1 அக்டோபர், 2010

வைராக்கியம் பிடித்த அரசாங்கம் விரைவில் அழியப் போகிறது : டில்வின் சில்வா

ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால், அவரை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் வேரோடு அழியப் போகின்றது என்று டில்வின் சில்வா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நாட்டில் சட்ட ஒழுங்கின் மீது நம்பிக்கை வைக்க முடியாதளவுக்கு அரசாங்கத்தின் சர்வாதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார். இது வேடிக்கையாகவே உள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு சொல் புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது. எனவே ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை ஆர்ப்பாட்டங்களின் ஊடாக அழுத்தித்தான் கூற வேண்டியுள்ளது.

ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் விரைவில் வேரோடு அழியப் போகின்றது.

எனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான அரசாங்கத்தின் பழிவாங்கும் நோக்கத்திற்கு எதிராக இறுதி வரை போராடுவோம். அச்சுறுத்தல்களைக் கண்டு பின்வாங்கப் போவதில்லை" என்றார்.

நாளை கடவத்தையிலும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நேட்டோ படையின் 27 எரிபொருள் டேங்கர் எரிப்பு : பாகிஸ்தானில் சதி செயலில் ஈடுபட்டது யார் ?






இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த நேட்டோ படையினரின் எரிபொருள் டாங்கர் மீது தாக்குதல் நடத்தி எரிக்கப்பட்டது. இச்சம்பவம் சர்வதேச அளவில் நேட்டோ படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பாகிஸ்தானின் , ஆப்ககன் எல்லையோர சிந்து மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என இன்னும் அறியப்படவில்லை.

முகமூடி அணிந்து வந்தனர் : கடந்த ஒரு வருடத்தில் நேட்டோ படையினரின் டாங்கர்கள் 100 க்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது குறித்த போலீஸ் அதிகாரி அகம்மது சாண்டியோ கூறுகையில்; முகத்தை மூடிய சிலர் சிக்காபூர் டவுண் அருகே இந்த வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியும் அட்டூழியம் செய்துள்ளனர். இதில் 27 டேங்கர்கள் தீ பற்றி எரிந்தது என்றார்.

இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான எரிபொருள் தீ பற்றி எரிந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஆப்கன் செல்ல வேண்டிய 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் நேட்டோ படையினர் தாக்குதலில் பலியான 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் இந்த விஷயம் தொடர்பாக இது வரை வாய்திறக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என மர்மம் நீடிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

நேட்டோ படைகளுக்கான விநியோகப் பாதையை மூடியது பாகிஸ்தான்


ஆப்கானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளது. இது பாகிஸ்தானுக்கூடாகச் செல்லும் பாதை.

நேட்டோ படைகளின் தாக்குதலினால் 3 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் நேற்று கொல்லப்பட்டிருந்தனர். இதன் எதிரோலியாகவே மேற்படி அதிரடி நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

இந்நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாமெனக் கருதப்படுகின்றது.

மூடப்பட்ட இப்பாதையானது ஆப்கானினுள்ள நேட்டோ படைகளுக்கான முக்கியமானதொரு விநியோகப் பாதையாகும்.

மேலும் நேட்டோவினால் இதன் மூலம் அங்கு முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கை வருவார்

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிலைய மக்கள் தொடர்பில் நோர்வே அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், எரிக் சொல்ஹெய்ம் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பு உறவுகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைச் சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வடக்கு புனர்வாழ்வு மையங்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக எரிக் சொல்ஹெய்ம் கடந்த காலங்களில் கடமையாற்றியமையும், இவரது பணி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கவை.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறைக்கு பொன்சேகா மாற்றம்



