யாழ்.மாவட்டத்தில் 72.9 வீத வாக்காளர் அட்டைகளே விநியோகம்:யாழ்.அரச அதிபர்
யாழ்.மாவட்டத்தில் 72.9 வீதமான வாக்காளர் அட்டைகளே இதுவரையிலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்.செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே யாழ்.அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"யாழ்.மாவட்டத் தெர்தல் தொகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 இலட்சத்து 30 ஆயிரத்து 548 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 90 ஆயிரத்து 811 வாக்காளர்களும் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் 529 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சியில் 95 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலாக இரு மாவட்டங்களிலும் மொத்தமாக 76 கொத்தணி வாக்களிப்பு நிலைங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
26 ஆம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 72.9 வீதமான வாக்களார் அட்டைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10.82 வீதமான வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமைக்குக் காரணம் அவர்களில் பலர் வவுனியாவில் உள்ளமையாயே ஆகும்.தபால் மூல வாக்களிப்பில் 5 ஆயிரத்து 795 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, 4 ஆயிரத்து 737 வாக்குகள் நேற்று வரை ஏற்கப்பட்டுள்ளன.
மிகுதி 26 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு முதல் வந்து சேரும்.
இம்முறை தேர்தலில் இடம்பெயர்ந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளவர்களுக்காக தெல்லிப்பளை நலன்புரி நிலையம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கைதடி பனை அபிவிருத்திச் சபை நலன்புரி நிலையம் ஆகிய மூன்று நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனைவிட யாழ்.மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பித்த 15 ஆயிரத்து 597 விண்ணப்பதாரிகள் அந்தந்த மாவட்டங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிப்பு நிலைய வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், வாக்களிப்பு நிலைய பிரிவு முகவர்கள், சர்வதேச பார்வையாளர்கள், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர், மேற்பார்வையாளர்கள் போன்றோர் செல்லலாம்.
11 தேர்தல் தொகுதிகளுக்கு தலா 2 வாக்கெண்ணும் நிலையங்கள் அடிப்படையில் 22 வாக்கெண்ணும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனைவிட தபால் மூல வாக்குகளை கணக்கிடுவதற்காகவும், இடம்பெயர்தோர் வாக்குகளை எண்ணுவதற்காகவும் மேலும் இரண்டு வாக்கு எணணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு மொத்தமாக 24 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எண்ணப்பட்ட வாக்குகளை உத்தியோகபூர்வமாக வெளியிடும் மையமாக மாவட்டச் செயலகம் செயற்படும்.
இம்முறை தேர்தல் பணிகளுக்காக 6 ஆயிரத்து 375 உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்திற்காக 352 வாகனங்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தேர்தல் கடமைகளுக்கு முற்று முழுதாகப் பொலிஸார் நியமிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் மாத்திரம் பொலிஸார் ஊடாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள்" என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்பாடு : கண்காணிப்பு நிலையம் கண்டனம்
ஜனாதிபதித் தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதா
கவும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வன்முறைகளைத் தடுக்க முடியும் என நம்புவதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசார காலத்தில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாமை, அரச ஊடக துஷ்பிரயோகங்கள், தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மதிக்கப்படாமை, அதிகாரங்களைப் பயன்படுத்திய வன்முறைகள் போன்றவை நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தலைப் பாதிப்பதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாளைய, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இடைக்கால அறிக்கை குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அந்நிலையத்தின் இணை அழைப்பாளர் பா.சரவணமுத்து இவ்விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இம்முறை வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதிகாரமிக்கவர்களின் பலம் தேர்தல் காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அரச ஊடகங்களைக் கண்காணிக்கவென அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டபோதிலும் அவரால் தனது கடமையை சரிவரச் செய்ய முடியாமைக்கான பின்புலம் பற்றி நாம் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்தாலோசித்தோம்.
நமது நாட்டில் 17ஆவது திருத்தச் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுமானால் சுயாதீனமான ஆணைக்குழுக்களின் பரிபாலனம் மற்றும் செயற்பாடுகளினூடாக நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை எதிர்பார்க்க முடியும்.
சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை உடனடியாக நீக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். எனினும் பெரும்பாலான இடங்களில் அவை அகற்றப்படவில்லை என எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
இவை தொடர்பாகவும் ஏனைய வன்முறை முறைப்பாடுகள் தொடர்பாகவும் நாம் அடிக்கடி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தி வந்தோம். வன்முறைகள், முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் மக்களின் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படும் என நம்புகிறோம்" என்றார்.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் வடக்கு கிழக்குக்குப் பகுதிகளுக்கான இணைப்பாளர் எம்.எச்.எம். ஹஜ்மிர் கருத்து தெரிவிக்கையில்,
புஎமது கணிப்பீட்டின் அடிப்படையில் சுமார் 80ஆயிரம் பேர் நலன்புரி கிராமங்களில் இருக்கின்ற போதும் 40ஆயிரம் பேர் மாத்திரமே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கா விட்டாலும் தமக்கு வாக்களிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என பெரும்பாலானோர் எண்ணியிருந்தனர்.
வடக்கு கிழக்கில் வாக்களிப்பு நிலையங்களைக் கண்காணிப்பதற்காக எமது விசேட குழுவினருடன் சர்வதேச கண்காணிப்பாளர்களும் தொண்டர்களும் பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.
தனக்குரிய அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதற்குத் தடையாக இருக்கும் நபர்கள், விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றத்தினூடாக தீர்வொன்றைப் பெறமுடியுமல்லவா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பா.சரவணமுத்து,
"இதுதொடர்பாக நாம் பல தடவை தேர்தல் ஆணையாளரிடம் கோரினோம். ஆனால் அது ஏனைய கட்சிகளுக்குச் சாதகமாக அமையும் என்பதால் ஆணையாளர் பதில் கூற மறுத்துவிட்டார். எனினும் இவ்விடயம் தொடர்பாக வேறு எவரேனும் நீதிமன்றுக்கு செல்லலாம்" என்றார்.
அம்பாறையில் வாக்கு மோசடிகளைத் தடுக்க எதிரணி கூட்டமைப்பு விசேட ஏற்பாடு இம்முறை
ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் வாழும்
பிரதேசங்களாகிய, நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, ஆலையடிவேம்பு, கோமாரி, திருக்கோவில், வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கு மோசடிகள் நடப்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன சேர்ந்து சில விசேட ஏற்பாடுகளைக் கூட்டாக எடுத்துள்ளன.
இது சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் விபரங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிக்கையில்,
"கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் தலைமையில் அவரது சம்மாந்துறை அலுவலகத்தில் கூடி ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில் வாக்கு மோசடிகள் நடக்கக்கூடிய அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
அப்பகுதிகளில் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஐக்கிய தேசியகட்சி,மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து மூவினத்தையும் சேர்ந்த வாக்கெடுப்பு முகவர்களைத் தமிழ்ப் பிரதேச வாக்கெடுப்பு நிலையங்களுக்கு நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்த நான்கு கட்சிகளும் கடந்த இரண்டு தினங்களாக கலந்தாலோசித்து அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு வாக்கு மோசடிகளையும் தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி, நௌஷாத் ஜோசப் தங்கத்துரை,வசந்த (மக்களவிடுதலை முன்னணி) கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தயாகமகே, மஜீட் மற்றும் கல்முனை மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.
நியமிக்கப்படும் வாக்கெடுப்பு முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையங்களில் பணிபுரியும் போது, ஏதாவது வாக்கு மோசடி நடந்தால், கையடக்கத் தொலைபேசி மூலமாக உடனடியாக அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டணியின் பிரதேச செயலகங்களுக்கு அறிவிப்பதற்கும் அதை உரிய இடத்திற்கு அறிவித்து மோசடிகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய அளவில் வாக்கு மோசடிகள் நடந்த வாக்கெடுப்பு நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே வாக்கு மோசடிகளைத் தடுப்பதற்கான, விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதற்கமைய இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் ஏதாவது வாக்கு மோசடி நடந்தால் அதனைத் தடுப்பதற்கு விசேட ஏற்பாடுகள் எடுக்க முடியாது போகும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அந்த வாக்கெடுப்பை ரத்துசெய்து, மீண்டும் தேர்தல் நடத்துவதற்கும் முடிவு எடுத்துள்ளனர்.
