21 ஏப்ரல், 2010

அவசரகால சட்டம் புதிய நாடாளுமன்றத்தின் மூலம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை-

அவசரகால சட்டம் தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்றத்தின் மூலம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. அவசரகால சட்டத்தின் கீழேயே இலங்கையில் பரவலாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை இக்கோரிக்கையை விடுத்துள்ளது. 1971ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்துவரும் அவசரகால சட்டம் மற்றும் அவசரகால விதிகள் என்பவற்றைக் களைந்து மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்றும் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கை முன்நோக்கிச் செல்லவேண்டுமாயின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றைத் தட்டிப்பறிக்கும் சட்டங்களை நீக்க வேண்டுமென மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய உதவி இயக்குநர் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இமாச்சல பிரதேசத்தில் நித்தியானந்தா கைது


இமாச்சல பிரதேசத்தில் நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இமாச்சல பிரதேச பொலிசாரின் உதவியுடன் கர்நாடக பொலிசார் அவரைக் கைது செய்தனர். சோலன் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதிலிருந்து தலைமறைவாக இருந்தார் நித்தியானந்தா.

தமிழகத்தில் நித்தியானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து கர்நாடக பொலிசார் நித்தியானந்த ஆசிரமத்தில் சோதனை செய்தனர். அப்போது முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. பொலிசார் கைது செய்வதற்காகத் தன்னைத் தேடி வருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இருப்பினும், அவரைக் கைது செய்வதில் பெங்களூர் பொலிசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்தியானந்தா இருக்கிறாரா என்பதைக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நித்தியானந்தா, இமாச்சலப் பிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி பொலிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நித்தியானந்தாவைக் கைது செய்ய, இமாச்சலபிரதேச பொலிசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து, நித்தியானந்தாவை கர்நாடகப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நடுவானில் இரு ஹெலிகொப்டர்கள் மோதியதில் அறுவர் பலி : பிரேசிலில் சம்பவம்




கொலம்பியாவைச் சேர்ந்த இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மற்றுமொரு ஹெலிகொப்டர் அதன் மீது மோதி இரண்டும் விழுந்து நொறுங்கின.

இவற்றில் பயணித்த 5 இராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் தொழில் நுட்ப குழுவினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.

கொலம்பியாவைச் சேர்ந்த இராணுவ ஹெலி பிரேசில் நாட்டில் உள்ள சாபரல் நகரின் மீது பறந்து கொண்டிருந்த போது, இதன் மீது மற்றுமொரு ஹெலிகொப்டர் மோதியதால் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் 14ஆவது பிரதமராக தி.மு ஜயரட்ன பதவியேற்றார்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவருமான டி.எம்.ஜயரட்ன, இலங்கையின் 14ஆவது பிரதமராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதமர் பதவி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, பசில் ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இன்று சுபநேரத்தில் திமு என அழைக்கப்படும் டி.எம். ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்றிருக்கின்றார்.

அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர், புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் இதன்போது வருகை தந்திருந்தனர்.

திசாநாயக்க முதியான்சலாகே ஜயரட்ன, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிறந்தார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயரட்ன 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நடந்த ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்து வந்தவராவார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய பெண்கள் பிரதிநிதிகள் - கி.மா. முதலமைச்சர் சந்திப்பு




முதன் முறையாக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நோக்கில் இந்தியாவில் 15 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய சுய தொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

சேவாலங்கா நிறுவனத்துடன் கிழக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து இப்பிரதிநிதிகளுடனான விஜயத்திற்குப் பங்களிப்பு வழங்கினர்.

மாவட்டத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இச்சந்திப்பு இந்திய சுய தொழில் பெண்கள் சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உமா தேவி சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றது.

முதலமைச்சரின் மீள்குடியேற்ற பணிப்பாளர் அ.செல்வேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், ஊடக செயலாளர் ஏ.தேவராஜன் உட்பட கிழக்கு மாகாண சபை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய பெண்கள் பிரதிநிதிகள் தரப்பில் மேற்படி அமைப்பு இணைப்பாளர்களான மேகாதேவி, வீணா சர்மா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தவர்களின் பிரச்சினை, பெண்களின் சுய தொழில் வாய்ப்பு , பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப நிலவரம் என்பன குறித்தும் முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்திய பிரதிநிதிகள் குழுவினரிடம் எடுத்து விளக்கினர்.

மேலும் பல பகுதிகளுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பலாலி விமானப்படைக் கட்டளைத் தளபதியாக அத்துல கலுஆராச்சி நியமனம்




பலாலி விமானப்படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக குரூப் கப்டன் அத்துல கலுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

குரூப் கப்டன் நிஷேன் அபேசிங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் மேற்படி பதவியை வகித்து வந்தார்.

இலங்கை விமானப்படையின் 28ஆவது ரெஜிமன்ட் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றி வந்த அத்துல கலுஆராச்சி நேற்றுமுதல் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

26இல் முதலாவது பொலிஸ் கல்லூரி கட்டானையில் திறப்பு




நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26 ஆம் திகதி நீர்கொழும்பு கட்டானை பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

பொலிஸ் சேவையை மேலும் செயற்திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்பவே பொலிஸ் கல்லுர்ரி அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதனைத் திறந்து வைப்பார். இக்கல்லூரி ஊடாக பொலிஸ் சேவையில் உள்ளவர்களுக்கு அவர்களின் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் வகை செய்யப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 26 ஆம் திகதி முதல் சிரேஷ்ட துப்பறியும் பாடநெறி மற்றும் கனிஷ்ட துப்பறியும் பாடநெறியை இக்கல்லூரி ஊடாக மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரத்ன, டளஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ், டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண,கீதாஞ்சன குணவர்த்தன, வண.எல்லாவள மேதானந்ததேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளீதரன்,ஜே.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார, பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல் ரணதுங்க ஆகியோர் ஐ.ம.சு.மு. தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.தே.க. சார்பில் 9 பேர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஏர்ன் விக்கிரமரத்ன, டி.எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜன், அனோமா கமகே, ஹசன் அலி, சலீம் மொஹமட் ஆகியோர் ஐ.தே.க தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அநுர குமார திஸாநாயக்க , டிரான் அலஸ் ஆகியோரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக எம்.சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சரவையை நியமித்த பின் ஜனாதிபதி பூட்டானுக்கு விஜயம்


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றார்.

ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பூட்டானில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற 16 ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காவே ஜனாதிபதி அங்கு செல்லவிருக்கின்றார். சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் சார்க் உச்சி மாநாடு ஏப்ரல் 28, 29 ஆம் திகதிகளில் பூட்டான் தலைநகரான திம்புவில் நடைபெறும்.

2008 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்புக்களை பூட்டான் பிரதமரிடம் இந்த மாநாட்டின்போது ஒப்படைப்பார். 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் நாட்டு தலைவர்களுடன் பூட்டானில் வைத்து முக்கிய சந்திப்பில் ஈடுபடுவார் என்றும் முக்கியமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விசேடமாக கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில்



நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை 7ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவான புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு எதிரான 2வது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை மே 4க்கு ஒத்திவைப்பு



முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை எதிர்வரும் மே மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ள்ளது.

‘இரு தரப்பினரும் தமது வாதங்களை எழுத்து மூலம் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நேற்று கூடிய இராணுவ நீதிமன்றம் கோரியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நேற்றைய தினமும் கூடிய 2வது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது.

காலை 11.00 மணியளவில் கூடிய இந்த நீதிமன்றத்தின் அமர்வு பிற்பகல், 1.30 மணிவரை நடைபெற்றுள்ளது.

இரண்டு இராணுவ நீதிமன்றத்தின் நீதவான் அட்வகேட்டாக செயற்படும் ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவிடம் இரு தரப்பினரினதும் எழுத்து மூல வாதங்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு அடுத்த நீதிமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தவே நேற்றைய தினமும் இந்த இராணுவ நீதிமன்றம் கூடியது.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் பஸ்களில் பிச்சை எடுத்தல், வியாபாரம் செய்தல் மே 1 முதல் தடை

மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று கூறினார்.

இந்த முடிவு குறித்து பொலிஸ் மா அதிபரையும் போக்குவரத்து அமைச்சையும் அறிவூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ்ஸினுள் பிச்சை எடுப்பதாலும் வியாபாரம் செய்வதாலும் பயணிகளுக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுவதாகக் கூறிய அவர், பஸ்களில் பிச்சை எடுப்பதன் மூலம் 4 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரை ஒரு பிச்சைக்காரர் வருமானம் ஈட்டுவதாகவும் கூறினார்.

பிச்சை எடுப்பதன் பின்னணியில் சில கும்பல்கள் இயங்குவதாகவும், இதனை தடுப்பதன் மூலம் குறித்த கும்பல்களால் அச்சுறுத்தல்கள் ஏற் படலாம் என்றும் கூறிய அவர், அது தொடர்பில் பொலிஸாரின் உத வியை நாட உள்ளதாகவும் தெரிவித் தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐஸ்லாந்து எரிமலைக்குமுறல் லண்டன், பாரிஸ், பிராங்க்பர்ட், ரோம் விமான சேவைகள் ரத்து

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய த்திலிருந்து நேற்று லண்டன், பாரிஸ், பிராங்க்பர்ட் மற்றும் ரோமுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் நேற்று 5வது நாளாகவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறலால் ஏற்பட்ட சாம்பல் தூசு காரணமாக கட ந்த சில நாட்களாக 64 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஐரோப்பிய மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்று ஐந்தாவது நாளாகவும் கொழும்பு – லண்டனுக்கி டையிலான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய முகாமையாளர் நேற்று தெரிவித்தார்.

இருப்பினும், நேற்று மாலை லண்டன் நோக்கி புறப்படவிருந்த மற்றுமொரு ஸ்ரீலங்கன் விமான சேவைக்குரிய விமானமொன்று நேற்று நள்ளிரவின் பின்னர் சுமார் 1.00 மணியளவில் புறப்பட தயாரானது என்றும் இறுதி நேரம் வரையில் விமானம் புறப்படுமா? என்பது பற்றி தெரிவிக்க முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

க. பொ. த. (சா/த) பரீட்சை : (தமிழ் மொழி மூலம்) பம்பலப்பிட்டி இந்து மாணவன் அகில இலங்கையில் முதலிடம்


2ம் இடம் : மட்டு வின்சன்ற் மாணவி ஷோபனா 3ம் இடம் : வவு. தமிழ் மத். வித்தியாலய மாணவன் தர்ஷன்


2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் (பம்பலப்பிட்டி) கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் சுசேந்திரலிங்கம் துவாகரன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

ஆகக் கூடுதலான புள்ளிகளுடன் எட்டு ஏ, ஒரு பி பெறுபேற்றைப் பெற்று துவாகரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் உயர் பாடசாலை மாணவி ஷோபனா ஸ்ரீ சூரிய காந்தன் இரண்டாமிடத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் தனபாலசிங்கம் தர்ஷன் மூன்றாம் இடத் தையும் பெற்றுள்ளனர். நான்காம், ஐந்தாம் இடத்தை முறையே இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி துலசி சர் வேஸ்வரன், கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவன் வரதராஜன் ரிஷிகேஷ் ஆகியோர் அடைந்துள்ளனர்.

எனினும் இவர்கள் இருவரும் ஒரே புள்ளி களைப் பெற்றுள்ளனர். அதேபோன்று ஆறாம், ஏழாம் இடங்களை யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி லக்ஷனா விஜயகுமாரன், திருகோணமலை ஆர். கே. எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் ரட்னகுமார் நீதன் ஆகியோர் சமமான புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்கள்.

கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் விஜயரட்ணம் விதுஷன் எட்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். அதேபோன்று மூன்று மாணவர்கள் சமமான புள்ளிகளைப் பெற்று 9ஆம், 10ஆம் இடங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.

மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி தேசிய பாடசாலையின் மோகனசுந்தரம் கீர்த்தன். கொழும்பு - 4, திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலையின் கேஷிகா குமாரதீஸன், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் விதுக்ஷா மகேந்திரராஜா ஆகியோர் சமமான புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

திருமலை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. பெரு வெற்றி

சம்பந்தனுக்கு அதி கூடிய விருப்பு வாக்கு

திருகோணமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் ஐ. தே. க. ஒரு ஆசனத்தையும் எடுத்துள்ளன. தமிழரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் அந்தக் கட்சியினால் ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெற முடிந்துள்ளது. இந்த முடிவின் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதென்பதையே தெளிவாக்குகிறது.

