7 பிப்ரவரி, 2011

கிழக்கில் தொடரும் பாதிப்பு





இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வாவிகளிலும் ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு முதலைகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் வீடுகளைப் பார்வையிட சென்றிருந்த போது முதலைகளின் நடமாட்டத்தை அங்கு காண முடிவதாக கூறுகின்றார்கள்.

வாவி மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தங்கள் கால்நடைகளும், வளர்ப்பு பிராணிகளும் முதலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பழுகாமம் நலன்புரி முகாமொன்றில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றார்கள்.

நேற்று சனிக்கிழமை இரவு கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலுள்ள அம்பிலாந்துறையில் விவசாயியொருவர் முதலைக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

தனது வீடு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்கு வெளியேயுள்ள மலசல கூடத்திற்கு சென்று சுத்தம் செய்வதற்காக பாத்திரமொன்றில் வெள்ள நீரை அள்ளிய போது முதலையொன்று தனது கையைக் கவ்வியதாக சம்பவம் தொடர்பாக 45 வயதான விவசாயி நாகப்பன் பரமானந்தம் கூறுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில் ஒரு சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ள அதே வேளை மேலும் இரண்டு சிறுவர்கள் காணமடைந்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக மக்கள் அச்சம், வாழ்வாதாரங்களில் உறுதியற்ற தன்மை போன்ற காரணங்களினால் வீடுகளுக்கு திரும்ப தயங்குகின்றனர்.

குற்றச்சாட்டு

இதற்கிடையே, இலங்கையில் விவசாயத்திலும் மீன்பிடி தொழிலிலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி சுற்றுநிரூபங்களை அனுப்பியுள்ள போதிலும், கடந்த கால அழிவுகளின் போது ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு தயங்குவதாக அந்தக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இவ்வாறான அழிவுகளின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, பொது நிகழ்வுகளிலும் பெரிய அமைச்சரவையை அமைத்து வரிச்சலுகையுடன் கூடிய வாகனங்களை இறக்குமதிசெய்து அமைச்சர்களின் நலன்களிலும் அதிகளவு வீண் செலவினங்களைச் செய்வதாகவும் விஜித்த ஹேரத் கூறினார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் குற்றச்சாட்டை இலங்கையின் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர மறுத்துள்ளார்.

அரச அதிகாரிகளுக்கு நிவாரணங்களில் பணச்சிக்கல் வராதவாறு மாவட்டச் செயலாளர்கள் ஊடாக போதுமான நிதியை தாம் அனுப்பிக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசிக்குத் தெரிவித்தார்,
மேலும் இங்கே தொடர்க...

பாதிக்கப்பட்டோர் தொகை 13 இலட்சம்; 11,000 வீடுகள் சேதம்; 700 முகாம்கள் கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம்

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9664 வீடுகள் பகுதியளவில் சேதமடைந் திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாண கூறினார்.

இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாகவே தற்போதைய மழைக் காலநிலை தொடருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய மழைகால நிலையின் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடா கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. மீனவர்கள் முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் முதல் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கிய போதிலும் இலங்கைக்கு அருகில் திரும்பவும் அமுக்க நிலை உருவாகி இருப்பதால் மழைக் காலநிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் குறிப்பிடுகையில், தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 முகாம்களில் தங்கியுள்ளனர்.

ம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6558 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6247 குடும்பங் களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6513 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை, திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களும், நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடமத்திய கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.

இம் மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்வும் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முப்படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தன்னை சோதனைக்குட்படுத்திய பொலிஸாருக்கு ஜனாதிபதி பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டின் தலைவராக சாதி, மத, குல, மொழி, பிரதேச பேதமின்றி இந்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக நல்லாட்சி புரிந்து வருகின்றார். மஹிந்த ராஜபக்ஷ என்ற மனிதருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கின்றது.

சமீபத்தில் ஜனாதிபதி அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தனது இளைய சகோதரரான டட்லி ராஜபக்ஷவை சந்தித்து, அவரது இல்லத்தில் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தனது தனிப்பட்ட சகோதர பாசத்தின் நிமித்தம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

இந்த தனிப்பட்ட விஜயத்தை பயன்படுத்தி இன்று அரசியலில் செல்லாக்காசாகி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினரதும், ஜே. வி. பி. யினரதும் கைப்பொம்மைகளாக செயற்படும் பொய்யிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சில இணையத்தளங் களும், சில வெளியீடுகளும் ஜனாதிபதியைப் பற்றி அவதூறான பொய் வதந்திகளை இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரப்பி ஒரு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சியினருக்கு சமீபத்தில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் லாபத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் இப்போது தவிடு பொடியாகி விட்டது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை புத்தல நகரில் திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், தான் சுகதேகியாக இருப்பதாகவும், எதிர்க் கட்சியைச் சேர்ந்த சில மனநோயாளிகளே நான் பயங்கர நோயினால் பீடிக்கப்பட்டு உயிராபத்தில் இருக்கிறேன் என்ற வதந்திகளை கிளப்பிவிட்டு எதிர்க்கட்சியினருக்கு அரசியல் இலாபம் பெற்றுக் கொடுக்க எத்தனிக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.

நான் ஒரு நேர்மையான ஜனநாயகவாதி. நான் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்களோ, அல்லது என்னுடைய ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களோ பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய வகையில் அரசியல் நடத்த வேண்டும் என்ற கருத்தை எனது வாழ்க்கையில் கடைப்பிடித்து வருவதுடன் இந்நாட்டிலுள்ள சகல அரசியல்வாதிகளும் இந்த ஜனநாயக உரிமையை சீர்குலைத்து விடாதவாறு அவதானமாக அரசியல் நடத்த வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

அரசியலில் என்னை எதிர்ப்பவர்கள் தேர்தல் களத்தில் என்னுடைய கட்சியுடன் நேர்மையான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவிக்கு வருவதை நான் எதிர்க்கமாட்டேன்.

அவ்விதம் எதிர்க் கட்சியினர் செயற்பட்டால் தான் எங்கள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும். அதைவிடுத்து, இவ்விதம் வதந்திகளை பரப்பி, அரசியல் இலாபம் திரட்ட எத்தனிக்கும் எதிர்க்கட்சியினரை பார்க்கும் போது எனக்கு மனவேதனையை தருகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார். இவ்விதம் போலியான அரசியல் பிரசாரங்களை நடத்தி, நாட்டிற்கு துரோகம் இழைப்பதை எதிர்க் கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

வதந்திகள் மூலம் அரசியல் இலாபம் அடைய எத்தனிப்பவர்கள் சாதாரண நோயாளிகளை விட நாட்டிற்கு தீங்கு இழைக்கக் கூடிய மோசமான மனநோயாளி களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நான் வேண்டுமா னால், ஒரு விசேட மனநோயாளிகள் ஆஸ்பத்திரியைக் கூட திறக்க தயங்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி என்ற முறையில் மஹிந்த ராஜபக்ஷ என்ற இந்த நல்ல மனிதர் பாதுகாப்பின் நிமித்தம் தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக் கூட, தியாகம் செய்திருக்கிறார். இவர், சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த போது, அதிகாலையில் எழுந்து தன்னந்தனியாக வீதிகளில் ஓடி, உடற்பயிற்சியை நாளாந்தம் செய்யும் பழக்கத்தை உடையவர். இன்று, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த சுதந்திரத்தை இழந்துள்ள ஜனாதிபதி அவர்கள், தனது வாசஸ்தலத்திலேயே உடற்பயிற்சியை காலையில் செய்யும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி அவர்கள் எவ்வளவு உயர் பதவி வகித்து, அதிகாரம் படைத்த மனிதராக இருந்தாலும், தனது நண்பர்கள் ஏழைகளாக இருந்தாலும், செல்வந்தர்களாக இருந்தாலும்கூட, என்றுமே மறப்பதில்லை. தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் அவர் அதிகாலையில் தனது வேலைப்பளு ஆரம்பிப்பதற்கு முன்னர், தொலைபேசியில் உரையாடி குசலம் விசாரிக்கவும் அவர்களின் பிறந்த தினத்தன்று, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து, அவர்களின் இல்லங்களுக்கு பிறந்த நாள் கேக்கையும் பூங்கொத்தையும் அனுப்பவும் தவறுவதில்லை.

ஊர் ஓய்ந்த பின்னர், பண்டைக்காலத்தில் மன்னர்கள் மாறுவேடத்தில் நகர சஞ்சாரம் செய்து நாட்டு மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதைப் போன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், தன்னுடைய காரை தானே ஓட்டிச் சென்று நாட்டின் நிலைமையை ஆராய்ந்து பார்ப்பதுடன், தன்னுடைய நண்பர்கள், உறவினர்களின் இல்லங்களுக்கும் முன்னறிவித்தல் செய்யாமல், திடீரென்று தனது காரில் தன்னந்தனியாக சென்று போய் இறங்கி, அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி விட்டு, தனது வாசஸ்தலத்திற்கு திரும்புவதுண்டு.