கடற்படை தலைமையகத்தில் அதிகாரிகளின் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய அவருக்கு 30 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வழங்கியதை அடுத்தே நேற்றிரவு அவர் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் முன்வாயிலில் சரத்பொன்சேகாவின் மனைவி, எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டிருந்தமையினால் பின் கதவின் வழியாகவே அவர் நேற்றிரவு 11.05 மணியளவில் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைக்கு முன்பாக பெருந்திரளானோர் திரண்டிருந்தமையினால் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் பிரதான வீதியின் குறுக்காக பஸ்ஸொன்றை நிறுத்தியுள்ளனர். சற்று நேரத்தின் விசேட வாகனமொன்று சிறைச்சாலைக்குள் சென்றதாகவும் அந்த வாகனத்திலேயே அவர் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகாவிற்கு பாயும் தலையணையொன்றும் வழங்கப்பட்டதாகவும் அவருக்கென விசேட சிறைக்கூடமெதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வேலைகள் தொடர்பில் எதனையும் தற்போதைக்கு குறிப்பிடமுடியாதுள்ளது என்றும் சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இத்தாலி வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு எடுத்து வர நடவடிக்கை

இத்தாலி மோதனா நகரில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் மாவட்டதைச் சேர்ந்த உயிரிழந்த இலங்கையர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு எடுத்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் மோதனா நகரிலிருந்து காரில் சென்று கொண்டுருந்த வேளை, தண்ணீர் பௌசர் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவிக்கப்படுகின்றது. இதில் வென்னப்புவ கிரிமெட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்னா ஹெலன் சுஜீவனி எனும் 29 வயது யுவதியும், லுணுவில சிரிகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ். அஜித் ரஞ்சன் சுரேஷ் பெர்ணான்டோ எனும் 34 வயது நபருமே உயிரிழந்தவர்களாவர். காரில் பயணித்த உயிரிழந்த திஸ்னா ஹெலன் சுஜீவனியின் கணவர் சுமித் எண்டன், அவர்களது மகன் சுபுன் தில்ஷான் ஆகியோருடன், காரினைச் செலுத்திச் சென்ற சாரதியான 36 வயது மில்ரோய் மற்றும் அவரது மனைவியான ஏண் கயான் திலங்கா (வயது 32) ஆகியோரும் காயமடைந்து மோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மோதனா நகர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய, சர்வதேச மட்டத்தில் பாரிய போராட்டங்களை நடத்தி பொன்சேகாவை விடுதலை செய்வோம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசியல் ரீதியாக பழிவாங்கி அவருக்கு 30 வருட சிறைத்தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருப்பதும் ஜனாதிபதியே அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டிருப்பதும் அருவருக்கத்தக்க செயலாகும். இது சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இந்த இழிவான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் தேசிய சர்வதேச மட்டத்தில் பாரிய போராட்டங்களை நடத்தி பொன்சேகாவை விடுதலை செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள இந்த சிறைத்தண்டனை குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அவருக்கு எதிராக அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திடமிருந்தும் அதன் போலியான நீதிபதிகளிடம் இருந்தும் இவ்வாறுதான் தீர்ப்பு வெளிப்படும் என்பதையும் நாம் முன்னரே அறிந்திருந்தோம். ஏனெனில் இராணுவ நீதிமன்றத்தின் செயற்பாடுகள் அவ்வாறு தான் அமைந்திருந்தன என்றும் அக்கட்சி விசனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது உச்சி மாநாட்டுக்குச் சென்று கோடிக்கணக்கான ரூபாக்களை செலவு செய்து நாடு திரும்பியிருந்தார். அவர் நாடு திரும்பியதும் தனது முதலாவது உத்தியோகபூர்வ நடவடிக்கையாகவே இராணுவ நீதிமன்றத்தினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த சிறைத் தண்டனையை கையெழுத்திட்டு நிறைவேற்றியுள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை இரக்ஷிணுவ ரீதியில் முடிவுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்வாக நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேக்கை வெட்டுவதற்கான கௌரவத்தை சரத் பொன்சேகாவுக்கே வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாது இவரே சிறந்த இராணுவத் தளபதியென உலகுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அவ்வாறான ஒரு இராணுவத் தளபதியைத்தான் இன்று ஜனாதிபதி சிறையில் அடைப்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

போலியான இராணுவ நீதிமன்றத்தை அமைத்து அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்ற வகையில் இராணுவ நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து அதனடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பானது ஜீரணிக்க முடியாததும் அருவருக்கத்தக்கதுமாகும். ஐக்கிய தேசியக் கட்சி இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது; நிராகரிக்கின்றது.

