30 செப்டம்பர், 2010

வன்னியிலிருந்து இடம்; பெயர்ந்தோருக்கு 5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து திருக்கோயில் பிரதேச செயலகப்பிரிவில் வினாயகபுரம்,காயத்திரி கிராமம் ஆகிய இடங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஹரிட்டாஸ் எகெட் நிறுவனம் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளை இன்று காலை வழங்கியுள்ளது.

12 குடும்பங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களையும், 2 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்தரங்களையும் வழங்கியுள்ளனர்.

திருக்கோயில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தன்போது ஹரிட்டாஸ் எகெட் பணிப்பாளர் அருட்பேராசிரியர் ஸ்ரீதரன் சில்வெஸ்டர் பொருட்களை கையளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கணவனால் வெட்டுண்ட மனைவி உயிரிழப்பு: மஸ்கெலியாவில் சம்பவம்

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்திலுள்ள கவிரவில தோட்டத்தில் இன்று இடம் பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குடும்பப் பெண்ணொருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரை வெட்டிய இந்தப் பெண்ணின் கணவர் தானும் கழுத்தில் வெட்டிக் கொண்டதால் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :

கவிரவில தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றின் கணவன் - மனைவிக்கு இடையில் தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனைவி இன்று பிற்பகல் 1 மணியளவில் விறகு பொறுக்கிக் கொண்டு வீடு வந்து கொண்டிருந்த போது வழியில் மறைந்திருந்த கணவன் திடிரென பாய்ந்து கத்தியினால் மனைவியின் கழுத்தினை வெட்டியுள்ளார். இதன் போது கழுத்து வெட்டுக்கு இலக்காகிய மனைவி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன் பின்பு தலைமறைவாகிய கணவன் மதுவருந்தி விட்டு பின்னர் நஞ்சும் அருந்தி கொண்டு தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டுள்ளார்.

இதன் பின்பு உயிரிழந்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே வெட்டிக்கொண்டவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

அங்கு அவருக்கு அவசரமான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக தற்போது கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளுக்குத்தாயான 47 வயதுடைய வள்ளி என்ற பெண்மணினாவார்.

ஆபத்தான நிலையிலுள்ள இந்தப்பெண்ணின் கணவனின் பெயர் ரட்ணராஜா ( வயது 58 ) என்பவராவார். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸகெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

தண்டனை ஒர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்: அனேமா பொன்சேகா

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அவரது பாரியார் அனேமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அனோமா, ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட 30 மாதகாலச் சிறைத்தண்டனையை தமது குடும்பம் ஏற்றுக்கொள்ளாது எனவும், நாட்டின் பொதுமக்களும், இராணுவத்தினரும் இந்தத் தீர்ப்பை நிராகரிக்க வேண்டுமென தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் தனிப்பட்ட எண்ணத்திற்கு அமைவாக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத் தண்டனை தம்மை பலவீனப்படுத்தாது எனவும், இதன் மூலம் தாம் இன்னமும் வலிமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரை மீட்டெடுப்பதற்காக தைரியததுடன் போராட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் செயலானது சர்வாதிகாரத்தை தெளிவு படுத்துகின்றது: ஜே.வி.பி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இச் செயலானது சர்வதிகாரத்தை தெளிவுப் படுத்துகின்றது என ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தை வெற்றி கொண்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பல குற்றச் செயல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். நாட்டில் ஜனநாயம் மாறி சர்வதிகாரத்தை ஆட்சி தொடர்கிறது. இதனை ஜே.வி.பி எதிர்த்து போராடவும் தயாராக உள்ளது என மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய - இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தைஇந்திய - இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது.

இதுதொடர்பாகவே இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையின் போது இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கடலோர பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை மற்றும் காவல்படைகள் இணைந்து சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் இதுவரை 85 சதவீதமானோருக்கு அகதி அந்தஸ்து

கனடாவில் 85.2 சதவீதமானோருக்கு 2010 ஆம் ஆண்டு, முதல் காலப்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கனடா இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம் 345 பேருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 50 பேரின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 705 பேர் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய இலங்கையரில் அநேகர் தமிழர்கள் என கனடாவின் குடிவரவு திணைக்கள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய இறுதிகட்ட யுத்த சூழலின் போது பாதிக்கப்பட்டவர்கள் என ஹொஸ்கோர்ட் ஹால் லோ ஸ்கூலின் விரிவுரையாளர் சீன் ரேஹாக் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த போதும், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 425 இலங்கையர்களுடன் கப்பல் ஒன்று வன்கூவர் துறைமுகத்தை வந்தடைந்தது.

இவ்வாறு சட்டவிரோத கப்பல்கள் நாட்டை வந்தடையுமிடத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டவர்களும் நாட்டை வந்தடையக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. சிலர் அதிக பணத்தைக் கொடுத்து இவ்வாறு சட்ட விரோதமாக கனடாவை வந்தடைகின்றனர்.

சிலர் அகதி அந்தஸ்து கோரி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடிவரவு அமைச்சர் ஜெசன் கென்னி கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா கலாசார மண்டபத்தில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டி.ஈ.டபிள்யூ குணசேகர தலைமையில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,

"இறுதிக் கட்டப் போரின் போது, 11ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் இலங்கைப் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 12 நலன்புரி நிலையங்களில் இவர்களுக்கு தொழில் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களில் 4,000 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 2000 பேர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவர்" எனத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, புனர்வாழ்வுத்துறை ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகாவுக்கு எதிரான 2 ஆவது தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

ஜனநாயகத் தேசியக் கூட்டணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது நீதிமன்றம் 30 மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அச்சமயம், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், அவர் நாடு திரும்பியதும், அவரது தீர்மானத்துகமைவாகவே தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் ஆறு மாதத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தம் ஆரம்பித்து நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை:கோத்தபாய ராஜபக்ஷ

இறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள், ஐ.நா. பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். எனினும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம்கொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதேசங்களை கைப்பற்றினோம். ஆனால் இறுதிமுடிவு எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் குழுவாக இணைந்து செயற்படுதல் மூலமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. உலகம் மிகவேகமாக வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார். வங்கித்தொழில் கற்கை நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பொருளாதார முகாமைத்துவமும் கற்றுக்கொண்ட யுத்தமும் எனும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2005 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட போது பலரும் என்னுடன் கலந்துரையாடினர். யுத்தத்தின் மூலம் புலிகளை தோற் கடி ப் ப த ற்கு அரசாங்கங்கள் பல முயற்சித்தன. அவையாவும் தோல்வியடைந்தன. இந்நிலையில் புலிகளை யுத்தத்தின் மூலமாக புலிகளை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் கேட்பதை கொடுத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணுமாறு அவர்கள் என்னிடம் கோரிநின்றனர்.யுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரண்டு முறைமைகள் ஊடாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியிலிருந்து பல அரசாங்கங்கள் முயற்சித்தன. நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். தனியாக அல்ல, இந்தியா மற்றும் நோர்வேயூடாக விடயங்களை விளங்கிக்கொண்டோம்.

எமது நிலைப்பாட்டில் நாம் இருந்தோம், யுத்தத்தில் ஏனைய அரசாங்கங்கள் ஏன் தோல்வியடைந்தன. அவற்றை திரும்பி பார்க்கமுடியாது. எனினும் நாம் திரும்பிப்பார்த்தோம், வடமாராட்சி படைநடவடிக்கை தொடர்பில் திரும்பி பார்த்தோம். படையினரின் பலத்திற்கு புலிகளால் ஈடுகொடுக்கமுடியாது, நாம் ஒவ்வொரு தடவையும் வெற்றியீட்டு÷வாம். ஆனால் அதனை நிறைவுக்கு கொண்டுவரவில்லை.

படைநடவடிக்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. வடமராட்சி நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை, எனக்கு படைநடவடிக்கை தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டது. தலைவர்களுடன் பலமாக கடமையாற்றினோம்.

