12 டிசம்பர், 2010

நாவலப்பிட்டியில் 12 அடி நீளமான பாம்பு








நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய மேற்பிரிவு தோட்டத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்றினை தோட்ட மக்கள் பிடித்துள்ளனர்.

இந்தத் தோட்டத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றவர்களில் ஒருவரான மோசஸ் என்ற இளைஞன் இந்த மலைப்பாம்பினை உயிருடன் பிடித்துத் தோட்டத்திற்கு நேற்று கொண்டு வந்துள்ளார்.

இந்த மலைப்பாம்பினை சல்லடை பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக வைத்துள்ள இவர் இந்த மலைப்பாம்பினை வன இலாகா பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மலைப்பாம்பினை பார்ப்பதில் பிரதேச மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இம்புல்பிட்டிய காட்டுப்பகுதியில் மலைப்பாம்புகளின் ஊடுறுவல் அதிகமாகவுள்ளதால் தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் அச்சத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.



மேலும் இங்கே தொடர்க...

பூசாரிகள் மூவர் மீது துப்பாக்கிச் சூடு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் சங்கானையில் நேற்றிரவு 3 பூசாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கும் வாள்வெட்டுக்கும் இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானை இலுப்பைத் தாழ்வு முருகன் ஆலய பூசாரிகளான சி.நித்தியானந்தக் குருக்கள் (வயது - 57), அவரது மகன்களான ஜெகானந்தசர்மா (வயது - 26), சிவானந்த சர்மா (வயது-32) என்பவர்களே மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களராவர்.

குறித்த குருக்கள் குடும்பத்தினர் நேற்றய தினம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றினை வவுனியாவிலிருந்து கொள்வனவு செய்து கொண்டுவந்தனர். நேற்றிரவு 8 மணியளவில் இவர்கள் வீட்டிற்கு நுழைந்த முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளினை திருட முற்பட்டுள்ளனர்.

பிரதம குருவும் அவரதும் மகனும் திருடர்களைத் தடுக்கவே அவர்களை வாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் விட்டு மோட்டார் சைக்கிளையும் கொண்டு சென்றுள்ளனர்.

மிகமோசமாகப் படுகாயமடைந்த மூவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

15 முக்கிய அம்சங்கள் அடங்கிய ஐ.தே.க யின் திருத்த யாப்பு சமர்ப்பிப்பு




15 முக்கிய அம்சங்கள் அடங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் திருத்த யாப்பு கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயகவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தாவில் இன்று 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் கட்சியின் மாநாட்டில் செயலாளர் திஸ்ஸ அத்தநாயகவினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த யாப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து


இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சுயாதீன, சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்துமாறு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற போர்க் குற்றங்களுக்கு மூலகாரணமானவர்கள் நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உள்ளடங்கலாக மிக முக்கிய நபர்கள் என்பதை அமெரிக்க ராஜதந்திரிகள் அறிந்துவைத்துள்ளதாக கடந்த வாரம் விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், 19 செனட்டர்கள் இவ்வாறு கடிதம் எழுதி சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறு கேட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் காங்கிரஸின் 58 உறுப்பினர்கள் சேர்ந்து இவ்வாறான ஒரு கடிதம் எழுதி ஒபாமா நிர்வாகம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதையடுத்து இக்கடிதமும் இப்போது அதையே வலியுறுத்துகிறது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய 300 சம்பவங்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் போர்க் குற்ற அறிக்கையிலும், ஒக்ரோபர் மாதத்தில் இராஜாங்கத் திணைக்கள அறிக்கையிலும் விரிவாகக் கூறப் பட்டுள்ளன என்பதையும் இக்கடிதம் ஹிலாரிக்குச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கை இதுவரை காலமும் அமைத்த பல்வேறு விசாரணைக் குழுக்களும் வெற்றிகரமான விசாரணைகளைச் செய்ய வில்லை என்பதையும், மனித உரிமைகள் கண் காணிப்பகமும், சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் இலங்கையின் ஆணைக்குழுக்கள் குறித்த நம்பகத்தன்மை கேள்விக்கிடமானதே என்று கூறியுள்ளதையும், அவர்களும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளதையும் செனட்டர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுக்காட் டியுள்ளனர். சமாதானத்தைக் கொண்டுவரும் முயற்சிகளில் வரலாறானது தோல்விகள் நிறைந்ததாகவே உள்ளது.

பெரும்பாலான பிரச்சனைகள் இப்போதும் கூட தொடர்ந்து நீடிக்கின்றன என்று செனட்டர்கள் தமது கடிதத்தில் எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டன் மாணவர் விசா: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு



பிரிட்டனுக்கு மாணவர் விசாவில் செல்பவர்கள், தமது படிப்பை நிறைவு செய்த பின்னர் அங்கு வேலை தேடித் தங்க முடியாதவாறு விசா நடைமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் வரவுள்ளதாகவும், ஆங்கில பாடத்தகுதி கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் டொமினியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சீனா, இந்தியா, அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் மாணவர் விசாவில் வருவதாகவும், இவ்வாறு மாணவர் விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குள் நுழைவதையும், மாணவர் களின் எண்ணிக்கையையும் அரசு கட்டுப்படுத்த விரும்புவதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் தமது கல்விக்காக பிரிட்டன் வரும் மாணவர்கள் கற்கைநெறி முடிந்ததும் அங்கிருந்து திரும்பிவிட வேண்டுமெனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் டொமினியன் கிரீன் தெரிவித்தார்.

எனவே இனிவரும் காலங்களில் பட்டதாரிக் கற்கை நெறிக்குக் கீழுள்ள கற்கை நெறிகளைத் தொடர அனுமதி மறுக்கப்படவுள்ளது. இவ்வாறு பட்டதாரிக் கற்கைநெறிக்குக் கீழுள்ள கற்கைநெறிக்கு வரும் மாணவர்களே தமக் கென ஒரு வேலையைத் தேடி சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்குவதாகக் கூறிய டொமினியன் கிரீன், இனி ஆங்கிலப் பாடத்த குதியையும் இறுக்கமாக்கி இவ்வாறு தங்கு பவர் எண்ணிக்கையைக் குறைக்க அரசு திட்ட மிட்டுள்ளது என்றார்.

பிரிட்டனுக்குள் செல்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மாணவர் விசாவிலேயே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதோடு ஒரு கற்கை நெறி முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் கற்க விரும்பினால் அம்மாணவர்கள் தங்கள் நாடு சென்று, புதிதாக விசா பெற்று வரும் நடைமுறையும் அமுலுக்கு வரவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடவசதி இல்லை: இலங்கை ஆசிரியர் சங்கம்

இம்மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வடபகுதி மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாத நிலை காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து அரசின் கவனத்தையும் கோரியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டெலின் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

திருமுருகண்டி வித்தியாலயம், வன்னி உயிலங்குளம் வித்தியாலயம் மாங்குளம் வித்தியாலயம் ,பெரிய புளியங்குளம் வித்தியாலயம், ஒலுமடு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்தகைய ஒரு தேசிய பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு அடிப்படை உட்கட்டமைப்புகள் கூட இல்லாத மிக மோசமான நிலையை எதிர்நோக்குகின்றார்கள்.

வன்னி மாங்குளம் வித்தியாலயம் திருத்தியமைக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் இன்னமுமே திருப்தியளிக்கக்கூடிய நிலைமை வந்தடையவில்லை. தற்போது நிலவும் காலநிலை இவர்களுக்கு இன்னொரு இடைஞ்சலாக அமையவிருக்கின்றது. இத்தகைய மண்டபங்களில் பரீட்சை எழுத முற்பட்டால் மாணவர்கள் நனைந்து பெரும் அல்லலுற நேரும் என்றும் தெரிவித்தார் ஜோசப் ஸ்டெலின்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனமாற்றம் வரவேற்கத்தக்கது

வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்காமல் இருப்பதற்கான முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தமையானது அவர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த முடிவை அவர்கள் எப்போதோ எடுத்திருக்கலாம். எனினும் காலம் கடந்தேனும் அவர்கள் எடுத்திருக்கும் இம்முடிவு தமிழ் மக்களுக்கு நிச்சயம் மன நிறைவைக் கொடுக்கும். கல்வியில் ஆரம்பித்து காணிப் போராட்டமாக மாறி, இறுதியில் கொடிய யுத்தமாக மாறிய தமிழரின் போராட்டம் முப்பது வருடங்களைக் கடந்தும் முழுமையாக முடங்கிய நிலையிலேயே முடிவுற்றது.

கற்றறிந்த சீமான்கள் அங்கம் வகித்த சுதந்திரத்தின் பின்னரான அன்றைய தமிழ் அரசியல் கட்சிகள் அன்றே சிங்கள அரசுகளுடன் முறையாக இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தால் போராட்டம், யுத்தம், உயிரழிவு, சொத்தழிவு என்பன தடுக்கப்பட்டிருக்கலாம். இவை தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள இராணுவத்தினருக்கும், சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், அத்துடன் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளையும் தடுத்திருக்கும்.

தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்து அழிவைச் சுமந்து நிற்கும் இன்றைய நிலையிலும் புலம்பெயர் சமூகமும், பாதிப்பு எதுவுமே ஏற்படாது உல்லாசமாக ஆங்கிலம் பேசிவரும் தமிழ்ச் சமூகமும் திருந்தவில்லை. லண்டன் ஆர்ப்பாட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டான அபகீர்த்தி.

புலிகளால் பயம், பாதிப்பு, இழப்பு, தவிப்பு என்பவற்றுக்கெல்லாம் முகங்கொடுக்க வைத்து வெறுங்கையுடன் தப்பியோடி வந்துள்ள மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை ஆதரித்து இழந்தவற்றை மீளப்பெறுவதே புத்திசாலித்தனம்.

இழந்ததற்கும் மேலாக தர நினைக்கும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு பணியாற்றுவதே பரிதவித்து நிற்கும் வன்னித் தமிழ் மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்பேசும் சமூகத்திற்கும் நாம் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறாகும். அந்த வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றம் பாராட்டத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகளின் அரங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு அரசியல் தீர்வின் பொது இணக்கத்தை எட்டும் வகையில் உபகுழு அமைக்க முடிவு


தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் பம்பலப்பிட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழர்கள் சார்பில் பொதுவான இணக்கப்பாடொன்றை எட்டுவது மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப் பட்டுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர் கள் சார்பில் ஒருமித்த கருத்து வெளியிடப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுவான இணக்கப்பாடொன்றை எட்ட வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாக நேற்றைய சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம் தினகரனுக்கு தெரிவித்தார்.

பொது இணக்கப்பாட்டை எட்டு வதற்கு ஏதுவாக எமது அரங்கம் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் சார்பிலும் தலா மூவரைக் கொண்ட உப குழுவொன்றை அமைப்பதென்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். இவ் உபகுழு அடுத்த வாரம் முதல் கூடி இனப் பிரச்சினைத் தீர்வில் பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆராயும்.

இரு தரப்புக்குமிடையில் பொது வான இணக்கப்பாடொன்று எட்டப் பட்டு எதிர்வரும் ஜனவரி மாத இறுதி யில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேநேரம், தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் நேற்றைய சந் திப்பில் ஆராய்ந்தோம். மீள்குடி யேற்றம், இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் உள்ளவர்களின் நிலை மைகள், வடபகுதியில் இராணுவத் தினரின் வெளியேற்றம் உட்பட தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சி னைகள் பற்றியும் கலந்துரையாடி யிருந்தோம் என்றார் சிவாஜிலிங்கம்.

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரங்கப் பிரதிநிதி களின் நிலைப்பாடும், தமது நிலைப் பாடும் ஒத்தது எனத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகளுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவது போன்ற விடயங்களை மூவர் அடங்கிய உப குழு ஆராயும். இதன் அடிப்படையிலேயே எதிர் காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று மாலை 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு, சந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வினோ நோகராதலிங்கம், அரியநேத்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம், ஈ.பி. ஆர்.எல்.எப். பத்மநாபா அணி சார்பில் ஸ்ரீதரன், ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வு அமைப் பின் சார்பில் சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் குமரகுருபரன், ஸ்ரீடெலோ சார்பில் உதயராசா, சுரேந்திரன் மற்றும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசபை சார்பில் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. 3ஆக பிளவு: ஸ்ரீகொத்தாவில் இன்று கட்சி சம்மேளனம்

ஐக்கிய தேசிய கட்சி மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள நிலையில், இன்று (12) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் சம்மேளனம் நடைபெறுகிறது.

இதேவேளை, இந்தச் சம்மேளனத்திற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லையெனத் தெரிய வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பொன்று அண்மையில் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட வில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சம்மேளனத்தைக் குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சம்மேளனத்தில் பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகலாம் என்றும் தெரியவருகிறது.

சம்மேளனம் நடைபெறுகின்ற நிலை யில், மூன்று பிரிவுகளும் தனித்தனியாகக் கூட்டங்களை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. நேற்று மாலை நான்கு மணியளவில் பம்பலப்பிட்டி பகுதியில் ஹம்பாந்தோட்டை எம்.பி. சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்ட மொன்று நடைபெற்றுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்காளர் பிரச்சினை: தேர்தல் ஆணையாளரை சந்தித்துப் பேச மு.கா. முடிவு

வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த தமது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தேர்தல் ஆணையாளரை விரைவில் சந்திக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நூர்தீன் மஷணுர் திடீரென மரணித்த சூழ்நிலையில், வன்னி

மாவட்டத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக, நமது தலைமையில் கொழும்பில் வன்னி மாவட்ட முஸ்லிம் களுடன் நடைபெற்ற கட்சியின் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் அமைச்சர் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

மறைந்த நூர்தீன் மஷணுர் பிரதிநிதித் துவப்படுத்திய வன்னி மாவட்ட முஸ்லிம் களை அரசியல் அநாதைகள் ஆவதற்கு விடப் போவதில்லை என்றும், அவர்களுக்காக கட்சி அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மிக விரைவில் தாமும், கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்களும் ஏனைய முக்கியஸ் தர்களும் முதலில் புத்தளத்திற்கும், அங்கு ள்ள இடம்பெயர்ந்த முஸ்லிம் களுக்கான நலன்புரி முகாம்களுக்கும், செல்லவிருப்ப தாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

அங்கு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடைபெறவுள்ளதோடு, மறைந்த பாராளு மன்ற உறுப்பினர் நூர்தீன் மஷணுரின் நினைவாக துஆ பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. வன்னி மாவட்டத்திற் கான விஜயங்களை வேறு தினங்களில் மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டு ள்ளது. பிரஸ்தாப முதலாம், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த 6ம் திகதி திங்கட்கிழமை காலையில் இரண்டு மணி நேரமும் இரவில் நள்ளிரவையும் தாண்டி நடை பெற்றுள்ளதோடு, அவற்றின் தொடர்ச்சியாக மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 9ம் திகதி வியாழக்கிழமை மாலையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர் ந்த எருக்கலம்பிட்டி, தாராபுரம், சிலாபத் துறை, காக்கையன்குளம், விடத்தல் தீவு, பண்டாரவெளி, முசலி, அடம்பன் , பொற் கேணி, நாணாட்டான், நாகவில் போன்ற பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள் இக் கலந்துரையாடல்களில் பங்குபற்றியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மஷணுரின் திடீர் மறைவினால் வெற்றிடமாகி யுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிகாரத்தை வன்னியில் தொடர்ந்தும் நிலைநிறுத்தித் தக்க வைப் பதற்கான வழிவகைகள் குறித்து இக் கூட்டடத் தொடரின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலி இந்த கலந்துரை யாடல்களில் பங்குபற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு


தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையின் எதிர்காலத்திற்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

தமிழ்த் தரப்பினர் மீது அரசாங்கம் நம்பிக்கை வைக்கவும், அரசாங்கத்தின் மீது தமிழ்த் தரப்பினர் நம்பிக்கை கொள்ளவும் கூட்டமைப்பின் மனமாற்றம் வழிவகுத்துள்ளதாகத் தமிழ்த் சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியால் மட்டுமே தீர்வொன்றை வழங்க முடியும் என்ற ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மனமாற்றம் வலுப்படுத்தி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு தலைமையில் அரசாங்கத் திற்குச் சமர்ப்பிக்கும் தீர்வு ஆலோசனை களுக்குச் சிங்களத் தலைவர்களின் ஆத ரவைப் பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறினர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதியமைச்சர்கள் படுர் சேகுதாவூத், முத்து சிவலிங்கம், ஐ.தே.க. எம்.பி. திருமதி விஜயகலா மகேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அமைச்சர்

வாசுதேவ

நாணயக்கார

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நல்ல ஓர் அறி குறியாகும். அவர்கள் முரண்பாட்டு அரசியலிலிருந்து விடுபட்டுள்ளார்கள். இதனூடாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஏற்படும்.