இவ்விதம், ஒரு நாள் இரவு ஜனாதிபதி காரை ஓட்டிச் செல்லும் போது, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காரை நிறுத்தி, கார் சாரதியின் அனுமதிப்பத்திரத்தை கேட்டு பரிசோதித்த போது, காரில் அமர்ந்திருப்பவர் நாட்டின் ஜனாதிபதி என்பதை அடையாளம் கண்டு, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதற்கு ஜனாதிபதி நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கடமையை சரியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தர் என்று பாராட்டியிருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை: 4 மாவட்டங்களில் அபாயம்; 24 மணிநேர முன்னெச்சரிக்கை

பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடுத்தது.

இந்த நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்க ளாக ஏற்கனவே அடையாளப்படுத்தப் பட்டிருக்கும் பகுதிகளில் வசிப்போர் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று நிறுவனத்தின் விஞ்ஞானி குமாரி வீரசிங்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இந்த நான்கு மாவட்டங்களிலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆறு குழுக்கள் மண்சரிவு தொடர்பான ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக வலப்பனை, இரத்தோட்டை, பதுளை, கொத்மலை ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில தினங்களாக மலையகப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மலையகப் பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா, மகாவெவ பகுதியில் சுமார் 40 ஹெக்டேயர் நிலமும், தியனில்ல பகுதியில் 32 ஹெக்டேயர் நிலமும் மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன.

இதேபோல் கண்டி, பதுளை, மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம்மண்சரிவுகள் காரணமாக 1552 குடும்பங்களைச் சேர்ந்த 5886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரம் குடும்பத்தினர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

நுவரெலியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலிய அலுவலகப் பொறுப்பாளர் லக்சிறி இந்திரதிலக்க கூறினார்.

கண்டி மாவட்டத்தின் பன்வில, குண்டசாலை, வந்தானை தோட்டம் போன்ற பிரதேசங்களிலிருந்து மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக சுமார் இருநூறு (200) குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச். ஆர். கே. பி. ஹேரத் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசத்துக்கு மகுடம்: காட்சிக் கூடங்களில் மக்கள் திரள்; 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் வருகை

தேசத்திற்கு மகுடம் 2011 தேசிய அபிவிருத்தி கண்காட்சியை பார்வையிடவென மூன்றாவது நாளான நேற்று மாலை வரை சுமார் ஆறரை இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் வருகைதந்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் கண்காட்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.

மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை பார்வையிடவென வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வருகைதருவதை காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் வரலாறு அரசாங்கம் முன்னெடுத்துவரும் பாரிய அபிவிருத்தி பணிகள், எதிர்காலத்திட்டங்கள் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சி கூடங்களை பார்வையிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

கல்வி, உயர் கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான பல்வேறு காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதால் பாடசாலை, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் வருகையையும் அதிகம் காணக்கூடியதாக உள்ளது.

மொனராகலை மாவட்டத்திலுள்ள, புத்தலையில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியை பார்வையிட வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும், அதிபர், ஆசிரியர்களுக்கும் முற்றிலும் இலவசமாக அனுமதிப்பத்திரங்கள் இன்றி இக்கண்காட்சியை கண்டுகழிக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு கண்காட்சி பிரதேசத்திற்கு இலகுவாக அழைத்துவரும் பொருட்டு விசேட இலவச பஸ் சேவையை இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடு செய்துள்ளது.

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய காட்சிக்கூடங்களையும் சாகசங்களை யும் பார்வையிட அதிகம் மக்கள் வருகை தந்திருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. மாலை நேரங்களில் ஊடக வலய பகுதியை பார்வையிட மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணக்கூடியதாக இருந்தது.

160 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2000 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சுதந்திர தினத்தன்று உத்தியோகபூர்வமாக கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது நாளாகிய நேற்று முன்தினமும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விவசாய அமைச்சு, இராணும், விமானப்படை, கடற்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய காட்சி கூடங்களுக்குச் சென்று பார்வையிட்டதுடன் அங்கு வருகைதந்திருந்த பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.
மேலும் இங்கே தொடர்க...

ரூ. 10,000 மில்லியனில் அபிவிருத்தி



தி தசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு மொனராகலை மாவட்டத்தில் 10,000 மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி மூலம் இந்தப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார். வீதி, மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், குளங்கள், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் இந்த நிதி மூலம் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளுக்கு 4000 மில்லியன் ரூபாவும், மின்சார விநியோக வசதிக்கு 1000 மில்லியன் ரூபாவும் நீர் வழங்கலுக்கு 700 மில்லியன் ரூபா வீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒருவார காலத்திற்கு மனிதவள அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட் டார்.

சுமார் நூறு வருடங்களுக்கும் அதிகம் பழைமை வாய்ந்த புத்தலை கிராமிய வைத்தியசாலை மக்கள் வங்கியினால் 160 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மிகவும் குறுகிய காலத்தில் மொனராகலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...