11 ஜூலை, 2011

அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் ஒன்றிணையும் காலம் வந்துவிட்டது: ரணில்

சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்துவிட்டது.

தாமதித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டம் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னெடுத்து நிலையான அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மறைந்த ஐ.தே. கட்சியின் வடகொழும்பு எம்.பி.யும். அமைச்சராக பதவி வகித்தவருமான வீ.ஏ. சுகததாசவின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு கொழும்பில் சுகததாஸ விளையாட்டரங்கின் முன்பாக அன்னாரது சிலைக்கருகில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட எம்.பி. யும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க, முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான மகேந்திர டி. சில்வா, காமினி ஹேமச்சந்திர ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்த நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீன் மூனை சந்தித்தேன். இதன்போது இலங்கை சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கமையவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றும் மூன் என்னிடம் தெரிவித்தார்.

இக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

2009 ஆம் ஆண்டு பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது போரின் இறுதிக் கட்டம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராயவும் விசாரணை நடத்தவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

ஆனால் அரசாங்கம் இதனை முன்னெடுக்கவில்லை. எனவே மூன் தருஷ்மன் குழுவை நியமித்தார். அக்குழு அறிக்கையையும் வெளியிட்டது.

இதனை அரசாங்கம் கடுமையாக விமர்சித்ததோடு தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. எம்மால் சர்வதேச நாடுகளுடன் மோத முடியாது. மோதுவதா? பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

உலகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியதில்லை. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோமென ஒரு சிலர் கூறுகின்றனர். இந்தத் தர்க்கம் பிழையானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற நாடுகளுடன் வர்த்தகங்களை தொடர வேண்டும்.

அந்நாடுகளின் உதவிகள், ஒத்துழைப்பு என்பன எமது பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகும்.

மேற்குலகின் உதவிகள் கிடைக்காவிட்டால் நாடு பின்னடவு காணும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எமது கட்சியில் சிலர் கூறுகின்றனர், இது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினையென. இப்பிரச்சினை நாட்டையும் மக்களையும் பாதிக்கும். நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகும்.

எனவே இதனை தீர்த்து வைப்பதில் எதிர்க்கட்சியான எமக்கும் பொறுப்பு உள்ளது.

ஐ.நா. அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.

அதன்போது இச் சவாலை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐ.தே.க. தயாராகவே உள்ளது.

இதனை ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் தெரிவித்தேன்.

இன்று எமது நாட்டு பிரச்சினை தொடர்பாக உலகிலுள்ள பாராளுமன்றங்களில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 மக்கள் உயிரிழந்ததாகவும் அதனைவிடக் குறைவென்றும் பல்வேறு எண்ணிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

அதற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்திலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் படையினர், புலிகள் என பலர் உயிரிழந்தனர். சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் மூன்று விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும்.

அரசியல் தீர்வை வழங்கி நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தை நாட்டில் நிலை நாட்ட வேண்டும். இதனை முன்னெடுத்தால் சர்வதேச பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்து இறுதித் தீர்வை எட்ட வேண்டும்.

அதற்கு ஐ.தே.க. பூரண ஆதரவை வழங்கும்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் காணப்பட்டது போன்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சர்வதேசத்திற்கு எம்மால் பதிலளிக்க முடியும். அத்தோடு விசேடமாக வட பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை சுதந்திரமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறி விடுவார்கள்.

இவ்வாறான நிலைமை தோன்றுமானால் சர்வதேச ரீதியிலான பிரச்சினைகள் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும்.

செப்டெம்பர் மாதம் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடவுள்ளது. எனவே காலத்தை இழுத்தடிக்காது அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தீர்வுகளை காண வேண்டும்.

இதன்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க நாம் தயார்.

யுத்த வெற்றி மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தாது. அதற்கு ஜனநாயகமே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக