27 ஆகஸ்ட், 2010

கனடாவில் தாக்குதல் திட்டம் : 3 தீவிரவாதிகள் கைது

கனடாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய மூன்று தீவிரவாதிகளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் மிஸ்பாகுதீன் அகமது (26) என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் ஹைவா அலிஸாடேஹ்(30). இவர்கள் இருவரும் புதன்னன்று ஒட்டாவாவில் கைது செய்யப்பட்டனர். மூன்றாமவர் கனடாவைச் சேர்ந்த குரம் ஷெர்(28). இவர் ஒண்டாரியோவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மூவரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கனடாவில் உள்ள மின் நிலையங்களைத் தகர்க்கவே சதி திட்டம் தீட்டி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடா தான் அமெரிக்காவுக்கு அதிகளவு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. நியூயோர்க் நகருக்குத் தேவையான ஒட்டு மொத்த மின்சாரமும் கனடாவில் உள்ள க்யூவெக் மின் நிலையத்தின் மூலமே கிடைக்கின்றது.

எனவேதான் மின் நிலையங்களையும் மின் பாதையையும் தகர்ப்பதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கைதான மூவரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாத பயிற்சி பெற்று வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மிஸ்பாருதீன் அகமது கனடா, ஒட்டாவா நகரிலுள்ள வைத்தியசாலையில் எக்ஸ்ரே ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கனடாவில் 2006ஆம் ஆண்டு, இது போன்று தாக்குதல் சதி திட்டத்தில் ஈடுபட்டிருந்த 18 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தம் முடிந்தும் பல கேள்விகளுக்குப் பதிலில்லை : ஜோன் ஹோம்ஸ்

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பதவிக் காலத்தின் போது இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு ஐ.நா. முகங்கொடுக்க நேரிட்டதாக ஜோன் ஹோம்ஸ் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் குறிக்கோள் நோக்குடன் பரிந்துபேசும் பாத்திரத்தை ஐ.நா. வகித்து வந்தது.

யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முயற்சிக்கையில் அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிரசாரங்களை சமநிலைப்படுத்த முயற்சித்தபோதெல்லாம் ஐ.நா.கடும் அழுத்தங்களுக்குட்படநேர்ந்தது.

இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தத்தில், இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான பணியைச் சீராகவே செய்ய முடிந்தது. எனினும் பொதுமக்களின் சேதங்கள் உட்பட பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படாமலே இருக்கின்றது.

யுத்தத்தின்போது பொதுமக்கள் வசித்த பகுதிகளில் அரசாங்கம் ஷெல் தாக்குதலை நடத்தியதா என்பதும் அக்கேள்விகளில் ஒன்று. மூதூரில் ஏ.சி.எப். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளின் கண்ணியம் குறித்துக் கவனம் தேவை : வான்கூவர் பேராயர்

குடிவரவு தொடர்பான விவாதத்தின்போது தமிழ் அகதிகளின் கண்ணியம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என வான்கூவர் பேராயர் ஜே. மைக்கல் மில்லர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரின் வருகை குறித்த கனடாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பாகவும் அண்மையில் கப்பலில் வந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் வலுவான கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது.

தங்களின் தாய்நிலங்களில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பல இன்னல்களில் இருந்து தப்புவதற்காக எங்களின் கரைகளை வந்தடைந்துள்ள இவர்கள் தொடர்பாக சில கருத்துக்கள் ஏவிவிடப்படுகின்றன.

அவர்கள் உரிய காலம் வரை காத்திருக்கவில்லை எனவும் எங்களின் குடிவரவு வழிமுறைகளை பிழையான வழியில் பயன்படுத்துவதாகவும் மேலும் அகதிகளினால் கனடாவுக்கு பங்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய தேவை குறித்தும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய, குறிப்பாக இங்கு வந்துள்ளவர்களுக்குரிய, அடிப்படை கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகிறது.

தனது தனிப்பட்ட வாழ்விலும் சபையிலும், இயேசுவானவர் தன்னை அகதிகளுடனும் வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களுடனும் அடையாளப்படுத்திக்கொண்டார்.

இயேசுவின் வசனம்

"நான் ஓர் அந்நியனாக இருந்தேன். நீங்கள் என்னை வரவேற்றீர்கள்" (25:35) என்று அவர் கூறுகின்றார்.

கத்தோலிக்க சமூக கல்வி என்பது அகதிகளின் உரிமைகளில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டது கிடையாது. அத்தோடு, குடிவரவுக் கொள்கை, சட்ட வலுவாக்கல் மற்றும் மேம்பாடு என்பவை தொடர்பான விவாதங்களில் இங்கு வந்துள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலிகடாக்கள் ஆகிவிடக் கூடாது.

பாதுகாப்பு கருதி, குடிவரவாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல் எந்த ஒரு பொறுப்பான அரசாங்கத்துக்கும் முக்கியமான விடயமாகும்.

இருப்பினும், ஆயுதந்தாங்கிய மோதல்கள், முறையற்ற பொருளாதார கொள்கைகள், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் சொந்த நாட்டில் இடம்பெயர்ந்திருந்த மக்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு பன்னாட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் கத்தோலிக்க திருச்சபை உறுதியாக உள்ளது.

குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளின் தேசமாகவும், அநீதியில் இருந்து தப்பி வருவோரை வரவேற்பதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக கனேடிய தேசம் திகழ்கின்றது.

தொழிற்துறை மயமாக்கப்பட்ட நாடுகள் தேவைக்கதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதன் விளைவாக வேறு வழிகளில் ஆட்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கொண்டு வரப்படுவது உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது என்பது வெளிப்படை.

அதிவேகமாக வளர்ந்து வரும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வரிசையில் முன்னணியில் ஆட்கடத்தல் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறைகூவல் விடுத்துள்ளது.

பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரின்

பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் வளர்ச்சியடைந்த நாடுகளின் இந்த நிலை தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"குடிவரவு என்னும் கருத்தாடலுடன் இணைத்துப் பார்க்கப்படும் வசதியின்மையினால் அதிருப்தியடைந்த பொதுக்கருத்துக்களினால் ஏற்படும் அழுத்தத்தை மனதில் கொண்டு (இந்த நாடுகள்) தங்களின் எல்லைகளில் குடிவரவை அதிகளவில் மட்டுப்படுத்தியுள்ளன.

தங்களை வற்வேற்க மறுக்கும் ஒரு நாட்டினுள் எந்த வித உரிமைகளுமற்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் இரக்கமற்ற சுரண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான சூழ்நிலைகளை இந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை சமூகத்தில் ஏற்படுகின்றது."

இவ்வாறு பாப்பரசர் கூறியிருக்கின்றார்.

பொதுவான நலனைப் பூர்த்தி செய்யும் வகையில் குடிவரவுக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டியதை ஒரு நாடு உறுதி செய்ய வேண்டியிருப்பினும், அத்தகைய கட்டுப்பாடுகள் சுயநலன்களையோ மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டோ அமையக் கூடாது.

தங்களின் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தமது தாய்நாட்டில் இருந்து தப்பி வந்து தற்போது தடுப்பில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த நாட்டின் குடிவரவாளர் கொள்கையை ஆராய வேண்டியது நீதியானதாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மனிதாபிமான பணிகளுக்கு மேலதிக நிதி தேவை : நீல் பூனே

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மேலதிகமாக நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நீல் பூனே தெரிவித்துள்ளார்.

"மனிதாபிமான சேவைகளுக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் சேவைகளைத் தொடர்வதற்கு 165 மில்லியன் அமெரிக்க டொலர் இன்னும் தேவைப்படுகிறது.

இதனால் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் இன்னும் நிறைவடையவில்லை அவற்றைப் பாரியளவில் முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சமாதானம் மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இடம்பெயர் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமின்றி மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வரையில் தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்" என நீல் பூனே மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

திருட்டுத்தனமான அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்போம் :ஜே.வி.பி

மக்களின் கருத்தையும் விருப்பத்தையும் அறியாது திருட்டுத்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த யோசனைகளை செப்டெம்பர் மாத முற்பகுதியில் அ“வசர அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தோற்கடிக்கவும் நாட்டை பாதுகாப்பதற்கும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மக்கள் சக்தியை அணிதிரட்டுவோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். வாரத்திற்கு ஒருமுறை ஜனாதிபதியை சந்தித்து வருகின்ற எதிர்க்கட்சித் தலைவருக்கே திருத்தம் தொடர்பில் அறியக்கிடைக்கவில்லை. இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டி வருகின்ற ஜனாதிபதி திருத்த யோசனை குறித்து வெளிப்படுத்த அச்சப்படுகிறார் என்றால் அதில் ஏதோ இருக்கிறது. என்பதே அர்த்தமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

நிறைவேற்று அதிகாரமுறை தொடர்பில் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே வெளிப்படுத்திவருகின்றது. நிறைவேற்று அதிகார முறைமையில் எமக்கு உடன்பாடு கிடையாது. என்வேதான் அதனை இல்லாதொழிக்க வேண்டுமென்று நாம் கூறுகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இதனை இல்லாதொழிக்க சிறந்தவர் என்றும் இரண்டாம் முறையாகவும் அவர் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இப்போது நடைபெறுவது தலைகீழானதாகும்.இப்போது நிறைவேற்று அதிகார முறைமையை மூன்றாவது முறைக்கும் நீடிப்பதற்கான திட்டத்தில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது.

மேலும் அரசியலமைப்பை மாற்றியமைக்கத் தேவையில்லை என்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படின் அது மக்களின் கருத்தினை அறிந்து அவர்களது விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தெரிவித்து வந்தோம்.இருபபினும் இவை எதையுமே கருத்தில் கொள்ளாத அரசாங்கம் திருட்டுத்தனமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் அங்கீகாரமில்லாத திருத்தங்களை அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் போது சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றது.

இந்த திருத்தங்களை நிறைவேற்று கொள்வதன் மூலம் நாடோ, மக்களோ பயனடையப்போவதில்லை. மாறாக தனியொரு குடும்பம் மாத்திரமே அரசியல் ரீதியாக பலமடையப்போகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடு முற்றிலும் பிழையானது. ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் அதேநேரம் முறையற்ற விதத்திலுமான செயற்பாடுகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக் கொள்கின்றதா என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வாரத்துக்கு ஒருமுறை அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திவருகிறார். அங்கே நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக நிறைவேற்று அதி“காரம் கொண்ட பிரதமர் முறை குறித்து பேசப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பில் கொண்டுவரப்படுகின்ற திரு“த்தம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பேச்சுக்களின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இருவருமே இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.

இதில் இன்னொரு விடயம் என்னவெனில் கொண்டுவரப்படவிருக்கின்ற திருத்தங்கள் தொடர்பில் பேச்சில் கலந்துகொண்ட ரணிலுக்கே அறிவிக்கா திருப்பதுதான். அரசியலமைப்பில் திருத்தஞ்செய்யும்போது ஏனைய கட்சிகளிடத்திலும் பேசி கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் சக்தியை அறிந்து அவர்களது கருத்தையும் விருப்பத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியமானதாகும். ஆனாலும், எதுவுமே இல்லாது அவரசப்படுகின்ற அரசாங்கம் தனது யோசனைகளை எப்படியாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் நல்ல ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார்.

தற்போது ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து இருவர் அரசு பக்கம் தாவியுள்ளனர். இன்னும் சிலர் தாவுவதற்கு தயாராக இருக்கின்றனர்.

இவ்வாறு பாராளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசு பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றது. எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற இந்த ஜனநாயக விரோத, பண்பாடற்ற திருத்தங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜே.வி.பி. இடமளிக்காது.

அந்த வகையில் குறிப்பிட்ட சிறிய காலப்பகுதிக்குள் இந்த முறையற்ற யோசனைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதுடன் எமது எதிர்ப்பையும் வெளிக்காட்டுவோம். இதற்கென நாட்டின் சமூக நலன் விரும்பிகள், ஜனநாயக விரும்பிகள், புத்திஜீவிகள் அனைவரையும் இணைத்துக்கொண்ட மக்கள் சக்தியை அணிதிரட்டும் பணியை ஜே.வி.பி. ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் முறையற்ற யோசனைகள் தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விழிப்புணர்வையும் ஒரு தடவைக்கு மேல் சிந்தித்துப்பார்க்கும் நிலைமையையும் ஜே.வி.பி. உருவாக்கும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்றுவரும் புலிப் போராளிகளை அரசாங்கம் விடுவிக்கக் கூடாது:ஹெலஉறுமய

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்ற முன்னாள் புலிப் போராளிகளை எக்காரணம் கொண்டும் விரைவாகவோ உடனடியாகவோ விடுவிக்கக்கூடாது. அவ்வாறு அவர்களை விடுவித்தால் மீண்டும் பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கான அபாயம் உள்ளது. புலிகளின் ஆயுதக்கிடங்குகள் இன்னும் வடக்குகிழக்கில் உள்ளன. எனவே, அவர்களுக்கு நீண்டகாலம் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும். என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோ அவருக்கு தண்டனை வழங்குவதையோவிட அவரை பயன்படுத்தி தமிழ் இனவாத பிரிவினைவாத புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் அங்கு மேலும் கூறியதாவது:

குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டவர். பிரபாகரன் கொல்லப்பட்டதும் தான் புலிகளின் புதிய தலைவர் என்று அறிவித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் இலங்கை புலனாய்வு பிரிவினர் கே.பி. யை கைது செய்தனர். தற்போது அவர் இராணுவத்தின் பொறுப்பில் இருக்கின்றார். தற்போதைய நிலைமையில் கே.பி. க்கு எதிரக்ஷிக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோ தண்டனை வழங்குவதையோவிட செய்வதற்கு தேவையான விடயம் ஒன்று உள்ளது. அதாவது தமிழ் பிரிவினைவாத இனவாத புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க கே.பி.யை பயன்படுத்தவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். மேலும் சொத்துக்களையும் அரசுடமையாக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

கருணா அம்மான் பிள்ளையான் போன்றோர் புலிகளிடமிருந்த பிரிந்தபோது அவர்களைக்கொண்டு புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜே.வி.பி. யினரும் இதனை அன்று வலியுறுத்தியிருந்தனர்.

எனவே தற்போதைய நிலைமையில் கே.பி. யைக்கொண்டு இதனை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். சர்வதேச மட்டத்தில் பரவியுள்ள தமிழ் இனவாத பிரிவினைவாத புலிகளின் வேர்களையும் கிளைகளையும் பிடுங்கி எறியவேண்டும்.

மேலும் சுமார் 10 ஆயிரம் முன்னாள் புலி போராளிகளுக்கு தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்றது. அவர்களை விரைவாகவோ உடனடியாகவோ விடுதலை செய்யக்கூடாது. அவ்வாறு விரைவில் விடுதலை செய்வது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர்களுக்கு நீண்டகக்ஷிலம் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றனர். சரணடைந்தவர்களும் உள்ளனர்.

மேலும் முன்னாள் புலி போராளிகளை விரைவில் விடுவிப்பதானது பயங்கரவாதம் மீண்டும் மீளிணையப்படுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும். புலிகளின் ஆயுத கிடங்குகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. எனவே இது தொடர்பில் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் 30 வருடங்கள் ஆயுதம் ஏந்தியவர்கள். எனவே நீண்டகால புனர்வாழ்வு அவசியமாகும். எனவே முன்னாள் போராளிகளை விரைவாக விடுவிக்கவேண்டும் என்று கோருவதானது யதார்த்தமற்ற ஒரு விடயமாகும். விசேடமாக 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு சுமார் ஏழு வருடங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. அவ்வாறு நீண்டகால புனர்வாழ்வுக்கு பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கேள்வி: கே.பி.யை எவ்வாறு நம்புகின்றீர்கள்?

பதில்: ( அனுர பிரதீப ஹெல உறுமயவின் கல்வி செயலாளர்) கே.பி. தற்போது அரசாங்கத்தின் இராணுவ பொறுப்பில் இருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தன்னை ஒரு வீரராக வெளிக்காட்டவில்லை. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பையே வழங்கி வருகின்றார். மேலும் பயன்மிக்க தகவல்களை வெளியிட்டு வருகின்றார். அண்மையில் புலம் பெயர் மக்களின் 12 பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளனர். இது கே.பி. யின் ஊடாகவே சாத்தியமாகியது.

கேள்வி: புலிகளின் சொத்து தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனரே?

பதில்: தற்போதைய நிலைமையில் புலிகளின் சொத்துக்களை பெறுவது பிரதான விடயமல்ல. அவர்களின் சர்வதேச வலையமைப்பை அழிக்கவேண்டும். அதுவே தற்போது மேற்கொள்ளப்படவேண்டிய பிரதான விடயமாகும்.
மேலும் இங்கே தொடர்க...