை சாமியாரின் சீடர் லெனின் வெளியிட்டார். இது சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசிடம் தமிழக போலீஸ் ஒப்படைத்து விட்டது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நித்யானந்தா வீடியோ வெளியான பின்பு முதல் முறையாக லெனினிடம் கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது நித்யானந்தாவின் நடவடிக்கைகள் பற்றி போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு துளைத் தெடுத்தனர். அவற்றுக்கு லெனின் பதில் அளித்துள்ளார். சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதுபற்றி லெனின் கூறியதாவது:-

சாமியார் நித்யானந்தா வின் பெங்களூர் ஆசிரமத்தில் நான் பணிபுரிந்தேன். அப்போது நித்யானந்தா தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனால் அவரது தவறான நடவடிக்கைகளை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனவே சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை. அங்குள்ள சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தான் கேமராவை வைக்க உதவினர். வீடியோவில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன.

முழு சி.டி.யை கர்நாடக போலீசிடம் ஒப்படைத்து இருக்கிறேன். வீடியோ எடுக்க உதவியவர்களை வெளியிட மாட்டேன். அவர்கள் உதவியதால் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அந்த வீடியோவை நான் வெளியிட்டேன். இதில் என் பங்கு அவ்வளவுதான். நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன்.

ஆசிரமத்தில் உள்ள மேலும் 2 பெண்கள் நித்யானந்தா பற்றி என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி உள்ளார். ஒரு ஆணும், பெண்ணும் நித்யானந்தா பற்றி என்னிடம் தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு தான் நித்யானந்தா பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். 3 மாதத்துக்கு முன்புதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் இன்னும் ஆசிரமத்தில் உள்ளார். அவர் நித்யானந்தாவுக்கு எதிராக முறைப்படி புகார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா பற்றி ஒரிஜினல் சி.டி.யை கர்நாடக போலீசாரின் விசாரணையின் போது ஒப்படைத்து இருக்கிறேன். என்னுடன் அவர் டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார். நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன். எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு லெனின் கூறி யுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமை ஆணைக்குழுவிடம் அனோமா புகார்


ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாமையானது மனித உரிமை மீறலாகும் என்பதைச் சுட்டிக்காட்டியும் அனோமா பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முற்பகல் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவர் சுகவீனமுற்றிருக்கின்ற போதிலும் இதுவரை அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது அச்சம்: வரதராஜ பெருமாள்
இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடையே அச்சம் நீடிப்பதாக அப் பகுதியின் முன்னாள் முதல்வர் ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.
÷1990-ல் இலங்கையை விட்டு வெளியேறிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார்.
÷இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் கையில் துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த விடுதலைப் புலிகளோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ, இலங்கை ராணுவ வீரர்களோ ஆதிக்கம் செலுத்தினர்.
÷தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழு யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருகிறது. அவர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
÷இந்த ஆயுதக் குழுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
÷நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது கூட, இந்த ஆயுதக் குழுவின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக கேள்விக்குறியாகி விட்டது.
÷இதனால், தமிழ் தேசிய கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
÷இந்த அச்சம் காரணமாகவே, தான் விரும்பும் கட்சி எது என்பதை சாதாரண மக்கள் வெளிப்படையாக கூறுவதில்லை. அதனால்தான் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்வதில்லை.
÷மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலையை மேம்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
÷யாழ்ப்பாணத்தில் 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியபோதும், தற்போது புலிகள் அமைப்பின் சாதக, பாதக அம்சங்கள் குறித்தோ, பிரபாகரன் குறித்தோ யாரும் பேசுவதில்லை.
÷விடுதலைப் புலிகளை கடந்த காலமாக கருதும் மக்கள், வருங்காலம் குறித்தே தற்போது சிந்தித்து வருகின்றனர்.
÷பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே நேரத்தில் அரசியல் உரிமையும் தேவை என யாழ்ப்பாணம் மக்கள் கருதுகின்றனர் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆதரவாளர்கள் மறுப்பு: புதிய கட்சி தொடங்க முஷரப்புக்கு சிக்கல்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தற்போது லண்டனில் தங்கியுள்ளார். விரைவில் அவர் பாகிஸ்தான் திரும்ப உள்ளார். அங்கு தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருந்தார். அதற்கு வசதியாக புதிய கட்சி தொடங்க திட்டமிட்டிருந்தார். அக்கட்சிக்கு அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம்லீக் என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-கியூ கட்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். புதிய கட்சி தொடங்குவதற்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் வருகிற 12-ந்தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த முஷரப் ஏற்பாடு செய்திருந்தார்.

