3 ஏப்ரல், 2011

பொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு

பொலிஸ் அதிகாரங்களையும் காணி அதிகாரங்களையும் வழங்க முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேசரிவார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பதாகவும் அவர் கூறினார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடை யில் பல சுற்றுப் பேச்சுவார்த் தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத் திட்டமாக காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் முன்வைத்துள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு அங்கமாகவுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அதிகாரங்கள் இரண்டினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும், இதற்கு அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. காணி அதிகாரங்களும், பொலிஸ் அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கவேண்டிய முக்கிய கட்டமைப்புகளாகும்.

இதுகுறித்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில்,

தமிழத் தேசியக் கூட்டமைப்பு யோசனைத் திட்டமாக முன்வைத்து கோரியுள்ள காணி அதிகாரங்களையும், பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது. எனினும் பொலிஸ் அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டிய ஒரு அதிகாரக் கட்டமைப்பாகும். பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. அத்தோடு காணி அதிகாரம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதன் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி

வட கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாகவும் இவ் விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் விடயம் யாதெனில்,வட- கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டுகாலங்களாக வழங்கப்படாமல் இருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களின் கீழ் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு எந்த வித உதவிகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக வீட்டு மானியம் மற்றும் வீட்டுக்கடன் போன்றவை வழங்கப்படவில்லை.இந்த துக்ககரமான நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்குரிய தீர்வை எவரும் இதுவரை முன்வைக்கவில்லை. எனவே இந்த விடயத்தை அவசரமாக பரிசீலனை செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மேற்படி கடிதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் நிதிசேகரிப்பு,ஆயுத கொள்வனவை தடுப்பதற்கு அமெரிக்க முன் நின்றதாம்-"விக்கிலீக்ஸ்' தகவல்



தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச செயற்பாடுகள் 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என "விக்கிலீக்ஸ்' தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப்பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு ஆகியவற்றை தடுக்கும்முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தத் திட்டத்திற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் இந்த தொடர்பாடல் குழுக்களின் செயற்பா டுகளுக்கு இந்தியாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அமெரிக்காவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. ஸ்தம்பித்துப்போன சமாதானச் செயற்பாடுகள் விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் அமெரிக்கா இருக்கின்ற பக்கத்திலேயே இந்தியாவும் இருப்பதாக அமெரிக்கா நம்பியது. இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என்ற விடுதலைப்புலிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் தீர்வினை முன்வைக்கச் செய்து விடுதலைப்புலிகளின் ஆயுத மற்றும் பண பலத்தை முறியடிப்பது என அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி.ஜே.லண்ஸ்டட் 2006 மே 3 ல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ள கேபிளில் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி அனுப்பப்பட்டு எட்டு தினங்களின் பின்னர்தான் விடுதலைப் புலிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதே வருடம் ஜூன் மாதத்துக்குப் பின் அனுப்பப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தக் குழுக்கள் பற்றி இந்தியா மகிழ்ச்சியாகக் காணப்பட்டது. இந்த சர்வதேசத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் இலங்கை கோரியுள்ளது. இந்தத் தொடர்பாடல் குழுக்களின் விவரம் மற்றும் அதன் சேர்க்கை பற்றி முதற்தடவையாக 2006 ஆகஸ்ட் 21ல் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பு??ர், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன். அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்தக் குழுக்கள் அமைந்துள்ளன. மே மாதம் மூன்றாம் திகதி அனுப்பப்பட்டுள்ள கேபிளின் படி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிக்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் அமந்தீப் சில் கிங்கிற்கும் இந்த விடயத்தில் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளன. அரசியல்தீர்வுகளை முன்வைக்குமாறு இந்தியா இலங்கையை தொடர்ந்து கேட்டுவந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

ஆனால் இந்த விடயத்தில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. ஜூன் மாதம் 12ஆம் திகதி புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் அரசியல்துறை அதிகாரி தொடர்பாடல் குழுவின் செயற்திட்டத்தை கையளிப்பதற்காக இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதி தான் இதுபற்றி இந்திய வெளியுறவுச் செயலாளர் சரண் உடன் பேசியுள்ளதாகவும், இந்தக் குழுக்களின் நியமனம் அர்த்தமுள்ளது என அவர் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அதே தினத்தில் கேபிள் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கத் தூதுவர் டேவிட் மல்பர்ட் ஒப்பமிட்டுள்ளார். இந்திய பிரதிநிதி குமார் நிதி சேகரிப்பைத் தடுக்கும் குழுவில் கனடா சேர்த்துக்கொள்ளப் படவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்னர் அமெரிக்கப் பிரதிநிதியுடன் நடந்த சந்திப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மலேஷியா என்பனவற்றை ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. ஜூன் 20ல் லன்ஸ்டட் கொழும்பிலுள்ள தனது சகா நிரூபமா ராவைச் சந்தித்தார். அமெரிக்க இந்திய கூட்டுத் திட்டங்கள் மற்றும் தொடர்பு கொள்ளல் குழுக்களை உருவாக்கல் என்பன பற்றியதாக இந்தச் சந்திப்பு இருந்தது.

கூட்டுத் திட்டங்கள் குறித்து நிரூபமா உற்சாகத்துடன் காணப்படவில்லை என்று லன்ஸ்டட் ஜூன் 21ல் அறிவித்துள்ளார். ஜூன் 22ல் இந்திய வெளிவிவகார அமைச்சின் அமெரிக்க விவகார இணை செயலாளர் ஜெய் சங்கர் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அரசியல பிரிவு அதிகாரியைச் சந்தித்துள்ளார். கூட்டுக் கையாளலை விட இந்தியா சமாந்திரமான போக்கில் செல்லவுள்ளதாகவும் இது தாக்கம் மிக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு "விக்கிலீக்ஸ்' வெளியிட்டுள்ள இரகசிய கேபிள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுஎவ்வாறு இருந்தபோதிலும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அமெரிக்காவுடன் இலங்கையும் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக தொழிற்படத் தொடங்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்





மும்பாயில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை காலை நாடு திரும்பியுள்ளார்.

மும்பையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
மேலும் இங்கே தொடர்க...

28 ஆண்டுகளுக்குப் பின்... மீண்டும் சாம்பியன் : சொந்த மண்ணில் முதல் உலக




மும்பை:கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

ஸ்ரீசாந்த் வாய்ப்பு: இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,"பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஜாகிர் துல்லியம்: இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

ஸ்ரீசாந்த் ஏமாற்றம்: "ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது .

யுவராஜ் அபாரம்: பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), "ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார்.

இரண்டாவது சதம்: அடுத்து வந்த குலசேகரா "கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்க்ஷீட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.

மலிங்கா மிரட்டல்: அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் "டக்' அவுட்டானார். இது தொடர்பாக "ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின்.

காம்பிர் அதிர்ஷ்டம்: பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது "கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் "ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் "கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார்.

வெற்றி கேப்டன்: அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

இரண்டாவது கோப்பை: தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத் தினார். "பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல்முறையாக அசத்தல் : சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
மேலும் இங்கே தொடர்க...