30 செப்டம்பர், 2010

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை: சிறுவர் அதிகார சபையின் பாதுகாப்பில் தாயும் குழந்தையும்

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறு வயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக