20 ஜூன், 2011

ஜனநாயக உரிமையை வழங்கத் தயாரில்லை என்பதையே தாக்குதல் வெளிக்காட்டுகிறது: லக்ஷ்மன்

வடபகுதி மக்களுக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை அம் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தயாரில்லை என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளதாக ஐ.தே.க. கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இத் தாக்குதலானது சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மக்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. அத்தோடு சுதந்திரமாக கருத்து வெளியிடுவது, எழுதுவது பறிக்கப்பட்டுள்ளன.

சிவில் நிர்வாகம் இல்லை. அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட்டு மக்கள் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் நடத்திய தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேசம் எமது நாடு மீது குற்றச் சாட்டுக்களை தொடர்ந்து சுமத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் இத் தாக்குதல் அக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது.

முழு நாட்டையும் இராணுவ மயமாக்கி மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கி ஆட்சியை முன்னெடுக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2 கோடி ரூபா வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்படவிருந்த இந்த பணத் தொகையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் நாணயத்தாள்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறிதொரு குழுவினரின் தேவைக்காக இந்தப் பணத்தொகை விமானம் மூலம் கொண்டு செல்லப்படவிருந்ததாக சுங்க அதிகாரிகளின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர்களுக்கு எதிரான போக்கை இலங்கை கைவிடவேண்டும்: தங்கபாலு

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போக்கை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய தடியடி தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும்.

அந் நாட்டில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந் நேரத்தில் தமிழர்கள் வாழும் முக்கியப் பகுதியான யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அச்சுறுத்தவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அஞ்சப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பதால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற நிலை இரு க்கிறபோது பொதுமக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடும் அரசின் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென்று பிரதமர் மன்மோகன்சிங்கை கேட் டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை ஜனாதிபதி நிராகரிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக 30 மில்லியன் நஷ்டஈடு கோரி அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் மூன்று வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு வாஷிங்டன் டிசி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்த அழைப்பாணை ஜனாதிபதியின் வதிவிடமான அலரிமாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதையடுத்து நீதி அமைச்சு அதைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அதேவேளை இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த நீதிமன்ற நடவடிக்கையானது ஜனாதிபதிக்கும் அரசுக்கும் தொல்லை கொடுக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டதொன்று என இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி, அரச தலைமைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமெரிக்காவுக்கு செல்ல விடாமல் தடுக்க முனைவது பயனற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நியூயோர்க் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டத்துக்கு புறம்பான, படுகொலைச் சம்பவங்கள் குறித்தே அமெரிக்க நீதிமன்றம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சித்திரவதைக்குள்ளானவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக இந்த மனுவை தாக்கல் செய்தவர்களின் சார்பிலான சட்டத்தரணியான புரூஸ் ஃபைன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டம் என்று ஒன்று இருக்கிறது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அவரிடம் நட்டஈடு கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும். இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் கீழ் ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்று புரூஸ் ஃபைன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட டாக்டர் மனோகரனின் மகனுக்காகவும் அக்சன் பெஃய்ம் ஊழியர் ஒருவரின் உறவினர்களாலும் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்கள் சிலருக்காகவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹெய்க் மனித உரிமை சர்வதேச ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி இந்த அழைப்பாணைக்கு பதிலளிக்காவிட்டால் அவருக்கு எதிராக தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கும் என்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டுக்கு உத்தரவிடப்பட்டால் அவருக்கு அமெரிக்காவிலோ அல்லது இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளிலோ இருக்கக்கூடிய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடியும் என்றும் அத்துடன் அங்கு போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகவும் மாறும் என்றும் புரூஸ் ஃபைன் கூறியதாக பி.பி.ஸி. செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத்தொடர் முடிவு

ஜெனிவாவில் கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி. சில்வா ஆகியோரும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸும் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வின்போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றியிருந்தார். இந்த உரையில் யுத்தத்துக்கு பின்னரான இலங்கையின் நிலைமை தொடர்பில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடர் இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஜெனிவாவில் நடைபெறும் என்று மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

அந்த வகையில் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடரிலும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்: ராஜித

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவது குறித்தும் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசியல் தீர்வு குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீள் குடியேற்றம் மற்றும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறெனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் தீர்வு ஒன்று அவசியமாகும். அதனை வழங்கியாக வேண்டும். அந்தவகையில் அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதனைத்தான் நான் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றேன் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...