2005 ஆம் ஆண்டு தலைவரை நாம் இறக்குமதி செய்யவில்லை, எம்மிடத்தில் பலவீனம் இருந்தது. அதனை நாம் கண்டுகொண்டோம். புலிகள், படையினருக்கு கூடுதலான இழப்புகளை ஏற்படுத்தி இடங்களை கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை மீட்டோம், பின்னர் நாம் கிழக்கை மீட்டெடுத்தவேளை தந்திரோபாய பின்வாங்கல் என்று பிரபாகரன் தெரிவித்தார். எதிர்க்கட்சியும் கூறியது.

வன்னி வனாந்தரம் பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தது. எங்களிடத்தில் போதுமான படையினர் இருக்கவில்லை. படையை ஓர் இடத்திலிருந்து எடுக்கமுடியாத நிலைமை. ஜயசிக்குறு நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தை கைப்பற்றினோம். எனினும் பாதுகாக்கமுடியவில்லை. இவ்வாறான நிலைமைகள் படைப்பலத்தை பாதிக்கும். இதுபெரியதொரு காரணமாகவும் அமையும். படைகளை பலப்படுத்தவேண்டும் என்று கோரினோம். அதற்கான ஒரு பகுதியை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன்.

சர்வதேசம் அழுத்தம் கொடுத்தது இந்தியாவிற்கும் எமக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு இருந்தது. இந்தியாவில் சிறுபான்மை ஆட்சியிருந்தாலும் எங்களிடத்தில் புரிந்துணர்வு இருந்தது. பொருளாதார ரீதியில் நாங்கள் பணத்தை நாம் செலவழித்தோம். உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டவேளையிலும் அதற்கும் நாம் முகம்கொடுத்தோம்.

ஆட்சிபீடம் ஏறியவேளையில் பலமாக அரசாங்கம் இருக்கவில்லை, படைநடவடிக்கையை தொடர்வதற்கு அரசியல் மிக முக்கியமானது. 2005 ஆம் ஆண்டு சிறுபான்மை அரசாங்கமே இருந்தது. பாராளுமன்றத்திலும் பலமிழந்து இருந்தது. மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது ஆதரவு கிடைக்காவிடின் தொடரமுடியாது.

பல அரசாங்கங்கள் படையணிகளை பலப்படுத்த விரும்பவில்லை. படைகளை பலப்படுத்துவதை மிக முக்கியமான விடயமாக கருத்தில் கொண்டோம். முப்படைகளையும் பொலிஸ் மற்றும் சிவில் படைகளை பலப்படுத்தினோம். ஜனாதிபதியினால் மட்டுமே படைகளை பலப்படுத்த முடியும். அதற்கான அதிகாரமும் அவரிடத்திலேயே இருக்கின்றது. கிழக்கில் முப்படைகளை பலப்படுத்தினோம். வன்னியில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை.

தெளிவான தூரநோக்கு , குறிக்கோள் இவை முக்கியமான விடயமானதாகும். அதற்கு தலைமைத்துவமும் முக்கியமானதாகும். புரிந்துணர்வு காலத்தில் படைகளின் முக்கியஸ்தர்களும் புலிகளின் முக்கியத்தலைவர்களும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தைகளை அரச தலைவர்கள் முன்னெடுக்கவேண்டும். படையினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என ஜனாதிபதி கூறினார். படையினரின் ஹெலிகொப்டர்களை புலிகள் கோரியிருந்த வேளையில் அவற்றை நாம் கொடுக்கவில்லை.

கெப்பத்திகொல்லாவையில் கிளேமோர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு செல்லவேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினர். ஜனாதிபதி சென்றார். மக்களுடன் கலந்துரையாடினார். அதுதான் தலைமைத்துவம். படையினருடன் பயணித்தார், விஜயம் செய்தார். வவுனியாவிற்கு போகுமாறு நான் கோரியபோது கிளிநொச்சிக்குதான் செல்வேன் என்று ஜனாதிபதி சென்றிருந்தார்.