. ஆகவே இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் எந்த அச்சமும் பீதியுமின்றி வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்" எனத் தெரிவித்தார்.
தெல்லிப்பளையில் நேற்று 20 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
தெல்லிப்பளைப் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இருபது பேர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் படையினரால் பிடிக்கப்பட்டு, தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இவர்களே நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களில் 12 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவர். பெண்கள் அனைவரும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ரத்துருசிங்கா, 53ஆவது படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் என்.சி.ஆர்.சில்வா, கேர்ணல் கலமல்பே உட்பட மற்றும் படை அதிகாரிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்
மலையகத்தில் போலி வாக்குச்சீட்டுக்கள்; அன்னம் சின்னம் குறித்து மக்கள் தெளிவு : உதயகுமார்
"மலையகத்
தோட்டப்பகுதிகளில் பல்வேறு போலியான வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும் நாளைய ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாம் ஏற்கனவே தெரிவு செய்துள்ள வேட்பாளரின் சின்னங்களுக்கு உரியவகையில் வாக்களித்து ஏமாற்றுப் பேர்வழிகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்."
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் என்பது உறுதி. பெரும்பான்மை மக்களுடன் இணைந்து ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதென ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்.
இவ்வாறானதொரு நிலையில் தோல்வியைச் சந்திக்க முடியாத அதிகாரத் தரப்பினர் வாக்காளர்களைக் குழப்புகின்ற கைங்கரியங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவை அமோகமாக வெற்றிப்பெறச் செய்வதற்கான பிரசாரங்களை தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளோம். இதனைக்கண்டு அச்சமடைந்துள்ள மலையகத்தின் தொழிற்சங்கமொன்று போலியான வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டுள்ளது.
அதில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பெயருக்கு முன்னால் யானைச் சின்னத்தினையும் கழுகுச் சின்னத்தையும் அச்சிட்டுள்ளதோடு வெற்றிலை சின்னத்திற்கெதிராக புள்ளடியிட்டு விநியோகித்துள்ளது.
தோட்டப்பகுதி மக்கள் வாக்களிக்கத் தெரியாதவர்கள் என்ற நோக்குடனேயே இவ்வாறு இந்தத் தொழிற்சங்கம் ஈடுபட்டுள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தமிழ் மக்கள் தாம் யாருக்கு எந்தச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவுள்ளனர்.
ஆகவே இம்முறை வாக்குச்சீட்டில் யானைச்சின்னம் இல்லை என்பதும் நாம் ஆதரிக்கின்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் சின்னம் அன்னம் என்பதையும் புரிந்து மலையகத் தமிழ் மக்கள் செயற்படுவார்கள் என்று திடமாக நம்புகின்றேன்" என்றார்.
விடுதலைப்புலிகளை ஒழித்தது போன்று ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் :-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை இன்று வறிய நாடல்ல. அது மத்திய தர வருமானம் உள்ள நாடாகுமென உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆச்சரியமிக்க வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது போன்று, 27ஆம் திகதிக்குப் பின்னர் ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், இதுவரையில் உலக நாடுகளின் வறிய நாடுகள் பட்டியலில் இருந்த நாங்கள் இன்று உலகில் மத்தியதர வருமானம் பெறும் பட்டியலில் இடம்பிடித்துள்ளோம்.
இதனை சர்வதேச நாணயநிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, உண்மையான மாற்றம் எமது மேடையிலேயே இருக்கிறது. எனவே, இதனை அனுபவிக்க ஆயத்தமாவோம்.