அதில், அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அவர்கள் முஷரப்புக்கு ஆதரவளிக்க தயங்குகின்றனர். முஷரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ள அமீர், சுமேராமாலிக், முகமதுஅலி முரானி, சையத் பைசல், சலேஹயத் மார்விமேமன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டனர்.

எனவே புதிய கட்சி தொடங்குவதில் முஷரப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஏழாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என அறிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம், அதற்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறும் பணித்துள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 24 மணிநேரத்திற்குள் சகல சுவரொட்டிகள், பதாகைகள், 'கட்அவுட்' கள் மற்றும் கொடிகளை அகற்றிவிடுமாறும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுவோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே விருப்பு இலக்கம் மற்றும் சின்னத்தைப் பொறிக்கமுடியும். வேட்பாளர் பயணிக்காத வாகனங்களில் கொடிகள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அவ்வாறான வாகனங்களைக் கைப்பற்றுவதுடன் அதில் பயணிப்போரையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, பிரதான கட்சிகள் தங்களுடைய இறுதிப் பிரசாரக் கூட்டங்களைத் தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடத்தவிருக்கின்றன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசார கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மிந்தெனியவிலும், ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பலாமரச் சந்தியிலும் நடைபெறவுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஜனநாயக தேசிய கூட்டணி ஏற்பாடு செய்துள்ள இறுதி தேர்தல் பிரசார கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் புதுக்கடையில் நடைபெறவிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இராணுவ நீதிமன்றத்தைக் கூட்ட முடியாது : ஜ.தே.க.

இராணுவ நீதிமன்றம் தொடர்பிலான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் அறிவித்திருப்பதைப் போல், நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றம் கூட்டப்படுமானால் அது சட்டத்துக்கு முரணானதாகும்.

அவ்வாறு நடைபெறின் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எச்சரித்துள்ளது.

றோயல் கல்லூரி மாவத்தையில் அமைந்துள்ள கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளரும் எம்.பி.யுமான அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

"இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் நடத்தப்படுகின்ற விதம் தொடர்பிலும் மேலும் பல காரணங்களை உள்ளடக்கியதுமான மனு மீதான விசாரணை நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

அத்துடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானங்கள் தொடர்பிலும் அதன் நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.

அதுவரையில், ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இடை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை 6ஆம் திகதி. ஒத்திவைக்கப்பட்டிருந்த ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுகளின் பிரகாரம் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படுமானால் அது சட்டப்படி தவறாகும். அது மட்டுமல்லாது இந்த செயல் நீதிமன்றத்தையே அவமதிப்பதற்கு சமனானதாகும்.

எனவே நாளைய தினம் இராணுவ நீதிமன்றத்தை கூட்டவும் முடியாது. விசாரணைகளை முன்னெடுக்கவும் முடியாது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நாளை ஜெனரல் பொன்சேகா விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரேயானால் அந்த நீதிமன்றத்துக்கு எதிராகவும் அதில் அடங்கியுள்ள நீதிபதிகளுக்கு எதிராகவும் நாம் நீதிமன்றம் செல்வோம்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது தொடர்பில் எமது சட்ட ஆலோசகர்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர், குருநாகலில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபப்டுகிறது.