ஐ. ம. சு. மு இந்த மாவட்டத்தில் 59,784 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐ. தே. க. 39,691 வாக்குகளையும், தமிழரசுக் கட்சி 33, 268 வாக்குகனையும், பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன. அதிகூடிய வாக்கு

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் இரா. சம்பந்தன் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளார். 24, 488 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக ஐ. தே. க. வில் போட்டியிட்ட எம். எஸ். தெளபீக் 23, 588 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

ஐ. ம. சு முவில் போட்டியிட்ட சுசந்த புஞ்சிநிலமே 22,820 வாக்குகளையும் எம். கே. டி. எஸ். குணவர்தன 19,734 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை


சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு



இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.

இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும். நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதிகளில் நடைபெற்ற மீள் வாக்குப் பதிவுகளின் பின்னர் இன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, மற்றும் தேசியப் பட்டியல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 225 உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றம் செல்கின்றனர்.

இவர்களுள் சுமார் 70 பேர் வரையில் புது முகங்களாக உள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் இன்று தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

தமக்குக் கிடைத்த வாக்குகளின் படி கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.

எனினும், ஐ. தே. க. தேசியப் பட்டியல் விவகாரத்தில் இழுபறி நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஐ. தே. க.- ஜனநாயக தேசியக் கூட்டமைப்புக்கு இடையே எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பாக இழுபறி நிலை தொடர்கிறது
மேலும் இங்கே தொடர்க...

திருமலை, கண்டி மாவட்டங்களிலும் ஐ.ம.சு.முன்னணிக்கு அமோக வெற்றி


திருமலை: ஐ.ம.சு.மு. - 02; ஐ.தே.க. 01; தமிழ் அரசுக்கட்சி - 01
கண்டி: ஐ.ம.சு.மு. - 08; ஐ.தே.க. - 04

மொத்த ஆசனங்கள்
ஐ.ம.சு.மு. - 127; இ.த.அ.கட்சி - 13
ஐ.தே.க. - 51; ஜன.தே.மு. - 05

(நமது நிருபர்)

திருகோணமலை, கண்டி மாவட்டங்களிலும் ஐ. ம. சு. மு. அமோக வெற்றி பெற்றுள்ளது.

மேற்படி இரு தேர்தல் மாவட்டங்களின் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

இதன்படி திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரம் கண்டி மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 3,39,813 வாக்குகளைப் பெற்று எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. திருமலை மாவட்டத்தில் ஐ. தே. க. ஒரேயொரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தை எடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஐ. தே. க. 1,92,798 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை மாத்திரமே எடுத்துள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி ஆசனம் எதனையும் பெறவில்லை.

இதன்படி, கண்டி மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 1,47,02 வாக்கு வித்தியாசத்தால் வெற்றிபெற்றிருக்கிறது.

குளறுபடிகள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருந்த நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி மீள் வாக்குப் பதிவு முடிவுகள் நேற்றிரவு வெளியானதைத் தொடர்ந்து, கண்டி, திருமலை மாவட்டங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 59,784 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது 42.78 வீதமாகும். இங்கு போட்டியிட்ட ஐ. தே. க. 39,691 வாக்குகளையும், தமிழரசுக் கட்சி 33,268 வாக்குகளையும் பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன. கடந்த 8ம் திகதி நடந்த பொதுத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தினதும், கண்டி மாவட்டத்தினதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

திருமலை மாவட்டத்திலுள்ள கும்புறுப்பிட்டி வாக்குச் சாவடியிலும், கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 37 வாக்குச் சாவடிகளிலும் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இவைகளுக்கான மீள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகள் நேற்றிரவு 8.15 அளவில் வெளியிடப்பட்டன. திருமலை மாவட்டத்தின் முடிவு முதலில் அறிவிக்கப்பட்டது. இரவு 11.25 அளவில் நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதிக்கான முடிவு வெளியாகியது.

இதற்கமைய, திருமலை மாவட்டத்தின் முடிவுகள் வெளியாகின. இதன்படி, திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரண்டு ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் ஐ. தே. க. ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. (திருமலை மாவட்டத்தில் மொத்தம் நான்கு ஆசனங்களைக் கொண்டதாகும்.