முதலில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசியல் தீர்வினையும் கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் தாய்மொழியில் கருமமாற்றவும் வழிசமைக்கப்படவேண்டும். அதன் பின்னர் தீர்வுக்கான முடிவை எடுக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு சாதகமாக செயற்படுவதன் ஊடாக அரசாங்கத்தின் மீது தமிழ்த் தலைவர்களுக் கும், இவர்கள் மீது அரசுக்கும் பரஸ் பரம் நம்பிக்கை ஏற்படும். அதன் பின்னர் அதிகாரங்களைப் பகிர்வதைப்பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு,

ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுவான தீர்வு ஆலோசனையை முன்வைக்க முடியும். அப்போது சிங்களத் தலைவர்களின் ஒத்து ழைப்பை நாம் பெற்றுக்கொடுப்போம். தீர்வு ஆலோசனையை முன்வைத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து முடிவு காணலாம்.

பிரதியமைச்சர் படுர் சேகுதாவூத்

‘தமிழ்த் தேசிய அரசியல் தருணத்திற்கு ஏற்ப முடிவுகளை மேற்கொண்டு பயணித் திருக்கிறது. இலங்கை தமிழரசுக் கட்சி காலோசிதமான முடிவுகளை இதற்கு முன்பும் மேற்கொண்டிருக்கிறது. அரசாங் கத்தின் வலுவும் போருக்குப் பின்னரான நிலையும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த மாற்றம் இலங்கைக்கு சாதகமான ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலிகள் இல்லாத நிலையிலும் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜனநாயக செயற்பாட்டை வலுவாக்க முடியும்.

அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பும் இரண்டு விடயங்களில் இணை ந்த குழுவாக செயற்பட இணங்கியுள்ளன. அரசியல் தீர்வினை ஆராய்வதற்கான ஒரு குழுவும், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாட்டுக்கான ஒரு குழுவும் செயற்படவுள்ளமையானத் ஆரோக்கியமான அரசியல் மாற்றமாகும்.

பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்

மக்களுக்கான அபிவிருத்தியை அரசாங் கத்துடன் இணைந்து செயற்படுத்த வேண் டும். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு மகிழ்ச் சியளிக்கிறது. அரசுக்கும் கூட்டமைப்புக்கும் சாதகமான புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக் கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

கூட்டமைப்பு இவ்வாறு செயற்பட வேண்டுமென்று பல தடவை கோரிக்கை விடுத்திருக்கிறேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விஜயகலா மகேஸ்வரன் ஐ.தே.க. எம்.பி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிப் படுத்தியுள்ள நல்லெண்ணத்தை அரசாங்கம் உரிய முறையில் மதித்துச் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் இனியும் உரி மைக்காகப் போராட முடியாது. அரசாங்கம் தமிழ் மக்களுடன் இனிமேலும் முரண் படாமல் உரிமைகளை வழங்கவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மக்களின் நலன் கருதிய செயற்பாட்டைத் தொடர வேண்டும்.

கிழக்கு முதல்வர் சி. சந்திரகாந்தன்

தமிழ் மக்களுக்கான சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசுக்கே முடியும் என்பதை தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுதியாக நம்புகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இன்று அரசுடன் இணைந்து செயற்பட முன்வந் திருப்பது இந்த நம்பிக்கையை மேலும் வலுவூட்டுவதாகவே நாம் கருதுகிறோம்.

இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களித்திருப்பது தாங்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு நிலை மையை உருவாக்கித் தரவேண்டும் என்ற காரணத்திற்காகவே என்பதை நாம் மறந்து விடமுடியாது.

எனவே, அந்தமக்களுக்கான தீர்வை எதிரணி அரசியல் செய்துகொண்டும் எந்நேரமும் அரசுடன் முரண்பட்டுக் கொண் டும் பெற்றுக்கொடுத்துவிட முடியாது. அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் பலம் வாய்ந்ததாக அமைந் துள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதிலும் அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளும் அரசுக்கு பூரண ஆதரவை வழங்குகிறது என்பது மிகவும் பாராட்டத்தக்க விடயம்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலி கள் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான ஆதரவின் காரணமாக அவர்கள் செய்த சில நியாயமற்ற அநீதிகளையும், நியா யப்படுத்த வேண்டியவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. எனி னும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்தது முதல் துணிச்சலாக புலிகளின் நியாயமற்ற செயல்களை கண்டித்தது.
மேலும் இங்கே தொடர்க...