பெங்களூரு: தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு களங்கத்தை போக்குவதற்காக, அக்னி நடுவே சாமியார் நித்யானந்தா இரண்டு மணி நேரம் "பஞ்ச தபசு' பூஜை நடத்தினார்.ராம்நகர் சிறையிலிருந்து 44 நாட்கள் கழித்து வெளியே வந்த நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம், கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள மூலஸ்தானத்திற்கு சென்று அவரே பூஜை நடத்தினார்.
நேற்று காலை 6:30 மணிக்கு தனது அறையை விட்டு வெளியே வந்த நித்யானந்தா, ஆசிரமத்தின் திறந்தவெளியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவரை சுற்றி இரண்டு அடி சுற்றளவில், சிறிய பள்ளம் தோண்டி, அதில் சிறிய விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு நெய், எண்ணெய் ஊற்றி தீயிடப்பட்டது. தொடர்ந்து காலை 8.30 மணி வரை, நெருப்பில் நெய், எண்ணெய் விடப்பட்டு வந்தது. தீ அணையாமல் பக்தர்கள் கவனித்து வந்தனர். இதற்கு "பஞ்ச தபசு' பூஜை என கூறப்பட்டது.இதயத்தை சுத்தமாக்க செய்யும் யாகமே "பஞ்சாக்னி தபஸ்' யாகமாகும். இதன் மூலம் ஆன்மிக நடவடிக்கைகளில் மிகவும் ஆழமான நடைமுறையை மேற்கொள்வதாகும்.
நித்யானந்தா தன் மீதான எதிர்மறையான நோக்கம் அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கென்றே இந்த தபசு நடத்தினார். உலக சமாதானத்தை தனது முதல் நோக்கமாக நித்யானந்தா கொண்டுள்ளார் என்று அவரது சீடர்கள் கருதுகின்றனர்.இந்த தபசில், நித்யானந்தா மட்டுமின்றி அவரைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். சாமியார் நித்யானந்தா வழக்கம் போல் காவி உடை அணிந்திருந்தார். அவரது பக்தர்கள் சிலர் காவி உடையும், சிலர் வெள்ளை உடையும் அணிந்து கலந்து கொண்டனர்.சில மாதங்களாக பத்திரிகையாளர்களை ஆசிரமத்துக்குள் அனுமதிக்காத ஆசிரம நிர்வாகிகள், நேற்று நடந்த பூஜைக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். ஆனால், பொதுமக்களை அனுமதிக்கவில்லை.
பிடதி ஆசிரமத்தில் பக்தானந்தா, நித்ய பியானந்தா, நித்ய சதானந்தா ஆகியோர் கூறுகையில், ""இது ஆசிரமத்திற்கும், நித்யானந்தாவிற்கும் சோதனைக் காலம். இதிலிருந்து விரைவில் மீள்வோம். தடைபட்டு இருந்த சமூக நலப்பணிகள் தொடரும். அதே நேரம், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கடைபிடிப்போம். நீதிமன்றம் நிபந்தனை விதித்திருப்பதால் நித்யானந்தா ஆன்மிக பிரசாரம் மேற்கொள்ள மாட்டார்,'' என்றனர்.நேற்று காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை "தபசு' நடப்பதாக கூறப்பட்டது. ஆனால், இரண்டு மணி நேரத்தில் தபசு முடிந்து நித்யானந்தா தனது தனி அறைக்கு சென்று விட்டார். இன்றும் இதுபோன்ற தபசு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...