இதேநேரம், கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவும் வெளியாகின.

நாவலப்பிட்டியத் தொகுதியில் ஐ. ம. சு. மு. 38,153 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐ. தே. க. 11,646 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் தொகுதியில் 26,507 வாக்கு வித்தியாசத்தில் ஐ. ம. சு. மு. அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தச் செய்தி அச்சுக்குப் போகும் வரை கட்சிகளின் தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

நேற்று நள்ளிரவு வரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, ஐ. ம. சு. மு. 127 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஐ. தே. கட்சி 51 ஆசனங்களை மாத்திரமே எடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், ஜனநாயகத் தேசிய ஐந்து முன்னணியினால் ஆசனங்களை மாத்திரமே பெற முடிந்துள்ளது.

மோசடி மற்றும் குளறுபடிகள் காரணமாக வாக்களிப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி, கும்புறுபிட்டி மீள் வாக்கெடுப்பு எதுவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நிறைவடைந்துள்ளது. காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை நான்கு மணிவரை மிகச் சுமுகமாக இடம்பெற்றதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் பொலிஸாரும் தெரிவித்தனர்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 37 வாக்குச் சாவடிகளிலும் 55% - 60% வாக்குப் பதிவு இடம்பெற்றதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கோட்டாபய ஜயரட்ன தெரிவித்தார்.

தேர்தல் மிக அமைதியாக இடம்பெற்றதாகவும் எதுவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவுபெறும் வரை கண்டி மாவட்டச் செயலக வளாகம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவத்தாட்சி அதிகாரி நேற்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் 37 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் கண்டி மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்ததாகத் தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

12 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கண்டி மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளிலும் 17 சுயேச்சைக் குழுக்களிலுமாக 465 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் சுமுகமாக வாக்களித்துள்ளனர். நாவலப்பிட்டியின் சகல இடங்களிலும் காணப்பட்ட போஸ்டர்களையும் பதாதைகளையும் பொலிஸார் கிழித்தெறிந்தனர்.

இங்கு 37 வாக்களிப்பு நிலையங்களிலும் 50,947 பேர் வாக்களிக்கவிருந்தனர். எனினும் 60% மட்டுமே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேநேரம், திருகோணமலை கும்புறுபிட்டி வாக்களிப்பு நிலையத்திலும் மீள் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றுள்ளது.

இங்கு 977 பேர் வாக்களிக்கவிருந்தனர். முப்படையினரும் பொலிசாருமாக சுமார் இரண்டாயிரம் பேர் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

கண்டி, திருகோணமலை மாவட்டங்களின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் உரித்தான தேசியப் பட்டியல் ஆசன விபரங்களும் வெளியிடப்படும்
மேலும் இங்கே தொடர்க...

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் ராக்கெட் வீச்சு!

பஞ்சாப் மாநிலத்தில் எல்லையையொட்டிய பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நிலைகள் மீது திங்கள்கிழமை அதிகாலை அத்துமீறி 3 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் பாகிஸ்தான் படையினர். இத் தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் படைகளின் அத்துமீறலையடுத்து அப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த சிம்பல் பகுதியில் அவர்கள் அணிவகுப்பை திங்கள்கிழமை நடத்தினர். மேலும் அப் பகுதி கடும் உஷார் நிலைக்கு கொண்டு ரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசிய மெராக் துறைமுகத்திலிருந்து 139பேர் சிங்கப்பூர் கியூ துறைமுகத்திற்கு மாற்றம்-





இந்தோனேசிய மெராக் துறைமுகத்திலிருந்து இன்று 139பேர் 10பேருந்துகளில் ஏற்றப்பட்டு சிங்கப்பூர் கியூ துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு எஞ்சியுள்ளவர்களே கப்பலிலிருந்து இறக்கப்பட்டு குறித்த தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்தவருடம் அக்டோபர் மாதம் 11ம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்லவிருந்த 254பேர் அவுஸ்திரேலிய பிரதமரின் பணிப்பின்பேரில் இந்தோனேசியா படையினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் கப்பலிலிருந்து இறங்க மறுப்புத் தெரிவித்து கடந்த ஆறுமாத காலமாக இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்திலேயே தங்கியிருந்தனர். இவர்கள் தம்மை அவுஸ்திரேலியா அல்லது அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திட்ட நாடொன்றில் குடியேற்றுமாறு கோரிவந்தனர். இதனைச் செவிமடுக்காத இந்தோனேசிய அரசு தற்போது இந்த அகதிகளை கியூ தீவுக்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையையடுத்து கப்பலில் இருந்தவர்களில் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாவின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டதில் தமிழக அரசுக்கு சம்பந்தம் கிடையாது : கருணாநிதி