கொலையை நேரில் பார்த்த இவரது வாகன சாரதி இது தொடர்பாகப் பொலிஸுக்கு நேரடியாகத் தகவல் தந்துள்ளார். இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜட்டிக்குள் மறைத்து போதை மருந்து கடத்திய 6 வயது இரட்டையர்கள் கைது நைஜீரியா ஞாயிற்றுக்கிழமை,

நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. அதில், பயணம் செய்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ஒரு பெண்ணும், அவளது 6 வயது இரட்டை குழந்தைகளும் ஜட்டிக்குள் மறைத்து “கோகைன்” என்ற போதை பொருள் கடத்தியது தெரிய வந்தது. அப்பெண்ணிடம் இருந்து 3 கிலோவும், 2 சிறுவர்களிடம் இருந்து 700 கிராமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் நைஜீரியா போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணின் கணவரிடம் போதை பொருள் எதுவும் இல்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி.,யில் இந்தியர் மீது மீண்டும் தாக்குதல்


பிரிஸ்பேன் ரயில் நிலையத்தில் இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடப்பது கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளது. சிலர், இனவெறியோடு இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள ரோமா ஸ்ட்ரீட் ரயில் நிலைய நடைபாதையில் ரயிலுக்காக காத்திருந்த நரேந்தர் குமார் படேல்(34) என்ற இந்தியரின் கழுத்தில், அடையாளம் தெரியாத நபர் கத்தியால் காயப்படுத்தியுள்ளார். கத்தி, கழுத்தில் ஆழமாக பதியாத காரணத்தால், நரேந்திர் குமார் உயிர் பிழைத்துள்ளார்.இத்தாக்குதலை நடத்தியதாக கருதப்படும் 26 வயது நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்த நபர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். இந்த செய்தியை, 'கூரியர் மெயில்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த இந்த தாக்குதல், ரயில் நிலைய ரகசிய கேமராவிலும் பதிவாகியுள்ளது. ஆனால், இச்சம்பவத்தை போலீசார் மூடி மறைத்து விட்டதாக இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மரண அறிவித்தல்திருமதி அன்னலட்சுமி கனகசபை
அன்னை மடியில்: 31 டிசெம்பர் 1934 ஆண்டவன் அடியில் :4 ஏப்ரல் 2010

ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கனகசபை அவர்கள் 04-04-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை சீதாப்பிராட்டி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபையின் அன்புமனைவியும்,

சூரியகுமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரன்(இலங்கை), சிவகுமாரன்(சுவிஸ்), சூரியகலா(சுவிஸ்), செல்வக்குமார்(இலங்கை), சசிகலா(ஜேர்மனி), லவசக்தி(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), சுதாயினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

செல்வரஞ்சினி(சுவிஸ்), நவமணிதேவி(இலங்கை), தமிழ்செல்வி(சுவிஸ்), ஆனந்தகுமார்(சுவிஸ்), சாந்தி(இலங்கை), உதயகுமார்(ஜேர்மனி), ரகு(சுவிஸ்), ஜெயக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,

சூரியா, றஜிக்ஷன், சதிர்ஸ்க்கனென், சுபானு, சுயானு, அனுஜா, மிருன், நிதர்சன், ஆனந்தா, கம்சிகா, தாட்சிகா, அனோஜன், சகானா, றஜீவன், சுவேதா, விகாஸ், அஸ்வின், ஜெனுசா, ஜதுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 05-04-2010 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1:00 மணிக்கு ஏழாலை கிழக்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தகவல் உதயகுமார் (அப்பன் )ஜேர்மனி
தொடர்புகளுக்கு
சூரியகுமாரன்சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419333730
சந்திரகுமாரன் , செல்வக்குமாரன்இலங்கை
தொலைபேசி: +94114919954
சிவகுமாரன்சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319180557
சூரியகலாசுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41217293126
சசிகலாஜெர்மனி
தொலைபேசி: +497119335267
லவசக்தி , சுதர்சன்சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41812522582
சுதாயினிசுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041629620047
தகவல் உதயகுமார் (அப்பன் )ஜேர்மனி
மேலும் இங்கே தொடர்க...