பொன்சேகா மீதான தீர்ப்பு இன்று சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருமே ஏதோவொரு வகையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு இராணுவத் தண்டனைக்குட்பட்டவர்களாவர். இவர்களாலேயே பொன்சேகாவுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. இராணுவ நீதிமன்றத்தை அமைக்கும் உரிமையும் அதிகாரமும் அதேநேரம் நீதிபதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் ஜனாதிபதியிடமே இருக்கின்றது.

இதன் பிரகாரமே யாவும் இடம்பெற்றுள்ளன.

ஆனாலும் ஜனாதிபதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றமானது சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்புச் செயலர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தூக்கில் இடுவேன் என்று கூறியிருந்தார். அப்படியானால் அவரை தூக்கில் போடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகத் தான் இந்த சிறைத்தண்டனை அமைந்திருக்கின்றதா எனக் கேட்கவிரும்புகிறோம். எனவே, சரத் பொன்சேகா இந்நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த இராணுவத் தலைவராவார். அவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் வெளிப்படுத்தி பலதரப்பட்ட போராட்டங்களை நடத்துவற்கும் அவருக்கான நீதியையும் விடுதலையையும் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சமூக, கலாசார மேம்பாட்டிற்கு முதியோர் பங்களிப்பு அவசியம்

நாட்டின் சமூக, பொருளா தார, கலாசார மேம்பாட்டிற்கு முதியோர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வது இன்றியமை யாததென பிரதமர் டி. எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச முதியோர் தினத்தை யொட்டிய வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டு ள்ளதாவது:-

முதியோர்கள் சுய மரியாதை யுடனும் அபிமானத்துடனும் வாழ்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு நாம் எந்நேரமும் தயாராக உள்ளோம். தற்போது முதியோர்களின் நலன்கருதி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக அரசாங்கமானது எந்நேரமும் அனுசரணை வழங்கி வருகின்றது.

மகிழ்ச்சிமிக்க தேகாரோக்கியமான முதியோர் தினமொன்று என்பதே இவ்வாண்டிற்கான முதியோர் தினத்தின் தொனிப் பொருளாகும். ஆரோக்கியம் உயர்ந்த பேறு. மனத்திருப்தி பாரிய செல்வம் என்ற புத்த பெருமானின் கூற்றினைப் பின்பற்றி மிகழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் முதியோர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை இலகுவாக அனுபவிக்க முடியும்.

முதியோர்களுக்கு மன மகிழ்ச்சியினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்விற்கான அடித்தளமிடப்படுவதுடன், அதற்காக தற்போது எமது நாட்டில் செயற்படுகின்ற பல்வேறு வகையான ஆன்மீக நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் அதிக பயன்கிட்டும். முதியோர்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடம் அவர்கள் வாழ்ந்துவரும் குடும்பமாகும்.

எமது நாட்டின் முன்னேற்றத்திற்காக அளப்பரிய சேவையாற்றிய அனுபவம் மிகுந்து காணப்படும் முதியோர்களை முதியோர் இல்லங்களில் அடைத்து வைக்காது குடும்ப அங்கத்தவர்களினால் தமது குடும்பத்திலேயே பராமரிக்க வேண்டியமை இன்றைய காலத்தின் தேவையாகும்.

நல்ல பண்புள்ள பிள்ளைகள் ஒருபோதும் தமது வயது முதிர்ந்த பெற்றோர்களை பராமரிக்கும் பொறுப்பிலிருந்து விவகிச் செல்வதில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தை அமைத்துத் தந்த பெற்றோர்களை மிகவும் அபிமானத்துடன் பராமரித்து வருவார்கள். இதற்காக எமது இளம் தலைமுறையினர் செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அலரி மாளிகையில் அரச இலக்கிய விழா: மும்மொழிகளில் 35 நூல்களுக்கு விருதுகள் தமிழில் 11 நூல்களுக்கு சிறந்த இலக்கிய விருது

மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருதுகள் நேற்று மாலையில் கொழும்பில் வழங்கப்பட்டன.

இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக்கொண்டன.

அதேநேரம் சிங்களம், தமிழ், ஆங்கில மொழி இலக்கியத் துறைக்கு நீண்ட காலம் பங்களிப்பு செய்த மூவர் “சாஹித்தியரத்ன” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க, கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கல் வைபவம் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இவ்வைபவத்தின் போதே மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.

தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம், அரச இலக்கிய குழு என்பன இணைந்து 2010 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கும் வைபவத்தை அலரிமாளிகையில் நேற்று ஒழுங்கு செய்திருந்தன.

2009 ஆம் ஆண்டில் நாட்டில் 1332 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. அவற்றில் 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தன அவற்றில் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக்கொண்டன.

தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய குறும்புக்கார ஆமையார் என்ற நூலும் சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய ‘என்றும் உங்கள்’ என்ற நூலும், சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய ‘கூத்துக்கள் ஐந்து’ என்ற நூலும் பெற்றுக் கொண்டன.

இதேநேரம் மொழி பெயர்ப்பு இலக்கியத்தி ற்கான விருதை, மடுல்கிரியே விஜேரத்ன எழுதிய ‘தீச்சுடர்’ என்ற நூலும், திக்குவல்லை கமால் எழுதிய ‘தொடரும் உறவுகள்’ நூலும், கெக்கிராவ ஸணூலைஹா எழுதிய ‘பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்’ என்ற நூலும் ஆய்வு இலக்கியத்திற்கான விருதை கலாநிதி எஸ். ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்” என்ற நூலும், கவிதை இலக்கியத்திற்கான விருதை மு.பொ.

எழுதிய ‘கவிதையில் துடிக்கும் காலம்’ என்ற நூலும் பெற்றுக்கொண்டன. அறிவியல் இலக்கியத்திற்கான விருதை ச. அருளானந்தம் எழுதிய ‘அற்புதமான வானம்’ என்ற நூலும், சிறுகதை இலக்கியத்திற்கான விருதை சுதாராஜ் எழுதிய ‘மனைவி மகாத்மியம்’ என்ற நூலும் சிறந்த நாவல் இலக்கியத்திற்கான விருதை நீ.பி. அருளானந்தம் எழுதிய ‘துயரம் சுமப்பவர்கள்’ என்ற நூலும் பெற்றுக்கொண்டன.

இவ்விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தெரிவான சகல நூல்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுமென அரச இலக்கியக் குழுத் தலைவர் கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பவித்ராதேவி வன்னியாராச்சி, ஏ.எச்.எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் எம்.பிக்களான பிரபா கணேஷன், திகாம்பரம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

மீண்டும் ராணுவ ஆட்சி வரும்:பாக்., தளபதி கயானி எச்சரிக்கை

மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. "அரசியல் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி எச்சரித்துள்ளதால், இது தொடர்பாக வதந்திகள் அதிகரித்துள்ளன.பாகிஸ்தானில் கடந்த திங்களன்று அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசூப் ரசா கிலானி மற்றும் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கயானி, "பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்' என, கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.கயானியின் இந்தப் பேச்சால், பாகிஸ்தான் ராணுவ ஆட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என, பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தத் தகவலை பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். "பாகிஸ்தானின் 63 ஆண்டு கால வரலாற்றில், பெரும்பாலான ஆண்டுகள் ராணுவ ஆட்சியே இருந்துள்ளது. புதிதாக ராணுவ ஆட்சி உருவானால், அது நிலைமையை மோசமாக்குமே அன்றி, நல்லதாக இருக்காது' என்றும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான முஷாரப், "தங்கள் நாட்டில் ராணுவ புரட்சி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என, எச்சரித்துள்ளார். "அணு ஆயுத சக்தி படைத்த நாடான பாகிஸ்தானில் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. பயங்கரவாதத்தையும், பொருளாதார வீழ்ச்சியையும் கட்டுப்படுத்த தற்போதைய அரசு போராடிக் கொண்டிருக்கிறது. அதனால், ராணுவத்திற்கு அரசியல் சட்ட ரீதியான பங்களிப்பை வழங்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...