பிரபாகரனின் தாயார் சென்னைக்கு வந்தது குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டமைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. அ.தி.மு.க. அரசு எழுதிய கடிதத்தால்தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வர விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறியுள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியன் ஏயார் லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் துணைக்கு ஒரு பெண் மட்டுமே வந்திருந்தார்.

பக்கவாத நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக 6 மாத கால இந்திய விசாவில் வந்த பார்வதி அம்மாவை விமானத்திலிருந்து இறங்கக்கூட குடியேற்றத்துறை அதிகாரிகளும் தமிழக பொலிசாரும் அனுமதிக்கவில்லை.

அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரையும் பொலிசார் அனுமதிக்கவில்லை.

பார்வதி அம்மாவுடன் உரிய விசா பெற்றுவந்த அந்தப் பெண்ணுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரப்பியது இந்த நிகழ்வு. உரிய அனுமதி பெற்றுவந்த, அதுவும் உயிருக்குப் போராடும், நடக்கவும் மூச்சு விடவும் சிரமப்படும் ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்தக் கொடுமையைப் பலரும் கண்டித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாவின் தாயாரை திருப்பி அனுப்பியது திமுகவுக்கு தெரியாதென்பது நகைப்புக்குரியது : அத்வானி



விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பிய விடயம் திமுகவுக்குத் தெரியாது என டீ. ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்புக்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்திய எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக் சபாவில் கண்டித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்த கருத்தை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

விஜயகாந்த் கோரிக்கை

பார்வதி அம்மாள் தமிழ்நாட்டுக்கு வருவதைத் தடுத்த தடை ஆணை பட்டியலை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நீக்க முதல்வர் கருணாநிதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

"பார்வதி அம்மாளை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத்தகவல் தெரிந்தும் மெளனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே, தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்?

2003ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இந்தியாவுக்கு வர தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003ஆம் ஆண்டு பட்டியலை 10 ஆண்டுகள் கழித்துத் தான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை.

தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் இந்தத் தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்த பட்டியலை ரத்து செய்திருக்கலாம்.

எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற அடிப்படையிலும், தானே முன் வந்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி பார்வதி அம்மாள் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுத்த அந்த தடை ஆணை பட்டியலை அறவே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள்




திருகோணமலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59,784 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 39,691 வாக்குகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 33268 வாக்குகளையும் பெற்றுள்ளன.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்களும் ஐ.தே.க, த.தே. கூட்டமைப்பு ஆகியவற்று முறையே 1ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய விமானச் சேவைகள் நிறுத்தம் : பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பு

ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால் வான் பரப்பு பாதிக்கப்பட்டது. ஐரோப்பாவில் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பொருளாதார ரீதியாக உலக நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

விமான சேவைகள் நிறுத்தப்பட்டது முதல் இன்று வரை 60,000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.

விமானப் போக்குவரத்துத் தொழிற்துறையே இதனால் ஸ்தம்பிதமடைந்துள்ளது. விமான நிறுவனங்களுக்கு இதனால், ஒரு நாளைக்கு 200 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, விமானப் போக்குவரத்துத்துறையில் மாத்திரமல்லாமல் வேறுவகையிலும், இந்த விவகாரம் பரந்துபட்ட உலக பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஏற்றுமதி பாதிப்பு

குறிப்பாக விமானங்களின் மூலம் ஏற்றுமதியாகும் பழவகைகள், பூக்கள் மற்றும் மரக்கறி வகைகளின் ஏற்றுமதியும் இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மாத்திரமல்லாமல், உணவுப் பொருட்களின் தயாரிப்பாளர்களும், விவசாயிகளும் கூட இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

காய்கறிகள் அழுகும் நிலை

கென்யாவின் விவசாய ஏற்றுமதி இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. நைரோபி விமான நிலையத்திலும், அந்த நாட்டின் ஏனைய பண்ணைகளிலும் உள்ள குளிரூட்டி வசதி கொண்ட கிடங்குகள் முற்றாக நிரம்பிப் போயுள்ளதாக பிபிசிதெரிவிக்கின்றது.

ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பெருமளவு பழங்கள், மரக்கறிகள் மற்றும் பூக்கள் அழுகும் நிலையை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட சேவை

இதற்கிடையே பல ஐரோப்பிய விமான நிலையங்கள் இன்னமும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்ற போதிலும், ரோம், மட்ரிட் போன்ற சில விமான நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் நடத்தப்படுகின்றன.

இடைநடுவில் சிக்கித் தவிக்கும் பயணிகள், வீடு சென்றடைவதற்கு ஏதுவாக ஸ்பெயினில் உள்ள விமான நிலையங்களை மையமாகப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை ஐரோப்பிய போக்குவரத்து அமைச்சர்களால் நடத்தப்படும் அவசர வீடியோ மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மட்ரிட்டில் உள்ள பிபிசி செய்தியாளர் சாரா றெயின்ஸ்போர்ட் கூறுகையில்,

"வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய பயணிகளுக்கான போக்குவரத்து மையமாக ஸ்பெயினைப் பயன்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.

விமர்சங்கள் தொடர்கின்றன

இதற்கிடையே இந்த விவகாரத்தைக் கையாள ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆகக்கூடு தலான நாட்களை எடுத்துக்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பல விமான நிறுவனங்கள் இந்த புகை மண்டலத்தின் ஊடாக சோதனை ஓட்டங்களை நடத்திப் பார்த்திருக்கின்றன. அவற்றின் போது எந்த விதமான பாதிப்பும் விமானங்களுக்கு ஏற்படவில்லை என்று அவை கூறுகின்றன.

"அனைத்து விமான சோதனைகளிலும் எந்தவிதமான பிரச்சினைகளும் விமான இயந்திரங்களுக்கு ஏற்படவில்லை. இயந்திரங்களில் எந்தவகையான தூசுகளும் படியவில்லை. விமான முகப்புக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தகவல்களை அரசியல்வாதிகள் தமது கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று லுப்தான்சா விமான நிறுவனத்தின் பேச்சாளர் கலவவுஸ் வோல்தர் கூறுகிறார்.

ஆனால், பிரித்தானிய வான்பரப்பில் செய்யப்பட்ட விஞ்ஞான சோதனைகள், விமானங்கள் பறப்பதற்கு ஆபத்தான சூழ்நிலையே இன்னமும் இருக்கக்கூடும் என்று கூறுகின்றன.

இதற்கிடையே வடக்கு ஐரோப்பாவில் இதனால் தடைபட்டுப் போயிருக்கும் தமது பிரஜைகளை ஏற்றிவர இரு போர்க்கப்பல்களை பிரிட்டன் அனுப்பியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேஷியாவில் விமானம் மோதி இருவர் பலி

:

இந்தோனேஷியாவில் தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் விமானம் தரை இறங்கிய போது இரு சக்கர வாகனத்தில் குறுக்கே வந்த இருவர் விமானம் மோதி உயிரிழந்தனர்.
அரசு நடத்தும் விமான பயிற்சிக் கல்லூரிக்கு சொந்தமான டொபாகோ-10 என்ற இலகு ரக பயிற்சி விமானம் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையில் தரை இறங்கியது.
அப்போது உள்ளூர் வாசிகள் இருவர் இரு சக்கர வாகனத்தில் குறுக்கே வந்துவிட்டனர். அவர்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானதில் இருந்த விமானியும், ஒரு மாணவரும் பலத்த காயமடைந்துனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த இந்தோனேஷியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹெரி பக்தி சிங்கயுடா, "விபத்து நடந்த பகுதி பொதுமக்கள் வர தடை செய்யப்பட்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை கவனிக்காமல் இருந்தது அதிகாரிகளின் தவறாகும்' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி மாவட்ட இறுதி முடிவுகள் கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.




அதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 339819 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 192798 வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி 23728 வாக்குகளையும் பெற்றுள்ளன.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும் ஐ.தே.கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன
மேலும் இங்கே தொடர்க...