பாதுகாப்பு சபைக்கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் எந்த நேரத்தில் நடைபெற்றாலும் அதில் ஜனாதிபதி கட்டாயமாக பங்கேற்பார். ஒரு கூட்டத்தையேனும் தவறவிடவில்லை. அது தலைமைத்துவதற்கு முக்கியமானது. படைநடவடிக்கைகளை மெதுவான முன்னெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முகமாலையில் ஒரே நாளில் 125 க்கு மேற்பட்ட படையினரையும் ஆறு படையணிகளையும் இழந்தோம். அனுராதபுரத்தில் விமானங்களை இழந்தோம். இப்போது சரிதானே என பலரும் வினவினர் ஆனால் தலைமைத்துவம் புதிய விடயங்களை தேடிக்கொண்டிருந்தது. அவர் அஞ்சவில்லை .

புலிகளின் விமானங்கள் எமது படைப்பலத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை என்றாலும் அவை உளவியல் ரீதியில் தாக்கத்தை கொடுத்தன. 2005 ஆம் ஆண்டு வான் பாதுகாப்பு முறைமை எங்களிடத்தில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வு தகவல்களின் பிரகாரம் 1998 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் விமானங்களை வைத்திருந்தனர் . புலிகளின் விமான தாக்குதல் எமக்கு முதல் அனுபவமாக இருந்தது. அதற்காக கவலையடையவில்லை.

பலநாடுகளில் ஆலோசனை பெற்றோம் மிகவேகமான விமானங்களையும் புதிய ஹெலிகளையும் அறிமுகம்செய்தோம். பயிற்சியில் ஈடுபட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டவேளையில் விமானங்கள் சுட்டு கீழே வீழ்த்தப்படுவதை ஜனாதிபதி பார்த்தார். தலைமைத்துவம் பலமிழந்திருந்தால் கட்டளை அதிகாரிகளும் படையினரும் பலமிழந்திருப்பர். தலைமைத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானது. அதுவே எங்களை ஊக்குவிக்கசெய்யும். ஊக்குவிப்புகளை விமர்சம் செய்தனர். அவற்றை தவிர்ப்பதற்கு படையினருக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் நலன்புரி விடங்களை மேற்கொண்டோம்.படையினருக்கு ஆயுதங்கள் சீருடைகளை மட்டுமே வழங்கவில்லை. அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். குழுவாக வேலைச்செய்தோம். பாதுகாப்பு முன்களத்தில் இருப்பவர்களுக்கு உதவினோம்.

நான்காவது ஈழபோர் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடுமுழுவதும் வியாபிக்கப்படும் என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். மக்களும் தலைவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். தலைமைத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புலிகள் மேல்மாகாணத்தில் தாக்குல் நடத்தினர். வடக்கு கிழக்கில் படைநடவடிக்கைளை மேற்கொண்ட ஏககாலத்தில் பொருளாதார நிலையங்களையும் பாதுகாத்தோம்.

கட்டுநாயக்க விமான நிலையம்,துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற புலிகளின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. மேல்மாகாணத்தில் புலிகளின் வலைப்பின்னலை பொலிஸாரே இல்லாதொழித்தனர். 3000 படையினருடன் பயணித்த ஜெட்லைனர் ஆட்காவி கப்பலுக்கு பல கப்பல்கள் பாதுகாப்புக்கு சென்றது. கடற்படைத்தளபதி கண்விழித்து கப்பல் பயணத்தை கண்காணித்து கொண்டிருந்தார். இலங்கைக்குள் ஆயுதங்கள் வருவதை தடுத்தனர்.

பல்வேறுபட்ட புலனாய்வு பிரிவுகள் மற்றும் முகவர் நிலையங்களிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. குழுவாக கடமையாற்றினோம். படையினரின் நன்னடத்தையில் கவனம் செலுத்தப்பட்டது படைநடவடிக்கை இடம்பெற்றகாலத்தில் மதுஅருந்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கடுமையாக சோதனை உட்படுத்தப்பட்டனர்.

எதனை முன்னெடுத்தாலும் அதனை தொடர்ந்தோம். அதனூடாகவே இறுதிபெறுபேற்றை கண்டோம். இறுதிக்காலக்கட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிகார அமைச்சர்கள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்னும் பல சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுத்தனர். புரிந்துணர்வு உட்படிக்கைக்கு சென்று இணக்கப்பாட்டை எட்டுமாறு வலியுறுத்தினர். எனினும் தன்னால் நிறுத்தமுடியாது என திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி படையினர் பலமடைந்து மீள்குழுவாக செயற்படுவர் என்றும் தெளிவுப்படுத்தினார்.

யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நாட்டிற்கு தடுக்க இயலாது. இந்தியாவிற்கு தடுக்கும் சக்தி இருந்தது. தமிழ்நாட்டின் அழுத்தம் இருந்தது. இந்தியாவை எம்முடனே வைத்துக்கொண்டோம். இருநாடுகளுக்கும் இடையில் பொறிமுறை இருந்தது. இந்தியாவிடம் உரையாடினோம். மூவரை நியமித்தோம், இந்தியாவும் மூவரை நியமித்தது. தினந்தோறும் உரையாடினோம். குறிப்பாக தமிழ்நாட்டில் அழுத்தம் தொடர்பில் கலந்துரையாடி அவற்றிற்கு தீர்வு கண்டோம். தமிழக முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அன்று 5.30 மணிக்கு சிவ்சங்கர் மேனனுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன்.

உணர்வு பூர்வமான விடயம் ஜனாதிபதியுடன் பேசவேண்டும் என்றார். சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம். ஐந்து நிமிட உரையாடலின் பின்னர் மறுநாள் காலை சிவ்சங்கர் மேனன் கொழும்பிற்கு வருகைதந்தார். கலந்துரையாடலுக்கு பின்னர் அறிக்கையை வெளியிட்டார். கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். பிரச்சினைக்கு இணங்காணுவதற்கான பொறிமுறை முக்கியமானது இந்தியா ஒருபோது அழுத்தம் கொடுக்கவில்லை. புரிந்துணர்வு, வழிமுறைகள், பகுப்பாய்வு,தெளிவான இலக்கு, திட்டம், உண்மையான தலைமைத்துவம், பலமான வேலை, தொடர்தல், ஊக்கம், பங்களிப்பு முக்கியமானது.ஒருபோதும் காத்திருக்கவில்லை. ஒவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன. சகல தமிழர்களும் பயங்கரவாதிகள் இல்லை, ஆனால் 99 வீதமான பயங்கரவாதிகள் தமிழர்கள். அதிஷ்டவசமாக சில விடயங்களை செய்வேண்டியநிலைமை ஏற்பட்டது. அவற்றை மீளவும் திரும்பிப்பார்த்தோம்.

வேறு தேவைகளுக்காக வருகின்ற தமிழர்களுடன் புலிகள் பயணித்தனர்,பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கிகொண்டனர். அவற்றை தடுத்தபதற்கு நடவடிக்கை எடுத்தோம். தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு திருப்பி அனுப்பினோம். அதனால் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தோம். அந்த நடவடிக்கையை நிறுத்திகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

பிரச்சினைக்கு முகம்கொடுத்து பார்க்கவேண்டும். அதேபோல அபிவிருத்தியை பிரயோகிக்கவேண்டும். கடந்த 30 வருடங்களில் உயிர்கள், உடமைகள் மட்டுமன்றி பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை எனக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது அதில் பற்றுதியுடன் செயற்படவேண்டும் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும் .இது நல்ல சந்தர்ப்பம்,நேரம் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும். உலகம் மிகவேகமான வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்று
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறும்: சிவாஜிலிங்கம்

தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

'அனைத்து தமிழ் கட்சிகள் ஒருங்கினைந்து இருக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தோம் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் ஏற்று கொண்டு இருந்தனர். எனினும் இதுதொடர்பாக இந்த நிமிடம் வரை உத்தியோக பூர்வமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பியதும் பதில் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்". என தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது 'தமிழ் கட்சிகள் அரங்கத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்க வில்லை. எனினும் இது தொடர்பாக கட்சி குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிச் சக்திகள் தற்போது கனடாவை மையமாகக் கொண்டு இயங்கி வருவதாகவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சில புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதில் முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா உள்ளிட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனோனிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கனேடிய உயர் அதிகாரியொருவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிச் சக்திகளை இல்லாதொழிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சன் சீ மற்றும் ஓசியான் லேடி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், எந்த காரணத்திற்காகவும் நாட்டை விட்டு தப்பிச் சென்று புகலிடம் கோர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட யுத்தத்தின் பின்னரான மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கனடா திருப்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

19,20,21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும்: சிவாஜிலிங்கம்

18 ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு பின்னர் 19,20, 21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும் என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

18 ஆவது அரசியல் சீர்திருத்திற்கு பின்னர் 19,20,21 அரசியல் சீர்திருத்தங்களை இனைவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனை அரச தரப்பில் இருந்து எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சாக்லட் பெட்டியில் இரண்டு சாக்லட்டுகளை வைத்து சிறுவர்களை ஏமாற்றுவது போல் தமிழர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றப் பார்க்கின்றது.