ஊடகச் சுதந்திரம் மனித உரிமைகள், நாட்டில் சுதந்திரம் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களென தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர் இன்று ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இவ்வாறு இன்று பலர் தோன்றியுள்ளனர். இவர்கள் அனைவரது கைகளிலும் இரத்தம் தோய்ந்துள்ளது. இரத்த வாடை வீசுகின்றது. எனவே, அச்சுறுத்துவதென்பது இவர்களுக்கு பெரியதொரு விடயமல்ல. மனித உரிமைகளை, ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்பு செய்வான்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்து, உலகிலேயே உத்தமமான நாடு என்ற பெயரை பெற்றுக் கொடுப்பதற்கு எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள். குரோதம் கொண்ட அரசியல் பரப்புவதைக் கைவிட்டு, அன்பைப் பரப்பும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். சமாதானமான தேர்தலுக்குப் பின்பு நாட்டில் இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்காது ஜனநாயக ஆட்சிக்கு வழிவகுப்போம். இதற்காக ஒன்றிணைவோம். ஐ.தே.கட்சியில் எஞ்சியுள்ளோரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
நாட்டில் சிறந்த சுகாதார சேவை, கல்வி முறைமையை உருவாக்குவதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். சிங்கப்பூரைப் போன்று முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்காகப் பாடுபடுவோம். ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எம்மிடம் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றுள்ளது.
இதற்காக 27ஆம் திகதியிலிருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். 27ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் விருப்புவாக்கு முறைமை இருக்காது, விருப்பு வாக்குகளுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகாது. விருப்புவாக்கு முறைமையை இரத்துச் செய்வேன் என்றார்
இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம் தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு: ரணில்
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும் அதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியின் பின்னர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு திராணி இல்லாது தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகின்ற 15 கனரக கவச வாகனங்களை கொழும்பின் முக்கிய பகுதியான முகத்துவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வடக்கில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மூவரை அங்கிருந்து இடம் மாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பங்களாதேஷக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்குகொண்ட விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீ ர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் தற்போது அசாதாரண சூழல்களை உருவாக்கி வருகின்றது. தேர்தல் ஒன்றில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை அளிக்கின்றார்களோ அதனை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகமாகும்.
அதனை விடுத்து நாளை தேர்தலின் முடிவுகள் தமக்கு சாதகமற்றதாக அமையப் போவதை உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கும் அதேநேரம் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொள்வதற்குமான மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசியல் அமைப்பின் 31ஆம் பிரிவின் பிரகாரம் மக்களின் தீர்ப்புக்கு அமைய வெற்றியோ தோல்வியோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே முறையாகும். இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், பூநகரி, வடமராட்சி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உயரதிகாரிகள் திடீரென இடம் மாற்றப்பட்டு அவர்களை தலைநகருக்கு அழைத்து வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது டபிள்யு.
இசட் 551 ரக 15 கவச வாகனங்கள் முகத்துவாரம் இராணுவ முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் இந்த வாகனங்கள் யுத்த காலத்தின்போதே பாவிக்கப்படுபவை. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அதுவும் தலைநகருக்குள் இவ்வாறான வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என கேட்க விரும்புகிறேன்.
தேர்தல் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதாகும். எனினும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் தலைநகருக்குள் இடம்பெறுவதில்லை. வெளிப் பிரதேசங்களில் சில சம்பவங்கள் இடம்பெறலாம்.
இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற தேர்தலின் போது எந்த விதமான வன்முறைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது என நாம் தெளிவாக பொது மக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். இந்நிலையில், வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அவ்வாறு வன்முறைகள் இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையே சாரும்.
இதேவேளை, நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச ஊடகங்களில் அத்தியாவசிய சேவையாளர்களை தவிர ஏனையோருக்கு விடுமுறை வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
தேர்தல் முடிவுகள் தமக்கு நிச்சயமாக தோல்வியிலேயே அமையும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின்படி முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றது. ஆனால், எம்மைப் பொறுத்தவரையில் நாம் தேர்தலின் எந்த முடிவுகளையும் எதிர்கொள்வதற்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாகவே எமக்கு கிடைக்கின்றன.
எனவே, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் மக்களின் தீர்ப்புகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் தொடர்பிலும் அதேவேளை, நடைபெறவிருக்கின்ற தேர்தலையும் அதன் பின்னரான நடவடிக்கைகளையும் குழப்பியடித்து வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அதற்கு இடமளிக்காதவாறு பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என சகலரிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், வன்முறைக்கு