வட, கிழக்கை இனைத்து தமிழ் மக்களை சந்தோசப் படுத்துவதாகவும் மறுபுறம் காணி,பொலிஸ், அதிகாரங்களை நீக்குவதாகவும் திட்டமிட்டுள்ளது. என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பெருந்தொகை பணம் வசூலிக்கும் கும்பல் கிழக்கில் விழிப்புடன் இருக்க வேண்டும்


கிழக்கில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பெருந்தொகையான பணத்தை வசூலிக்கும் கும்பல் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஆங்காங்கே நடைபெற்று வரும் இச் சந்தர்ப்பத்தில் சிலர் குறிப்பிட்ட வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி லட்சக்கணக்கான பணத்தை வசூலித்து வருகின்றனர்.

இவ்வாறு பணத்தை கொடுத்து ஏமாந்த சிலர் பிரதி அமைச்சரிடம் முறையிட்டும் உள்ளனர். அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போதும்

இவ்வாறானவர்கள் சிலர் இவரை அனுகி பணம் வசூலிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப் படும் சகல வெற்றிடங்களுக்கும் தகைமை அடிப்படையில் சகலரு க்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப் படும். எவரிடமும் பணத்தை கொடு த்து ஏமாந்துவிட வேண்டாம் என் றும் பிரதி அமைச்சர் முரளிதரன் கிழ க்கு மாகாண இளைஞர் யுவதி களிடம் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

வேலைவாய்ப்பை பெற்றுத் தருவ தாக எவரேனும் பணம் கேட் பார்களாயின் உடனடியாக தன்னு டன் தொடர்புகொள்ளுமாறும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அறிவி த்தல் விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை: சிறுவர் அதிகார சபையின் பாதுகாப்பில் தாயும் குழந்தையும்

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறு வயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கடற்கொள்ளையரின் தாக்குதலில் பலியான கப்டனின் சடலத்தை கொண்டுவர ஏற்பாடு


ஈரானில் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கையரின் பூதவுடலை விரைவாக இலங்கைக்குக் கொண்டுவர வெளி விவகார அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சார்ஜாவிலுள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

ஹிங்குரக்கொட மகரகமயில் ஆயுதங்கள் மீட்புஹிங்குரக்கொட மற்றும் மகரகம பகுதிகளில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹிங்குரக்கொட மாரசிங்கவத்தை பகுதியில் வைத்து பொலிஸார் லொறியொன்றை சோதனையிட்டுள்ளனர். அதிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் 30 ரவைகளும் மீட்கப்பட்டன. லொறியில் இருந்த நபர்களிடமிருந்து இரு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகரகம பராக்கிரம வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. சந்தேக நபரொருவரிடமிருந்து கிடைத்த தகவலின்படியே இந்தக் குண்டு பிடிபட்டதாக பொலிஸார் கூறினர்.
மேலும் இங்கே தொடர்க...

நுவரெலிய - வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கைதற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா - வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன் படுத்துமாறு அனர்த்த முகாமைத் துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா - வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படு கின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்க ளில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப் பாதையில் முன்னெச்சரிக்கை யோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லா விட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டியொன்று குடைசாய்ந் ததில் 23 பேர் காயமடைந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்ட ஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம் ‘m, n’ தொடரிலக்கம்


‘m, மற்றும் ‘n’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப் பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப் படுகிறது.

இதற்கென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.

அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

ணி மற்றும் னி தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தை யுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது.

சமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.

முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச் சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

ணி மற்றும் னி தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...